பிரபல பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் காலமானார்

பட மூலாதாரம், Getty Images
தமிழ் உள்பட இந்திய திரையுலகில் 10 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே தனது 92-வது வயதில் காலமானார். சனிக்கிழமை (ஏப்ரல் 11) ஏற்பட்ட மாரடைப்பைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ப்ரீச் கேண்டி மருத்துவமனையின் மருத்துவர் பிரதீத் சம்டானி, பிபிசி மராத்திக்கு இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
ஆஷா போஸ்லே நுரையீரல் நோய் மற்றும் வயது தொடர்பான பிற உடல்நலக் குறைபாடுகளுடனும் போராடி வந்தார்.
திங்களன்று (ஏப்ரல் 13) மாலை 4 மணிக்கு, சிவாஜி பார்க் மயானத்தில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று மகாராஷ்டிர கலாசாரத் துறை அமைச்சர் ஆஷிஷ் ஷேலார் தெரிவித்தார்.
இளையராஜா, ரஹ்மானுடன் பணிபுரிந்தவர்
பஜனைகள் முதல் கேபரே பாடல்கள் வரை, அனைத்து வகையான பாடல்களுக்கும் கச்சிதமாகப் பொருந்தக் கூடிய குரல் அவருடையது.
1933-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி பிறந்த ஆஷா போஸ்லே, தனது 10-வது வயதில், அதாவது 1943-ஆம் ஆண்டில் பாடத் தொடங்கினார்.
தனது 90-வது வயதிலும் அவர் தொடர்ந்து பாடி வந்தார். ஹன்ஸ்ராஜ் பாஹ்ல், ஓ. பி. நய்யார், மதன் மோகன், ஆர். டி. பர்மன், இளையராஜா, அனு மாலிக் முதல் ஏ. ஆர். ரஹ்மான் வரையிலான கலைஞர்களுடன் அவர் பணியாற்றியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
ஆஷா பாடிய பிரபல தமிழ் பாடல்கள்
- செண்பகமே செண்பகமே - எங்க ஊரு பாட்டுக்காரன்
- நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி - ஹே ராம்
- செப்டம்பர் மாதம் - அலைபாயுதே
- ஓ பட்டர்ஃபிளை - மீரா
- எங்கெங்கே நெருக்கி நெருக்கி - நேருக்கு நேர்
- சாத்து நட சாத்து - சேதுபதி ஐபிஎஸ்
- வெண்ணிலா வெண்ணிலா - இருவர்
- அதிகாலை நேரம் - நான் சொன்னதே சட்டம்
- ஓ பட்டர் ப்ஃளை - மீரா (விக்ரம் நடித்தது)
ஆஷா போஸ்லே தமிழ், இந்தி உள்பட இந்திய மொழி திரைப்படங்களில் 10,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
ரஃபி, முகேஷ் மற்றும் கிஷோர் முதல் பாய் ஜார்ஜ் மற்றும் ஆதித்யா நாராயண் வரையிலான கலைஞர்களுடன் இணைந்து அவர் பாடியுள்ளார்.
1995-ஆம் ஆண்டில், உஸ்தாத் அலி அக்பர் கானுடன் இணைந்து வெளியிட்ட ஒரு இசைத் தொகுப்பிற்காக (Album) அவர் கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































