7 மாத கர்ப்பிணி மனைவியை கொல்லப் போவதாக மிரட்டி தொழிலதிபரிடம் கொள்ளை - திகிலான 45 நிமிடங்கள்

- எழுதியவர், ஜோ டைடி
- பதவி, பிபிசியின் இணையப் பாதுகாப்புச் செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
எச்சரிக்கை: இக்கட்டுரையில் மனவேதனை அளிக்கக்கூடிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
முகமூடி அணிந்த நபர்கள் சிலர் தொழிலதிபர் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவரைச் சுத்தியலால் கடுமையாகத் தாக்கினர். லட்சக்கணக்கான பவுண்டுகள் மதிப்பிலான கிரிப்டோகரன்சியை உடனடியாகத் தங்களுக்கு மாற்றாவிட்டால், ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவியைக் கொன்றுவிடுவதாகவும் மிரட்டினர்.
இச்சம்பவம் குறித்து பிபிசி செய்தி நிறுவனத்திடம் பேசிய பாதிக்கப்பட்ட தம்பதியினர், தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை என்பதால், நாங்கள் அவரை ஜேம்ஸ் என்று புனைப்பெயரை பயன்படுத்தியிருகிறோம்.
இத்தாக்குதலை "மிகவும் கொடூரமானது" என விவரித்த அந்த தம்பதிகள், தங்கள் கருவிலுள்ள குழந்தையின் உயிருக்கு என்ன நேருமோ என்று மிகவும் அஞ்சியதாகத் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட நபர் தனது கிரிப்டோ சேமிப்பு முழுவதையும் மாற்றிய பின்னரே, தாக்குதல் நடத்தியவர்கள் வெளியே நின்றிருந்த காரில் ஏறித் தப்பிச் சென்றனர்.
வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள இத்தாக்குதல் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, குற்றவாளிகள் தொடர்பான தகவல்களை வழங்குவோருக்கு 'க்ரைம்ஸ்டாப்பர்ஸ்' அமைப்பு 10,000 பவுண்டு வெகுமதி அறிவித்துள்ளது.
கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களைக் குறிவைத்து, ஆயுதங்களால் தாக்கி அவர்களிடம் இருந்து பணம் மற்றும் டிஜிட்டல் சொத்துகளைப் பறிக்கும் "ரெஞ்ச் அட்டாக்"(wrench attack) எனப்படும் புதிய வகை வன்முறைக் கொள்ளைச் சம்பவங்களில் இதுவும் ஒன்று என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு உயர்ந்து வரும் நிலையில், டிஜிட்டல் சொத்துகளுடன் தொடர்புடைய இதுபோன்ற வன்முறைக் கொள்ளைச் சம்பவங்கள் பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, பிரேசில், தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பதிவாகியுள்ளன.
ஒருமுறை கிரிப்டோகரன்சி பரிமாற்றம் செய்யப்பட்டுவிட்டால், அதனை மீட்டெடுப்பது மிகவும் கடினம் என்பது குறிப்பிடத்தக்கது.
சொலிஹல் பகுதியில் உள்ள தங்களது வீட்டிற்குள் பலவந்தமாக நுழைந்த மூன்று பேர், சுமார் 45 நிமிடங்கள் தங்களைத் தாக்கியதாக ஜேம்ஸ் கூறினார்.
"திடீரென கதவு பலமாகத் தள்ளித் திறக்கப்பட்டது. கையுறைகளும் முகமூடிகளும் அணிந்திருந்த சிலர் உள்ளே வருவதை என்னால் பார்க்க முடிந்தது" என்று அவர் கூறினார்.
ஜேம்ஸ் அவர்களை எதிர்த்துப் போராட முயன்றார். ஆனால், அவர்கள் சுத்தியலால் அவரது முகம், தலை மற்றும் விலாப்பகுதிகளில் சரமாரியாகத் தாக்கினர்.
ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவியை குற்றவாளிகளில் ஒருவர் சோபாவில் அழுத்திப் பிடித்தார்.
"அவன் என் மனைவியின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தினான்" என்று ஜேம்ஸ் கூறினார். "சோபாவில் இருந்த அவளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. 'என்னால் மூச்சுவிட முடியவில்லை' என்று அவள் அலறுவதைக் கேட்டேன்."
குற்றவாளிகளில் ஒருவர் ஜேம்ஸிடம் அவரது தொலைபேசியைத் திறக்குமாறு கேட்கும் வரை, தாங்கள் எதற்காகத் தாக்கப்படுகிறோம் என்பதே அந்தத் தம்பதியருக்குப் புரியவில்லை.
ஜேம்ஸிடம் கிரிப்டோகரன்சி இருப்பது தாக்குதல்தாரிகளுக்குத் அறிந்திருந்ததாகத் தெரிந்தது. ஆனால், அதை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அவர்களுக்கு முழுமையான புரிதல் இல்லை என்று ஜேம்ஸ் கூறினார்.
அவர்கள் நேரடி வீடியோ அழைப்பில் இருந்த மற்றொரு நபரின் வழிகாட்டுதலின்படியே செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.
"ஃபேஸ்டைமில் இருந்த அந்த நபர், 'அவனது போனில் உள்ள அனைத்தையும் எனக்கு காட்டு. அவனிடம் என்னென்ன செயலிகள் உள்ளன என்பதைக் காட்டு' என்று சொல்வதை நான் கேட்டேன்" என்று ஜேம்ஸ் கூறினார்.

அந்த நபர் கணிசமான தொகை இருந்த ஒரு கிரிப்டோ வாலெட்டைக் கண்டறிந்ததும், மிரட்டல்கள் மேலும் தீவிரமடைந்தன.
"'அதனை உடனடியாக எங்களுக்கு அனுப்பவில்லை என்றால், உன் மனைவியின் வயிற்றில் கத்தியால் குத்தி, உன் குழந்தையையும் மனைவியையும் கொன்றுவிடுவோம்' என்று அவன் மிரட்டினான்" என்று ஜேம்ஸ் கூறினார்.
பெயரை வெளியிட விரும்பாத அவரது மனைவி, கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த அந்தத் தாக்குதலை "மிகவும் கொடூரமானது" என்று விவரித்தார். ஜேம்ஸ் தரையில் அசைவின்றிக் கிடந்தபோது, அவர் கொல்லப்பட்டுவிட்டாரோ என்று தான் அஞ்சியதாகக் கூறினார்.
"அது மிகவும் பயங்கரமாக இருந்தது" என்று அவர் கூறினார்.
30களின் தொடக்கத்தில் இருந்த அந்தப் பெண், அப்போது தனது மூன்றாவது குழந்தையை கருவுற்றிருந்தார். தாக்குதலால் ஏற்பட்ட கடுமையான மன அழுத்தத்தின் காரணமாக குழந்தையை இழந்துவிடுவோமோ என்று அஞ்சியதாகவும் அவர் கூறினார். ஆனால், குழந்தை உயிர் பிழைத்து, முழு கர்ப்பகாலம் முடிந்து பிறந்தது.
ஜேம்ஸ் தனது சேமிப்பான பல லட்சம் பவுண்டுகள் மதிப்பிலான கிரிப்டோகரன்சியை வீடியோ அழைப்பில் இருந்த நபரின் டிஜிட்டல் வாலெட்டுக்கு மாற்றிய பிறகு, அந்த நபர்கள் அங்கிருந்து சென்றனர்.
அவர்கள் விலை உயர்ந்த பல ரோலக்ஸ் கைக்கடிகாரங்களையும் திருடிச் சென்றனர்.
அவர்கள் அங்கிருந்து செல்வதற்கு முன்பு, வீடியோ அழைப்பில் இருந்த நபர் தனது கூட்டாளிகளிடம், "நீங்கள் தலா பத்தாயிரம் பவுண்டுகள் எடுத்துக்கொள்ளுங்கள். மீதியை நான் எடுத்துக்கொள்கிறேன்" என்று கூறியதைக் கேட்டதாக ஜேம்ஸ் கூறினார்.

அதிகரிக்கும் 'ரெஞ்ச் தாக்குதல்கள்'
சாதாரண வங்கிக் கணக்குகளில் வைக்கப்படும் பணத்தைப் போல அல்லாமல், கிரிப்டோகரன்சி பெரும்பாலும் அதன் உரிமையாளரால் டிஜிட்டல் வாலெட்டுகள் அல்லது சேமிப்புச் சாதனங்கள் மூலம் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படுகிறது.
குற்றவாளிகளைப் பொறுத்தவரை, கிரிப்டோகரன்சியின் வேகம், அடையாளத்தை வெளிப்படுத்தாத தன்மை மற்றும் பரிவர்த்தனைகளைத் திரும்பப் பெற முடியாத தன்மை ஆகியவை, கிரிப்டோ வைத்திருப்பவர்களை கவர்ச்சிகரமான இலக்குகளாக மாற்றுகின்றன.
கிரிப்டோகரன்சி திருட்டுகளில் பெரும்பாலானவை இணையவழி ஹேக்கிங் மற்றும் மோசடிகள் மூலமே நடைபெறுகின்றன. இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் நேரடியாக வன்முறையில் ஈடுபட்டு கிரிப்டோகரன்சியைப் பறிக்கும் "ரெஞ்ச் அட்டாக்" எனப்படும் தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக 'செயினாலிசிஸ்' அமைப்பின் கிரிப்டோ புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.
அவர்களது ஆய்வின்படி, ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டும் வன்முறைக் கொள்ளைச் சம்பவங்களில் 30 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கிரிப்டோகரன்சி திருடப்பட்டுள்ளது. இதனால், வன்முறை சார்ந்த கிரிப்டோ தாக்குதல்கள் பதிவானதில் 2026ஆம் ஆண்டு மிக மோசமான ஆண்டாக அமையக்கூடும் எனத் தெரிகிறது. இந்த ஆண்டில் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
அமெரிக்கா, பிரேசில் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இதுபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளும் முக்கிய பிராந்தியங்களாக உள்ளன. இருப்பினும், இதுவரை அதிக எண்ணிக்கையிலான தாக்குதல்கள் பிரான்சில்தான் பதிவாகியுள்ளன. அங்குள்ள வரி அலுவலகம் ஒன்றில் ஏற்பட்ட தரவுக் கசிவு காரணமாக, அதிக அளவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களை குற்றவாளிகளால் அடையாளம் காண முடிந்ததாகத் தெரிகிறது.
"வங்கி லாக்கர்கள் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் போன்ற பாரம்பரியச் செல்வத்தைப் பாதுகாப்பதற்கான வழக்கமான பாதுகாப்பு முறைகள், கிரிப்டோகரன்சிக்கு பொருந்துவதில்லை. கிரிப்டோ கரன்சி வைத்திருப்பவர்கள் தங்களது சொத்துகளை பெரும்பாலும் சுயமாக தங்களைக் காத்துக் கொள்ளும் வாலெட்டுகள் போன்ற ஒப்பீட்டளவில் குறைந்த பாதுகாப்பு கொண்ட அமைப்புகளில் வைத்திருக்கின்றனர். இவற்றை எளிதில் கைப்பற்ற முடியும்" என்று ஆராய்ச்சியாளர்கள் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
ஜேம்ஸ், 2020ஆம் ஆண்டு கிரிப்டோகரன்சியில் ஒரு சாதாரண முதலீட்டாளராக முதலீடு செய்யத் தொடங்கியதாகவும், 2023ஆம் ஆண்டு தனது வேலையை விட்டுவிட்டு முழுநேர கிரிப்டோ வர்த்தகத்தில் ஈடுபடும் அளவுக்கு பணம் சம்பாதித்ததாகவும் கூறினார்.
தற்போது, தான் அனைத்தையும் இழந்துவிட்டதாகக் கூறும் அவர், மீண்டும் தனது பழைய வழக்கமான வேலைக்குத் திரும்ப முயன்று வருவதாகவும் அவர் கூறுகிறார். தாக்குதலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் இதுவரை அடையாளம் காணவில்லை.
இந்த வழக்கின் விசாரணைக்கு உதவும் தகவல்களை வழங்குபவர்களுக்கு 'க்ரைம்ஸ்டாப்பர்ஸ்' அமைப்பு 10,000 பவுண்டுகள் வெகுமதி அறிவித்துள்ளது.
தாக்குதலில் ஈடுபட்ட மூன்று நபர்கள் குறித்தோ, வெளியே முகமூடி அணியாமல் காரில் காத்திருந்த ஓட்டுநர் குறித்தோ அல்லது தொலைபேசியில் பேசிய நபர் குறித்தோ மக்களிடம் ஏதேனும் தகவல் இருக்கலாம் என க்ரைம்ஸ்டாப்பர்ஸ் அமைப்பைச் சேர்ந்த ஆலன் எட்வர்ட்ஸ் நம்புகிறார்.
"இந்தக் குற்றவாளிகள் மிகவும் அபாயகரமானவர்கள். அவர்கள் திட்டமிட்டு செயல்படும் ஒரு குற்றக் கும்பலின் ஒரு பகுதியாக இருக்கலாம்" என்று அவர் கூறினார்.
"மக்கள் எங்களிடம் தகவல் தெரிவிக்கலாம். ஆனால், நாங்கள் காவல்துறையிலிருந்து தனித்து இயங்கும் அமைப்பு. தகவல் அளிப்பவர்களின் அடையாளத்தை முற்றிலும் ரகசியமாகப் பாதுகாப்போம்" என்றும் அவர் தெரிவித்தார்.
தாக்குதலில் ஈடுபட்ட மூன்று நபர்களும் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவர்களில் ஒருவர் இடது புருவத்துக்குக் கீழே வடு கொண்ட கருப்பினத்தைச் சேர்ந்த ஆண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னிடமிருந்து திருடப்பட்ட கிரிப்டோகரன்சியை மீட்க முடியும் என்ற நம்பிக்கை தனக்கு குறைவாகவே இருப்பதாகக் கூறிய ஜேம்ஸ், அதற்குப் பதிலாக இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்.
தனது அனுபவம் மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைய வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.
"அவர்கள் என் மனைவியையும் என் குழந்தையையும் கொல்லப்போவதாக மிரட்டினார்கள்" என்று கூறிய அவர், "இதுபோன்ற ஆபத்துகள் உண்மையானவை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























