You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள்: தமிழ்நாட்டு பெண்கள் எதன் அடிப்படையில் வாக்களிக்கின்றனர்?
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 அன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பெண் வாக்காளர்களை குறிவைத்து அரசியல் கட்சிகள் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
திமுக, அதிமுக போன்ற கட்சிகள் மகளிர் உரிமைத் தொகையை 2,000 ரூபாயாக வழங்குவோம் என கூறியுள்ள நிலையில், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அதையே 2,500 ரூபாயாக வழங்குவோம் என தெரிவித்துள்ளது.
அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு உதவித்தொகை மாதம் ரூ.1,500 ஆக உயர்த்தப்படும், சுய உதவிக்குழுவில் உள்ள பெண்களுக்கு ரூ. 5 லட்சம் வரை மானியத்துடன் கடன் உதவி, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோகப் பொருள் வாங்கும் வகையில் ரூ.8,000 'இல்லத்தரசி கூப்பன்' போன்ற திட்டங்களையும் திமுக அறிவித்துள்ளது.
அதிமுக தன் தேர்தல் அறிக்கையில் 'குலவிளக்கு திட்டம்' என்பதை அறிவித்துள்ளது. அதன்படி, "அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் உதவித்தொகையாக ரூ. 2,000 வழங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைக்குச் செல்லும் மகளிருக்கு ரூ.25,000 மானியத்துடன் 'அம்மா இருசக்கர வாகனங்கள்' வழங்கப்படும் என்றும் அதிமுக தெரிவித்துள்ளது. 'இல்லத்தரசிகளின் பணிச் சுமையை குறைக்க அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு குளிர்பதன பெட்டி விலையில்லாமல் வழங்கப்படும்" என்றும் அதிமுக தெரிவித்துள்ளது. பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண உதவித் திட்டம் தொடர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிமுக தெரிவித்துள்ளது.
திமுக அரசு ஏற்கெனவே 'மகளிர் விடியல் பயணம்' எனும் பெயரில் நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டத்தை செயல்படுத்திவரும் நிலையில், தவெக அறிவித்துள்ள முதல்கட்ட வாக்குறுதிகளின்படி, பெண்கள் தமிழகத்தின் எந்த மூலையிலிருந்தும் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்தது. தவிர, 'அண்ணன் சீர்' போன்ற திட்டங்களையும் அறிவித்துள்ளது தவெக.
நாம் தமிழர் கட்சி 50% தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. "தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு சரிபாதி வேலைவாய்ப்புகள்', 'விளையாட்டுத் துறையில் பெண்களுக்கு சமவாய்ப்பு' உள்ளிட்ட வாக்குறுதிகளை நாம் தமிழர் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி, ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர். இந்த பெண்கள் வாக்களிக்கும்போது தங்கள் மனதில் என்னென்ன விஷயங்களை யோசித்து வாக்களிக்கின்றனர்? அரசியல் கட்சிகளிடமிருந்து எதை அவர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்?
'கணவர் உள்பட யாரும் தலையிட முடியாது'
தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகாவை சேர்ந்த சண்முகசுந்தரி விவசாய கூலி வேலை செய்துவருகிறார். ஒருநாளைக்கு 300 ரூபாய் சம்பளம் பெறும் தனக்கு ஆண்டின் பாதி நாட்கள் வேலை இருக்காது என்கிறார். இவருடைய கணவர் திருப்பூரில் உள்ள ஆடை தொழிற்சாலையில் ஆபரேட்டராக உள்ளார்.
"யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பது எங்கள் விருப்பம்தான். அதில் கணவர் உள்பட யாரும் தலையிட முடியாது. நமக்கு, நம்முடைய தொகுதிக்கு யார் நல்லது செய்வார்கள் என்று பார்த்துதான் வாக்கு செலுத்துவோம்." என்கிறார் சண்முகசுந்தரி.
"பெண்களுக்காக என்ன திட்டங்களை அறிவிக்கின்றனர் என்பதை பார்ப்போம். எங்கள் பகுதி பெண்களை பொறுத்தவரை டாஸ்மாக் கடைகள் மிக முக்கிய பிரச்னையாக உள்ளது. அவற்றை மூட வேண்டும். வீடுகளுக்கு தடையில்லா தண்ணீர் வசதியை உறுதிப்படுத்த வேண்டும்." என கூறுகிறார் சண்முக சுந்தரி.
தரவுகள் கூறுவது என்ன?
வாக்காளர் நடத்தை குறித்து மேற்கொள்ளப்பட்ட சில ஆய்வுகள் மற்றும் கருத்துக்கணிப்புகள், பெண் வாக்காளர்களின் ஆதரவு குறித்த தரவுகளை தருகின்றன. உதாரணமாக, வளரும் சமூகங்களுக்கான ஆய்வு மையத்தின் (CSDS - Centre for the Study of Developing Societies) தரவுகள், 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பெண் வாக்காளர்களிடையே திமுகவை விட அதிமுக சுமார் 15 சதவிகிதம் கூடுதல் வாக்குகளை வாங்கியதாக கூறுகின்றன. 2016ஆம் ஆண்டிலும், அதிமுக சுமார் 10 சதவிகிதம் கூடுதலாக வாங்கியதாக அதன் தரவுகள் கூறுகின்றன.
இத்தகைய தகவல்கள் கருத்துக்கணிப்புகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. கருத்துக்கணிப்புகளின் மாதிரி அளவு மற்றும் முறைமைகள் மாறுபடக்கூடியவை என்பதால், அவை வாக்காளர் நடத்தை குறித்து ஒரு பொதுவான புரிதலை வழங்குவதாகக் கருதப்படுகின்றன.
தமிழ்நாட்டில் 10 ஆண்டுகள் கழித்து 2021-ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக, கடந்த 5 ஆண்டுகளில் பெண்களை மையப்படுத்தி பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. குறிப்பாக, மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம், குறிப்பிட்ட பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத்தை வழங்கும் 'விடியல் பயணத் திட்டம்', அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பெறும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம், பணிபுரியும் பெண்களுக்காக 'தோழி விடுதிகள்' உள்ளிட்ட திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியது.
இதுபோன்ற திட்டங்களால், பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள் பயனடைகிறார்கள் என்பதால் அவற்றின் தாக்கம் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும் என்றாலும் பெண்கள் எப்படி வாக்கு செலுத்துகின்றனர் என்பதில் இம்முறை மாற்றங்கள் இருக்கும் என்கிறார் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) பணிபுரியும் மூத்த பேராசிரியை ஆனந்தி.
தமிழ்நாட்டில் பெண்கள் புதுவித பிரச்னைகளை எதிர்கொள்வதாக கூறும் அவர், "தமிழ்நாட்டில் குடும்பம், வேலை என வீட்டிலும், வெளியிலும் பெண்கள் பல பொறுப்புகளை சுமக்கின்றனர். வேலைவாய்ப்பை யார் ஏற்படுத்தித் தருகிறார்கள் என்பதை பெண்கள் நிச்சயம் பார்ப்பார்கள். அத்துடன் பாதுகாப்பையும் பெண்கள் முக்கியமாக கருதுவார்கள்." என்கிறார் அவர்.
பேராசிரியர் ஆனந்தி கூறும் கருத்தை தமிழ்நாட்டின் பெண்கள் சார்ந்த சில தரவுகளுடன் பொருத்திப் பார்க்க வேண்டும். கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாட்டின் SIF 2.0 வறுமை மற்றும் சுகாதாரக் குறிகாட்டிகளை (State Indication Framework) தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் திருமணமான 92.8% பெண்கள், குடும்பங்களில் மூன்று முக்கிய விஷயங்களில் முடிவெடுப்பதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். அதாவது தங்களுடைய சொந்த சுகாதார நலன், வீட்டுக்குத் தேவையான முக்கிய பொருட்களை வாங்குதல், தங்களின் குடும்பத்தினர் அல்லது உறவினர்களை சென்று பார்த்தல் போன்ற விஷயங்களில் அவர்கள் ஆர்வமாக பங்கெடுக்கின்றனர் என கூறுகிறது.
அதே அறிக்கையின்படி, உயர்கல்வியில் பாலின சமத்துவம் கிட்டத்தட்ட எட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று, காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு 2024-யின்படி (periodic labour force survey), தமிழ்நாட்டில் பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் தேசிய சராசரியைவிட (32.5%) குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் இந்த விகிதம் 47% ஆக உள்ளது.
பெண்கள் எப்படி வாக்களிக்கின்றனர்?
தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை மையப்படுத்தி, பெண்களுக்கான திட்டங்களை மாநில அரசுகள் தொடர்ச்சியாக செயல்படுத்தி வருகின்றன. ஆனால், இதைக் கடந்தும் தமிழ்நாட்டின் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் பல உள்ளன என்பது நாம் பேசிய சில பெண்களின் வாயிலாக தெரியவருகிறது.
விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தில் ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்துவரும் ஜோதி, "பெண்கள் பாதுகாப்பு முக்கிய பிரச்னையாக இருக்கிறது. சிறு குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை, அது ஆண் குழந்தையாக இருந்தாலும். பெண் தலைவர்கள் இருந்திருந்தால் இந்த பிரச்னைகளை இன்னும் கவனமாக கையாண்டிருப்பார்களோ என்று தோன்றுகிறது." என்றார்.
சென்னை அண்ணா நகரை சேர்ந்த மாலதி, ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு, குடும்ப தலைவியாக உள்ளார்.
"நான் படித்திருந்தாலும் குழந்தையை கவனிக்க வேண்டிய பொறுப்பு இருப்பதால், எங்கள் பகுதிகளிலேயே குழந்தையை பார்த்துக் கொள்வதற்கான மையத்தை அரசே அமைக்கலாம், " என்கிறார் மாலதி.
அதேபோன்று, சென்னையை சேர்ந்த சீதா, "அரசியல் கட்சிகள் என்ன வாக்குறுதிகளை வழங்குகின்றனர் என்பதை கவனிப்போம். கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட வளர்ச்சி சார்ந்து என்ன அறிவிக்கின்றனர் என்பதை பார்த்து வாக்கு செலுத்துவோம். யாருக்கு வாக்களிப்போம் என்பதை வீட்டில் விவாதித்தாலும் தனிப்பட்ட முடிவின்படியே வாக்களிப்போம்." என்றார். இவர் தனியார் டியூஷன் மையம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
'பெண்கள் வாக்களிக்கும் நடத்தையில் அதிக மாற்றம்'
பெண்கள் வாக்களிக்கும் நடத்தையில் அதிக மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக கூறுகிறார், தி வுமென் கலெக்டிவ் அமைப்பின் நிறுவனர் ஷீலு.
"ஒரு காலகட்டத்தில் வீட்டில் கணவரோ அல்லது தந்தையோ கூறும் கட்சிக்கு பெண்கள் வாக்களித்த நிலைமை இருந்திருக்கிறது. 'நான் சொல்லும் கட்சிக்கு ஓட்டு போடாவிட்டால் உன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்றுவிட வேண்டியதுதான்' என கணவர் மிரட்டுவதாக பெண்கள் என்னிடம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்திருந்தனர். ஆனால் இப்போது நிச்சயமாக அந்த நிலை இல்லை." என்கிறார்.
வுமென் கலெக்டிவ் தேர்தல் சமயத்தில் பெண்கள் கட்டாயம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையிலான விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது. எஸ்.ஐ.ஆர் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின்போது பெண்கள் திருமணம் போன்ற சமூக காரணிகளால் முகவரி மாற்றப் பிரச்னைகளால் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டு போவதற்கான வாய்ப்பு அதிகம் இருந்ததாக கவலைகள் எழுந்தன. அந்த சமயத்தில், வாக்காளர் பட்டியலில் பெண்களின் பெயர்கள் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்யும் பணிகளிலும் இந்த அமைப்பு உதவியது.
கட்சிகள் பெண்கள் சார்ந்த பல முக்கிய பிரச்னைகளை கவனிக்கத் தவறுவதாக கூறுகிறார் ஷீலு. "பெண்கள் சார்ந்து நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் குறைகள் உள்ளன. பெண் விவசாயிகளை அங்கீகரிப்பது, பெண்களுக்கு நிலவுடைமை போன்றவற்றை நாங்கள் தொடர்ச்சியாக பேசிவருகிறோம். அவை இன்னும் அதிகமாக கவனிக்கப்படவில்லை" என்கிறார் ஷீலு.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு