சூர்யவன்ஷியை இந்திய அணியில் சேர்க்காதது பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றியைப் பெற்று அயர்லாந்து தொடரைக் கைப்பற்றியது.
2023-க்குப் பிறகு இந்தியா சந்திக்கும் முதல் டி20 தொடர் தோல்வி இதுவாகும்.
வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கு எதிராக 34 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்திருந்த அயர்லாந்து, நடப்பு டி20 உலகக் கோப்பை சாம்பியனான இந்தியாவை இரண்டாவது முறையாகவும் வீழ்த்தியது. அயர்லாந்தின் இந்த வெற்றியில் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய ஜே முந்த்ரா மற்றும் மேத்யூ ஹல்லார்ட் ஆகியோர் முக்கிய பங்காற்றினர்.
இறுதி ஓவர்களில் இந்தியா வேகமாக ரன் சேர்த்ததால் ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது; வெற்றிக்கு கடைசி இரண்டு பந்துகளில் 8 ரன்கள் தேவைப்பட்டன.
ஆனால் பரபரப்பான அந்தத் தருணத்தில், ஹாரி டெக்டர் வீசிய பந்தில் அவரது சகோதரரான டிம் டெக்டரிடம் கேட்ச் கொடுத்து ஹர்ஷித் ரானா ஆட்டமிழந்தார். கடைசிக்கு முந்தைய பந்தில் விழுந்த இந்த விக்கெட், அயர்லாந்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை உறுதி செய்தது.
முன்னதாக வெள்ளிக்கிழமை இந்தியாவின் 15 வயது அதிரடி பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச அரங்கில் அறிமுகமாவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், டி20 உலக சாம்பியனான இந்தியாவை வீழ்த்தி அயர்லாந்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்ததுடன், தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
பிபிசி ஸ்போர்ட்ஸ் (BBC Sports) தகவலின்படி, கிரிக்கெட்டில் எந்தவொரு வடிவத்திலும் இந்தியாவுக்கு எதிராக அயர்லாந்து பெற்ற முதல் வெற்றி இதுவாகும் (12 போட்டிகளில்); டி20-யைப் பொறுத்தவரை ஒன்பதாவது முயற்சியில் இந்த வெற்றியை அது பதிவு செய்துள்ளது.
இந்தியா வலுவாக மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாவது டி20 போட்டிக்கான ஆடும் லெவனில் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்படாதது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
இந்தியாவின் தோல்வி ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்ததுடன், வைபவ் சூர்யவன்ஷி அணியில் சேர்க்கப்படாதது குறித்தும் கேள்விகளை எழுப்பியது. இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் முடிவும் சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டது.
கேலிக்குள்ளான கம்பீர்

பட மூலாதாரம், Getty Images
அயர்லாந்திடம் தொடரை இழந்த பிறகு, இந்திய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
ஐஸ்லாந்து கிரிக்கெட் (Iceland Cricket) அமைப்பு 'எக்ஸ்' (X) தளத்தில் கம்பீரை கேலி செய்யும் வகையில் பதிவிட்டது.
சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வரும் அந்தப் பதிவில், தற்போதைய நிலையில் கம்பீரை தங்கள் பயிற்சியாளர் குழுவில் சேர்க்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ஐஸ்லாந்து கிரிக்கெட் கிண்டலாகக் கூறியுள்ளது.
"கம்பீரை எங்கள் பயிற்சியாளர் குழுவில் சேர்க்கும் எண்ணம் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறோம். இருப்பினும், அவரது திறமை தெளிவாகத் தெரிகிறது. அந்த இந்திய வீரர்களுடன் அயர்லாந்துக்குச் சென்று இத்தகைய முடிவுகளைப் பெறுவதற்கு உண்மையிலேயே அசாதாரணமான திறமை தேவை," என்று ஐஸ்லாந்து கிரிக்கெட் அமைப்பு 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளது.
'இனி சூர்யவன்ஷிக்கு வாய்ப்பளித்தே ஆக வேண்டும்'
அயர்லாந்துக்கு எதிரான போட்டி மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாக வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், "வைபவ் சூர்யவன்ஷியின் தற்போதைய ஆட்டத்திறனைக் கருத்தில் கொண்டு, அவரை இரண்டு போட்டிகளிலும் ஆட வைத்திருக்கலாம். ஒரு போட்டியில் அபிஷேக் சர்மாவுடன் வைபவ் சூர்யவன்ஷி தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கியிருக்கலாம்; இரண்டாவது போட்டியில் அபிஷேக் சர்மாவை வரிசையில் சற்று கீழே இறக்கிவிட்டு, சஞ்சு சாம்சனை அணியில் சேர்த்திருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை." என்று கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
அவர் மேலும் கூறுகையில், "வைபவ் வெறும் 10-15 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கவும் வாய்ப்பிருந்திருக்கலாம். ஆனால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றால், இந்த இரண்டு போட்டிகளே சிறந்த வாய்ப்பாக அமைந்திருந்தன. இப்போது இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலேயே அவர்களை ஆட வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பார்மில் இல்லாத பேட்ஸ்மேன்களை நீக்கிவிட்டு வைபவ் சூர்யவன்ஷியை ஆட வைக்க வேண்டும். தொடக்க ஆட்டக்காரர்களுக்குப் பிறகு அவரை களமிறக்கினாலும் சரி, அவரை அணியில் சேர்த்தே ஆக வேண்டும்." என்றார்.
இந்திய அணித் தேர்வு குறித்தும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
"சிறந்த ஆடும் லெவனை உருவாக்க வேண்டும் என்றால், அதில் வைபவ் சூர்யவன்ஷியின் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும். 'இது உலகக் கோப்பையை வென்ற அணி, எனவே அதே 11 வீரர்களுடன் தொடர்வோம், வைபவ் காத்திருக்க வேண்டும்' என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால் இந்த வாதம் எப்போதும் ஒரே மாதிரி பின்பற்றப்பட வேண்டும். ரோஹித் சர்மா வெற்றி பெற்ற கேப்டனாக இருந்தபோதிலும், இளம் கேப்டனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கூறி அடுத்த முறை அவர் நீக்கப்பட்டார். உலகக் கோப்பை வென்ற கேப்டனான சூர்யகுமார் யாதவை நீக்கியபோதும் இதே வாதம் தான் முன்வைக்கப்பட்டது." என்று அவர் கூறினார்.
"எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ளும்போது, 15 வயதான வைபவ் சூர்யவன்ஷியை விடச் சிறந்த எதிர்காலத் திறமையாளர் யார் இருக்க முடியும்? வைபவ் சூர்யவன்ஷி ரன்களைக் குவித்து வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் 'ஆரஞ்சு கேப்' (அதிக ரன் குவித்தவர்) வென்றவர் அவர். கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடிக்க ஒரு சிக்ஸர் மட்டுமே அவருக்குத் தேவைப்பட்டது. அவர் இந்திய அணியில் இடம்பெற்றிருக்க வேண்டும்." என்பது கைஃபின் கருத்து.
மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் தனது 'எக்ஸ்' பக்கத்தில் "வைபவ் சூர்யவன்ஷி வெறுமனே பெஞ்சில் அமர வைக்கப்படுவதற்காகவா அயர்லாந்துக்கு அனுப்பப்பட்டார்? அல்லது தொலைக்காட்சித் திரைகளில் இந்தத் தொடரை விளம்பரப்படுத்துவதற்காக மட்டுமா? ஒரு தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய அத்தகைய திறமைசாலி ஒருவருக்கு, அவர் ஜொலிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இது மிகவும் விசித்திரமாக இருக்கிறது!" என்று குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Charles McQuillan/Getty Images
மூத்த விளையாட்டுப் பத்திரிகையாளர் ஹர்ஷா போக்லே அயர்லாந்து அணியைப் பாராட்டி இன்ஸ்டாகிராமில் எழுதியுள்ளார். "அயர்லாந்தின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்தது. அவர்களின் கிரிக்கெட் அணிக்குத் தேவைப்பட்ட வெற்றி இதுதான். இது வீரர்களுக்கு நம்பிக்கையை அளிப்பதோடு, அவர்களின் அணியை மேலும் வலுப்படுத்தும் ஒரு முடிவாக அமையும்."
"250 ரன்கள் எளிதாக எடுக்கப்படும் ஆடுகளங்களில் விளையாடிப் பழகிய உலகின் சிறந்த வீரர்களால் கூட, மாறுபட்ட சூழல்களுக்கு விரைவாகப் பழக முடிவதில்லை. இதனால்தான் வீரர்கள் அவ்வப்போது 160-170 ரன்கள் மட்டுமே எடுக்கக்கூடிய போட்டிகளிலும் விளையாட வேண்டும். அத்தகைய போட்டிகள் பேட்ஸ்மேன்களின் திறனை உண்மையாகவே சோதித்து சவால் விடுவதால் அவை நல்லவை." என்று போக்லே கூறியுள்ளார்.
அதேவேளையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "அருமையாகச் செய்தீர்கள் அயர்லாந்து! ஐரிஷ் கிரிக்கெட்டுக்கு இது எவ்வளவு ஒரு சிறப்பான நாள்!" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னாள் வீரர்கள் விமர்சனம்
அயர்லாந்துக்கு எதிரான இந்தியாவின் தோல்வி குறித்து இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறுகையில், "ஐபிஎல் தொடரின் மிகச்சிறப்பான, சமதளமான ஆடுகளங்களில் விளையாடி இந்திய வீரர்கள் பழகிவிட்டனர். சர்வதேச அளவில் கடினமான சூழல்களை எதிர்கொள்ளும்போது அவர்கள் பெரிதும் சிரமப்பட வேண்டியுள்ளது," என்றார்.
ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சி குறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில், "வெறும் இரண்டு போட்டிகளுக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வருவது அவசரமானதாக இருக்கும். இங்கிலாந்துடனான ஐந்து போட்டிகளுக்குப் பிறகுதான் இது குறித்து ஏதேனும் சொல்ல முடியும்," என்றார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா இந்தியாவின் தோல்வியை எதிர்பாராதது என்று குறிப்பிட்டார். அவர் கூறுகையில், "பேட்ஸ்மேன்கள் அதேதான்; சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா மட்டுமே அணியில் இடம்பெறவில்லை. உலகக் கோப்பை வென்ற அணி இப்படித் தோல்வியடைவது ஆச்சரியமாக இருக்கிறது. அயர்லாந்து போன்ற ஒரு அணி இந்தியாவை முதன்முறையாக வீழ்த்தியிருப்பது, அணியில் ஏதோ ஒன்றை மேம்படுத்த வேண்டியுள்ளது என்பதைக் காட்டுகிறது. இனி வைபவ் சூர்யவன்ஷியை களமிறக்க வேண்டியிருக்கும்," என்றார்.

பட மூலாதாரம், Getty Images
அயர்லாந்து அணியில் ஜொலிக்கும் இந்திய வம்சாவளி வீரர்
இரண்டாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணியை 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களுக்குள் இந்தியா கட்டுப்படுத்தியது. ஹாரி டெக்டர் தனது 100-வது சர்வதேச போட்டியில் 53 ரன்கள் எடுத்தார்.
வெள்ளிக்கிழமை நடந்த முதல் டி20 போட்டியில் அறிமுகமான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜெய் முந்த்ரா, அயர்லாந்து கிரிக்கெட்டின் புதிய நாயகனாக உருவெடுத்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் முதல் பந்திலேயே சஞ்சு சாம்சனை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்து அவர் இந்தியாவுக்குப் பெரும் அதிர்ச்சியளித்தார்.
பின்னர் அபிஷேக் சர்மா மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்திய ஜெய் முந்த்ரா, இந்திய அணியை 3 விக்கெட் இழப்புக்கு 19 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளி, அணியை நெருக்கடிக்குள்ளாக்கினார்.
இந்தியாவில் பிறந்த முந்த்ரா, 2021-ல் தனது படிப்பிற்காக டப்ளினுக்குச் சென்றார். ராஜஸ்தானின் டோங்க் (Tonk) பகுதியைச் சேர்ந்த இவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை மகிழ்ச்சி பொங்கியது.

பட மூலாதாரம், Getty Images
அயர்லாந்து அணி ஆரம்பக்கட்ட முன்னிலை பெறுவதில் பந்துவீச்சாளர் ஜெய் முந்த்ரா முக்கிய பங்காற்றினார்; அவர் மூன்று ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு மாற்றாக, ஜெய் முந்த்ரா வடிவில் அயர்லாந்து அணி ஒரு சிறந்த வீரரைக் கண்டறிந்துள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்தனர்.
கிரிக்கின்ஃபோ தளத்தில் விளையாட்டு பத்திரிகையாளர் அழகப்பன் முத்து, "இந்திய அணி சேஸிங்கின் போது, ஆட்டத்தின் முதல் பந்திலேயே சஞ்சு சாம்சனை ஜெய் முந்த்ரா ஆட்டமிழக்கச் செய்தார். அது ஒரு சிறப்பான இன்ஸ்விங் பந்து. பின்னர் அதே ஓவரில், அவர் அபிஷேக் ஷர்மாவின் விக்கெட்டையும் கைப்பற்றினார். டி20 சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில், தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் கோல்டன் டக் அவுட் ஆனது இது நான்காவது முறையாகும்."
"இந்தியாவுக்கு பெரிய இலக்கு எதுவும் இல்லை. ஸ்கோர் போர்டில் 2 விக்கெட்டுக்கு 1 ரன் என்று காட்டியபோதிலும், அணி அழுத்தத்தைச் சமாளிக்கும் என்று தோன்றியது, ஆனால் முந்த்ரா இந்திய அணிக்கான நெருக்கடியை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருந்தார்." என்று அவர் கூறியுள்ளார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு























