இணையத்தில் இருக்கும் நம் தரவுகளை முற்றிலுமாக அழிப்பது சாத்தியமா?

இணையத்தில் இருக்கும் நம் தரவுகளை முற்றிலுமாக அழிப்பது சாத்தியமா?

பட மூலாதாரம், Getty Images

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இணையம் இல்லாத வாழ்க்கையை இன்றைய காலகட்டத்தில் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அனைவரது கைகளிலும் தவழும் ஸ்மார்ட்ஃபோன்கள் இணையத்தை ஓர் அடிப்படைத் தேவையாக மாற்றிவிட்டது.

இந்தச் சூழலில், ஆன்லைனில் பல விஷயங்களை தெரிந்துகொள்வது, பொழுதைக் கழிப்பது, பொருட்களை வாங்குவது, சமூக ஊடகங்களில் பதிவிடுவது எனப் பலவற்றைச் செய்கிறோம்.

அப்படியிருக்க, ஆன்லைனில் இருந்து நம்முடன் தொடர்புடைய ஏதாவது ஒரு தகவலை நீக்கிவிட்டால் அல்லது அழித்துவிட்டால், அது நிரந்தரமாக மறைந்துவிடுவதாகப் பலர் நம்புகின்றனர்.

உதாரணமாக, ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை நீக்குவது, கூகுள் போன்ற பிரௌசர்களில் நமது தேடல் வரலாற்றை அழிப்பது, ஃபேஸ்புக்கில் பதிவேற்றிய புகைப்படத்தை அழிப்பது ஆகியவற்றைச் செய்த பிறகு, அவை முற்றிலுமாக இல்லாமல் ஆக்கப்பட்டதாக உணர்கிறோம்.

ஆனால், அந்தத் தரவுகள் உண்மையாகவே இல்லாமல் ஆகின்றனவா என்று கேட்டால், இல்லை என்பதே நிபுணர்களின் பதிலாக இருக்கிறது. ஆம், நடைமுறையில் உண்மை அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. இணையத்தைப் பொறுத்தவரை அது மிகவும் சிக்கலானது.

'டெலிட்' பட்டனை அழுத்தும்போது என்ன நடக்கிறது?

பொதுவாக, 'டெலிட்' என்ற பொத்தானை அழுத்தும்போது, அது பயனரின் கைபேசி அல்லது கணினியில் இருந்து மறைந்துவிடுவதாகக் கூறுகிறார் சைபர் தொழில்நுட்ப வல்லுநர் முரளிகிருஷ்ணன் சின்னதுரை.

அதோடு, "சமூக ஊடகங்களில் இருக்கும் பிற பயனர்களுக்கும் அது காட்டப்படாமல் அழிக்கப்பட்டுவிட்ட தோற்றத்தைக் கொடுக்கலாம். ஆனால், அந்தப் பதிவு எப்போதும் அந்த நிறுவனத்தின் சர்வர் அமைப்பில் அப்படியே இருக்கும்."

கூகுள், மெட்டா (ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்) போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகளவிலான தரவுகளைச் சேமிப்பதாகக் கூறும் அவர், "ஒருவர் எதையாவது டெலிட் செய்யும்போது, அது பொதுப் பார்வையில் இருந்து மட்டுமே அகற்றப்படுவதாகவும், அதற்குப் பிறகும் சிறிது காலத்திற்கு அது அந்த நிறுவனங்களின் சேவையகங்களில் இருக்கும்," என்கிறார்.

பொதுவாக, டிஜிட்டல் நிறுவனங்கள் தங்கள் தளங்களுக்கு வரும் தரவுகளை பிரதியெடுத்து வைத்திருக்கின்றன. தொழில்நுட்ப சிக்கல்கள், ஹேக்கிங் அல்லது கணினி செயலிழப்பு ஏற்பட்டால், அந்தப் பிரதிகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, "இன்று நீங்கள் உங்களுடைய ஒரு பதிவையோ, புகைப்படத்தையோ நீக்கினாலும், அது வாரக்கணக்கில் அல்லது மாதக் கணக்கில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்."

அதோடு, ஒரு குறிப்பிட்ட தளத்தில் மட்டுமல்லாமல் பல்வேறு தளங்களில் உங்களுடைய தரவுகள் இருக்கலாம் என்கிறார் சைபர் பாதுகாப்பு வல்லுநரும் வழக்கறிஞருமான என். கார்த்திகேயன்.

இணையம் என்பது கணினி, கைபேசியைப் போல ஒரு குறிப்பிட்ட சாதனம் இல்லை. அது உலகம் முழுவதையும் இணைத்திருக்கும் கோடிக்கணக்கான கணினிகளின் ஒரு வலையமைப்பு.

எளிதாகச் சொல்ல வேண்டுமெனில், "நாம் இரண்டு உலகங்களில் வாழ்கிறோம். ஒன்று, நாம் உண்டு, உறங்கி, வாழ்ந்து, நடமாடும் இந்த நிஜ உலகம். மற்றொன்று, இணையத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் விஷயங்கள் அடங்கிய மறைநிகர் உலகமான டிஜிட்டல் உலகம்," என்கிறார் கார்த்திகேயன்.

இணையத்தில் இருக்கும் நம் தரவுகளை முற்றிலுமாக அழிப்பது சாத்தியமா?

பட மூலாதாரம், Getty Images

பல்வேறு இடங்களுக்குப் பரவும் தரவுகள்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அவரது கூற்றுப்படி, ஒருவர் ஒரு புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றினால், அந்த ஒருவரின் சாதனத்தில் மட்டுமே இருப்பதில்லை. அது பல வழிகளில் வெவ்வேறு இடங்களைச் சென்றடைகிறது. எடுத்துக்காட்டாக,

  • உங்கள் கணக்கைப் பார்க்கும் வேறு பயனரால் பதிவிறக்கம் செய்து சேமிக்கப்படலாம் மற்றும் மீண்டும் பகிரப்படலாம்
  • இணையதளங்களில் நகலெடுக்கப்படலாம்
  • கூகுள் போன்ற இணைய தேடுபொறிகளால் சேமிக்கப்படலாம்

இதற்குச் சான்றாக, கூகுள் மேற்கொள்ளும் தற்காலிக சேமிப்பைக் கூறலாம். கூகுள் சில நேரங்களில் அதன் பக்கங்களைப் பயன்படுத்தும் பயனர்கள் எதையாவது டெலிட் செய்தால், அதன் அசலை நீக்கிவிட்டு, நகலெடுக்கப்பட்ட பிரதியைச் சிறிது காலத்திற்கு வைத்திருக்கும்.

இதுகுறித்து கூகுள் இணையதளத்தில், "நீங்கள் தரவை நீக்கும்போது, உங்கள் தரவு எங்கள் சேவையகங்களில் இருந்து பாதுகாப்பாகவும் முழுமையாகவும் அகற்றப்படுவதை அல்லது அநாமதேய வடிவத்தில் மட்டும் தரவு தக்கவைக்கப்படுவதை உறுதி செய்ய, டெலிஷன் செயல்முறையை நாங்கள் பின்பற்றுகிறோம்.

இதன் காரணமாக, நீங்கள் எதையாவது டெலிட் செய்யும்போது, எங்கள் செயலிலுள்ள, பிரதியெடுக்கும் அமைப்புகளில் இருந்து அதன் நகல்கள் நீக்கப்படுவதில் தாமதங்கள் ஏற்படலாம்," என்று கூறியுள்ளது.

அதாவது, ஒருவர் தான் தொடர்பான தரவுகளை நீக்கினாலும், அதன் நகலெடுக்கப்பட்ட பிரதி சிறிது காலத்துக்கு கூகுள் சர்வரில் இருக்கவே செய்யும். அனைத்து தேடுபொறிகளிலும் கிட்டத்தட்ட இதே அமைப்புமுறைதான் என்பதால், ஒருவர் டெலிட் செய்யும் எதுவும் இணையத்தில் முற்றிலுமாக அழிக்கப்படுவதில்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுபோக தரவுத் தரகர்கள் என்று அழைக்கப்படும் நிறுவனங்களும் உள்ளன. அவர்கள் வெவ்வேறு இணையதளங்களில் இருந்து பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்து விளம்பரம் அல்லது சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காக விற்கிறார்கள். "உங்கள் தரவு அவ்வாறு சேகரிக்கப்பட்ட பிறகு, அது பல தளங்களுக்குச் சென்றடைகின்றன" என்றார் கார்த்திகேயன்.

எனவே, ஓரிடத்தில் இருந்து ஒன்றை நீக்கிவிடுவதால், அது இணையத்தில் முற்றுமுழுதாக மறைந்துவிடும் என்று அர்த்தமில்லை.

இணையத்தில் இருக்கும் நம் தரவுகளை முற்றிலுமாக அழிப்பது சாத்தியமா?

பட மூலாதாரம், Getty Images

தேடுபொறியும் தேடல் வரலாறும்

கூகுள், யாஹூ போன்ற தேடுபொறிகளில் தேடல் வரலாற்றை (browser history) முழுமையாக டெலிட் செய்வது, அனைத்து டிஜிட்டல் தடயங்களையும் நீக்கிவிடும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அது உண்மையல்ல என்கிறார் முரளிகிருஷ்ணன்.

ஒருவர் தனது தேடல் வரலாற்றை அழிக்கும்போது, "அது அவரது சாதனத்தில் இருந்து நீக்கப்படுகிறது. ஆனால், அந்த நபர் பார்வையிட்ட இணையதளங்களில் இருந்து அவரது வருகை மற்றும் செயல்பாடு குறித்தான பதிவுகளை இது அகற்றாது. அதோடு, இணைய சேவை வழங்குநரால் சேமிக்கப்படும் தரவுகளிலும் இது அவற்றை அகற்றாது," என்று விளக்கினார்.

நீங்கள் தேடுபொறியில் எந்த இணையதளங்களைப் பார்வையிட்டீர்கள் என்பதை இணைய சேவை வழங்குநர் அறிந்திருக்கலாம். அதேபோல, இணையதளங்கள் பெரும்பாலும் ஐபி முகவரி, வருகை நேரம் போன்ற பயனர் தகவல்களைச் சேமிக்கின்றன.

அதேபோல, விளம்பரதாரர்களால் கண்காணிக்கப்படுவதையும் இது தடுக்காது என்றார் அவர்.

"உதாரணமாக, ஒருவர் தேடுபொறியில் ஒரு இருசக்கர வாகனத்தை வாங்குவது குறித்துத் தேடுகிறார். பின்னர், அந்தத் தேடல் வரலாற்றை அவர் முற்றிலுமாக நீக்கிவிடுகிறார். ஆனால் அதற்குப் பிறகும் அவருக்கு இருசக்கர வாகனம் தொடர்பான விளம்பரங்கள் காட்டப்படும். இதன் மூலம் இணையத்தில் நமது செயல்பாடுகளின் பதிவுகள் நம் சாதனங்களில் மட்டுமே நீக்கப்படுகின்றன, இணைய உலகில் அவை பல்வேறு இடங்களில் பிரதியெடுக்கப்பட்டு சேமிக்கப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளலாம்."

இணையத்தில் இருக்கும் நம் தரவுகளை முற்றிலுமாக அழிப்பது சாத்தியமா?

பட மூலாதாரம், Getty Images

டிஜிட்டலில் நமது இருப்பை முழுமையாக அழிக்க முடியுமா?

வாட்ஸ்ஆப் செயலி எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் பாதுகாப்பைக் கொணடது எனக் கூறப்படுகிறது. அதில் நீங்கள் தனிப்பட்ட ரீதியில் உங்கள் நண்பருடன் இருசக்கர வாகனம் வாங்குவது குறித்துப் பேசியிருப்பீர்கள்.

ஆனால், "உங்கள் சம்பளத்திற்குப் பொருத்தமான மாதத் தவணையுடன் கிடைக்கவல்ல இருசக்கர வாகனத்தின் விளம்பரம் உங்களுக்கு வேறு தேடுபொறியிலோ அல்லது செயலியிலோ காட்டப்படும். எனவே டிஜிட்டல் உலகில் எதுவுமே அழிக்கப்படுவதில்லை, எங்காவது, ஏதாவது வடிவில் அந்தத் தரவுகள் இருக்கவே செய்கின்றன," என்கிறார் கார்த்திகேயன்.

அவரது கூற்றுப்படி, உங்கள் டிஜிட்டல் வாழ்க்கையை முற்றிலுமாக அழிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. மேற்கொண்டு பேசியவர், அதற்கான காரணங்களையும் பட்டியலிட்டார்.

  • தரவுகள் பலமுறை நகலெடுக்கப்படுகிறது: நீங்கள் எதையாவது பதிவிடும்போது, அது வெவ்வேறு இடங்களிலுள்ள வெவ்வேறு சேவையகங்களில் நகலெடுக்கப்படலாம்.
  • பிரதியெடுக்கப்படும் தரவுகள்: இணைய நிறுவனங்கள் தரவுகள் டெலிட் செய்யப்பட்டாலும் அவற்றின் பிரதிகளை தற்காலிகமாக வைத்திருக்கும்.
  • பிறர் உங்கள் உள்ளடக்கத்தைச் சேமிக்கலாம்: நீங்கள் பதிவிடும் பதிவை வேறு யாராவது ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைக்கலாம் அல்லது உங்கள் புகைப்படத்தைப் பதிவிறக்கம் செய்து வைக்கலாம். அந்த நகலை உங்களால் கட்டுப்படுத்த முடியாது.
  • தரவுகள் மதிப்பு மிக்கவை: இன்றைய டிஜிட்டல் பொருளாதாரத்தில் தனிநபர் தரவுகள் மிகவும் மதிப்புமிக்கவை. நிறுவனங்கள், விளம்பரம், ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுக்குப் பயிற்சியளிக்க என இந்தத் தரவுகளைப் பயன்படுத்துகின்றன.
இணையத்தில் இருக்கும் நம் தரவுகளை முற்றிலுமாக அழிப்பது சாத்தியமா?

பட மூலாதாரம், Getty Images

தனிநபர் பாதுகாப்புக்கு என்ன செய்யலாம்?

டிஜிட்டலில் பதிவேற்றப்பட்ட அனைத்தையும் முழுதாக அழிக்க முடியாது என்றாலும், நமது டிஜிட்டல் தடத்தைக் குறைத்துக் கொள்வதன் மூலம் நாம் பாதுகாப்பாக உணரலாம் என்கிறார் முரளிகிருஷ்ணன்.

"ஒரு பதிவை இடுவதற்கு முன்பு கவனமாகச் சிந்திக்க வேண்டும். கைபேசி எண், முகவரி போன்ற தனிப்பட்ட விவரங்களைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும். பயன்படுத்தாத பழைய கணக்குகளை நீக்க வேண்டும்" என்றும் வலுவான கடவுச் சொற்களையும் இருகட்ட பாதுகாப்பையும் பயன்படுத்துமாறும் அவர் விளக்கினார்.

மேலும், "குழந்தைப் பாலியல் வன்கொடுமை தொடர்பான உள்ளடக்கங்கள், பரஸ்பர விருப்பமில்லாத பாலியல் உள்ளடக்கங்கள் போன்றவற்றை நீக்க வேண்டுமெனில், அதற்கு stopncii.org என்ற இணையதளத்தின் மூலம் புகாரளித்து, முற்றிலுமாக நீக்கிவிடலாம். இது தவிர்த்து, பிற உள்ளடக்கங்களுக்கு எவ்வித நடைமுறையும் இல்லை" என்று கூறினார் அவர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அதோடு, சிறந்த பாதுகாப்பு என்பது, இணையத்தில் ஒரு பதிவையோ புகைப்படத்தையோ பதிவேற்றுவதற்கு முன்பாக, இதைச் செய்வதால் கிடைக்கப் போகும் எதிர்வினைகளைப் பற்றிச் சிந்தித்துக் கொள்வதுதான் என்கிறார் அவர்.

ஒருவரின் டிஜிட்டல் தடம் எங்காவது, ஏதாவதொரு வடிவில் இருக்கவே செய்யும். "உதாரணமாக, ஒருவர் மோசமான ஒரு பதிவை இடுகிறார். பின்னர் அதை டெலிட் செய்துவிடுகிறார் என்றால், அது முற்றிலும் அழிந்துவிடாது.

அவர் மீது காவல்துறையில் புகாரளித்தால், அந்தப் பதிவை மீண்டும் எடுத்துவிடலாம். எனவே, டிஜிட்டல் உலகில் நாம் எதைச் செய்கிறோம் என்பதில் அக்கறையுடன் இருக்க வேண்டும்," எனத் தெரிவித்தார் முரளிகிருஷ்ணன்.

இணையம் தகவல்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் சேமித்துப் பகிர்ந்து கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது எளிதில் தரவுகளை மறந்துவிடும் வகையில் வடிவமைக்கப்படவில்லை.

உண்மையில், இணையம் நாம் நினைப்பதைவிட அதிகமாக அனைத்தையும் நினைவில் வைத்திருக்கிறது, வைத்திருக்கும்.

உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு