அதிகார சமநிலை இல்லாதபோதும் சீனா – ரஷ்யா உறவு ஏன் வலுவாக நீடிக்கிறது?

ரஷ்யா, சீனா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங்
    • எழுதியவர், அங்கூர் ஷா
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

கடந்த செப்டம்பரில் பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள் மனித வாழ்நாளை குறிப்பிடத்தக்க அளவில் நீட்டிக்கக்கூடும் என்ற சாத்தியக்கூறு குறித்து பேசியதாகத் தோன்றியது.

"மனித உறுப்புகளைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்க முடியும். அதனால், ஒருவர் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் இளமையாக இருக்கலாம், மேலும் அழியாத் தன்மையைக் கூட அடையலாம்" என்று புதின் சார்பாக மாண்டரின் மொழியில் சீன அதிபரிடம் பேசிய ஒரு மொழிபெயர்ப்பாளர் கூறியதை கேட்க முடிந்தது.

"இந்த நூற்றாண்டில் மனிதர்கள் 150 ஆண்டுகள் வரை வாழக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது" என்று ஷி ஜின்பிங்கின் மொழிபெயர்ப்பாளர் அதற்குப் பதிலளிப்பதையும் கேட்க முடிந்தது.

ஒருவரை ஒருவர் மிகச் சிறந்த நண்பர்கள் என்று வர்ணித்துள்ள இந்த இரு வலுவான தலைவர்களுக்கும், அந்த உரையாடல் மிகவும் பொருத்தமானதாக இருந்தது. மொத்தமாக 39 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் இவர்களில் யாரும் பதவி விலகும் அறிகுறிகளை காட்டவில்லை.

ஒருவரை ஒருவர் மிகச் சிறந்த நண்பர்கள் என்று வர்ணித்துள்ள இந்த இரு வலுவான தலைவர்களுக்கும், அந்த உரையாடல் மிகவும் பொருத்தமானதாக இருந்தது. மொத்தமாக 39 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் இவர்களில் யாரும் பதவி விலகும் அறிகுறிகளை காட்டவில்லை.

ரஷ்யா மற்றும் சீனாவுக்கிடையிலான "நல்ல அண்டை நாடுகள் மற்றும் நட்புறவு ஒத்துழைப்பு ஒப்பந்தம்" கையெழுத்தாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, புதின் மீண்டும் பெய்ஜிங்கிற்கு வந்துள்ளார்.

கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஷி ஜின்பிங்கைச் சந்திக்கச் சென்றபோது, தங்க அலங்கார மேசைப்பொருட்களுடன் பிரமாண்ட விருந்துகளும், ஒரு பழமையான கோவிலுக்கான பயணமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆனால், புதினின் இந்தப் பயணம் அதைவிட மிகவும் எளிமையானதாகத் தெரிகிறது. முன்கூட்டியே வெளியிடப்பட்ட தகவல்களும் மிகவும் குறைவாக உள்ளன.

ரஷ்யா, சீனா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Kremlin Press Office/Anadolu via Getty Images)

படக்குறிப்பு, புதின் மற்றும் ஷி ஜின்பிங் இடையிலான உரையாடலில் பதிவு, இருவரிடையிலான சுவாரசியமான கருத்துப் பரிமாற்றத்தை கேட்கும் வாய்ப்பை அளித்தது

கடந்த வாரம் டிரம்புடன் ஜோங்நான்ஹாய் வளாகம் வழியாக நடந்துசென்றபோது, பொதுவாக வெளிநாட்டு விருந்தினர்களுக்கு அனுமதி இல்லாத அந்த இடத்துக்கு முன்பே தனது நண்பர் புதின் வந்திருந்ததாக ஷி ஜின்பிங் நகைச்சுவையாக குறிப்பிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரம்ப், சீனாவை ரஷ்யாவிடம் இருந்து விலக்க முடியும் என்று அமெரிக்காவில் சிலர் நம்பியிருந்தாலும், அந்த நம்பிக்கை வெறும் ஆசைக்கற்பனை போலவே தோன்றுகிறது.

சீனாவும் ரஷ்யாவும் கடந்த சில ஆண்டுகளாக தங்களது உறவை "எல்லைகளற்ற நட்பு" என்று வர்ணித்து வருகின்றன. அப்படியானால், அந்த உறவு எந்த அடிப்படையில் அமைந்துள்ளது? மேலும், இந்த நெருக்கமான கூட்டணி நீண்ட காலம் தொடருமா?

ரஷ்யா, சீனா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், EPA-EFE/REX/Shutterstock

சீனாவின் நிபந்தனைகள்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்த உறவு மிகவும் சமநிலையற்றதாக உள்ளது. இரு நாடுகளுக்கிடையில் எத்தகைய ஒப்பந்தங்கள் ஏற்பட்டாலும், அவை பெரும்பாலும் சீனாவின் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அமையும் என்று கார்னகி ரஷ்யா யூரேஷியா மையத்தின் இயக்குநர் அலெக்சாண்டர் கபூயேவ் கூறுகிறார். "ரஷ்யா முழுமையாக சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது. நிபந்தனைகளை நிர்ணயிக்கும் நிலை சீனாவுக்கே உள்ளது," என்றும் அவர் கூறுகிறார்.

இந்த நிலை பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளிலும் தொடர்கிறது. சீனா, ரஷ்யாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக இருக்கிறது. ஆனால், சீனாவின் சர்வதேச வர்த்தகத்தில் ரஷ்யாவின் பங்கு வெறும் 4% மட்டுமே. மேலும், ரஷ்யாவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடும் சீனாதான். அதேசமயம், சீனாவின் பொருளாதாரம் ரஷ்யாவை விட மிகவும் பெரியதாகும்.

மேற்கத்திய நாடுகள் பல ஆண்டுகளாக விதித்த தடைகள், ரஷ்யாவை படிப்படியாக சீனாவை அதிகமாக சார்ந்த வர்த்தக உறவுகளுக்குள் தள்ளியுள்ளன. அமெரிக்க தடைகளுக்கு உள்ளானதுடன், பிரிட்டன் அரசின் ஆய்வுக்குப் பிறகு பிரிட்டன் 5G வலையமைப்பிலிருந்தும் நீக்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனம் ஹுவாவே, மேற்கத்திய நிறுவனங்கள் இல்லாத சூழலை பயன்படுத்தி, ரஷ்யாவின் தொலைத்தொடர்பு துறையின் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது.

மேற்கத்திய நாடுகளுடனான உறவுகள் மேலும் மேலும் சீர்குலைந்து வரும் நிலையில், தொழில்நுட்பம், அறிவியல் அல்லது தொழிற்துறை நிபுணத்துவம் எதற்காக இருந்தாலும், ரஷ்யா முதலில் நாடும் நாடாக சீனா மாறியுள்ளது.

ரஷ்யா, சீனா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், EPA/Shutterstock

படக்குறிப்பு, முன்னெப்போதையும் விட தனது போர் கருவிகளுக்காக சீன உதிரிபாகங்களையே ரஷ்யா அதிகமாக சார்ந்து இருக்கிறது

2022-இல் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு, ரஷ்யா தனது போர் கருவிகளுக்கு தேவையான உதிரிபாகங்களுக்காக முன்னெப்போதையும் விட தற்போது சீனாவையே அதிகமாக சார்ந்திருக்கத் தொடங்கியுள்ளது.

சமீபத்திய புளூம்பெர்க் செய்தி ஒன்றின்படி, ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை மீறி அந்நாடு இறக்குமதி செய்யும் தொழில்நுட்பங்களில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானவை சீனாவில் இருந்தே வருகின்றன என்றும், இது முந்தைய ஆண்டை விட 10 சதவிகிதம் அதிகம் என்றும் தெரிகிறது.

இந்த சமநிலையின்மையால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை ரஷ்யா நன்கு உணர்ந்துள்ளது. ரஷ்ய சர்வதேச விவகாரக் கவுன்சில் என்ற சிந்தனை அமைப்பின் தலைவரான டிமிட்ரி ட்ரெனின் அண்மையில் எழுதிய 'நாங்கள் யாருக்கும் தலைவணங்குவதில்லை' என்ற கட்டுரையில், ரஷ்யா வேறொரு நாட்டின் கீழ் இயங்கும் ஓர் அடிமை நாடாக இருக்க விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

சீனாவைப் பற்றி கூறும் அவர், "நமது உறவுகளில் சமமான நிலையை பேணுவது முற்றிலும் அவசியமானது. மேலும், ஒரு வல்லரசு நாடான ரஷ்யா ஒருபோதும் யாருக்கும் இளைய கூட்டாளியாக இருக்க முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்" என்றார்.

ரஷ்யாவுக்கு சீனாவை தவிர பெரிய மாற்று வாய்ப்புகள் மிகக் குறைவு. மேற்கத்திய நாடுகளுடனான உறவுகள் முறிந்த நிலையில், ரஷ்யாவின் வர்த்தகத் தேவையை வழங்குவது சீனாதான். சீனா ரஷ்யாவுடன் வர்த்தகத்தை குறைத்தால், ரஷ்யாவின் வெளிநாட்டு கொள்கை நோக்கங்கள் மேலும் கடினமாகும்.

ஆனால், சீனாவின் அழுத்தத்துக்கு முற்றிலும் அடிபணியாமல் நிற்கும் திறனே ரஷ்யாவுக்கு இருக்கும் முக்கியமான பலமாகவும், ஒரு பாதுகாப்பு அரணாகவும் பார்க்கப்படுகிறது

ரஷ்யா, சீனா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, தங்களைச் சிறந்த நண்பர்கள் என்று வர்ணிக்கும் விளாடிமிர் புதின் மற்றும் ஷி ஜின்பிங்

கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு ஆய்வுகள் விரிவுரையாளரான மார்சின் காச்மார்ஸ்கியின் கருத்துப்படி, இந்தச் சமநிலையின்மை எவ்வளவு பெரியது என்பது சீனாவுக்கு நன்றாக தெரியும். அதே சமயம், ரஷ்யாவிற்குள்ளோ அல்லது அங்குள்ள அதிகார வர்க்கத்தினரிடையேயோ எந்தவொரு எதிர்ப்பை உருவாக்க அது விரும்பவில்லை.

"ரஷ்யா மீதான சீனாவின் வெளியுறவுக் கொள்கையின் சுருக்கம் 'சுயக் கட்டுப்பாடு' கொண்டது என்றே கூறுவேன். ரஷ்யாவைத் தன் போக்கிற்குப் பணியுமாறு சீனா வற்புறுத்தவில்லை" என்கிறார் அவர்.

ரஷ்யா இளைய கூட்டாளியாக இருந்தாலும் அது ஒரு பெருமைமிக்க கூட்டாளியாக இருக்கிறது.

சீனா தன் விருப்பத்தை ரஷ்யா மீது திணிக்க முயன்றாலும், ரஷ்யா "அதனை அப்படியே ஏற்றுக் கொள்ளும் நாடு அல்ல" என கார்னகி ரஷ்யா யூரேசியா சென்டர் என்ற சிந்தனை அமைப்பின் இயக்குனர் அலெக்சாண்டர் காபுயேவ் கூறுகிறார்.

2023-ல் ஷி ஜின்பிங் மாஸ்கோவிற்கு மேற்கொண்ட பயணத்தை அவர் உதாரணமாகக் குறிப்பிடுகிறார்.

அப்போது சீன தலைவர், யுக்ரேனில் அணு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம் என்று புதினை வலியுறுத்தியதாக கூறப்பட்டது. ஆனால் சில நாட்களுக்குப் பிறகு, ரஷ்யா பெலாரஸில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தப் போவதாக அறிவித்தது. இது வெளிப்புற அழுத்தத்துக்கு அடிபணியாமல், தன்னுடைய சுயாதீனத்தை உலகுக்கு காட்டும் ஒரு நகர்வாக சிலர் கருதினர்.

யுக்ரேனில் ரஷ்யா நடத்தி வரும் கடுமையான போர், பல வழிகளில் அதற்கொரு சுமையாக இருக்கலாம். ஆனால், தைவானை கைப்பற்றும் சாத்தியக்கூறுகளை பரிசீலித்து வரும் சீனாவிற்கு ரஷ்யா முக்கியமான நாடாக விளங்குகிறது.

குறிப்பாக, சில ராணுவ தொழில்நுட்பங்கள் மற்றும் சீன உபகரணங்களை சோதிக்கும் வாய்ப்புகள் ரஷ்யாவிடம் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.

மேலும், ரஷ்யாவிடம் உள்ள பரந்த எரிசக்தி வளங்கள் சீனாவுக்கு மூலதன ரீதியாக மிகவும் முக்கியமானவை. மே மாதத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறையில் இரு நாடுகளும் "மிக முக்கியமான முன்னேற்ற கட்டத்தை" எட்ட நெருங்கியுள்ளன என்று புதின் கூறினார்.

ரஷ்யா, சீனா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Bloomberg via Getty Images

படக்குறிப்பு, எண்ணெய் ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடு ரஷ்யா

பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ரஷ்ய எரிவாயு நிறுவனமான காஸ்ப்ரோமும், சீனா தேசிய பெட்ரோலியக் கழகமும் 'பவர் ஆஃப் சைபீரியா 2' குழாய்வழித் திட்டம் தொடர்பான முதற்கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகக் கூறப்படுவதை புதின் குறிப்பிட்டிருக்கலாம்.

இந்த குழாய் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மங்கோலியா வழியாக சீனாவுக்கு ஆண்டுக்கு 50 பில்லியன் கன மீட்டர் ரஷ்ய இயற்கை எரிவாயுவை கொண்டு செல்லும் திறன் இதற்கு இருக்கும்.

மேலும் சீனாவைப் பொறுத்தவரை, ஹோர்முஸ் நீரிணையில் தொடர்ந்து நெருக்கடி நீடித்து வரும் நிலையில், ரஷ்ய எரிசக்தியை நம்பி அது எடுத்த முடிவு இப்போது அதற்கு ஆக்கப்பூர்வமாக பலனளிப்பதாகத் தோன்றுகிறது.

இது வெறும் விலை குறித்த விஷயம் மட்டுமல்ல. அதிகமாக குழப்பமடைந்துவரும் உலகில் சீனாவின் உள்நாட்டு எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு முக்கிய முயற்சியாகும்.

கூட்டாளிகள், கூட்டணி நாடுகள் அல்ல

சீனாவும் ரஷ்யாவும் வேறுபடுவதாகத் தோன்றும்போதெல்லாம், அவர்களது உறவின் மையத்தில் உள்ள ஒரு எளிய உண்மை தெளிவாகிறது. இந்த இரண்டு நாடுகளில் எந்தவொரு நாடும் மற்றொன்றைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் இவர்களது உறவு ஒரு முறையான கூட்டணி அல்ல.

ரஷ்யாவில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகத்தின் முன்னாள் துணைத் தூதரான போபோ லோ, ஒரு ராணுவக் கூட்டணியின் கடுமையான விதிகளுக்குப் பதிலாக, இந்த உத்திசார் நெகிழ்வுத்தன்மைதான் இவர்களது கூட்டாண்மைக்கு ஒரு வலுவான மீள்திறனை அளிக்கிறது என்கிறார்.

"இது ஒரு கூட்டணி அல்ல, மாறாக ஒரு நெகிழ்வான உத்திசார் கூட்டாண்மை" என்று கூறும் அவர், இந்த உறவு முறிந்துவிடும் என்று பலமுறை கணிக்கப்பட்ட போதிலும், அது இன்னும் நீடித்து நிலைத்து நிற்கிறது என்று குறிப்பிடுகிறார்.

மேற்கத்திய ஆய்வாளர்கள் சீனா - ரஷ்ய கூட்டாண்மையை இரண்டு வழிகளில் சித்தரிக்க முனைகின்றனர். மேற்கத்திய நாடுகளை வீழ்த்த வேண்டும் என்ற தங்களின் கூட்டு விருப்பத்தால் ஒன்றிணைந்த "சர்வாதிகாரத்தின் அச்சு" என்றோ அல்லது எப்போது வேண்டுமானாலும் முறிந்துவிடும் நிலையில் உள்ள ஒரு பலவீனமான சகோதரத்துவம் என்றோ கருதுகிறார்கள்.

ஆனால் இந்த இரண்டு பார்வைகளும் முழுமையாக உண்மையை பிரதிபலிக்கவில்லை. சமச்சீரற்ற தன்மைகளும் வேறுபாடுகளும் இருந்தபோதிலும், முக்கிய பொதுநலன்களைப் பகிர்ந்து கொள்ளும் இரண்டு அண்டை நாடுகளுக்கு இடையே, இந்த உறவு எவ்வாறு ஒரு தவிர்க்க முடியாத மற்றும் எளிதில் மாற்றியமைக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.

மேலும், மேற்கத்திய நாடுகளுடனான இவர்களது உறவு ஒருவேளை மேம்பட்டாலும் கூட, இந்த இரு நாடுகளும் தங்களுக்குள் இணக்கமாக இருப்பதற்கு மேலும் பல போதுமான காரணங்கள் உள்ளன என்று போபோ லோ கூறுகிறார்.

ரஷ்யா, சீனா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Bloomberg via Getty Images

படக்குறிப்பு, ரஷ்யாவும் சீனாவும் 4,300 கி.மீ எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன

இவற்றின் முக்கியமான அடிப்படை காரணங்களில் ஒன்று, இரு நாடுகளும் பகிர்ந்துள்ள 4,300 கிலோமீட்டர் நீளமான எல்லை. இது முன்பு பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் ஒரு பகுதியாக இருந்தது.

அடுத்ததாக, இவர்களது பொருளாதார அமைப்புகள் ஒன்றுக்கொன்று துணைபுரியும் பொருளாதாரங்களாக உள்ளன. ரஷ்யா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் பிற மூலப்பொருட்களின் முக்கிய ஏற்றுமதி நாடாக இருக்கிறது. அதே நேரத்தில், சீனாவின் தொழில்துறை அடிப்படையிலான பொருளாதாரம் இவற்றுக்கான மிகப் பெரிய சந்தையாக உள்ளது.

அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்குக்கு எதிரான அவர்களின் பொதுவான நிலைப்பாட்டையும் புறக்கணித்துவிட முடியாது.

மேற்கத்திய நாடுகளைப் போல அல்லாமல், மனித உரிமைகள் உள்ளிட்ட வேறுபட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் தடை விதிக்கவோ அல்லது கண்டிக்கவோ சீனாவும் ரஷ்யாவும் ஒன்றையொன்று விமர்சிப்பதில்லை.

சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் பெருமளவில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாகக் கூறப்படும் தொடர் குற்றச்சாட்டுகளும் (இதை சீனா மறுக்கிறது), ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் மரணமும், மேற்கத்திய நாடுகளை இந்த இரு நாடுகளுடனும் உறவு வைப்பதில் அதிக எச்சரிக்கையடையச் செய்துள்ளன. ஆனால், ரஷ்யாவும், சீனாவும் இந்தப் பிரச்னைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றன.

"சின்ஜியாங் விவகாரத்திலோ அல்லது நவால்னி விவகாரத்திலோ அல்லது அதுபோன்ற விஷயங்களிலோ அவர்கள் ஒருவரையொருவர் விமர்சித்துக் கொள்வதில்லை" என்று காபுயேவ் கூறுகிறார்.

ரஷ்யா, சீனா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பல ஆண்டுகளாக விதிக்கப்பட்ட மேற்கத்தியத் தடைகள், சீனாவுடனான ரஷ்யாவின் வர்த்தக உறவை படிப்படியாக ஆழமாக்கியுள்ளன

இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேம்படுத்தும் ஒரு நீண்ட வரலாறு இருப்பதாக காபுயேவ் கூறுகிறார். "மேலும் நடைமுறை சார்ந்த உறவுக்கான இந்த போக்கு… ஆண்ட்ரோபோவ், செர்னென்கோ, கோர்பச்சேவ், யெல்ட்சின் ஆகியோரின் சோவியத் காலத்திலிருந்தே தொடர்கிறது," என்று அவர் கூறுகிறார். "சீனாவிலும் இதேபோன்ற அணுகுமுறை இருந்ததாக நான் நினைக்கிறேன்."

இந்த நல்லுறவு நீடிக்குமா? என்ற கேள்விக்கு, சீனாவும் ரஷ்யாவும் தங்களை ஒரு பிரிக்க முடியாத ஜோடியாக பொதுவெளியில் காட்டிக் கொள்வது என்பது, ஓரளவுக்குத் தங்களின் ஒற்றுமையையும் நிலைத்தன்மையையும் உலகிற்குப் பறைசாற்றுவதற்காகக் காட்டப்படும் ஒரு பாசாங்கு என தனது பெயரை வெளியிட விரும்பாத ஒரு சீன ஆய்வாளர் ஒப்புக்கொண்டார்.

இது சில நேரங்களில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை சமாளிக்க உதவும் ஒரு அரசியல் கருவியாக செயல்படுகிறது. இரு அரசுகளும் "மேற்கத்திய ஆதிக்கத்தை" எதிர்ப்பதாக இருந்தாலும், அதனை எதிர்கொள்ளும் முறையில் வேறுபாடுகள் உள்ளன. ரஷ்யா, அமெரிக்காவை முழுமையாகத் தவிர்த்து ஒரு புதிய உலக ஒழுங்கை உருவாக்க விரும்புகிறது என்று அந்த ஆய்வாளர் கூறுகிறார். ஆனால் சீனா அதைவிட எச்சரிக்கையானதும் நடைமுறை சார்ந்ததும் ஆகும் என்கிறார் அவர்.

சீனா பொதுவாக திடீர் முடிவுகளைத் தவிர்த்து, பொறுமையுடன் நீண்டகால நன்மைகளை அடைவதை முன்னுரிமையாகக் கொள்கிறது.

இரானில் அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு சீனாவின் எதிர்வினையை சுட்டிக்காட்டும் அவர், அப்போது நிதானமாக அளவோடு எதிர்வினையாற்றிய சீனா, டிரம்ப்பின் வருகைக்கான தனது ஆயத்தங்களை ரத்து செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறார்.

"இது, ஆத்திரமூட்டவோ அல்லது பேச்சுவார்த்தைக்கான கதவுகளை மூடவோ விரும்பாத சீனாவின் விருப்பத்தைத் தெளிவாகக் காட்டுகிறது" என்று அவர் மேலும் கூறினார். சீனா இன்னும் அமெரிக்காடவுனான தொடர்புகளைத் தொடரவே விரும்புகிறது, தேவையற்ற ஆத்திரமூட்டல்களைத் தவிர்க்க நினைக்கிறது என்றும், இது ரஷ்யாவின் அணுகுமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்றும் அவர் கூறுகிறார்.

சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

பட மூலாதாரம், SPUTNIK/KREMLIN POOL/EPA/Shutterstock

படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் - சீன அதிபர் ஷி ஜின்பிங்

ரஷ்யர்களுக்கும் சீனர்களுக்கும் இடையிலான பிணைப்பு

இந்த இரு நாடுகளின் கூட்டாண்மை பெரும்பாலும் புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு என்ற கோணத்திலேயே விவாதிக்கப்படுகிறது. ஆனால், இரு சமூகத்து மக்களிடையே நிலவும் உறவுகளின் ஆழமும் முக்கிய காரணியாகும்.

புதினும் ஷி ஜின்பிங்கும் தங்களுக்குள் இணையற்ற ஒரு நட்புறவு இருப்பதை உலகிற்குக் காட்ட முயன்றுள்ளனர். இது சீனாவுக்கு புதின் மேற்கொள்ளும் 25-வது பயணம் ஆகும்.

உயர்நிலை அரசியல் வட்டாரங்களில் தோழமை இருந்தபோதிலும், சாதாரண சீன மற்றும் ரஷ்ய மக்களுக்கு இடையே இயற்கையான கலாசார நெருக்கம் இருப்பதாகக் கூறுவதை சீனாவிற்கான முன்னாள் பிரிட்டன் தூதரான சார்லஸ் பார்டன் சந்தேகக் கண்ணோட்டத்திலேயே பார்க்கிறார்.

"மாஸ்கோவில் படிக்கவும், ரஷ்யாவில் குடியேறவும், அங்கு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கவும் சீனர்கள் விரும்புகிறார்களா? இல்லை" என்கிறார் அவர்

ரஷ்யர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் பெய்ஜிங்கில் முதலீடு செய்வதை விட, மேற்கத்திய நாடுகளில் முதலீடு செய்யவும், பாரிஸ், லண்டன் அல்லது சைப்ரஸ் போன்ற இடங்களில் வீடுகளை வாங்கவுமே விரும்புவார்கள் என அவர் நம்புகிறார்.

ரஷ்யா, சீனா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், China News Service/VCG via Getty Images

படக்குறிப்பு, சமீபத்திய ஆண்டுகளில் சீனாவும் ரஷ்யாவும் தங்களது உறவை "எல்லைகளற்ற நட்பு" என்று வர்ணித்து வருகின்றன

ஆனால், அனைவரும் இந்த கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை. மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கடுமையான விசா கொள்கைகள் காரணமாக, ரஷ்யர்கள் சீனாவை நோக்கித் தள்ளப்படுவதால், இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான பரஸ்பரத் தொடர்பு மிக வேகமாக வளர்ந்து வருகிறது என காபுயேவ் கூறுகிறார்.

ரஷ்யர்கள் சீனாவிற்குப் பயணம் செய்வது இப்போது மிகவும் எளிதாகிவிட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர விசா இல்லாத பயண முறை காரணமாக, மாஸ்கோவில் இருந்து சீனாவின் முக்கிய நகரங்களுக்கு தினமும் இயக்கப்படும் பல விமானங்களில் ஏதேனும் ஒன்றில் பயணித்து, சில மணி நேரங்களிலேயே சீனாவைச் சென்றடைய முடியும்.

ரஷ்யாவிற்கு எதிராக மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகளுக்குப் பிறகு, ரஷ்யர்கள் சீனத் தயாரிப்பு மொபைல் போன்களைப் பயன்படுத்துவதும், சீனக் கார்களை பயன்படுத்துவதும் முன்னெப்போதையும் விட கணிசமாக அதிகரித்துள்ளது.

"இந்த பரஸ்பர இணைப்பு, விசா இல்லாத பயணம், எளிதான பணப் பரிவர்த்தனை ஆகியவை இப்போது சீனாவை முன்பை விட ரஷ்யாவுடன் மிகவும் நெருக்கமாக்கியுள்ளன" என்று காபுயேவ் கூறுகிறார்.

"மேலும், அனைத்து வகையான மாணவர் பரிமாற்றத் திட்டங்கள், உதவித்தொகைகள் மற்றும் கூட்டு ஆராய்ச்சித் திட்டங்கள் ஆகியவை இந்த இரு சமூகங்களையும் இன்னும் நெருக்கமாக்குகின்றன."

ரஷ்யா, சீனா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Sputnik/ Kremlin/ PA/Shutterstock

படக்குறிப்பு, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் ஆழமானவை

ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவில் அதிகரித்து வரும் இந்தச் சமநிலையின்மை நீண்டகால பலவீனத்தைக் குறிப்பதாக இருந்தாலும், இவர்களது உறவு முறிந்துவிடும் என்ற எந்தவொரு கணிப்பும், குறைந்தபட்சம் குறுகிய காலத்திற்காவது சாத்தியமற்றதாகவே தோன்றுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையே பல வேறுபாடுகள் இருந்தபோதிலும், "சீன-ரஷ்ய கூட்டாண்மை தொடர்ந்து வலுவாகவே உள்ளது. இந்த உறவு தோல்வியடைவதற்கு முடியாத அளவுக்கு மிகவும் முக்கியமானது என்பதை இரு தரப்புமே உணர்ந்துள்ளன. அதிலும் குறிப்பாக, தங்களது கூட்டுறவைத் தொடர்ந்து கொண்டு செல்வதற்கு வேறு சாத்தியமான மாற்று வழிகளும் இல்லை என்ற சூழ்நிலையில் இது மிக முக்கியமானது" என்று போபோ லோ கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு