சாய் சுதர்ஷன் அரைசதம் அடித்தும் பயனில்லை; குஜராத் டைட்டன்ஸை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

குஜராத் ஜெயின்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த பரபரப்பான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

காயம் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ரஷீத் கான் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வேகப்பந்துவீச்சாளர் பிரிஜேஷ் ஷர்மாவுக்குப் பதிலாக துஷார் தேஷ்பாண்டே சேர்க்கப்பட்டார்.

முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 210 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 204 ரன்கள் மட்டும் எடுத்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், டைட்டன்ஸால் 4 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிரடியாக விளையாடி தமிழ்நாட்டு வீரர் சாய் சுதர்ஷன் அரைசதம் அடித்திருந்த நிலையிலும் அந்த அணியால் வெற்றிபெற முடியவில்லை.

இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த சீசனில் விளையாடியிருக்கும் இரண்டு போட்டிகளிலுமே வெற்றி பெற்றிருக்கிறது. மாறாக, குஜராத் டைட்டன்ஸ் அணி 2 போட்டிகளிலுமே தோற்றிருக்கிறது.

பெரிய ஸ்கோரை எட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ்

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஜோடி நல்ல தொடக்கம் கொடுத்தது. ஆரம்பம் முதலே அவர்கள் இருவருமே அதிரடியாக ஆடினார்கள். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 6.2 ஓவர்களில் 70 ரன்கள் எடுத்தது. சூர்யவன்ஷி 18 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த துருவ் ஜுரெல், யஷஷ்வி ஜெய்ஸ்வாலுடன் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார். இந்த ஜோடி 56 ரன்கள் எடுத்தது. 36 பந்துகளில் 55 ரன்கள் எடுத்த ஜெய்ஸ்வால் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்களால் பெரிய இன்னிங்ஸ் ஆட முடியவில்லை. பராக் 8, ஹிட்மெயர் 18, டானவன் ஃபெரீரா 1 என அனைவரும் வந்த வேகத்தில் வெளியேறினார்கள்.

ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் துருவ் ஜுரெல் நிலைத்து நின்று விளையாடி அரைசதம் அடித்தார். 30 பந்துகளில் அரைசதம் கடந்த ஜுரெல், 42 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருடைய பெரிய இன்னிங்ஸின் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் எடுத்தது. குஜராத் ஜெயின்ட்ஸ் அணிக்கு அதிகபட்சமாக ரபாடா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி

211 ரன்களை சேஸ் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சாய் சுதர்ஷன் - குமார் குஷாக்ரா இணை நல்ல தொடக்கம் கொடுத்தது. இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 8 ஓவர்களில் 78 ரன்கள் எடுத்தார்கள்.

தமிழ்நாட்டு வீரர் சாய் சுதர்ஷனோ ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். ஆர்ச்சரின் அதிவேகப் பந்தை சிக்ஸர் அடித்து ரன் கணக்கைத் தொடங்கிய சாய் சுதர்ஷன், நாந்த்ரே பர்கர், சந்தீப் ஷர்மா அகியோரின் ஓவர்களிலும் நன்கு அடித்து ஆடினார். முதல் சில ஓவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், போகப்போக தன் இன்னிங்ஸின் வேகத்தை அதிகப்படுத்தினார். அதனால் வேகமாக ரன் வரத் தொடங்கியது. 33 பந்துகளில் தன்னுடைய 13வது ஐபிஎல் அரைசதத்தை எட்டினார் சாய் சுதர்ஷன்.

18 ரன்கள் எடுத்திருந்த குஷாக்ரா, பவுண்டரி எல்லையில் ஹிட்மெயர் பிடித்த அபாரமான கேட்ச்சால் ஆட்டமிழந்து வெளியேறினார்.

நன்கு ஆடிக்கொண்டிருந்த சாய் சுதர்ஷன் 73 ரன்கள் எடுத்து ரவி பிஷ்னாய் பந்துவீச்சில் அவுட் ஆனார். 44 பந்துகளை சந்தித்த அவர், 9 பவுண்டரிகளையும் 3 சிக்ஸர்களையும் அடித்தார்.

சாய் சுதர்ஷன் ஆட்டமிழந்த பிறகு குஜராத் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது. கிளென் ஃபிலிப்ஸ் (3 ரன்கள்), வாஷிங்டன் சுந்தர் (4 ரன்கள்) ஆகியோரை ரவி பிஷ்னாய் வெளியேற்றினார். ஓரளவு தாக்குப்பிடித்து 26 ரன்கள் எடுத்த பட்லர், பர்கர் பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்த சில ஓவர்களில் தெவேதியாவையும் பிஷ்னாய் அவுட் ஆக்கினார். இரண்டே பந்துகளில் ஷாரூக் கான் ரன் அவுட் ஆனார். அதனால், 161/7 என்ற மிகவும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது குஜராத் டைட்டன்ஸ்.

இந்நிலையில் எட்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரஷீத் கான், ககிஸோ ரபாடா கூட்டணி டைட்டன்ஸ் அணிக்கு ஓரளவு நம்பிக்கை கொடுத்தது. அவர்கள் இருவரும் நிலைத்து நின்று ஆடியதோடு பவுண்டரிகளும் சிக்ஸர்களும் கூட அடித்தார்கள். அதனால் குஜராத் அணி வெற்றியை நோக்கிப் பயணித்தது.

கடைசி ஓவரில் டைட்டன்ஸ் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் துஷார் தேஷ்பாண்டே முதல் 4 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கடைசி 2 பந்துகளில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில் ஐந்தாவது பந்தில் ரஷீத் கான் விக்கெட்டை வீழ்த்தினார் துஷார். கடைசிப் பந்திலும் அவர் டாட் பால் வீச, ராயல்ஸ் தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியைப் பெற்றது.

ராயல்ஸ் அணியின் ரவி பிஷ்னாய் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு