தமிழக மக்களின் அடிப்படைப் பிரச்னைகளில் ஒன்றான தண்ணீர் இந்தத் தேர்தலில் கவனம் பெறுமா?

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தண்ணீர் தொடர்பான பிரச்னைகள் மக்களின் அன்றாட வாழ்வை நேரடியாகப் பாதித்து வருகின்றன. ஆனால், அவை ஒரே மாதிரியான பிரச்னைகள் அல்ல.
சில இடங்களில் குடிநீர் கிடைக்காத நிலை உள்ளது. மற்ற பகுதிகளில் கிடைக்கும் நீரின் தரமே கேள்விக்குறியாக உள்ளது. விவசாயப் பகுதிகளில், தண்ணீர் இருந்தபோதிலும் பாசன அமைப்புகள் செயலிழப்பால் பயன் குறைகிறது.
இந்தப் பலதரப்பட்ட நீர்நெருக்கடிகள், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அரசியல் முக்கியத்துவம் பெறுமா என்ற கேள்வி எழுகிறது.
அதைப் புரிந்துகொள்வதற்கு முன்பாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர்ப் பிரச்னை என்னென்ன வடிவங்களில் மக்களின் அன்றாட வாழ்வில் சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது என்பதை அறிய வேண்டியது அவசியம்.
தண்ணீர் இருந்தும் விநியோகத்தில் சிக்கல்
வட தமிழ்நாட்டின் சில பகுதிகளில், தண்ணீர் பற்றாக்குறை என்பது பெரும்பாலும் வளப் பற்றாக்குறை என்பதைக் காட்டிலும், விநியோக அமைப்புகளில் நிலவும் குறைபாடுகளின் காரணமாகவே இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கிராமப்புற மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியுள்ளதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
அதோடு, "தண்ணீர் விநியோகத்தில் இருக்கும் நிர்வாக மற்றும் செயல்பாட்டுச் சிக்கல்களே இதற்கான முக்கியக் காரணங்கள்" என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பல்வேறு பஞ்சாயத்துகளில், சுழற்சி முறையிலான விநியோகம் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. இருப்பினும், மோட்டார் பழுதுகள், பராமரிப்புப் பணிகளில் ஏற்படும் தாமதங்களால் தடங்கல்கள் ஏற்பட்டு, சுழற்சி முறையிலான விநியோகம் சீர்குலைவதாகக் கூறுகிறார் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவரும் சமூக ஆர்வலருமான ஜெயகாந்தன்.
சங்கராபுரம், தென்கீரனூர், உளுந்தூர்பேட்டையின் சில பகுதிகள் போன்ற இடங்களில் இத்தகைய சீரற்ற விநியோகச் சிக்கல்கள் பதிவாகியுள்ளன. திட்டமிடப்பட்ட விநியோக அமைப்புகள் இருந்தபோதிலும், மக்களுக்குத் தொடர்ச்சியான நீர் வசதி கிடைக்காமல் போவதாகக் கூறுகிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
இதுவே விழுப்புரம் மாவட்டத்தில், மழைப்பொழிவு குறிப்பிடத்தக்க அளவில் குறைவாக இல்லை என்றாலும், குடிநீர் பற்றாக்குறை ஒரு முக்கியப் பிரச்னையாக நிலவி வருகிறது.
இதற்கு மழைநீர் சேமிப்பில் நிலவும் போதாமை, தொடர்ச்சியான குழாய் பழுதுகள் ஆகியவை முக்கியக் காரணங்களாக இருப்பதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
இந்த இரு மாவட்டங்கள் மட்டுமின்றி, மாநிலத்தின் பல பகுதிகளில் நீர் மேலாண்மை உள்கட்டமைப்புகளுக்கான அணுகலில் நிலவும் குறைபாடு, தண்ணீர் விநியோகப் பிரச்னைக்கான முதன்மையான காரணங்களில் ஒன்றாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உள்ளூர் வட்டாரங்களுக்கு உள்ளாகவே சுருங்கிவிடும் அதிருப்தி
பெரம்பலூர், அரியலூர் போன்ற மாவட்டங்களில், நீர் பற்றாக்குறை அவ்வப்போது மக்கள் போராட்டங்களுக்குக் காரணமாக அமைகின்றன.
செட்டிகுளம், வேப்பூர் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள கிராமங்களில், குடிநீர் தட்டுப்பாட்டை முன்னிட்டு சாலை மறியல் போராட்டங்கள் அவ்வப்போது நடக்கின்றன. இத்தகைய போராட்டங்கள் புதிதல்ல, இவை கடந்த பல ஆண்டுகளாகவே நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, செந்துறை போன்ற பகுதிகளிலும் நீர் பற்றாக்குறை அதிகரித்து வருவது, இந்தப் பிரச்னை மாநிலம் முழுவதும் விரிவடைந்து வருவதைச் சுட்டிக் காட்டுகிறது.
சென்னை போன்ற நகரங்களில், தண்ணீர் பற்றாக்குறை நீண்ட காலமாக ஒரு தொடர்ச்சியான கவலையாக இருந்து வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
நிலத்தடி நீர் குறைதல், நீர்நிலைகளின் பரப்பளவு சுருங்குதல், நகர்ப்புற வளர்ச்சியால் அதிகரித்து வரும் தேவை ஆகியவை விநியோக அமைப்புகளுக்குத் தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
இவையனைத்தும், தண்ணீர் பற்றாக்குறையானது மக்களின் வெளிப்படையான அதிருப்தியைத் தோற்றுவிக்க வல்லது என்பதை உணர்த்துகின்றன. இருப்பினும், இந்த அதிருப்தி பெரும்பாலும் அந்தந்த உள்ளூர் வட்டாரங்களுக்கு உள்ளாகவே சுருங்கிவிடுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதன் விளைவாக, நீர் தொடர்பான பிரச்னைகள் உள்ளூர் அளவில் மிகத் தீவிரமாக வெளிப்படுத்தப்பட்டாலும், அவை தேர்தல் முடிவுகளை ஒரே சீரான முறையில் பாதிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
கேள்விக்குள்ளாகும் தண்ணீரின் தரம்
இதேவேளையில், தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தின் தொழில்மயமான பகுதிகளில், தண்ணீர் சார்ந்த பிரச்னையின் தன்மை குறிப்பிடத்தக்க வகையில் மாறியுள்ளது. இந்தப் பகுதிகளில், பிரச்னை பெரும்பாலும் தண்ணீர் கிடைப்பதைப் பற்றியது என்பதைவிட, அதன் தரத்தைப் பற்றியதாகவே உள்ளது.
கோவை-திருப்பூர் பகுதியில், நொய்யல் ஆறு தொழிற்சாலைக் கழிவுகள், சாயக் கழிவுகள், சுத்திகரிக்கப்படாத கழிவுநீரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
சூலூர், இருகூர் உள்ளிட்ட பல இடங்களில், ஆற்றில் நுரை தள்ளுவது போன்ற மாசுபாட்டின் வெளிப்படையான அறிகுறிகள் தென்படுகின்றன.
இந்த மாசுபாடு, சுற்றியுள்ள பகுதிகளின் நிலத்தடி நீரையும் பாதித்துள்ளது. சாமளாபுரம், வேலாயுதம்பாளையும் மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் சில பகுதிகள் போன்ற இடங்களில், நிலத்தடி நீரில் கரைந்த திடப்பொருட்களின் அளவு மிக அதிகமாக இருப்பதால் அந்த நீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை என்று பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.
கோவையைச் சேர்ந்த விவசாயி பி.கந்தசாமி பிபிசி தமிழிடம் இதுகுறித்துப் பேசும்போது, "உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நொய்யலில் ஆய்வு செய்த ஓய்வுபெற்ற நீதிபதி சிவராமன் தலைமையிலான குழு நிலத்தடி நீரைப் பரிசோதித்தது. அப்போது அதில் ரசாயனத்தன்மை 5000 பிபிஎம் இருந்தது தெரிய வந்தது. நகருக்குள் நொய்யல் நுழையும் பகுதியிலேயே இப்படியான சூழல் என்றால் பிற பகுதிகளில் எப்படி இருக்கும்?" என்று கவலை தெரிவித்தார் அவர்.
அவிநாசி, பல்லடம் ஆகிய இடங்களைச் சேர்ந்த மக்களும் இதேபோன்ற கவலைகளைத் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பகுதியின் மற்றொரு முக்கிய நீராதாரமான பவானி ஆறும், இதே மாதிரியான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக, சுத்திகரிக்கப்படாத நகராட்சி கழிவுநீர், தொழிற்சாலைக் கழிவுகள் ஆகியவை நீரின் தரம் குறைவதற்குக் காரணமாக இருப்பதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
இந்தப் பிரச்னைகள், மக்களின் சுகாதாரம், வாழ்வாதாரம் ஆகிய இரண்டிலுமே தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
உள்கட்டமைப்புகளில் உள்ள பிரச்னை
குடிநீர் மட்டுமின்றி, விவசாயத்திற்கான நீர் விநியோகமும் முக்கிய சவாலாக உள்ளது.
விவசாயத்திற்குத் தண்ணீர் கிடைப்பது என்பது பாசன உள்கட்டமைப்புடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. மேற்கு மண்டலத்தில், பரம்பிக்குளம்-ஆழியார் திட்டம் பல மாவட்டங்கள் மற்றும் தொகுதிகளுக்கு தண்ணீரை விநியோகிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இருப்பினும், கால்வாயின் கட்டமைப்பில் உள்ள சிக்கல்கள் அதன் செயல்திறனை பாதித்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
திருமூர்த்தி அணையின் திட்டக் குழுவின் தலைவரும் விவசாயியுமான பரமசிவம் பிபிசி தமிழிடம் பகிர்ந்த தகவலின்படி, பிஏபி கால்வாய் அமைப்பு தண்ணீரைத் திறம்பட விநியோகிப்பதில் சிரமங்களை எதிர்கொள்கிறது.
"கால்வாய் பல இடங்களில் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் தண்ணீர் கடைமடை வரை செல்வதில்லை. 15 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட வேண்டிய நீர், தற்போது சில பகுதிகளுக்கு மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே சென்றடைகிறது," என்றும் அவர் தெரிவித்தார்.
கால்வாயின் செயல்பாட்டை மீட்டெடுக்கப் பெரிய அளவிலான பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளதாகவும், அதன் கட்டமைப்புச் சிக்கல்களைச் சரிசெய்ய கணிசமான நிதி ஒதுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
பாசன அமைப்புகளில் உள்ள இத்தகைய செயல்திறன் குறைபாடுகள் தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு ஒரு முக்கியமான கவலையாக இருப்பதாகவும், நீர் கிடைத்தாலும்கூட இதுபோன்ற உள்கட்டமைப்புச் சிக்கல்கள் சீரான விநியோகத்தைக் குலைப்பதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
'காலத்திற்கு ஏற்ற திட்டங்களை வகுக்க வேண்டும்'
தமிழ்நாட்டின் நீர் சார்ந்த சவால்கள் குறுகிய கால ஏற்ற இறக்கங்களின் விளைவல்ல எனவும், அவை நீண்டகாலப் போக்குகளின் விளைவு என்றும் வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்தப் பிரச்னைகள் கடந்த 20-30 ஆண்டுகளாகவே சிறுகச் சிறுக வளர்ந்து தற்போது பெரிதாகியுள்ளதாகக் கூறுகிறார் நீரியல் ஆய்வாளர் முனைவர் ஜனகராஜன்.
தமிழ்நாட்டிலுள்ள சுமார் 70 சதவிகித விவசாய நிலங்கள் நிலத்தடி நீரையே பெரிதும் சார்ந்துள்ளதாகக் கூறும் அவர், "நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவது, ஒரு தீவிரமான அபாயத்தை உருவாக்குவதாகவும்" எச்சரித்தார்.

மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் தரவுகள்படி, கோயம்புத்தூர், நாமக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்கள் அதிதீவிர நிலத்தடி நீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. அதேபோல, ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் தீவிர நிலத்தடி நீர் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகவும் தரவுகள் கூறுகின்றன.
"நிலத்தடி நீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. இருந்தபோதிலும் அதை மீள்நிரப்புவதற்கான சரியான திட்டங்களை வகுப்பதில் பற்றாக்குறை நிலவுகிறது. தமிழகத்தில் பெய்கின்ற மழையின் அளவு குறையவில்லை, ஆனால் குறுகிய காலத்தில் அதிக மழை பெய்வதால், மழைநீர் நிலத்தடி நீராகவோ அல்லது பிற வழிகளிலோ சேமித்து வைக்கப்படாமல் விரயமாகிறது.
இதன் விளைவாக மழைக்காலம் முடிந்தவுடன் மீண்டும் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதற்கான தீர்வு என்ன, எத்தகைய திட்டங்களை வகுக்க வேண்டும் என்பது குறித்துச் சிந்திக்க வேண்டும். அரசியல் கட்சிகள் அதில் கவனம் செலுத்த வேண்டும்" என்கிறார் ஜனகராஜன்.
தமிழ்நாடு நீர் மேலாண்மைக்காக நிறைய நிதி ஒதுக்கினாலும், காலத்திற்கு ஏற்ற வகையிலான திட்டங்களை வகுப்பதில் தவறவிடுவதாகக் குறிப்பிட்ட அவர், "வெள்ளப் பேரிடர் மேலாண்மை என்பதில் கவனம் செலுத்துவதைவிட பெய்கின்ற மழைநீரை எவ்வாறு சேமிப்பது என்பதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். அவற்றைச் சீரான முறையில் முன்னெடுப்பதற்கான கொள்கைகளை வகுக்க வேண்டியது அவசியம்.
இதில் மிக முக்கியமாக, தமிழ்நாட்டின் விவசாயம் மட்டுமின்றி, மாநிலத்தின் பொருளாதாரமே நிலத்தடி நீரை அதிகம் சார்ந்துள்ளது. அதை மீள்நிரப்புவதில் கவனம் செலுத்தி நிலத்தடி நீர் அளவை உயர்த்தவில்லை என்றால், மாநிலத்தின் பொருளாதாரத்தையே அது பாதிக்கும்," என்று தெரிவித்தார்.

காலநிலை மாற்றமும் கொள்கைக் குறைபாடுகளும்
வளம்குன்றா நகரங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்த ஆய்வாளரான முனைவர் கிருத்திகா முருகேசன், இந்தப் போக்குகளை காலநிலை மாற்றத்தின் விளைவுகளுடன் தொடர்புபடுத்துகிறார்.
"குறுகிய கால இடைவெளிகளில் மிகத் தீவிரமான மழைப்பொழிவு மற்றும் அதைத் தொடர்ந்து அடுத்த பருவத்திலேயே தண்ணீர் பற்றாக்குறை நிலவுவது போன்ற சூழலை நாம் சமீப காலங்களில் அதிகமாகக் காண்கிறோம். இது நீர் மேலாண்மையை மேலும் சிக்கலாக்குகிறது" என்கிறார் அவர்.
"குறுகிய காலத்தில் பெருமளவு மழை பொழியும்போது, அந்த நீரைச் சேமிப்பது கடினமாகிறது. அதேவேளையில், அது வெள்ளப் பேரிடருக்கான அபாயத்தையும் அதிகரிக்கிறது" என்று கூறும் அவர், தண்ணீர் ஒரு முக்கிய அரசியல் விவகாரமாக உருவெடுக்கும் ஆற்றலைக் கொண்டிருந்தாலும், தேர்தல் களத்தில் அதற்குரிய முக்கியத்துவம் எத்தகையதாக இருக்கும் என்பது இன்னும் தெளிவற்றதாகவே இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.
"தமிழ்நாடு முழுவதும் பரவலாகக் காணப்படும் தண்ணீர் பிரச்னைகளைச் சரி செய்வதற்காகப் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் அவை ஒருங்கிணைக்கப்பட்ட நிலையில் இல்லாதது அவற்றின் பலன்களை மக்கள் முழுமையாக அடையாமல் இருப்பதற்கான ஒரு முக்கியக் காரணம். ஓர் ஒருங்கிணைந்த அணுகுமுறை இல்லாத பட்சத்தில் நீர் சார்ந்த திட்டங்களின் முழு பயனைப் பெறுவது இயலாத காரியம்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில், "மாநிலம் முழுவதும் பல்வேறு வடிவங்களில் நீர் தொடர்பான பிரச்னைகள் நிலவி வருகின்றன. ஆனால் அவையனைத்தும் உள்ளூர் மட்டங்களிலேயே சுருங்கி விடுவதால், தேர்தல்களின்போது அரசியல் கட்சிகளும் சரி, வாக்காளர்களும் சரி இந்தப் பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளிப்பார்களா என்பது இன்னும் தெளிவாகவில்லை" என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
தண்ணீர் தேர்தல் பிரச்னையாக கவனம் ஈர்க்குமா?
நீர் விநியோகத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்து இருப்பதாகவும், ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் குழாய் நீர் கிடைப்பது விரிவுபடுத்தப்பட்டு இருப்பதாகவும் அரசின் தரவுகள் கூறுகின்றன.
இருப்பினும், அதில் குறைபாடுகள் இருப்பதாகப் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
"பெரும்பான்மையான இடங்களில் தண்ணீர் முறையாக வழங்கப்பட்ட போதிலும் சில இடங்களில், குறிப்பாக கிராமப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் முறையாகத் தொடர்வதில்லை என்றும் இதனால் மக்கள் அவதிப்படுவதாகவும்" கள்ளக்குறிச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெயகாந்தன் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.
அதேபோல, மத்திய நீர்வளத்துறையின் நிலத்தடி நீர் மதிப்பீடுகளைப் பொறுத்தவரை, பல மாவட்டங்கள் 'அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட' அல்லது 'மிக நெருக்கடியான' நிலையில் இருக்கின்றன. இது நீண்டகால அளவிலான நிலைத்தன்மை குறித்த கவலைகளை எழுப்புவதாக முனைவர் ஜனகராஜன் எச்சரிக்கிறார்.

இந்தப் போக்குகள், தண்ணீர் தொடர்பான பிரச்னைகளைப் பொறுத்தவரை, உள்கட்டமைப்பு விரிவடைந்து இருந்தாலும், அடிப்படை வளப் பற்றாக்குறையும் மேலாண்மை சார்ந்த சவால்களும் தீர்க்கப்படாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், தமிழ்நாடு முழுவதும் பரவலாக உள்ள நீர் தொடர்பான பிரச்னைகள், குடிநீர் விநியோகம், விவசாயம் மற்றும் பொது சுகாதாரத்தைப் பாதிக்கின்றன. இருப்பினும், அவற்றின் தன்மை உள்ளூர் மட்டங்களிலேயே வேறுபடுவதும், அரசியல் கட்சிகள் இதன்மீது கவனம் செலுத்தத் தவறுவதும், தண்ணீர் ஓர் ஒருங்கிணைந்த தேர்தல் பிரச்னையாக உருவெடுப்பதைக் கடினமாக்குவதாகக் கூறுகிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன்.
அதேநேரம், தண்ணீர் ஒரு முக்கியமான அடிப்படைப் பிரச்னையாகவே நீடிப்பதாகக் கூறும் அவர், "மழைப்பொழிவில் அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வு, தொடர்ச்சியான நிலத்தடி நீர் குறைவு, அதிகரித்து வரும் தேவை ஆகியவற்றால் இது தீவிரமடையக்கூடும். அப்போதுதான் அரசியல் ரீதியாக இதன் மீதான கவனமும் அதிகரிக்கும்" என்றும் குறிப்பிட்டார்.
கூடுதல் தகவல்கள்: பி.சுதாகர் & க.மாயகிருஷ்ணன், பிபிசி தமிழுக்காக
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































