பயிற்சி ஆட்டத்தில் 54 ரன்களுக்கு சுருண்ட வங்கதேசம் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது எப்படி?

தொடக்க டெஸ்டில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்திய ஹசன் மஹ்மூத் (வலது) ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தொடக்க டெஸ்டில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்திய ஹசன் மஹ்மூத் (வலது) ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
    • எழுதியவர், பால் பட்டிசன்
    • பதவி, பிபிசி ஸ்போர்ட் செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

டார்வினில் நடைபெற்ற தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில், வங்கதேசம் ஆஸ்திரேலியாவை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகப் பெரிய அதிர்ச்சி வெற்றிகளில் ஒன்றை பதிவு செய்தது.

ஆஸ்திரேலியாவை 284 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்த வங்கதேசத்திற்கு வெற்றி பெற 57 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. மினுல் ஹக், பியூ வெப்ஸ்டரின் பந்தை பவுண்டரிக்குத் அடித்து வெற்றி ரன்களை எடுத்தார். இதன் மூலம் வங்கதேசம் ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் டெஸ்ட் வெற்றியை பெற்றுள்ளது.

அந்த தருணம், வங்கதேச வீரர்களும் பயிற்சியாளர்களும் பேரானந்தத்தில் கொண்டாடும் காட்சியை உருவாக்கியது. 26 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், இது அவர்களின் மிகச் சிறந்த வெற்றியாகக் கருதப்படுகிறது.

ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலிடம் வகிக்கும் அணியாக உள்ளது. மறுபுறம், 2003 ஆம் ஆண்டு 2-0 என்ற கணக்கில் தோல்வியடைந்த தொடருக்குப் பிறகு, வங்கதேசம் இந்த நாட்டில் டெஸ்ட் தொடரை விளையாடியதில்லை.

போட்டி முழுவதும் வங்கதேசம் ஆதிக்கம் செலுத்தியது. நான்காம் நாளில், சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் மிராஸ் 66 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை 284 ரன்களுக்கு சுருட்டினார். இதனால் வெற்றிக்கு வெறும் 57 ரன்களே தேவைப்பட்டன.

ஆல்ரவுண்டர் கேமரன் கிரீன் 104 ரன்கள் எடுத்து போராடினாலும், ஹசன் மஹ்மூத் அவரை போல்டாக்கியதும், போட்டியை காப்பாற்றும் ஆஸ்திரேலியாவின் மங்கலான நம்பிக்கைகளும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தன.

முதல் இன்னிங்சில் 6-55 மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 3-56 என மொத்தம் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் ஹசன் மஹ்மூத் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

வெற்றியை கொண்டாடும் வங்கதேச அணி வீரர்கள்

பட மூலாதாரம், Robert Cianflone/Getty Images

"எந்த வடிவ கிரிக்கெட்டிலும் வங்கதேசத்தின் மிகப் பெரிய வெற்றி இதுதான்," என்று கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ கூறினார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"எதிர்காலத்தில் இன்னும் சிறப்பான விஷயங்களைச் செய்ய விரும்புகிறோம். நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறேன். வீரர்கள் விளையாடிய விதம் அருமையாக இருந்தது. நாங்கள் கடுமையாக உழைத்தோம்."

ஏபிசியில் பேசிய வர்ணனையாளர் ஜிம் மேக்ஸ்வெல், இந்த முடிவை "ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட்டில் சந்தித்த மிகுந்த அவமானகரமான தோல்விகளில் ஒன்று" என்று விவரித்தார்.

மூன்றாம் நாளில் பேட்டிங்கில் 65 ரன்கள் எடுத்து வங்கதேசத்திற்கு முதல் இன்னிங்சில் வலுவான முன்னிலை பெற்றுத் தந்த மிராஸ், ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்சில் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்தையும் ஆட்டமிழக்கச் செய்து வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்திருந்தார்.

நான்காவது நாளிலும் அந்த சுழற்பந்துவீச்சாளர் தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்தார். முதலில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியை 30 ரன்களில் கேட்ச் மூலம் வெளியேற்றிய அவர், பின்னர் ஆல்ரவுண்டர் வெப்ஸ்டரை வெறும் ஐந்து ரன்களில் அடுத்தடுத்து வீசிய இரண்டு அபாரமான பந்துகள் மூலம் போல்டாக்கினார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் கடைசி வரிசை பேட்டர்களை களமிறக்க வேண்டிய நிலைக்கு கொண்டு வந்தார்.

28 வயதான மிராஸ், ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸை எட்டு ரன்களில் அருகிலிருந்த பீல்டரிடம் கேட்ச் கொடுக்கச் செய்தார். பின்னர் கிரீன் மற்றும் மிட்செல் ஸ்டார்க் இணைந்து எட்டாவது விக்கெட்டுக்கு 43 ரன்கள் சேர்த்தனர். ஆனால் டாஸ்கின் அகமது, ஸ்டார்க்கை 18 ரன்களில் பின்புறம் கேட்ச் கொடுக்கச் செய்து வெளியேற்றியதும் அந்த கூட்டணி முடிவுக்கு வந்தது.

தனது சொந்த மண்ணில் மூன்றாவது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்த கிரீன், அணியில் தனது இடம் குறித்து விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில், சரியான நேரத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், மஹ்முத் பந்துவீச்சில் கிரீன் ஆட்டமிழந்த பின்னர், மிராஸ் நாதன் லயனை ஆட்டமிழக்கச் செய்தார். இதன் மூலம் வங்கதேசம் வெற்றியை நெருங்கியது.

இரண்டாவது ஓவரிலேயே தொடக்க வீரர் தன்சித் ஹசன் தமீம், ஜோஷ் ஹேசல்வுட்டின் பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினாலும், மொமினுலின் ஆட்டமிழக்காத 30 ரன்களும் ஷாட்மான் இஸ்லாமின் 25 ரன்களும் அணிக்கு வெற்றியை உறுதி செய்தன.

"அவர்கள் எங்களை அனைத்து அம்சங்களிலும் மிஞ்சினார்கள். அவர்கள் பொறுமையுடனும் ஒழுக்கத்துடனும் விளையாடினார்கள்," என்று கம்மின்ஸ் கூறினார்.

"எங்களது போட்டிக்கான தயாரிப்பு சிறப்பாகவே இருந்தது. எனவே, எந்தவித சாக்குப்போக்கும் இல்லை."

இதற்கு முன்பு, 2017-ல் மிர்பூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில்தான் வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா தோல்வியடைந்திருந்தது.

இது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டமாகும். இரண்டாவது டெஸ்ட் ஆகஸ்ட் 22 அன்று தொடங்குகிறது.

நான்காம் நாளில் மிராஜ் வங்கதேசத்தின் அதிர்ஷ்ட நட்சத்திரமாகத் திகழ்ந்தார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நான்காம் நாளில் மிராஜ் வங்கதேசத்தின் அதிர்ஷ்ட நட்சத்திரமாகத் திகழ்ந்தார்

வங்கதேச பிரதமர் அணியை வாழ்த்தினார்

டார்வினில் நடைபெற்ற ஒரு பயிற்சி ஆட்டத்தில், டெஸ்ட் தரவரிசையில் 9-ஆவது இடத்தில் இருக்கும் வங்கதேச அணி ஆஸ்திரேலியா லெவன் அணியிடம் வெறும் 54 ரன்களுக்கு சுருண்டிருந்தது என்பதால் இந்த வெற்றி இன்னும் வியப்பூட்டும் ஒன்றாக இருந்தது.

ஜூன் மாதத்தில், ஹராரேவில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில், டெஸ்ட் தரவரிசையில் 10 அணிகளில் கடைசி இடத்தில் உள்ள ஜிம்பாப்வேயிடம் அவர்கள் மோசமாகத் தோற்றிருந்தனர்.

வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மான், வீரர்களுடன் வீடியோ அழைப்பில் பேசி அணியை வாழ்த்தினார்.

"நாங்கள் அனைவரும் உங்களை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம்," என்று அவர் சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.

மேலும் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களில் இருவரான நஹித் ராணா மற்றும் ஷோரிஃபுல் இஸ்லாம் காயத்தால் விலகியிருந்த நிலையில் இந்தப் போட்டியில் முழு வலிமையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வங்கதேசம் களம்கண்டது.

இந்த வரலாற்று வெற்றிக்கு அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் மனப்போக்கில் ஏற்பட்ட மாற்றமே முக்கிய காரணம் என ஷாண்டோ கூறினார்.

"ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, வேகப்பந்துவீச்சாளர்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்பவில்லை," என்று ஷாண்டோ கூறினார்.

"ஆனால் கடந்த சில ஆண்டுகளில் நாங்கள் நிறைய டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியுள்ளோம். இப்போது அவர்கள் டெஸ்ட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். விளையாடவும், சிறப்பாக செயல்படவும், உலகத் தரம் வாய்ந்த வீரர்களாக மாறவும் விரும்புகிறார்கள். தற்போது அவர்களிடம் அந்த மனநிலை உள்ளது.

"முஷ்ஃபிகுர் ரஹீம், மொமினுல் ஹக் போன்ற மூத்த வீரர்கள், மேலும் அதிக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுமாறு அவர்களை ஊக்குவித்துள்ளனர்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு