IND vs SL: இலங்கைக்கு எதிராக இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால்கள் என்ன? கட்டாய வெற்றி கைக்கு வருமா?

இந்தியா மற்றும் இலங்கை டெஸ்ட் அணிகளின் கேப்டன்கள்

பட மூலாதாரம், AFP via Getty Images

    • எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் நாளை (ஆகஸ்ட் 15) தொடங்குகிறது. இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டி காலேவில் நடக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணிக்கு இந்தத் தொடரில் பெரும் சவால்கள் காத்திருக்கின்றன.

சில முன்னணி வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் சில கேள்விகளை எழுப்பியுள்ளன. அதுமட்டுமின்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முன்னேற வேண்டிய நெருக்கடியும் இந்திய அணிக்கு இருக்கிறது. அவை என்ன சவால்கள்? அதை இந்திய அணி எப்படி சமாளிக்கக்கூடும்?

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முன்னேற்றம் தேவை

நடந்து வரும் 2025-2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணியின் செயல்பாட்டில் பெரும் ஏற்ற இறக்கங்கள் நிறைந்திருக்கின்றன. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியிருக்கும் இந்திய அணி, டிராவில் முடிந்த ஒரு போட்டி தவிர்த்து, தலா 4 வெற்றிகளையும், தோல்விகளையும் சந்தித்திருக்கிறது. 48.15% புள்ளிகள் பெற்றிருக்கும் இந்திய அணி புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறது.

முதல் 3 இடங்களில் இருக்கும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் 70 சதவிகிதத்திற்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்றுள்ளன.

அதோடு, 58.33% புள்ளிகளைப் பெற்று 4வது இடத்தில் இருக்கும் வங்கதேசமும்கூட தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி வருகிறது. அதனால் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான இந்திய அணியின் வாய்ப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

இதுவரை நடந்த டெஸ்ட் சாம்பியஷிப்களில் குறைந்தபட்சம் 60 புள்ளிகள் பெற்ற அணிகள்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன.

கடந்த 2023ஆம் ஆண்டில் இந்திய அணி மட்டுமே 58.8% புள்ளியுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதனால் இந்த முறையும் 60 சதவிகித புள்ளிகளாவது எடுத்தால் மட்டுமே இறுதிப் போட்டியைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியும்.

மீதமிருக்கும் 9 போட்டிகளில் இந்திய அணி 7 வெற்றிகளோ, அல்லது 6 வெற்றிகள் மற்றும் 2 டிராவோ கண்டால் மட்டுமே 60% புள்ளிகளை எட்ட முடியும். நியூசிலாந்துக்கு எதிராக 2 போட்டிகள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் இருப்பதால் அது பெரும் சவாலாக அமையும். அதனால், இலங்கைக்கு எதிரான இந்த 2 போட்டிகளிலுமே இந்தியா வெற்றி பெற்றாக வேண்டிய என்ற கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

டெஸ்ட் கோப்பையுடன் இந்திய, இலங்கை அணிகளின் கேப்டன்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெஸ்ட் கோப்பையுடன் இந்திய, இலங்கை அணிகளின் கேப்டன்கள்

இந்திய அணி வெற்றிப் பாதைக்குத் திரும்புமா?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி பின்னடைவைச் சந்திப்பதற்கான காரணம் கடந்த நவம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரை 2-0 என இழந்தது.

இந்திய மண்ணில் புள்ளிகளைப் பெறுவதற்கு நல்ல வாய்ப்பு இருந்த நிலையில், இந்தியாவின் அந்தச் செயல்பாடு பெரும் ஏமாற்றம் தருவதாக அமைந்தது. அதிலிருந்து இந்திய அணி மீண்டு வருமா என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

அதுமட்டுமின்றி நவம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தோற்ற பிறகு இந்திய அணி ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளது. அதுவும் கடந்த ஜூன் மாதம் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்.

ஆனால், அது டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. பெரும் இடைவெளிக்குப் பிறகு இந்திய அணி டெஸ்ட் ஃபார்மட்டில் விளையாட இருப்பதால், அந்த சவால்களை இந்திய எதிர்கொண்டு எப்படி வெற்றிப் பாதைக்குத் திரும்பப் போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கிறார்கள்.

இலங்கை அணி புள்ளிப் பட்டியலில் பின்தங்கியிருந்தாலும், முன்பைப் போல பலமான அணி இல்லை என்றாலும், அவர்களை சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் எதிர்கொள்வது எளிதாக இருக்காது. அதுவும் இலங்கை ஆடுகளங்களில் நிச்சயம் அவர்கள் எந்த அணிக்குமே சவாலாக இருப்பார்கள்.

இலங்கையில் இருக்கும் சவால்கள் பற்றிப் பேசிய இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னே மோர்கெல், "இந்தத் தொடரில் வெப்பம், ஈரப்பதம் போன்றவை பெரும் சவாலாக இருக்கும். கூக்கபரா பந்துமே சவால் கொடுக்கக் கூடியதுதான். இலங்கை போன்ற ஒரு நாட்டில் கிரிக்கெட் ஆடும்போது மனநிலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயமாக இருக்கும்" என்று குறிப்பிட்டார்.

மேலும், "இங்கே 20 - 25 ஓவர்களில் பந்து மென்மையாகிவிடும். அதன் பிறகு நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை சமயோஜிதமாக யோசிக்க வேண்டும். புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு கிரீஸை எப்படிப் பயன்படுத்தப் போகிறோம், ஷார்ட் பால்களை எப்படிப் பயன்படுத்தப் போகிறோம் என்பதையெல்லாம் அந்தச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு எப்படி பயன்படுத்துகிறோம் என்று சரியாக முடிவெடுக்க வேண்டும்" என்று கூறினார்.

இலங்கை கிரிக்கெட் லெவன் மற்றும் இந்தியா இடையேயான பயிற்சிப் போட்டியின் போது, ரவீந்திர ஜடேஜா (வலது) மற்றும் மானவ் சூத்தர் (இடது)

பட மூலாதாரம், Sameera Peiris/Getty Images

படக்குறிப்பு, இலங்கை கிரிக்கெட் லெவன் மற்றும் இந்தியா இடையிலான பயிற்சிப் போட்டியின்போது, ரவீந்திர ஜடேஜா (வலது) மற்றும் மானவ் சூத்தர் (இடது)

மறுபுறம் இந்திய பேட்டிங் மீதான எதிர்பார்ப்பும் முன்பைவிட அதிகமாக இருக்கிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிலுமே இந்திய அணி பேட்டர்கள் சுழலுக்கு எதிராக சிறப்பாகச் செயல்பட முடியாமல் தடுமாறினர்.

கடந்த சில ஆண்டுகளாகவே சுழலுக்கு எதிரான இந்திய பேட்டிங் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், இலங்கையில் அதைவிடப் பெரிய சவால் காத்திருக்கும். அதனால் இந்திய பேட்டர்கள் மீதான எதிர்பார்ப்பு அவர்களுக்குக் கூடுதல் நெருக்கடியாகவும் அமையலாம். இந்தியா இந்தத் தொடரை வெல்ல வேண்டுமெனில் அவர்கள் நிச்சயம் தங்கள் சிறப்பான செயல்பாட்டைக் கொடுக்க வேண்டியிருக்கும்.

இந்திய அணியில் யார்?

இந்தத் தொடருக்கான இந்திய அணியில் சில முன்னணி வீரர்கள் இடம்பெறவில்லை. வாஷிங்டன் சுந்தர் காயத்தில் இருந்து மீண்டு கொண்டிருப்பதால் அவர் முதல் போட்டிக்கான அணியில் அறிவிக்கப்படவில்லை. அதேநேரம் அணி அறிவிக்கப்பட்ட பிறகு ஜஸ்ப்ரித் பும்ரா, சாய் சுதர்ஷன் ஆகியோர் காயமடைந்து வெளியேறினார்கள். அதனால், பிளேயிங் லெவனில் ஆடக்கூடிய 3 வீரர்களை இந்திய அணி இழந்திருக்கிறது. பும்ரா, சாய் சுதர்ஷன் ஆகியோருக்குப் பதிலாக முறையே ஆகிப் நபி மற்றும் சர்ஃபராஸ் கான் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள்: சுப்மன் கில் (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணைக் கேப்டன் & விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), சர்ஃபராஸ் கான், தேவ்தத் படிக்கல், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, சாரன்ஷ் ஜெய்ன், மானவ் சூத்தர், குல்தீப் யாதவ், ஆகிப் நபி, மொகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார்.

இந்த 15 வீரர்களில் பிளேயிங் லெவனில் ஆடும் 10 பேரின் இடம் கிட்டத்தட்ட உறுதியானதுதான். ஜெய்ஸ்வால் மற்றும் ராகுல் தொடக்க ஜோடியாக சிறப்பாகச் செயல்படுகிறார்கள். அவர்கள் அப்படியே தொடர்வார்கள். 4-7 இடங்களில் எப்போதும் போல முறையே கில், பன்ட், ஜுரெல், ஜடேஜா ஆடுவார்கள். பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ், சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா களமிறக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாய் சுதர்ஷன் ஆடிக்கொண்டிருந்த 3வது இடத்தில் தேவ்தத் படிக்கல் களமிறக்கப்படுவார் என்று பலரும் கருதுகிறார்கள். சமீபத்திய போட்டிகளில் அவர் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். சில வாரங்களுக்கு முன்பாக இலங்கை ஏ அணிக்கு எதிராக விளையாடிய அவர் 3 முதல் தர இன்னிங்ஸ்களில் 2 அரை சதங்களை அடித்தார்.

மேலும், கடந்த வாரம் நடந்த இலங்கை கிரிக்கெட் லெவன் அணிக்கு எதிரான சுற்றுப் பயணப் போட்டியில் மூன்றாவது வீரராகக் களமிறங்கி ஆட்டமிழக்காமல் 142 ரன்கள் குவித்தார். அதனால் அவர் அந்த இடத்தில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதிதான்.

 3வது இடத்தில் தேவ்தத் படிக்கல் களமிறக்கப்படுவார் என்று பலரும் கருதுகிறார்கள்.

பட மூலாதாரம், Sameera Peiris/Getty Images

படக்குறிப்பு, மூன்றாவது இடத்தில் தேவ்தத் படிக்கல் களமிறக்கப்படுவார் என்று பலரும் கருதுகிறார்கள்

இப்போது இந்திய அணியின் முன்பாக இருக்கும் கேள்வி அந்த 11வது வீரர் யார் என்பதுதான். வாஷிங்டன் சுந்தர் இல்லாததால் அதுவொரு பெரிய வெற்றிடமாக அமைந்திருக்கிறது. ஏனெனில், 8வது இடத்தில் ஆடும் வீரர் பேட்டிங்கிலும் பங்களிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படும்.

அதனால் மானவ் சூத்தர் அல்லது சாரன்ஷ் ஜெய்ன் இருவரில் யாரேனும் ஒருவர் களமிறக்கப்படலாம் என்று சிலர் கருதுகிறார்கள். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான மானவ் சூத்தர், ஆட்ட நாயகன் விருதை வென்று அசத்தினார். அதனால் அவருக்கான வாய்ப்பு அதிகம்தான்.

அதேநேரம், ஏற்கெனவே இன்னொரு இடது கை ஸ்பின்னர் (ரவீந்திர ஜடேஜா) இருப்பதால், மானவ் சூத்தரும் தேவையா என்ற கேள்வி எழுகிறது. அதனால் ஆஃப் ஸ்பின்னரான சாரன்ஷ் ஜெய்னுக்கு அறிமுக வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்திய பேட்டர்கள் யாரும் பெரிதாக பந்துவீசமாட்டார்கள் என்பதால், ஒரு ஆஃப் ஸ்பின் ஆப்ஷன் வேண்டும் என்பதை இந்திய அணி நிச்சயம் பரிசீலிக்கும்.

ஒருவேளை ஆடுகளத்தின் தன்மையைப் பார்த்துவிட்டு மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் வேண்டும் எனக் கருதினால் இந்திய அணி ஆகிப் நபி, குர்னூர் பிரார் ஆகியோர் பக்கம் திரும்ப வேண்டும். அது பேட்டிங்கை சற்று பலவீனப்படுத்தும்.

ஏற்கெனவே இந்திய பேட்டிங் மீது பெரும் விமர்சனம் இருப்பதாலும், பயிற்சியாளர் கம்பீர் ஆல்ரவுண்டர்களை அதிகம் விரும்புகிறவர் என்பதாலும் சூத்தர் அல்லது சாரன்ஷ் ஜெய்ன் இருவரில் ஒருவர் களமிறங்கவே வாய்ப்பு அதிகம். அது யார் என்பதுதான் இந்திய அணியி முன்பாக இருக்கும் முக்கியக் கேள்வி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு