You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: நீட் விவகாரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நடந்தது என்ன?
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக திமுக வாக்குறுதி அளித்திருந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்த காணொளி.
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் வசித்து வந்த மாணவி தேவதர்ஷினிக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. 2021 ஆம் ஆண்டு பிளஸ்டூ படிப்பை அவர் நிறைவு செய்துவிட்டார். ஆனால், மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை மூன்று முறை எழுதியும் அவர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
கடந்த ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி தற்கொலையால் உயிரிழந்தார்.
தேவதர்ஷினியைப் போலவே நீட் தேர்வு காரணமாக கடந்த ஐந்தாண்டுகளில் 19 மாணவ, மாணவிகள் உயிரிழந்ததாக, பெயர்களை தனது எக்ஸ் தளப் பதிவில் பட்டியலிட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, 'இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லப் போகும் பதில் என்ன?' எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
மத்தியில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி ஆட்சியில் இருந்த போதே நீட் தேர்வு முன்னெடுக்கப்பட்டாலும், தமிழ்நாட்டைப் பொருத்தவரை 2017-ஆம் ஆண்டுதான் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த ஆண்டு அரியலூரில் மாணவி அனிதா உயிரிழந்தது தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில், 'ஆட்சிப் பொறுப்பேற்றதும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவோம்' என, தி.மு.க பிரசாரம் செய்தது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சிப் பொறுப்பேற்றதும் நீட் தேர்வு குறித்து ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை தி.மு.க அரசு அமைத்தது.
அந்தக் கமிட்டி அளித்த பரிந்துரையின் அடிப்படையில் 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி நிராகரித்தார்.
2022 ஆம் ஆண்டு மீண்டும் அதே மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு தி.மு.க அரசு அனுப்பியது. இந்த முறை மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பினார்.
இந்த மசோதாவும் நிராகரிக்கப்பட்டுவிட்டதாக, கடந்த ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
முழு விவரம் காணொளியில்.
தயாரிப்பு - விஜயானந்த், பிபிசி தமிழ்
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு - நிஷாந்த், பிபிசி தமிழுக்காக
மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு