You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆண்களுக்கு நிகராக தானம் வழங்கிய பெண்கள்
- எழுதியவர், க. மாயகிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆண்களுக்கு இணையாக பெண்களும் கோவிலுக்கு நன்கொடை வழங்கி பல்வேறு நலப்பணிகளைச் செய்துள்ளனர்.
இதுபற்றி தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி-XIV-(விழுப்புரம் மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி-1) என்ற தலைப்பிட்ட புத்தகத்தில் விரிவாக கல்வெட்டு ஆதாரங்களுடன் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. அது பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலமாக வெளியிடப்பட்ட விழுப்புரம் மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி -1 என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தலிங்க மடம் என்ற ஊருக்கு நேரடியாகப் பயணித்தோம்.
பிபிசி தமிழுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் சிங்கார உதியனும் வந்திருந்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தலிங்கமடம், முற்காலத்தில் சிற்றிங்கூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊரிலுள்ள திருப்புலி பகவர் கோவிலில் கி.பி.910ஆம் ஆண்டில் முதலாம் பராந்தகனின் ஆட்சியில் வெட்டப்பட்ட கல்வெட்டில் "சிற்றிங்கூர்" என்றே உள்ளது.
விஜயநகர மன்னர் சதாசிவ தேவராயர் காலத்தில் இந்த ஊர் "திருப்புலி பகவநல்லூர் " என்று அழைக்கப்பட்டது. தற்போது சித்தலிங்கமடம் என்றே அழைக்கப்படுகிறது என்று ஊரின் பெயர் வரலாறு குறித்து சிங்கார உதியன் விளக்கினார்.
அக்காலத்தில் கோவில் சீரமைப்பு, ஏரி, குளம் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆண்களுக்கு இணையாக பெண்களும் நன்கொடை வழங்கிய நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.
விழுப்புரம் மாவட்டம் சித்தலிங்கமடத்தில் சிறப்பு பெற்ற திருப்புலி பகவர் கோவிலுக்கு 1000 ஆண்டுகளுக்கு முன் தானம் வழங்கிய அரசியர் மற்றும் சாமானிய பெண்களைப் பற்றிய கல்வெட்டுகளை விழுப்புரம் மாவட்ட கல்வெட்டுகள் புத்தகத்தின் உதவியுடன் சிங்கார உதியன் ஒவ்வொன்றாகக் காண்பித்து விளக்கினார்.
அதிகாரிகளின் மனைவிகள் வழங்கிய கொடை விவரங்கள்
அன்னதானம் வழங்கிட தானம் வழங்கிய அதிகாரி மனைவி சூர்ய தேவி
சித்தலிங்க மடம் வியாக்ரபாதீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோவில் முன் மண்டபத்தின் கிழக்குச் சுவரில் வெட்டப்பட்ட குலோத்துங்க சோழனின் (பொது ஆண்டு 12ஆம் நூற்றாண்டு) "ஸ்வஸ்திஸ்ரீ வனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க தேவருக்கு யாண்டு" எனத் தொடங்கும் கல்வெட்டில் நிலம் தானமாக வழங்கியதை விளக்குகிறது.
"ராஜேந்திர சோழ சேதிராயனின் மனைவி, உடையாள் சூர்ய தேவி ஆன நிறை தவஞ்செய்தாள் என்பவர் முதலாம் குலோத்துங்கனின் 31 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில், சித்தலிங்கமடம் திருப்புலி பகவர் கோவிலுக்கு பதினாறு சாண் கோலால் அளவிடப்பட்ட 2500 குழி நிலம் நிலத்தை விலைக்கு வாங்கித் தானமாக அளித்துள்ளார். இதிலிருந்து பெறப்படுகின்ற வருமானம் ஆண்டார்கள் என்று அழைக்கப்படும் மெய்யன்பர்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட பிற தேவைகளுக்காக இந்நிலத்தை வழங்கியுள்ளார்" என்று கல்வெட்டுச் செய்தியை விரிவாக விளக்கினார் சிங்கார உதியன்.
இறைவழிபாட்டிற்கான பூஜை பொருட்கள் வாங்கிட தானம் வழங்கிய அதிகாரி மனைவி நீலி செங்கி
தொடர்ந்து திருச்சுற்றின் (பிரகாரம்) வடக்குச் சுவரில் உள்ள விக்கிரம சோழனின் மூன்றாம் ஆட்சி ஆண்டு கல்வெட்டில், இராஜேந்திர சோழ சேதிராயனின் கீழ் அதிகாரியாகப் பணிபுரிந்த மலையமான் திருக்கலை மருந்தான் ஆழ்வான் அங்காற மலையமானின் மனைவி நீலி செங்கி வழங்கிய தானம் பற்றி விளக்கியது.
"இவர் விக்கிரம சோழனின் 3வது ஆட்சியாண்டில் (கி.பி.1120) சித்தலிங்கமடம் திருப்புலி பகவருக்கு 500 குழி நிலம் விலைக்கு வாங்கித் தானமாக வழங்கியுள்ளார். இந்த நிலத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை இறைவழிபாடு செய்வதற்குத் தேவையான பொருட்கள் வாங்கப் பயன்படுத்திட வேண்டும்" என்பதை கல்வெட்டு தெரிவிக்கிறது.
கோவில் விளக்கு எரிக்கவும் பாத்திரங்கள் வாங்கவும் தானம் வழங்கிய சதிரி
இந்தக் கோவில் முன்மண்டபத்தின் வடக்குச் சுவரில், விக்கிரம சோழனின் 3ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 1121) "ஸ்வஸ்திஸ்ரீ சக்கரவர்த்திகள் ஸ்ரீ விக்கிரமசோழ தேவருக்கு யாண்டு மூன்றாவது மலடாகிய ஜனநாத வள..." எனத் தொடங்கும் கல்வெட்டில், கோவில் விளக்கு எரிக்கவும் பாத்திரங்கள் வாங்கிடவும் தானம் வழங்கிய பெண்மணி சதிரி குறித்த செய்தி உள்ளது.
பேரிங்கூர் (பேரங்கியூர்) பகுதியைச் சேர்ந்த தில்லை நாயகன் தேவர் கண்டன் மனைவியும், மலையனான ராஜேந்திர சோழ சேதிராயன் என்பவரின் மகளுமான சதிரி இந்தக் கோவிலுக்கு விளக்கெரிக்க 16 பசு மாடுகளை வழங்கியதுடன், மேலும் 16 பசு மாடுகள் வாங்குவதற்காகப் பொன்னும் (தங்கக் காசுகள்) வழங்கினார்.
குத்து விளக்கு ஒன்றையும், பூஜைக்கான பாத்திரங்களையும் (பரிகலன்) வழங்கியதோடு, இவற்றில் தேய்வோ, சீர்கேடோ ஏற்படின் அதைச் சரிசெய்யத் தனியாக ஒரு காசும் கொடுத்துள்ளதைப் பதிவு செய்துள்ளதாக சிங்கார உதியன் விவரித்தார்.
தாய் நலனில் அக்கறை கொண்டு கோவிலுக்கு தானம் வழங்கிய ஆளவந்தாள்
கோவில் திருச்சுற்றின் (பிரகாரம்) தெற்குச் சுவரிலுள்ள "பூமாது புணர" என்ற மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் கல்வெட்டில், "மலைய நாட்டு அதிகாரியான, மலையமான் ராமன் சூரியனான ராஜேந்திர சோழ மலையகுலராயனின் மனைவியும், ராஜேந்திர சோழ சேதிராயனின் மகளுமான ஆளவந்தாள், விக்கிரம சோழனின் 15ஆம் ஆட்சியாண்டில் (கி.பி.1132-33) தனது தாயார் சூரிய தேவி என்கிற நிறை தவம் செய்தாள் நன்மை கருதி இக்கோவில் பள்ளியறை நாச்சியார் அம்மனுக்கு கோவில் எழுப்பி சிலையும் செய்து கொடுத்தார். அதோடு, அந்தப் பள்ளியறை நாச்சியாருக்கு திருப்படி உள்ளிட்ட நிவந்தங்களுக்காக, இரண்டு வேலி நிலங்களை விலைக்கு வாங்கிக் கொடை வழங்கியுள்ளார்" என்பதை சிங்கார உதியன் விளக்கிக் கூறினார்.
அதேபோல, கிளியூர் மலையமான் சோழேந்திர சிங்க சேதிராயனின் மகன், குலோத்துங்கன் பெரிய சீயன் எதிரழிச்சோழ மகதை நாடாழ்வானின் மனைவி அத்தியாண்டாள் என்பவர் 2000 குழி நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்.
இதில் கிடைக்கும் வருவாயை வைகாசி, புரட்டாசி ஆகிய மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களில் இறைவன் வீதியுலா செல்வதற்காகவும் மெய்யென்பர்கள் அன்னதானத்திற்காகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கல்வெட்டுச் செய்தி உணர்த்துகிறது.
சமூகத்தின் இதர பெண்கள் வழங்கிய கொடைகள்
சித்தலிங்கமடம் கோவிலுக்கு அதிகாரிகளின் மனைவிகள் மட்டுமல்லாது தேவரடியார்கள் உள்ளிட்ட சாமானிய பெண்களும் நன்கொடைகளை வழங்கியுள்ளார்கள்.
இசைக் கருவிகள் வாங்க தானம் வழங்கிய பெண்
இந்தக் கோவிலின் முன் மண்டபத்தின் வடக்குச் சுவரில் கன்னர தேவனின் 24ஆம் ஆட்சியாண்டில், கி.பி.963இல் வெட்டப்பட்ட கல்வெட்டில் திருநாவுக்கரசி என்பவர் பாரம்பரியமிக்க இசைக் கருவிகளான சேகண்டிகையும், இரட்டைக்காளம், நாற்பலம் எடை கொண்ட தனிக்காளம் ஆகியவற்றை வாங்குவதற்காக ஐந்து கழஞ்சு பொன் வழங்கியுள்ளதைப் பதிவு செய்துள்ளது.
அதேபோல, முன்மண்டபத்தின் வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டில், (கி.பி.10ஆம் நூற்றாண்டு சோழர்கள் காலம்) ஆத்ரையன் கேசவன் மாறன் என்பவரின் மனைவியான பிராமணி காளி சோமாஸி என்பவர் இக்கோவிலுக்கு இரண்டு நந்தா விளக்குகள் எரிப்பதற்காக 10 கழஞ்சு பொன் வழங்கியுள்ளார் என்பதைப் பதிவு செய்துள்ளது.
ஆட்கொண்டான் சானி வழங்கிய நன்கொடை
பிராமணன் காஸ்யபன் பெரியாண்டான் என்பவரின் மனைவி ஆட்கொண்டான் சானி என்னும் பெண்மணி இரண்டாம் ராஜராஜ சோழனின் ஆட்சியின்போது (கி.பி.1154) க்ஷேத்திரபால பிள்ளையார் உருவினை (பைரவர்) எழுந்தருளச் செய்து பிரதிஷ்டையும் செய்து, பூஜை செய்வதற்கான பொருட்கள் வாங்க 16 பொற்காசுகள், 18 பொற்காசுகள் எனத் தனித்தனியாக கோவில் கருவூலத்திற்கு வழங்கியுள்ளார்.
தேவரடியார்கள் வழங்கிய நன்கொடைகள்
தேவரடியார் வாகீச நங்கை வழங்கிய கோவில் மணி
இரண்டாம் திருச்சுற்று நுழைவு வாயிலின் கிழக்குச் சுவரில் உள்ள 12ஆம் நூற்றாண்டு கல்வெட்டில், தேவரடியார் வாகீச நங்கை என்பவர் இக்கோவிலுக்கு மிகப்பெரிய மணி ஒன்றைத் தானமாக வழங்கியுள்ளார் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவிலுக்கு தூணை வழங்கிய தேவரடியார் வம்புயிழுத்தாள்
முன் மண்டபத்தில் உள்ள தூணில் 11ஆம் நூற்றாண்டு கல்வெட்டில், இடப்பாகங் கொண்டாள் மகளான தேவரடியார் வம்புயிழுத்தாள் என்பவர் இக்கோவிலுக்கு தூண் ஒன்றைச் செய்து கொடுத்துள்ளார். அதேபோல், ஆண்ட நாச்சி உமையாள் பொற்கோவில் மாணிக்கம் என்ற தேவரடியாரும் கோவில் தூணைச் செய்து வழங்கியுள்ளார் என்று கல்வெட்டுச் செய்தி உறுதிப்படுத்துகிறது.
வியாக்ரபாதீஸ்வரர் கோவில் முன்மண்டபத்தில் உள்ள தூணில் 11ஆம் நூற்றாண்டு கல்வெட்டில், எண்ணெய் வணிகக் குடும்பத்தைச் சார்ந்த அடைக்கலந் தெள்ளாள் என்பவரும் தூண் ஒன்றைச் செய்து கொடுத்துள்ளார்.
முன்மண்டபத் தூணில் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில், தேவரடியாரான உய்ய வந்தார் என்பவருடைய கணவரின் தங்கை (நாதியாள்) தில்லை நாலாயிர மாணிக்கம் என்னும் பெண் ஒருவரும் தூண் செய்து அளித்துள்ளார் என்று பொறிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கல்வெட்டுகளின் மூலம் அக்காலத்தில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவும், கொடையுள்ளமும் பெற்றிருந்தனர் என்பதை அறிய முடிகிறது.
ஆண்களுக்கு இணையாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெண்களும் நன்கொடையாளர்களாக இருந்ததையும், ஆண்களுக்கு இணையாக அவர்களது பெயரும் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதையும் இந்த சிவன் கோவில் கல்வெட்டுகள் தெளிவாக உணர்த்துகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு