ஹங்கேரியில் விக்டர் ஓர்பனின் 16 ஆண்டுகால ஆட்சி முடிவு ரஷ்யாவை எப்படி பாதிக்கும்?

ஹங்கேரி, தேர்தல், ஓபான், மாஜார்

பட மூலாதாரம், Lea Guedj/BBC

    • எழுதியவர், காத்யா ஆட்லர்
    • பதவி, ஐரோப்பா ஆசிரியர்
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

புடாபெஸ்டின் புகழ்பெற்ற சங்கிலிப் பாலம், அழகிய புடாவையும் துடிப்பான பெஸ்ட்டையும் டானூப் நதியின் குறுக்கே இணைக்கிறது. இரவில், பாலத்தை ஒளிரச் செய்யும் விளக்குகள் கீழே உள்ள நீரில் சிறு நிலவுகளைப் போல மின்னுகின்றன.

வழக்கமாக, இது சுற்றுலாப் பயணிகள் செல்ஃபி எடுப்பதற்குப் பிடித்தமான இடமாகும் - ஆனால் இந்த ஞாயிற்றுக்கிழமை அப்படியில்லை.

16 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிரதமர் விக்டர் ஓர்பனை வெளியேற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் முடிவைத் தொடர்ந்து, ஹங்கேரிய கொடியின் வண்ணங்களான பச்சை, வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் பாலம் ஒளிரூட்டப்பட்டது.

வெற்றி பெற்ற பீட்டர் மாஜார் மற்றும் அவரது டிஸ்ஸா கட்சியின் ஆதரவாளர்கள், தாங்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுவதாக உணர்ந்ததாகக் கூறினர். மாஜார் தனது வெற்றி உரையில் அந்த உணர்வையே அவர்களுக்கும் பிரதிபலித்தார்.

"நாம் அதைச் செய்துவிட்டோம்," என்றார் அவர். "நாம் ஓர்பன் ஆட்சியை வீழ்த்தினோம் - நாம் ஒன்றிணைந்து ஹங்கேரியை விடுவித்தோம். நமது தாய்நாட்டை நாம் மீட்டெடுத்தோம், உங்கள் அனைவருக்கும் நன்றி!" என்று பீட்டர் மாஜார் தமது உரையில் குறிப்பிட்டார்.

ஹங்கேரி, தேர்தல், ஓபான், மக்யார்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, தேர்தல் இரவின்போது, ​​ஹங்கேரியின் தேசிய கொடியின் நிறங்களால் ஒளிரூட்டப்பட்ட 'செயின் பாலம்' வழியாக மக்கள் நடந்து சென்றனர்.

இங்கே வரலாறு படைக்கப்பட்டு வருகிறது என்ற ஒரு திட்டவட்டமான உணர்வு இருந்தது. வாக்காளர் வருகை சாதனை அளவாக இருந்தது.

அரசு ஊடகங்கள் மீது ஓர்பனுக்கு இருந்த இரும்புப்பிடி, தனது கட்சிக்குச் சாதகமாகத் தேர்தல் முறையில் அவர் கொண்டுவந்த மாற்றங்கள், மற்றும் அதிகாரப் பதவிகளில் அவரது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு இருந்த பெரும் செல்வாக்கு ஆகிய அனைத்தையும் மீறி, ஃபிடெஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் படுதோல்வி அடைந்தார்.

திங்கட்கிழமை காலையில் புடாபெஸ்டின் சந்துகளின் வழியே முதல் முறை வாக்காளர்கள் கூட்டம் நடனமாடுவதை நான் பார்த்தேன்.

"எனது வாக்குத்தாளில் 'X' குறியிட்டபோது நான் அழுதேன்," என்று ஸோஃபியா என்னிடம் கூறினார்.

"நாம் இதைச் சாதித்துவிட்டோம் என்பதை என்னால் இன்னும் முழுமையாக நம்ப முடியவில்லை. ஆனால் நாம் சாதித்துவிட்டோம்!"

ஸோஃபியா பேசிக்கொண்டிருந்தபோது, ​​அவரது நண்பர்கள் குழு "ரஷ்யர்களே வீட்டுக்குப் போங்கள்!" என்று உரக்கக் கோஷமிட்டுக் கொண்டிருந்தது.

ஹங்கேரி, தேர்தல், ஓபான், மக்யார்

பட மூலாதாரம், Marianne Baisnée / BBC

படக்குறிப்பு, ஞாயிறு இரவு புடாபெஸ்டில் புதிய வரலாறு படைக்கப்படுவதாக ஒரு திட்டவட்டமான உணர்வு நிலவியது.

புதினுடன் நெருக்கம்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஓர்பனுக்கு இது ஒரு முரண்பாடான முழுச் சுழற்சி. 1989-ல் அப்போதைய கம்யூனிஸ்ட் ஹங்கேரியில், சோவியத் யூனியனின் இறுதிக் கட்டத்தில் அவர் ஆற்றிய உணர்ச்சிமிக்க உரையில், ரஷ்யர்களைத் வெளியேறுமாறு கூறியதன் மூலம் அவர் புகழ் பெற்றார். 1956-ல் ஹங்கேரியில் நடந்த கம்யூனிஸ்ட் எதிர்ப்பு எழுச்சியின் போது, புடாபெஸ்ட் முழுவதும் முதன்முதலில் எதிரொலித்த ஒரு சொற்றொடர் இது.

ஆனால், பல ஆண்டுகளாக, ஓர்பன் தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். அவர் மேலும் வலதுசாரியாக நகர்ந்து, ஒரு சர்வாதிகாரப் போக்கைக் கடைப்பிடித்தார்.

இந்தத் தேர்தல் பிரசாரம் முழுவதும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான அவரது நீண்டகால, நெருக்கமான உறவால் சீற்றமடைந்த விமர்சகர்களால், அவரது இளமைக்கால முழக்கம் அவரை நோக்கியே திருப்பி வீசப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஒரு கூட்டாளியைக் கொண்டிருப்பதால் பயனடைந்த புதினுக்கு, இந்த ஆட்சி மாற்றம் ஓர் உண்மையான அடியாகும்.

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு, ஓர்பன் ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைத் திட்டங்களைத் தாமதப்படுத்தினார்.

மேலும், யுக்ரேனுக்கு தேவையான ஒரு பெரிய ஐரோப்பிய ஒன்றியக் கடனையும் அவர் தடுத்து வருகிறார்.

ஆனால் ரஷ்யாவின் இழப்பு யுக்ரேனுக்கு ஆதாயமாக அமைந்துள்ளது. அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை இரவு மாஜாருக்கு உடனடியாக வாழ்த்துத் தெரிவித்தார். மேலும், இணைந்து "ஆக்கப்பூர்வமான பணிகளை" மேற்கொள்ள ஆவலுடன் இருப்பதாக எக்ஸ் தளத்தில் எழுதினார்.

ஹங்கேரி, தேர்தல், ஓபான், மக்யார்

பட மூலாதாரம், Marianne Baisnée / BBC

படக்குறிப்பு, மாஜார் மற்றும் ஜெலென்ஸ்கி ஆகிய இரு தலைவர்களையும் தொடர்புபடுத்த முயலும் சுவரொட்டிகளை காண முடிந்தது.

ஐரோப்பாவில் என்ன நிலை?

பல ஹங்கேரியர்கள் தாய்நாட்டின் மீது எச்சரிக்கையாக இருக்கிறார்கள் என்பதை ஜெலென்ஸ்கி நன்கு அறிந்திருக்கிறார்.

யுக்ரேனில் நடக்கும் போர் எல்லையைத் தாண்டிப் பரவி, அவர்களின் அன்புக்குரியவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதைத் தடுத்து, தன்னால் மட்டுமே அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்று வாக்காளர்களை எச்சரிக்க, ஓர்பன் தனது பிரசார சுவரொட்டிகளையும் பேரணிகளையும் பயன்படுத்தினார்.

மாஜார் ஆட்சிக்கு வந்தவுடன் அநேகமாக மிகவும் கவனமாகச் செயல்படுவார்.

ஹங்கேரியர்களைப் பகைத்துக்கொள்வோம் என்ற அச்சத்தால், யுக்ரேனுக்கு ராணுவ உதவியை அனுப்ப வேண்டாம் என்ற ஓர்பனின் முடிவை அவர் மாற்றுவதற்கு வாய்ப்பில்லை. இருப்பினும், ஓர்பனால் தடுக்கப்பட்ட யுக்ரேனுக்கான 105 பில்லியன் அமெரிக்க டாலர் கடனைத் தனது நாடு இனிமேலும் தடுக்காது என்று அவர் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உறுதியளித்துள்ளார்.

ஓர்பனின் பதவி ஆட்சி முடிவற்கு வெகு சில ஐரோப்பியத் தலைவர்களே வருத்தப்படுவார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் அவருக்கு 'தடை செய்பவர்' என்று புனைப்பெயர் சூட்டப்பட்டது.

ஆனால், ரஷ்யா, சீனா மற்றும் சமீபத்தில் அமெரிக்காவிடமிருந்தும் வந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும்போது, ஒன்றுபட்ட ஐரோப்பாவின் பிளவுக்கோடாகவே அவர் பரவலாகக் கருதப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு, பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், இது ஐரோப்பிய ஜனநாயகத்திற்கான ஒரு வரலாற்றுத் தருணம் என்று விவரித்தார்.

ஹங்கேரி ஐரோப்பாவைத் தேர்ந்தெடுத்துள்ளது என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறினார்.

ஹங்கேரி, தேர்தல், ஓபான், மக்யார்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, தேர்தலுக்கு முந்தைய வாரத்தில் புடாபெஸ்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வின்போது, ​​அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உடன் ஓர்பன்

வாஷிங்டனில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்க மாட்டார்.

ஹங்கேரியின் வாக்காளர்கள், ஐரோப்பாவில் அவருக்கு மிக நெருங்கிய கூட்டாளியை இழக்கச் செய்துவிட்டனர்.

அவர் ஓர்பனை மீண்டும் மீண்டும் ஆதரித்தார். இரான் போரின் நடுவில், ஓர்பனுக்கு ஆதரவான பேரணியில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க துணை அதிபரை புடாபெஸ்டுக்கு அனுப்பினார்.

ஏன்? பதவி விலகும் ஹங்கேரியப் பிரதமரை, கிறிஸ்தவ தேசியவாத, "உலகமயமாக்கலுக்கு எதிரான" வலதுசாரிகளின் ஒரு முன்னணித் தலைவராக இருவருமே போற்றுகின்றனர்.

ஹங்கேரி, தேர்தல், ஓபான், மக்யார்

பட மூலாதாரம், Marianne Baisnée / BBC

படக்குறிப்பு, தேர்தலுக்கு முந்தைய நாள், பிபிசி ஓபனின் சொந்த கிராமமான ஃபெல்க்சூட்டிற்குச் சென்றது.

ஓர்பன், ஹங்கேரிய சமூகத்தின் சில பிரிவினரை நீண்ட காலமாகவே அந்நியப்படுத்தியிருந்தார். இவர்களில் இடதுசாரிகள், பால் புதுமையினர், மற்றும் ஓர்பனின் "குடும்ப அமைப்பு ஆதரவு, பாரம்பரிய பாலினப் பாத்திரங்கள் ஆதரவு" என்ற கொள்கைகளால் தங்கள் உரிமைகள் பறிக்கப்படுவதாக உணர்ந்த பல பெண்கள் உள்ளடங்குவர்.

ஆனால், ஓர்பனின் முக்கிய ஆதரவாளர்கள் கூட அவரைப் பெருந்திரளாகக் கைவிட்டபோது, அதுவே அவரது அரசியல் முடிவாக அமைந்தது.

செழிப்பான ஓர்பனின் குடும்பம்

வாக்கெடுப்புக்கு ஒரு நாள் முன்பு, நாங்கள் ஓர்பனின் சொந்த கிராமமான ஃபெல்சூட்டிற்குச் சென்றோம்.

ஒரு காலத்தில் எளிய பின்னணியில் இருந்து வந்த அவர், இப்போது இங்குள்ள சமூகத்திற்குப் பணத்தை வாரி வழங்கி, தனது சொந்த கால்பந்து மைதானத்தையும் கால்பந்து அகாடமியையும் கட்டியுள்ளார்.

அவரது மருமகன் அப்பகுதியில் உள்ள ஒரு ஆடம்பர கோல்ஃப் மைதானத்துடன் தொடர்புடையவர், அதே நேரத்தில் அவரது தந்தை அருகிலுள்ள ஒரு தனியார் தோட்டத்தை மீண்டும் கட்டி வருகிறார், அதன் மதிப்பு சுமார் 30 மில்லியன் அமெரிக்க டாலர் என்று கூறப்படுகிறது.

ஓர்பன் ஊழல் குற்றச்சாட்டுகளை எப்போதும் மறுத்து வருகிறார்.

மேலும் ஹங்கேரியின் பொருளாதாரம் நன்றாக இருந்தபோது, ​​இங்குள்ள பலர் ஏறக்குறைய இதைக் கண்டுகொள்ளாமல் இருக்கவே விரும்பினர்.

ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், பணவீக்கம் கடுமையாக உயர்ந்து, வாழ்க்கைத்தரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், ஓர்பனின் நெருங்கிய வட்டாரம் மேலும் மேலும் செல்வந்தர்களாகி வருவதாகத் தெரிகிறது.

"அவர் எங்களைக் கைவிட்டார். அவர் தன் நாட்டைக் கைவிட்டார். அவர் எங்களை ஏமாற்றிவிட்டார்," என்று ஓர்பனின் முன்னாள் ஆதரவாளரும், முன்னாள் உள்ளூர் மேயருமான கியார்ஃபாஸ் ஓலா என்னிடம் சோர்வாகக் கூறினார்.

ஓர்பனை வீழ்த்திய நபர் யார்?

ஓர்பனின் ஃபிடெஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினரான மாஜார், ஆற்றல்மிக்க (பிரசாரத்தின் போது ஒரு நாளைக்கு நான்கு முதல் ஆறு பேரணிகளில் கலந்துகொண்டார்), புத்திசாலியான மற்றும் தொலைக்காட்சிக்கு ஏற்ற தோற்றமுடைய 45 வயதுக்காரர்.

ஓர்பனை போலவே, அவரும் ஒரு பழமைவாத தேசியவாதி. எந்தவொரு அரசியல் நிகழ்விற்கும் தன்னுடன் ஒரு ஹங்கேரியக் கொடியை எடுத்துச் செல்ல அவர் விரும்புகிறார்.

ஓர்பனை புறக்கணிப்பதைப் பற்றி பரிசீலிப்பதற்கு முன்பு, ஹங்கேரிய வாக்காளர்கள் ஒன்றுபடுவதற்கு ஒரு மிதவாத - வலதுசாரி வேட்பாளர் தேவைப்பட்டார் என்று வாதிடலாம். ஹங்கேரி ஒரு சமூகப் பழமைவாத நாடு. உதாரணமாக, ஓர்பனின் குடியேற்ற எதிர்ப்பு மனப்பான்மைகள் புதிய அரசாங்கத்தின் கீழும் தொடரும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்.

இருப்பினும், ரஷ்யாவுடனான உறவுகளை பலவீனப்படுத்துவது மற்றும் ஐரோப்பாவுடன் உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவது உள்ளிட்ட விரிவான சீர்திருத்தங்களை மாஜார் உறுதியளித்துள்ளார்.

தற்போதைக்கு, பெரும்பாலான ஹங்கேரியர்கள் தங்கள் முன்னுரிமைகள் உள்நாட்டு விஷயங்களே என்று கூறுகிறார்கள். தங்கள் நாட்டின் சரிந்துவரும் பொருளாதாரம் மற்றும் பொதுச் சேவைகளை மேம்படுத்துவது, பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பது, என செய்வதற்கு நிறைய இருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை இரவு, ஆரவாரம் செய்யும் ஆதரவாளர்களால் சூழப்பட்டு, மகிழ்ச்சியுடன் புன்னகைத்த மாஜார், கூட்டத்தினரிடம், "இன்று இரவு நாம் கொண்டாடுகிறோம். நாளை, நாம் வேலைக்குச் செல்கிறோம்!" என்றார்

ஹங்கேரியின் அதிபர் அரசாங்கத்தை அமைக்குமாறு கேட்கும் வரை மாஜார் அதிகாரப்பூர்வமாக பிரதமராக மாட்டார். இது சுமார் ஒரு மாதத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு