You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"அமெரிக்காவின் அழுத்தம்" - லெபனானுடனான போர் நிறுத்தத்தை இஸ்ரேலியர்கள் எப்படி பார்க்கிறார்கள்?
- எழுதியவர், லூசி வில்லியம்சன்
- பதவி, மத்திய கிழக்கு செய்தியாளர், ஜெருசலேமிலிருந்து
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
போர்நிறுத்தம் குறித்த செய்தி இஸ்ரேலின் வடக்குச் சமூகங்கள் முழுவதும் பரவிய நிலையில், லெபனானிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் வருவதாக எச்சரிக்கும் சைரன்கள் நேற்று மாலை மூன்று முறை ஒலித்தன.
இஸ்ரேலின் வட நகரமான நஹாரியாவில் வானில், அவற்றை இடைமறித்துத் தடுப்பதற்காக இஸ்ரேலின் வான் பாதுகாப்பு இடைமறிப்பு ஏவுகணைகள் பாய்ந்து சென்றன; இது பலத்த வெடிப்புச் சத்தங்களை ஏற்படுத்தியது. போர் நிறுத்தம் செயல்பாட்டுக்கு வருவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பாக வெடிகுண்டின் துண்டுகளால் குறைந்தது 3 பேர் காயமடைந்ததாகவும், இதில் இருவர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் ஆம்புலன்ஸ் குழுவினர் தெரிவித்தனர்.
இங்கே களத்திலும், நாடு முழுவதும் இஸ்ரேலிய தலைவர் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது ஏன் என்ற சந்தேகம் நிலவுகிறது.
"அரசாங்கம் எங்களிடம் பொய் சொல்லிவிட்டது போன்று தோன்றுகிறது," என நஹாரியாவை சேர்ந்த கல் (Gal) என்ற மாணவர் தெரிவித்துள்ளார். "இந்த முறை இது வித்தியாசமாக முடிவுக்கு வரும் என அரசு உறுதியளித்தது, ஆனால் எதையும் தீர்க்காத வகையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை நோக்கி நாங்கள் மீண்டும் சென்றுகொண்டிருப்பது போன்று தோன்றுகிறது."
"நாங்கள் லெபனான் அரசுக்கு ஒரு வாய்ப்பளித்தோம், ஆனால் அவர்கள் ஒப்பந்தத்தை நிறைவேற்றத் தவறிவிட்டனர்; அவர்கள் ஹெஸ்பொலா தங்கள் ஆயுதங்களை கைவிட வைக்கவில்லை," என கடந்தாண்டு ராக்கெட்டால் தன் வீடு தாக்கப்பட்ட 32 வயதான டிரக் ஓட்டுநர் மாவோர் (Maor) தெரிவித்தார்.
"நாம் இதைச் செய்யாவிட்டால், யாரும் இதைச் செய்ய மாட்டார்கள். அவர்கள் நிறுத்தியது ஓர் அவமானம். இந்த முறை குறிப்பிடத்தக்க சாதனைகள் இருந்ததாகத் தோன்றியது."
இஸ்ரேலுக்கு தெற்கு லெபனானில் ஐந்து ராணுவ பிரிவுகள் உள்ளன, நேற்று முன்தினம் தான் தலைமை ராணுவ செய்தித் தொடர்பாளர், இஸ்ரேல் லெபனானில் தொடர்ந்து முன்னேறும் என்று கூறினார்.
இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் சில இஸ்ரேலியர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது, அரசின் பாதுகாப்பு அமைச்சரவையிலும் கூட ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரிதும் மதிக்கப்படும் இஸ்ரேலிய செய்தி ஊடகம் ஒன்று, போர் நிறுத்தம் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு, வெறும் ஐந்து நிமிட முன்னறிவிப்பில் பெஞ்சமின் நெதன்யாகு பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டியதாக வர்ணித்துள்ளது.
அக்கூட்டத்தில் அமைச்சர்கள் போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என தகவல் கசிந்துள்ளது.
பலரைப் பொறுத்தவரை, சண்டை நிறுத்தம் தொடர்பான நிபந்தனைகளோ அல்லது அதற்கான காலநேரமோ இஸ்ரேல் விரும்புமாறு அமையாதபோதிலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கோரிக்கைகளுக்கு நெதன்யாகு பணிந்து நடப்பதற்கு இது மற்றொரு உதாரணமாகும்.
"இஸ்ரேலின் தேசிய நலன்களுக்கு பயன்படும் வகையில் போர் நிறுத்தம் என்பது ஒரு வலிமையான நிலையிலிருந்து வர வேண்டும்," என இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் (IDF) முன்னாள் தலைமைத் தளபதியும் யாஷார் கட்சியின் (Yashar) தலைவருமான காடி ஐசன்காட் கூறினார்.
"காஸா, இரான் மற்றும் இப்போது லெபனான் என போர்நிறுத்தங்கள் நம் மீது திணிக்கப்படும் ஒரு போக்கு உருவாகியுள்ளது. ராணுவ வெற்றிகளை ராஜதந்திர ஆதாயங்களாக மாற்றிக்கொள்வது எப்படி என்பது நெதன்யாஹுவுக்குத் தெரியவில்லை."
நெதன்யாகு போர்நிறுத்தத்தை "லெபனானுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான ஒரு வாய்ப்பு" என்று சித்தரித்த அதே வேளையில், களத்தில் தாம் மிகக் குறைந்த அளவிலான சலுகைகளையே வழங்குவதையும் தெளிவுபடுத்தினார்.
ஹெஸ்பொலா இரண்டு நிபந்தனைகளை வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்: ஒன்று, லெபனானிலிருந்து இஸ்ரேலிய படைகளை திரும்பப் பெறுவது, மற்றொன்று, "அமைதிக்கு அமைதி" என்ற கொள்கையை கடைபிடிப்பது.
"நான் இதில் எதற்கும் சம்மதிக்கவில்லை," என்றார் அவர். "இந்த இரு நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்படவில்லை. நாங்கள் லெபனானில் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் தொடர்ந்து இருக்கிறோம்… நாங்கள் அங்கிருந்து வெளியேற போவதில்லை."
இந்த மாதத் தொடக்கத்தில் அமெரிக்காவுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதிலிருந்து, லெபனானில் தன் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுவான ஹெஸ்பொலாவுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு இரான் வலியுறுத்தி வருகிறது.
லெபனனில் ஹெஸ்பொலாவுக்கு எதிராக இஸ்ரேல் முன்னெடுத்த ராணுவ நடவடிக்கையைத் தொடக்கத்தில் "ஒரு தனிப்பட்ட மோதல்" என்று வர்ணித்திருந்த டிரம்ப், இரானுடனான அமெரிக்காவின் பேச்சுவார்த்தைகள் தடுமாறி வரும் நிலையிலும், போர்நிறுத்தக் காலம் அடுத்த வாரம் முடிவடையவிருக்கும் சூழலிலும், இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே "சிறிது இடைவெளி" ஒன்றை உருவாக்க முயன்று வருவதாக இவ்வாரம் தெரிவித்தார்.
டிரம்ப் தெஹ்ரானுடன் ஒப்புக்கொண்ட போர்நிறுத்தம் என்பது லெபனானில் ஒரு போர்நிறுத்தத்தைக் குறிக்காது என்பதை, நெதன்யாகுவும் இஸ்ரேலின் ராணுவத் தலைவர்களும் சமீபத்திய நாட்களில் வலியுறுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இஸ்ரேலின் சேனல் 12 ஊடகம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின்படி, ஹெஸ்பொலா மீதான தொடரும் தாக்குதல்களுக்கு 80% பேர் ஆதரவளித்துள்ளனர்.
மேலும், மற்ற தனித்தனி கருத்துக்கணிப்புகள், இரானுடன் டிரம்ப் ஒப்புக்கொண்ட இரண்டு வார போர் நிறுத்த ஒப்பந்தத்தை பெரும்பான்மையான இஸ்ரேலியர்கள் எதிர்த்ததாக பரிந்துரைக்கின்றன.
"வாஷிங்டனில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படலாம்; ஆனால், அதற்கான விலை வட இஸ்ரேலில் ரத்தம் சிந்துவதாகவும், வீடுகள் அழிக்கப்படுவதாகவும் செலுத்தப்படுகிறது," என்று மாத்தே ஆஷர் (Mateh Asher) பிராந்திய சபையின் தலைவர் மோஷே டேவிடோவிச் இஸ்ரேலிய ஊடகங்களிடம் தெரிவித்தார்.
"வடக்குப் பகுதி மக்கள், ஓர் சர்வதேச மக்கள்தொடர்பு நாடகத்தில் வரும் துணை நடிகர்கள் அல்ல," என்று அவர் மேலும் கூறினார்.
லெபனானில் இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ள போர்நிறுத்த ஒப்பந்தமானது, "திட்டமிடப்பட்ட, உடனடியாய் நிகழவிருக்கும் அல்லது தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் தாக்குதல்களுக்கு எதிராக, எந்த நேரத்திலும், தற்காப்புக்காகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கான தனது உரிமையை" இஸ்ரேல் தக்கவைத்துக்கொள்வதாகத் தெளிவாகக் குறிப்பிடுகிறது, நவம்பர் 2024-இல் ஒப்புக்கொள்ளப்பட்ட முந்தைய போர்நிறுத்தத்தின்போது, இஸ்ரேல் அச்சுறுத்தலாகக் கருதிய இலக்குகள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியது போலவே, இம்முறையும் அது செயல்படுகிறது.
ஹெஸ்பொலாவுடனான மோதலிலிருந்து விடுபடுவதற்கான ஒரு வழியாக, மிகச் சில இஸ்ரேலியர்களே இந்தச் சமரசத்தைக் கருதுகின்றனர்.
ஆனால் பலர் இதனை, தங்கள் தலைவர் மீண்டும் வாஷிங்டனின் நலன்களுடன் இணங்கிச் செயல்பட வேண்டிய அழுத்தத்துக்கு உள்ளாகியிருப்பதற்கும், மேலும் தங்கள் முக்கிய அமெரிக்கக் கூட்டாளியின் போர் இலக்குகள் எப்போதும் தங்களுடையவற்றுடன் ஒன்றாக இருப்பதில்லை என்பதற்கும் ஒரு கூடுதல் சான்றாகவே கருதுகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு