வெனிசுவேலா எண்ணெய் இருந்தும் இரான் போரால் அமெரிக்கா அதிர்வது ஏன்?

    • எழுதியவர், சமீரா ஹுசைன்
    • பதவி, பிபிசி
    • எழுதியவர், நத்தாலி ஜிமெனெஸ்
    • பதவி, பிபிசி
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மெக்சிகோ வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புக்களுக்கு மிக அருகில், மிசிசிப்பி சவுண்டில் உள்ள ஒரு கப்பல்துறையில் 'மினெர்வா குளோரியா' கப்பல் நங்கூரமிட்டுள்ளது.

இந்தக் கப்பல், வெனிசுவேலாவிலிருந்து ஒரு விலைமதிப்பற்ற சரக்கைச் சுமந்து வந்துள்ளது. சரியாக ஆறு மாதங்களுக்கு முன்பு வரை இதை அமெரிக்காவிற்குக் கொண்டு வருவது சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தது. அதில் 400,000 பேரல் கச்சா எண்ணெய் உள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய எண்ணெய் இருப்பைக் கொண்டது வெனிசுவேலா.

அந்நாட்டின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் கீழ், முதலீடு இல்லாத காரணத்தால் எண்ணெய் ஏற்றுமதி கணிசமாகக் குறைந்து போனது. அதன் பிறகு அந்த லத்தீன் அமெரிக்க நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்தது.

ஆனால், ஜனவரி மாதம் ஓர் இரவு நேரத் திடீர் தேடுதல் வேட்டையில் அமெரிக்க ராணுவம் மதுரோவை சிறைபிடித்த பிறகு, அந்த எண்ணெய் இருப்புக்களைப் பயன்படுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்தார்.

இப்போது வெனிசுவேலாவில் எண்ணெய் மீண்டும் பாயத் தொடங்கியுள்ளது. மார்ச் மாதத்தில், அந்நாட்டின் மாதாந்திர கச்சா எண்ணெய் ஏற்றுமதி ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பேரல்களைத் தாண்டியது. செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு இதுவே முதல் முறை.

இரான் ஹோர்மூஸ் நீரிணையை முடக்கியதால் உலகளாவிய எரிசக்தி விலையில் ஏற்பட்ட பாதிப்பால் உலகம் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், செவ்ரான் போன்ற பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் இப்போது கப்பல் கப்பலாக வெனிசுவேலா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கின்றன.

"இது செவ்ரானுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த வளைகுடா பிராந்தியத்திற்கும் ஒரு பெரிய விஷயம்," என்கிறார் டிம் பாட்டர்.

இவர் மிசிசிப்பியின் பாஸ்காகுலாவில் உள்ள செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் இயக்குநராக உள்ளார். இது அமெரிக்காவில் அந்த நிறுவனத்தின் மிகப்பெரிய செயல்பாட்டு தளமாகும்.

வெனிசுவேலாவில் தற்போது இயங்கி வரும் ஒரே பெரிய அமெரிக்க எண்ணெய் நிறுவனமும் இதுதான்.

இதன் பொருள், செவ்ரான் தனது சொந்த வெனிசுவேலா எண்ணெயை எடுத்து, அதைத் தாங்களே சுத்திகரித்து, நேரடியாக அமெரிக்க நுகர்வோரிடம் கொண்டு சேர்க்க முடியும்.

"இதை இயக்குவது எங்களுக்கு ஒரு பெரிய ஊக்கம்," என்கிறார் பாட்டர்.

"வெனிசுவேலாவிலிருந்து கிடைக்கும் கனரக எண்ணெய்களை கையாள்வதற்கே இந்த சுத்திகரிப்பு ஆலை வடிவமைக்கப்பட்டது, இதற்காகவே நாங்கள் இதில் முதலீடு செய்தோம்."

வெனிசுவேலா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு ஒப்பீட்டளவில் மலிவானது, ஏனெனில் அதைச் சுத்திகரிப்பது மிகவும் கடினம். இது மிகவும் கனமானது, தடிமனானது, கருமையானது மற்றும் கந்தகம் அதிகம் கொண்டது.

இது டீசல், பெட்ரோல், விமான எரிபொருள் மற்றும் இதர பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது.

செவ்ரான் இப்போது ஒரு நாளைக்கு சராசரியாக 250,000 பேரல் வெனிசுவேலா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது என்று செவ்ரானின் கீழ்நிலை, இடைநிலை மற்றும் ரசாயனப் பிரிவின் தலைவர் ஆண்டி வால்ஸ் கூறுகிறார்.

"இதை மேலும் 50% அதிகரிக்க முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம், அதாவது வெனிசுவேலாவில் எங்களது பங்காக மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 350,000 முதல் 400,000 பேரல்கள் வரை கிடைக்கும்."

அமெரிக்காவின் "வெனிசுவேலா நிலை" என்று வால்ஸ் குறிப்பிடுவது என்னவென்றால், வெனிசுவேலாவில் எண்ணெய் எடுக்கும் திறன் கொண்ட ஒரே அமெரிக்க நிறுவனம் செவ்ரான் என்றாலும், மற்ற நிறுவனங்கள் அங்கிருக்கும் உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து எண்ணெயை வாங்குகின்றன.

அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு என்று வரும்போது செவ்ரான் மட்டும் தனியாள் அல்ல. அமெரிக்காவில் 132 சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன, அவை பல்வேறு கச்சா எண்ணெய்களின் கலவையில் இயங்குகின்றன. அமெரிக்காவின் சுத்திகரிப்புத் திறனில் கிட்டத்தட்ட 70%, கனரக கச்சா எண்ணெயைக் கொண்டே இயங்குகிறது.

அமெரிக்கா மத்திய கிழக்கிலிருந்து மிகக் குறைந்த அளவு எண்ணெயையே இறக்குமதி செய்கிறது, இது 2025-ல் தோராயமாக 8% ஆகும். வெனிசுவேலாவிலிருந்து இறக்குமதி அதிகரிப்பதன் மூலம் அதிக எண்ணெய் கிடைக்கிறது, இது அமெரிக்க ஓட்டுநர்களுக்கு மலிவான பெட்ரோல் கிடைக்க வழிவகை செய்யும்.

"அமெரிக்கா ஹோர்மூஸ் நீரிணை வழியாக கிட்டத்தட்ட எந்த எண்ணெயையும் இறக்குமதி செய்யவில்லை, எதிர்காலத்திலும் எதையும் எடுக்காது, அது நமக்கு தேவையில்லை," என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் ஆற்றிய உரையில் தெரிவித்தார்.

ஆனால் செவ்ரான் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சில மைல் தொலைவில் உள்ள ஒரு செவ்ரான் எரிபொருள் நிலையத்தில், விலைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கின்றன.

"நான் இதை வெறுக்கிறேன்," என்கிறார் டேவிட் மெக்வீன். இவர் வியட்நாம் போரில் பங்கேற்று ஓய்வு பெற்றவர், தனது வாழ்வாதாரத்திற்கு சமூகப் பாதுகாப்பு திட்டத்தையே நம்பியிருக்கிறார்.

"விலை குறைந்தாக வேண்டும், இல்லையென்றால் நானும் அதோடு சேர்ந்து வீழ்ந்துவிடுவேன்."

அமெரிக்காவின் பிரம்மாண்ட எண்ணெய் இருப்புக்கள் சூழ்ந்திருந்தும், காரில் எரிபொருள் நிரப்ப ஏன் இன்னும் இவ்வளவு அதிகமாகப் பணம் செலுத்த வேண்டியிருக்கிறது என்று கேட்டபோது, "விலையை உயர்த்தி வைக்க அரசு அதை அப்படியே வைத்திருக்கிறது" என்று மெக்வீன் நம்புகிறார்.

அடுத்த பம்ப்பில், டோனா என்பவர் 30 டாலர் மதிப்புள்ள எரிபொருளைத் தனது வாகனத்தில் நிரப்புகிறார்.

"நான் இப்போது குறைவாகவே வாகனம் ஓட்டுகிறேன், மற்ற விஷயங்களுக்குக் குறைவாகவே செலவு செய்கிறேன்." என்கிறார்

அவரது பேரக்குழந்தைகள் சில மணிநேரத் தொலைவில் வசிக்கிறார்கள், ஆனால் செலவு அதிகமாகிவிட்டதால் அவர் அவர்களை அடிக்கடி பார்ப்பதில்லை. "செய்ய வேண்டியதைச் செய்துதான் ஆக வேண்டும்."

அமெரிக்க ஆட்டோமொபைல் அசோசியேஷன் மோட்டாரிங் அமைப்பின் கூற்றுப்படி, மிசிசிப்பியின் இந்தப் பகுதியில் ஒரு காலன் பெட்ரோலின் சராசரி விலை இன்னும் தேசிய சராசரியை விடக் குறைவாகவே உள்ளது. இரான் போருக்கு முன்பு, பெட்ரோல் இப்போது இருப்பதை விட கிட்டத்தட்ட 1 டாலர் குறைவாக இருந்தது.

அதே மாலை நேர உரையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தித் திறனைப் புகழ்ந்து பேசினார்.

"இந்தக் கிரகத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் நாமே முதலிடத்தில் உள்ளோம், வெனிசுவேலாவிலிருந்து நமக்குக் கிடைக்கும் மில்லியன் கணக்கான பேரல்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்." என்கிறார்.

ஆனால் அந்தப் பிரம்மாண்ட எண்ணெய் இருப்புகளுக்கான அணுகல், இன்னும் அமெரிக்கர்களுக்கு விலையை குறைக்கவில்லை.

காரணம், மற்ற நாடுகளைப் போலவே அமெரிக்காவும் உலகளாவிய எண்ணெய் சந்தை மாற்றங்களுக்கு ஆளாகக்கூடியதுதான்.

"உள்ளூர் விநியோகம் காரணமாக இந்த சுத்திகரிப்பு ஆலைக்கு இன்னும் கச்சா எண்ணெயைக் கொண்டு வர முடிகிறது என்றாலும், அந்த கச்சா எண்ணெயின் ஒட்டுமொத்த விலை உயர்ந்துள்ளது, ஏனெனில் அது உலகச் சந்தைகளை அடிப்படையாகக் கொண்டது," என்கிறார் பாட்டர்.

ஆனால் வெனிசுவேலா கச்சா எண்ணெயை நம்பி எடுத்த முடிவு இறுதியில் நுகர்வோருக்குப் பலன் தரும் என்று செவ்ரான் நம்புகிறது.

இரான் போர் தற்போது அந்த ஆதாயங்களை மறைத்துக் கொண்டிருக்கிறது.

"நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பும்போது, வெனிசுவேலாவிலிருந்து கிடைக்கும் அந்த கூடுதல் விநியோகம் உண்மையில் அமெரிக்கர்களுக்குக் குறைந்த விலையாக மாறும். எனவே இது எதிர்காலத்தில் நடக்கும், ஆனால் தற்போது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை," என்கிறார் வால்ஸ்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு