எடப்பாடி தொகுதியில் 8 வது முறையாக போட்டியிடும் எடப்பாடி பழனிசாமி - கள நிலவரம் என்ன?

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

எடப்பாடி தொகுதியில் 5 முறை வென்று, இரு முறை தோல்வி அடைந்துள்ள எடப்பாடி பழனிசாமி, தற்போது எட்டாவது முறையாக போட்டியிடுகிறார். தொகுதியில் காவேரி நீரேற்று பாசனத் திட்டத்தை நிறைவேற்றியது உட்பட எடப்பாடி பழனிசாமி முதல்வராக செய்துள்ள பல பணிகளால், தொகுதிக்கு வராமலே அவரை வெற்றி பெற வைப்போம் என்று அதிமுகவினர் கூறுகின்றனர்.

அதேநேரத்தில் திமுக அரசின் நலத்திட்டங்களாலும், ஜலகண்டாபுரம் பேரூராட்சித் தலைவராக 15 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியதாலும் இந்தத் தேர்தலில் திமுகவை ஆதரிக்க மக்கள் தயாராக இருப்பதாக எடப்பாடி தொகுதி திமுக வேட்பாளர் காசி பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்தத் தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அதிமுக இருப்பதாக தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் எடப்பாடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளரான பிரேம்குமாருக்கு தவெக ஆதரவு தெரிவித்துள்ளது. அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சி சின்னத்தில் வாக்களிக்குமாறு அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

பதிவான வாக்குகளில் 66 சதவீதத்தை பெற்ற எடப்பாடி பழனிசாமி!

சேலம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியும் இதில் ஒன்றாகும்.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் இவற்றில் 10 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றியது. ஒரு தொகுதியில் மட்டுமே திமுக கூட்டணி வென்றது. இதனால் சேலம் மாவட்டம் அதிமுகவில் செல்வாக்கு மிகுந்த இடங்களில் ஒன்றாக விளங்குகிறது.

எடப்பாடி தொகுதிக்குட்பட்ட சிலுவம்பாளையம்தான் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊராகும். இந்தத் தொகுதியில் கடந்த 1989-ஆம் ஆண்டிலிருந்து 2021 வரை 7 தேர்தல்களில் நின்று 5 முறை பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார். இரு முறை (1996, 2006) தோல்வியடைந்துள்ளார். எட்டாவது முறையாக இந்தத் தேர்தலிலும் அதே தொகுதியில் அவர் போட்டியிடும் நிலையில் பிபிசி அங்கு களஆய்வு மேற்கொண்டது.

கடந்த 2021 தேர்தலின்போது, தமிழக முதல்வர் என்ற அந்தஸ்துடன் இங்கு வேட்பாளராகக் களம் கண்டபோது, பதிவான வாக்குகளில் கிட்டத்தட்ட 66 சதவீதம் வாக்குகள் பெற்று திமுக வேட்பாளரை தோற்கடித்திருந்தார்.

எடப்பாடி தொகுதியில் தற்போது சுமார் 2.74 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். பழனிசாமியை எதிர்த்து திமுக சார்பில் ஜலகண்டாபுரம் பேரூராட்சித் தலைவராக 15 ஆண்டுகள் தொடர்ந்து பதவி வகிக்கும் காசி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் பிரியதர்ஷினி களம் காண்கிறார். இந்த தொகுதியில் சுயேச்சை வேட்பாளருக்கு தவெக ஆதரவு தெரிவித்துள்ளது.

முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்களைத் தவிர்த்து, சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் சுரேஷ், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கோவிந்தராஜ் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

எடப்பாடியாக மருவியுள்ள இடைப்பாடி நகராட்சி, ஜலகண்டாபுரம் பேரூராட்சிகளைத் தவிர, மற்ற பகுதிகள் அனைத்தும் கிராமங்களாகவே உள்ளன. காவிரி ஆற்றின் நீர்ப்பாசனத்தால் விவசாயம் பிரதானத் தொழிலாக இருக்கும் நிலையில், குறிப்பிடத்தக்க அளவில் விசைத்தறி தொழிலும் நடக்கிறது.

மேட்டூர் அணைக்கு மழைக்காலத்தில் வரும் வெள்ள உபரி நீரை, நீரேற்று பாசனம் மூலமாக (பம்பிங் சிஸ்டம்) சரபங்கா வடிநிலத்தில் உள்ள 500 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்ட பணிகளை, 2021 பிப்ரவரியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். ரூ.565 கோடி மதிப்பிலான இத்திட்டத்தில் முதற்கட்டமாக 6 ஏரிகளுக்குத் தண்ணீர் நிரப்பப்பட்டது.

அதன்பின் கடந்த ஆண்டில் மேலும் 57 ஏரிகளுக்குத் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. ஆனால் திட்டப்பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை என்கின்றனர் எடப்பாடி தொகுதி விவசாயிகள். ஆனால் இத்திட்டம் பெரிதும் பயன் அளிப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தனர்.

நிறைவேறாத நீண்டகால கோரிக்கை - பூலாம்பட்டி காவேரி ஆற்றுப்பாலம்!

இத்திட்டத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ள வெள்ளரிவெள்ளி ஏரிக்கு அருகில் விவசாயம் செய்யும் விவசாயி பழனிசாமி பிபிசியிடம் பேசுகையில், ''இந்த ஏரிக்குப் பக்கத்தில்தான் எனக்கு விவசாய நிலம் இருந்தது. பல ஆண்டுகளாக எந்த விவசாயமும் செய்யவில்லை. காரணம் இந்த ஏரி நீண்ட காலமாக வறண்டிருந்தது. கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் வந்து ஏரி நிரம்பியே இருப்பதால் இப்போது தொடர்ச்சியாக விவசாயம் செய்கிறேன். இப்போது குடும்பமும் முன்னேறி வருகிறது.'' என்றார்.

பல்வேறு விவசாயிகளுடைய வாழ்க்கையிலும் இந்த திட்டம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறிய பழனிசாமி, "இதில் 2 அரசுகளுக்கும் பங்கிருக்கிறது" என்றார்.

ஆனால் விவசாயி என்று சொல்லிக்கொள்ளும் முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி, இத்தொகுதியில் விவசாயத்தை மேம்படுத்த எந்த சிறப்பான திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டுகிறார் சேலம் மாவட்ட திமுக விவசாயத் தொழிலாளர் அணி மாவட்டச் செயலாளர் விஸ்வநாதன். எடப்பாடி பழனிசாமியின் உறவினரான விஸ்வநாதன், சிலுவம்பாளையத்தில் பழனிசாமி வீட்டிற்கு அருகிலேயே வசிக்கிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய விஸ்வநாதன், ''பழனிசாமி முதல்வராக இருந்தபோது, இந்த தொகுதியின் மிக முக்கியத் தேவையாகவுள்ள காவிரி ஆற்றின் குறுக்கே பூலாம்பட்டி பாலத்தைக் கட்டவே இல்லை. இதைக் கட்டினால் சத்தியமங்கலத்திலிருந்து சேலம் வழியாக மைசூருக்கு நேராகச் செல்லும் வழி கிடைக்கும். பூலாம்பட்டி மக்கள் 20 கி.மீ. சுற்றுவது குறையும். ஜலகண்டாபுரம் பகுதி மக்கள் 50 கி.மீ. சுற்ற வேண்டிய தேவையிருக்காது.'' என்றார்.

ஆனால் இங்குள்ள விவசாயிகளுக்கு நீண்டகாலமாக தரப்படாமலிருந்த இலவச மின் இணைப்பு, திமுக ஆட்சிக்கு வந்தபின் வழங்கப்பட்டுள்ளது என்று கூறும் விஸ்வநாதன், அதனால் ஏராளமான விவசாயக் குடும்பங்கள் இந்தத் தேர்தலில் திமுகவை ஆதரிக்கும் என்று தெரிவித்தார்.

இதே கருத்தைத் தெரிவித்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், எடப்பாடி பழனிசாமியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தவருமான முருகேசன், "அவர் முதல்வராக இருந்தபோது இப்பகுதியில் ஒரு விவசாயக் கல்லுாரி அல்லது வேளாண் ஆராய்ச்சி நிலையத்தைக் கொண்டு வந்திருக்கலாம." என்றார். தொகுதியின் தேவைகள் என்று மேலும் சிலவற்றையும் அவர் பட்டியலிட்டார்.

''காவேரி ஆற்றை ஒட்டி 45 ஏக்கர் அரசு மேய்ச்சல் புறம்போக்கு நிலம் உள்ளது. அங்கே இதைச் செயல்படுத்தலாம். அரசு பாலிடெக்னிக் அமைக்க வேண்டுமென்பதும் முக்கியக் கோரிக்கைகளாகவுள்ளது. அவற்றை விட, தேவூர் அருகில் கத்தேரி பகுதியில் அரசு மற்றும் பட்டா நிலம் என 5 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலம் உள்ளது. அங்கே சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டுமென்று இவிகேஎஸ் இளங்கோவன் வலியுறுத்தி வந்தார். இப்போதும் கூட அதைச் செயல்படுத்தலாம்.'' என்றார் முருகேசன்.

இந்தத் தொகுதியில் பழனிசாமியை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர் காசி, ஜலகண்டாபுரம் பேரூராட்சியில் 15 ஆண்டுகளாக தொடர்ந்து தலைவராக இருந்து வருகிறார். அப்பகுதியில் பிபிசி தமிழ் களஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள மக்களைச் சந்தித்துப்பேசியபோது, 15 ஆண்டுகளில் சாலை. தெருவிளக்கு, குடிநீர், தண்ணீர் வசதிகளை அவர் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகத் தெரிவித்தனர்.

தனது பரப்புரையில் இந்தப் பணிகளை பட்டியலிடும் காசி, இதேபோல தொகுதி முழுவதும் சிறப்பாக திட்டங்களைச் செயல்படுத்த முடியுமென்று நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். எடப்பாடியில் பேருந்து நிலையம் அமைத்தது உட்பட திமுக ஆட்சியில் இத்தொகுதியில் நடந்துள்ள வளர்ச்சிப் பணிகளையும், ஊக்கத்தொகை போன்ற சில திட்டங்களையும் திமுகவினர் தங்கள் பரப்புரையில் தெரிவிக்கின்றனர்.

பிபிசி தமிழிடம் பேசிய திமுக வேட்பாளர் காசி, ''அரசின் நிதியுதவி இல்லாமலே, பல ஆண்டுகளுக்கு முன்பே, பலருடைய நிதியுதவியைப் பெற்று, 150க்கும் மேற்பட்ட தண்ணீர் தொட்டிகளை அமைத்து, மக்களின் அன்றாடத் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்தேன். ரூ.20 கோடி மதிப்பில் ஒரு குடிநீர்த் திட்டத்தையும் செயல்படுத்தி, குடிநீரும் தாராளமாகக் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளேன். பேரூராட்சியைத் தாண்டி செட்டிமாகுறிச்சியில் அரசு மருத்துவமனை வர உதவியுள்ளேன்.'' என்று பட்டியலிட்டார்.

''எடப்பாடி பழனிசாமி சில திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார் என்பதை மறுக்க முடியாது. ஆனால் ஒரு முதலமைச்சராக இருந்தவர் நினைத்திருந்தால் இன்னும் பல திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கலாம். எனது பரப்புரையில் அவரை நான் குறை சொல்வதில்லை. நாங்கள் செய்யப்போவதைத்தான் சொல்கிறேன். பூலாம்பட்டி பாலம் நீண்ட கால கோரிக்கை. அதை நிறைவேற்றுவேன்.'' என்றார் திமுக வேட்பாளர் காசி.

ஆனால் எடப்பாடி தொகுதி மக்களிடம் இரு பெரிய கட்சிகளின் மீது கடும் அதிருப்தி இருப்பதாகக் கூறுகிறார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரியதர்சினி அருணாசலம். அதனால் ஒரு மாற்றத்தை மக்கள் எதிர்பார்ப்பதாகவும் கூறிய அவர், எடப்பாடி பழனிசாமிக்கு இது சொந்தத் தொகுதியாக இருந்தாலும் 10 ஆண்டாக இத்தொகுதிக்கு வருவதேயில்லை என்ற அதிருப்தியும் மக்களிடம் இருப்பதாகத் தெரிவித்தார். இதுவரை தான் 80 சதவீதம் வாக்காளர்களை நேரடியாகச் சந்தித்திருப்பதாகவும் கூறினார் அவர்.

பிபிசி தமிழிடம் பேசிய பிரியதர்சினி, ''இங்கே விளைவிக்கப்படும் பொருட்களுக்குச் சரியான விலை கிடைப்பதில்லை. குறைந்தபட்ச ஆதாரவிலை என்பது எங்கள் கட்சியின் முக்கிய வாக்குறுதி. அதேபோன்று தொகுதியில் பல பகுதிகளில் குடிநீர் பிரச்னை பெரியளவில் உள்ளது. சித்தார் என்ற பகுதியில் குடிநீர் வந்து 4 மாதமாகிவிட்டதாகவும், 10 கி.மீ. சென்று குடிநீர் எடுப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர்.'' என்றார்.

தவெக வேட்புமனு நிராகரிப்பின் பின்னணி என்ன?

எடப்பாடி பழனிசாமி இத்தொகுதிக்கு பரப்புரைக்கும் வரவில்லை என்பதை எதிர்க்கட்சியினர், தங்களுடைய பரப்புரையின்போது சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்குப் பதிலாக எடப்பாடி நகர அதிமுக செயலாளர் முருகன் தலைமையில் அந்தக் கட்சியினர், கொடிகளைத் தூக்கிக் கொண்டு கடைகடையாக, வீதிவீதியாக நடந்து சென்று பரப்புரை செய்வதையும் பார்க்க முடிந்தது.

பிபிசி தமிழிடம் பேசிய முருகன், ''எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வராவிட்டாலும் இங்கே நடந்துள்ள எல்லா வளர்ச்சிப் பணிகளுக்கும் அவர்தான் காரணம் என்பது இங்குள்ள மக்கள் அனைவருக்கும் தெரியும். அதனால் எல்லாவற்றையும் கடந்து இந்தத் தொகுதி மக்கள், எடப்பாடி பழனிசாமிக்குதான் வாக்களிப்பார்கள். கடந்த முறையை விட இந்த முறை கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச் செய்வோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.'' என்றார்.

எடப்பாடி தெற்கு ஒன்றிய தவெக செயலாளர் சிவா, '' எடப்பாடியில் தவெக சார்பாக வேட்புமனு செய்த அருண்குமார் இந்த ஊர்க்காரரில்லை. அவரும் அதிமுகவிலிருந்து வந்தவர்தான். அவரை வேட்பாளராக அறிவித்த நாளிலிருந்தே அவர் யாருடனும் முறையான தொடர்பில் இல்லை. வேட்புமனு தாக்கல் பற்றியும் தகவல் தரவில்லை.'' என்றார். மாவட்டத்தில் இந்த தொகுதிக்கு மட்டும் செங்கோட்டையன் பொறுப்பேற்றிருந்ததாகவும் அவர் கூறினார்.

''தொகுதிக்குள் 30 ஆயிரம் பேர் கட்சி உறுப்பினர்களாக இருக்கும் நிலையில், நிர்வாகிகள் உள்ளிட்ட யாரையும் அழைக்காமல் தனியாகப் போய் வேட்புமனு தாக்கல் செய்தார். முன்மொழிவதற்கான 10 பேரைக் கூட அவர் அழைத்துச் செல்லவில்லை. மாற்றுவேட்பாளரான மனைவி மனுவையும் சரியாகத் தயார் செய்யவில்லை என்பது எங்களுக்கு மனு நிராகரிப்பிற்குப் பின்பே தெரியவந்தது.'' என்றார் சிவா.

பெயர் கூற விரும்பாத தவெக நிர்வாகி ஒருவர், ''அவருடன் அன்று வந்த 2 வழக்கறிஞர்களும் அதிமுகவினர். அதிமுகவிலிருந்து கட்சிக்கு வந்த முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலமும் அவருடன் இருந்தார். எங்கள் கட்சி நிர்வாகி யாரையும் அழைக்கவில்லை. இரண்டே முக்கால் லட்சம் வாக்காளர்கள் உள்ள தொகுதிக்கு 500 நோட்டீஸ் மட்டுமே அடித்திருந்தார். இப்படி எங்களுக்கு பல விஷயங்கள் இடறலாக இருந்தன. ஆனால் தொகுதியில் விசில் சின்னமே இல்லாமல் போகச் செய்வார் என்று எதிர்பார்க்கவேயில்லை.'' என்றார்.

இதுகுறித்து கருத்து கேட்பதற்காக அருண் குமாரையும், செங்கோட்டையனையும் பலமுறை தொடர்பு கொண்டபோதும் இருவரிடமிருந்தும் பதில் பெறவே முடியவில்லை.

எடப்பாடி தொகுதியில் தவெகவுக்கு விழவிருந்த வாக்குகள் யாருக்குச் செல்லும் என்கிற விவாதங்கள் எழுந்த நிலையில் சுயேச்சை வேட்பாளருக்கு தவெக ஆதரவு அளித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்தும், தவெக வாக்குகள் பற்றியும் கருத்துத் தெரிவித்த எடப்பாடி நகர அதிமுக செயலாளர் முருகன், ''அது பொய்ப்பிரசாரம். அந்தக் கட்சியினர் வேட்புமனுவை சரியாகத் தயார் செய்யாததற்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதேபோன்று அந்தக் கட்சியின் வாக்கு வங்கியும் எங்களின் வெற்றியை எந்த விதத்திலும் பாதிக்காது.'' என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு