You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'தனது இரட்டை குழந்தைகளை திட்டம் போட்டு கொன்ற கோடீஸ்வர தந்தை' - என்ன நடந்தது?
- எழுதியவர், பிரவீன் சுபம்
- பதவி, பிபிசிக்காக
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் சங்கடம் தரலாம்)
தெலங்கானாவில் தனது சொத்துகள் அனைத்தும் தனது இரண்டு மகள்களின் திருமணச் செலவுகள் மற்றும் வரதட்சணைக்கே சென்றுவிடும் என்று எண்ணி ஐந்து வயதிற்குட்பட்ட தனது இரட்டைப் பெண் குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொலை செய்த தந்தை மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த குடும்பத்தினர் மூவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என கரீம்நகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
"அனைத்து சொத்துகளும் பெண்களுக்கே சென்றால், அவ்வளவு பெரிய சொத்தை (சுமார் 2 கோடி ரூபாய்) மீண்டும் சம்பாதிப்பது கடினம்" என்ற அடிப்படையில் இந்த இரட்டைக் கொலை திட்டமிடப்பட்டதாகக் கரீம்நகர் போலீஸ் கமிஷனர் கௌஸ் ஆலம் கூறியுள்ளார்.
என்ன நடந்தது?
திங்கள்கிழமை (ஏப்ரல் 6) கரீம்நகர் காவல் ஆணையரகத்தில் காவல்துறையினர் வழங்கிய விவரங்களின்படி இங்கே தகவல்கள் தரப்பட்டுள்ளன.
கரீம்நகர் கிராமப்புற மண்டலத்தைச் சேர்ந்த ஜூப்ளி நகரில் வசிக்கும் கச்சு ஸ்ரீசைலம், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் கணினி ஆபரேட்டராகப் பணிபுரிந்தார். இவருக்கும் மானகொண்டூர் மண்டலம் லட்சுமிபூர் கிராமத்தைச் சேர்ந்த சுக்கா மௌனிகாவிற்கும் 2020-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
2022-ஆம் ஆண்டில், இவர்களுக்கு கீதான்ஷி மற்றும் கீதான்விகா என்ற இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன.
"மனைவி கர்ப்பமாக இருந்த போது, தங்களுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறக்கப் போவதை அறிந்த ஸ்ரீசைலம், அவரைக் கருக்கலைப்பு செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். ஸ்ரீசைலத்தின் தாய், தந்தை மற்றும் தம்பி ஆகியோர் அவரது முடிவிற்கு ஆதரவாக இருந்தனர். ஆனால், மௌனிகா கருக்கலைப்பிற்குச் சம்மதிக்கவில்லை. பிரசவத்தின் போது இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் ஏமாற்றமடைந்த ஸ்ரீசைலம், அவர்கள் மீது அன்பு காட்டவில்லை. படிப்படியாக அந்த இரு குழந்தைகள் மீதும் அவர் வெறுப்பை வளர்த்துக் கொண்டார்" என்று கமிஷனர் கௌஸ் ஆலம் தெரிவித்தார்.
"தங்களுக்கு ஆண் குழந்தைகள் மட்டுமே பிறக்க வேண்டும் என்று ஸ்ரீசைலம் விரும்பினார்" என்று இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான கரீம்நகர் ஊரக ஆய்வாளர் நிரஞ்சன் ரெட்டி பிபிசியிடம் தெரிவித்தார்.
'திட்டம் போட்டு கொலை'
ஸ்ரீசைலம் - மௌனிகா இடையிலான உறவு அவ்வளவு சுமூகமாக இல்லை என்று நிரஞ்சன் ரெட்டி தெரிவித்தார்.
மௌனிகாவின் தந்தை சுக்கா ராஜமல்லு பிபிசியிடம் கூறுகையில், பெண் குழந்தைகள் பிறந்ததால் தனது மகள் பிறந்த வீட்டிலேயே விடப்பட்டதாகவும், பெரியவர்கள் முன்னிலையில் பலமுறை சமரசம் செய்து அவரை மீண்டும் புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும் கூறினார்.
"கர்ப்பத்தின் ஆறாவது மாதத்தில் ஸ்கேன் அறிக்கையில் இரட்டைக் குழந்தைகள் பிறக்கப் போகின்றன என்று தெரிந்ததும், அவர் கருக்கலைப்பு செய்ய விரும்பினார். தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் நாங்கள் அதற்குச் சம்மதிக்கவில்லை. தாய்ப்பால் போதவில்லை என்றால் எனது பேத்திகளுக்குப் பால் கொடுக்க ஒரு பசுவை வாங்கித் தருவது பற்றி கூட நாங்கள் பேசினோம். எனது மருமகன் பெயரில் கூடுதலாக 20 ஏக்கர் நிலத்தை வரதட்சணையாகப் பதிவு செய்தேன். இறுதியில் இப்படி நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை," என்கிறார் ராஜமல்லு.
இருப்பினும், பிறக்கப் போவது இரட்டைப் பெண் குழந்தைகள் என்பது குடும்ப உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே எப்படித் தெரிந்தது? விதிகளை மீறி கருவின் பாலினத்தை அறியும் பரிசோதனைகள் செய்யப்பட்டதா? வழக்கமான கர்ப்பகாலப் பரிசோதனைகளின் ஒரு பகுதியாக நடத்தப்படும் ஸ்கேனிங் பரிசோதனை முடிவில், பிறக்கப் போகும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்ற விவரம் பெற்றோருக்கு தெரியப்படுத்தப்படக் கூடாது என்ற விதிகள் இருப்பது உள்பட பல கேள்விகள் இந்த வழக்கில் எழுப்பப்படுகின்றன.
இந்த விவகாரங்கள் குறித்து கரீம்நகர் காவல் ஆணையர் கௌஸ் ஆலத்திடம் பிபிசி விளக்கம் கேட்டபோது, "எங்கள் விசாரணை அந்தத் திசையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது," என்று அவர் கூறினார்.
சம்பவத்தன்று என்ன நடந்தது?
செய்தியாளர் சந்திப்பில் காவல்துறை வழங்கிய தகவல்களின்படி, ஏப்ரல் 3-ஆம் தேதி, இரட்டைக் குழந்தைகளான கீதாம்ஷி மற்றும் கீதான்விகா ஆகியோர் அவர்களது குடும்பத்திற்குச் சொந்தமான பண்ணைக் கிணற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் நடப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு (மார்ச் 30 அன்று), ஸ்ரீசைலம் தனது தந்தை கச்சு அசோக், தாய் கச்சு லாவண்யா மற்றும் தம்பி கச்சு ராகேஷ் ஆகியோருடன் பெத்தப்பள்ளி மாவட்டம் எலிகெடு மண்டலம் முப்பிரித்தோட்டாவில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார்.
அப்போது, ஸ்ரீசைலம் மட்டும் தனது திட்டப்படி தனியாக ஜூப்ளி நகருக்குத் திரும்பினார். தான் வாங்கி வந்திருந்த இறைச்சியைச் சமைப்பதற்காகத் தனது மனைவி மௌனிகாவிடம் கொடுத்தார்.
அந்த இரு குழந்தைகளும் குறும்பு செய்து சமைக்க விடமாட்டார்கள் என்றும், அவர்களைத் தன்னுடன் வயலுக்கு அழைத்துச் செல்வதாகவும், அரை மணி நேரம் கழித்து பண்ணைக்கு வருமாறும் அவரிடம் கூறியுள்ளார்.
பிற்பகலில் சுற்றியுள்ள வயல்களில் விவசாயிகள் யாரும் இல்லாததைக் கவனித்த ஸ்ரீசைலம், தனது இரண்டு மகள்களையும் விவசாயக் கிணற்றுக்குள் தள்ளிவிட்டுள்ளார்.
'நீ உயிர் பிழைத்தால், உண்மையை கூறிவிடுவாய்'
விவசாயக் கிணற்றில் நடந்ததை பிபிசியிடம் விளக்கிய போலீசார், "இரட்டையர்களில் ஒருவரான கீதான்விகா தண்ணீரில் மூச்சுத்திணறி உயிரிழந்தார். மற்றொரு குழந்தையான கீதான்ஷி உயிர் பிழைக்கப் போராடி தனது கை கால்களை அசைப்பதை மேலே இருந்த தந்தை ஸ்ரீசைலம் கவனித்தார். குழந்தை பிழைத்துவிட்டால் தான் செய்த குற்றம் வெளியே தெரிந்துவிடும் என்று எண்ணிய அவர், கிணற்றுக்குள் இறங்கி அக்குழந்தையையும் நீரில் மூழ்கடித்துக் கொன்றார்" என்று கூறினர்.
பின்னர், எந்த சந்தேகமும் வராமல் இருப்பதற்காக, கிணற்றில் இருந்த மோட்டார் பைப்பைப் பிடித்துக் கொண்டு கீதான்விகாவின் உடலுடன் ஸ்ரீசைலம் கத்திக் கொண்டிருந்தபோது, சுற்றியுள்ள வயல்களைச் சேர்ந்த விவசாயிகளும் அவரது மனைவி மௌனிகாவும் கிணற்றுக்கு வந்தனர். கயிறு உதவியுடன் கிராம மக்கள் அவர்களை மேலே கொண்டு வந்தனர்.
மற்றொரு குழந்தை எங்கே என்று கேட்டதற்கு, தனக்குத் தெரியாது என்றும், தான் புல் அறுக்கச் சென்றிருந்த போது குழந்தைகள் அங்கு இல்லை என்றும், சந்தேகத்தின் பேரில் கிணற்றில் பார்த்தபோது கீதாான்விகாவை கண்டதாக ஸ்ரீசைலம் பதிலளித்தார்.
ஸ்ரீசைலத்தின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த கிராம மக்கள் அவர் மீது தாக்குதல் நடத்தினர். தகவல் அறிந்து அங்கே சென்ற போலீசார் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அங்கு இருந்தால் தான் கொல்லப்படலாம் என்ற அச்சத்தில் ஸ்ரீசைலம் பின்னர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பின்னர், நீச்சல் வீரர்களின் உதவியுடன் கீதான்ஷியின் உடலை போலீசார் மீட்டனர்.
ஸ்ரீசைலமும் அவரது குடும்பத்தினரும் யாரிடமும் சொல்லாமல் ஜூப்ளி நகரை விட்டு வெளியேறினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
அருகில் உள்ள கோபால்பூர் கிராமத்தில் அவர்கள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் ஸ்ரீசைலம், அவரது தாய், தந்தை மற்றும் தம்பி ஆகியோர் ஏப்ரல் 5-ஆம் தேதி போலீசாரால் காவலில் எடுக்கப்பட்டனர்.
விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், அவர்கள் ரிமாண்ட் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து ஸ்ரீசைலத்தின் மனைவி மௌனிகாவிடம் தொலைபேசி மூலம் பேச பிபிசி முயன்றது. குழந்தைகளின் இறப்பால் மனதளவில் உடைந்து போயுள்ள மௌனிகா, பேசும் நிலையில் இல்லை என்று அவரது தந்தை ராஜமல்லு பிபிசியிடம் தெரிவித்தார்.
இருப்பினும், குற்றம் நடந்த நாளன்று (ஏப்ரல் 3), மௌனிகா உள்ளூர் ஊடகங்களிடம் அன்றைய தினம் நடந்ததை விளக்கினார்.
"அன்று நான் குழந்தைகளுடன் வயலுக்குச் செல்லவிருந்தேன். பைக்கில் இத்தனை பேர் செல்ல முடியாது என்று கூறி, என்னைச் சிறிது நேரம் கழித்து வருமாறு அவர் சொன்னார். நான் ஒரு பாட்டிலில் சுத்தமான தண்ணீரை நிரப்பிக் கொண்டேன். அதன் பிறகு நான் வயலுக்குச் சென்றபோது என் குழந்தைகளைக் காணவில்லை. கேட்டபோது அவர்கள் கிணற்றில் விழுந்துவிட்டதாகச் சொன்னார். அவர்கள் இருவரும் தங்கமான பிள்ளைகள், ஊரே அவர்களை ராமச்சிலகலு (இணை பிரியாதவர்கள்) என்று அழைக்கும்," என்று அவர் அழுதுபுலம்பினார்.
கிராமத்தில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, ஸ்ரீசைலத்தின் நெருங்கிய உறவினர்கள் யாரும் அங்கு இல்லை.
பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு