You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வாலி முதல் டூரிஸ்ட் பேமிலி வரை - சிம்ரனின் 10 பிரபல படங்கள்
- எழுதியவர், மீனாட்சி சுந்தரம்
- பதவி, பிபிசி தமிழ்
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
தமிழ் சினிமா ஹீரோயின்களில் சிம்ரன் சற்றே வித்தியாசமானவர்.
தமிழில் நேருக்குநேர் படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அந்த படம் வெளியாகும் முன்பு ஒன்ஸ்மோர், விஐபி வந்துவிட்டது.
முதல் படத்தில் இருந்து இன்று வரை தனது நடன அசைவுகள், நடிப்பு, கேரக்டர் தேர்வு, பாடல்கள் ஆகியவற்றால் தமிழ் சினிமா ரசிகர்களால் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.
ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, விஜயகாந்த் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவிட்டார்.
கோவில்பட்டி வீரலட்சுமி போன்ற ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படங்களிலும் நடித்தார். அந்தகனில் வில்லியாகவும் முத்திரை பதித்தார்.
தமிழ் தெரியாமல் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் இன்று சென்னையிலேயே செட்டிலாகி வசித்து வருகிறார். தமிழ் உள்ளிட்ட தென்னக மொழிகளில் தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் சிம்ரனுக்கு கடந்த ஏப்ரல் 4 அன்று பிறந்தநாள்.
தமிழில் சிம்ரன் நடித்த படங்களில் பிரபலமான சில.
வாலி
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் நடித்த இந்த படத்தில் இரட்டையர்களின் ஒருவரை திருமணம் செய்து கொண்டு, இன்னொருவரால் மனரீதியாக டார்ச்சர் செய்யப்படும் கேரக்டரில் நடித்து இருப்பார்.
சிம்ரன் திரையுலக வாழ்வில் இந்த படத்தில் அவர் நடித்த ப்ரியா கேரக்டர் திருப்புமுனையாக அமைந்தது. இதில் இடம் பெற்ற நிலவை கொண்டு வா பாடலும், சிம்ரன் ஆடிய நடன அசைவுகளும் இளைஞர்கள் பலரை அவரின் ரசிகர்கள் ஆக்கியது.
துள்ளாத மனமும் துள்ளும்
எழில் இயக்கிய இந்த படத்தில் சிம்ரனின் நடிப்பும், அவர் ஏற்று இருந்த கலெக்டர் ரோலும், பார்வையற்றவராக வரும் காட்சிகளும் பேசப்பட்டன.
குறிப்பாக, விஜய், சிம்ரனின் மாறுபட்ட காதல் காட்சிகள், கிளைமாக்ஸ் மக்களிடம் சென்றடைந்தன.
ருக்மினி என்ற அந்த கேரக்டருக்காக தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார் சிம்ரன்.
மேகமாய் வந்து போகிறாய், இன்னிசை பாடிவரும், இருபது கோடி நிலவுகள் ஆகிய பாடல்களின் வெற்றி சிம்ரனை அடுத்த இடத்துக்கு கொண்டு சென்றன.
கண்ணதிரே தோன்றினாள்
பிரசாந்தும், கரணும் நண்பர்கள். தனது மூத்த தங்கை ஒருவரை காதலித்ததால் காதலுக்கு எதிரியாக இருப்பார் கரண். அவரின் இரண்டாவது தங்கையான சிம்ரனை காதலிப்பார் பிரசாந்த்.
நட்பா? காதலா? என கதை விறுவிறுப்பாக நகரும். சிம்ரன் கேரக்டர் பலரின் நிஜ காதலை பிரதிபலித்தது என்பார்கள்.
பார்த்தேன் ரசித்தேன்
சரண் இயக்கத்தில் பிரசாந்த் நடித்த இந்த படத்தில் வில்லத்தனமான ரோலில் நடித்தார் சிம்ரன். பானுவாக அவர் வரும் காட்சிகள், லைலாவுக்கும் அவருக்குமான எதிர்மறை சீன்கள் வரவேற்பை பெற்றன. அந்த சிம்ரனை ரசிகர்களும் ஏற்றுக்கொண்டனர். பிற்காலத்தில் ஒரு பேட்டியில் பார்த்தேன் ரசித்தேன் படத்தில் சிம்ரன் நடிப்பு பிடிக்கும் என விஜய்சேதுபதி கூட சொல்லியிருந்தார்.
கன்னத்தில் முத்தமிட்டால்
மணிரத்னம் இயக்கிய இந்த படத்தில் வழக்கமான சிம்ரனை பார்க்க முடியாது. மாதவன் ஜோடியாக நடித்திருந்தாலும் கதைப்படி 3 குழந்தைகளின் அம்மாவாக வந்தார்.
சிறந்த நடிகைக்கான விருதுகளை பல இடங்களில் இந்த கேரக்டருக்காக பெற்றார் சிம்ரன்.
பஞ்சதந்திரம்
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல் நடித்த இந்த படத்தில் மைதிலி என்ற கேரக்டரில் கோபக்கார பெண்ணாக, கொஞ்சம் முரட்டுதனம் கொண்டவராக நடித்து இருப்பார்.
கமலுடனான கெமிஸ்ட்ரி, சண்டை, பாடல்காட்சிகள் சிம்ரனுக்கு நன்றாக செட்டாகி இருந்தது.
கோவில்பட்டி வீரலட்சுமி
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை முன்னணி நடிகைகளுக்கு, வரும்.
ராஜேஷ்வர் இயக்கத்தில் அப்படி சிம்ரன் நடித்த படம் இது. அவர் நிஜ வாழ்க்கைக்கு சற்றும் பொருத்தம் இல்லாத வீரம் நிறைந்த கிராமத்து பெண்ணாக நடித்தார். அவரே சொந்தமாக டப்பிங் பேசினார். படம் வெற்றி அடையாவிட்டாலும் தீண்டாமைக்கு எதிரான அவர் கேரக்டர் பேசப்பட்டது.
வாரணம் ஆயிரம்
சூர்யாவுக்கு அம்மா வேடம். அதேசமயம் , அப்பா சூர்யாவுக்கு ஜோடி என சிம்ரனுக்கு வித்தியாசமான வேடம். அவர் ஏற்று நடித்திருந்த மாலினி என்ற அந்த கேரக்டரை, அவர் காஸ்ட்யூம், ஹேர்ஸ்டைல், அழகை எல்லாரும் ரசித்தனர்.
கவுதம் மேனன் தனது ஸ்டைலில் முன்தினம் பார்த்தேனே பாடலை சிம்ரனுக்கு கொடுத்து அசத்தினார்.
அந்தகன்
இந்தியில் வெற்றி பெற்ற அந்தாதுான் படத்தின் தமிழ் ரீமேக் இது. அங்கே வில்லியாக தபு நடிப்பில் கலக்கியிருந்தார். அந்த கேரக்டரில் சிம்ரன் நடித்தார். பல படங்களின் ஜோடியாக நடித்த பிரசாந்துக்கு எதிரான கேரக்டர்.
கடத்தல், மிரட்டல் என இதுவரை தான் நடித்திராத ரிஸ்கான கேரக்டர் என்றாலும், சிமியாக நடித்த சிம்ரனுக்கு பாராட்டுகள் குவிந்தன.
டூரிஸ்ட் பேமிலி
சிம்ரனின் 2வது இன்னிங்ஸ் என பலரும் புகழ்ந்தனர். அந்த அளவுக்கு வசந்தி என்ற நடுத்தர குடும்பத்து பெண்ணாக, இயல்பான கேரக்டரில் ஈழத்து தமிழ் பேசி நடித்து இருந்தார்.
படம் விமர்சன ரீதியிலும், வசூலிலும் ஹிட்டானது. வசந்தியை பலரும் தங்கள் வீட்டு பெண்ணாக ஏற்றுக்கொண்டனர்.வெளிநாடுகளிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு.
'டான்ஸ் விஷயத்தில் சிம்ரனை மிஞ்ச முடியாது'
வாலி படத்தில் அஜித்துடன் இணைந்து சிம்ரன் ஆடிய நிலவை கொண்டு வா பாடல் சூப்பர் ஹிட். அந்த பாடலை பாடிய அனுராதா ஸ்ரீராம் பிபிசி தமிழிடம், ''அந்த படத்தின் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா ஒரு இளம் தம்பதியின் ஹனிமூனில் ஒரு பாடல் வருகிறது. வழக்கமான பாடலாக வேண்டாம். அந்த பெண் கொஞ்சம் அராஜகமாக, தெனாவெட்டாக பாடுவது மாதிரி டோன் இருக்க வேண்டும் என்றார்.
அதற்கேற்ப டியூன் போட்டு கொடுத்தார் இசையமைப்பாளர் தேவா. வைரமுத்து அழகான வரிகளை கொடுத்தார்.
நானும், உன்னிகிருஷ்ணனும் இணைந்து பாடினோம். இன்று முதலிரவு என்ற வார்த்தையை நானும் வித்தியாசமாக பாடினேன். கணவரை மனைவி மிரட்டுகிற மாதிரியான அந்த டான்ஸ் ஹிட்டானது. அதற்கு ஏற்ப லிப் மூவ்மென்ட், டான்ஸ் மூவ்மென்ட்டில் அசத்தினார் சிம்ரன். அவர் டான்ஸ் பற்றி சொல்லவா வேண்டும். அஜித், சிம்ரன் டான்ஸ் ஸ்டெப் அந்த பாடலை இன்னும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது. இந்த பாடலை நான் பல ஆண்டுகளாக பல ஊர், பல நாடுகளில் பாடியிருக்கிறேன். டான்ஸ் விஷயத்தில் சிம்ரனை மிஞ்ச முடியாது'' என்றார்.
'அந்த ஜீன்ஸ் சிம்ரன் கொண்டு வந்தது'
சிம்ரன் பாடல்களில் ஆல் பேவரைட் என ஆல் தோட்ட பூபதியை சொல்லலாம்.
விஜய் நடித்த யூத் படத்தில் அந்த பாடல் இடம் பெற்றது அந்த படத்தின் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''யூத் படத்தில் ஒரு குத்து பாடல் இருக்கலாம் என முடிவெடுத்த போது, அதற்கான ட்யூனை மணிசர்மா கொடுத்தார். அது அமர்களமாக வர, ஒரு பிரபல ஹீரோயினை ஆட வைக்கலாம் என யோசித்தோம். நான் சிம்ரன் ஆடினால் நன்றாக இருக்கும், பாடல் ஹிட் ஆகும் என யோசித்தேன்.
அவரும் பாடலை கேட்டு ஓகே சொன்னார். செட்டுக்கு வந்து அவர் டான்ஸ் ஆட தயாரான போது பாடலை கேட்டவுடன் என்னிடம் வந்தார். இந்த வரிகள், இந்த டியூனுக்கு செம குத்தாட்டம் ஆடணும். அதுக்கு இந்த காஸ்ட்யூம் செட் ஆகாது. என்னிடம் ஒரு ஜீன்ஸ் இருக்கிறது. அதை அணிந்து வர பெர்மிஷன் வேணும் என்றார். நானும் உங்க வசதிக்கு ஏற்ப பண்ணிக்கோங்க என்று ஓகே சொன்னேன். அவர் அணிந்து வந்தார். அந்த பாட்டுக்கு அது நன்றாக செட் ஆனது. ஆல் தோட்ட பூபதி பட்டி தொட்டி எல்லாம் ஹிட்டானது. இன்றும் அந்த பாடலுக்கு ஆடுகிறார்கள். அந்த பாடல் எடுக்கும் போது ஹீரோ விஜய்க்கு முதுகுவலி. ஆனாலும் சிம்ரன் டான்ஸ் மூவ்மெண்ட் பார்த்து ரசித்து தானும் வலியை மீறி ஆடினார். '' என்றார்.
'வில்லியாகவும் முத்திரை பதித்தார்'
தமிழில் பிரசாந்த், சிம்ரன் கூட்டணிக்கு தனியிடமுண்டு. அது குறித்து பிரசாந்த் தந்தையும், அந்தகன் பட இயக்குனருமான நடிகர் தியாகராஜனிடம் பிபிசி சார்பில் பேசினோம்.
''ஜோடி, கண்ணதிரே தோன்றினாள், பார்த்தேன் ரசித்தேன், தமிழ், அந்தகன் போன்ற படங்களில் பிரசாந்த், சிம்ரன் இணைந்து நடித்தார்கள். இந்த படங்களின் வெற்றிக்கு கதை, பாடல்கள், நடிப்பு முக்கியமான காரணங்கள். இப்படி ஹீரோயினாக நடித்த சிம்ரனை நான் இயக்கிய அந்தகன் படத்தில் வில்லியாக நடிக்க வைத்தேன். தபு நடித்த ரோலில் சிம்ரன் தயங்காமல் நடித்தார். அந்த ரோலுக்கு அவருக்கு பாராட்டு கிடைத்தது. பல விருதுகள் கிடைத்தன. நான் ஹீரோயினாக மட்டும் நடிப்பேன் என்று நினைக்காமல், கேரக்டர் தன்மை உணர்ந்து வில்லியாகவும் நடிக்க தெரியும் என நிரூபித்தார். இப்படிப்பட்ட தைரியம் எத்தனை ஹீரோயினுக்கு வரும். அவர் கேரியரில் முக்கியமான படமாக அந்தகன் அமைந்தது'' என்றார்.
'கிளைமாக்ஸ் காட்சியில் ஆர்வம்'
விஜய், சிம்ரன் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படமும் அந்த படத்தில் சிம்ரன் கேரக்டரும், கிளைமாக்ஸ் காட்சியும் இன்றும் பிரபலம்.
அந்த படத்தின் இயக்குனர் எழில் பிபிசி தமிழிடம் அந்த பட அனுபவங்களை பற்றி பேசினார்.
''சிம்ரன் இந்த ரோலுக்கு செட் ஆவாரா என முதலில் சிலர் யோசித்தார்கள். அவர் புடவை கட்டி நடித்தால், கண்டிப்பாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றேன். அப்போது சிம்ரனுக்கு தமிழும் அதிகம் தெரியாது. ஆனால் கதை சொன்னவுடன் அதை உள் வாங்கி அந்த கேரக்டராக மாறி சிறப்பாக நடித்தார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி எடுக்கும் போது ஈடுபாடு காண்பித்தார். சென்னை பிலிம் சிட்டியில் அந்த பஸ் சம்பந்தப்பட்ட கிளைமாக்ஸ் சீன் எடுத்தோம். இன்னிசை பாடி வரும் பாடல் ஒலிக்க சிம்ரன் ஓடி வரும் அந்த காட்சி விமர்சன ரீதியாக, உணர்வு பூர்வமாக மக்களால் பாராட்டப்பட்டது. நிறைய பயிற்சி எடுத்து சொல்வதை உள்வாங்கி நடித்தார்.'' என்கிறார்.
பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு