வெற்றிப் பாதைக்குத் திரும்பி பிளே ஆஃப் போட்டியில் நீடிக்கும் பஞ்சாப் கிங்ஸ்

பட மூலாதாரம், ANI
ஐபிஎல் 2026 சீசனின் 68வது லீக் போட்டியில் இன்று (மே 23) லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை எதிர்கொண்டது பஞ்சாப் கிங்ஸ். லக்னௌவில் நடந்த இந்தப் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுதத்து. அதிகபட்சமாக ஜாஷ் இங்லிஸ் 72 ரன்கள் எடுத்தார்.
இந்த இலக்கை சேஸ் செய்த பஞ்சாப் கிங்ஸ் 18 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டியது. ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் எடுத்து தன் அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்தார் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர். ஓப்பனர் பிரப்சிம்ரன் சிங்கும் அரைசதம் அடித்தார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி இந்தப் போட்டியில் தோல்வியைத் தவிர்த்தால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நிலை இருந்தது. அப்படியொரு முக்கியமான போட்டியில் எளிதாக வெற்றி பெற்று, பிளே ஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது அந்த அணி. 14 போட்டிகளில் விளையாடி 15 புள்ளிகள் பெற்றிருக்கும் பஞ்சாப் கிங்ஸ், நான்காவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.
நாளை (மே 24) நடக்கும் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் வெற்றி பெறாமல் போனால், பஞ்சாப் கிங்ஸ் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும்.
பவர்பிளேவில் கிடைத்த 3 பெரிய ஓவர்கள்
மிட்செல் மார்ஷ் இல்லாததால் இந்தப் போட்டியில் இங்லிஸ் உடன் தொடக்க வீரராகக் களமிறங்கினார் அங்ரிஷ் ரகுவன்ஷி.
அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரில் ஜாஷ் இங்லிஸ் 4 பவுண்டரிகள் விளாசியதால் 16 ரன்கள் எடுக்கப்பட்டன. தொடக்கம் சிறப்பாக அமைந்திருந்த லக்னௌ அணிக்கு, இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே அதிர்ச்சிகொடுத்தார் அஸ்மதுல்லா ஓமர்சாய். அவர் பந்துவீச்சில் அர்ஷன் குல்கர்னி கீப்பர் பிரப்சிம்ரன் சிங் வசம் கேட்ச் கொடுத்து 'கோல்டன் டக்' ஆனார்.
அடுத்து வந்த நிகோலஸ் பூரன் ரன் எடுக்கத் தடுமாறினார். 7 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த அவருடைய விக்கெட்டை வீழ்த்தினார் மார்கோ யான்சன்.
3 ஓவர்கள் முடிவில் 20/2 என்ற நிலையில் இருந்த எல்எஸ்ஜி அணிக்கு நல்லதொரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கிக் கொடுத்தார்கள் ஜாஷ் இங்லிஸ் மற்றும் ஆயுஷ் படோனி இருவரும். இந்தக் கூட்டணி 23 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தது.
முதல் 5 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த படோனி, ஐந்தாவது ஓவரிலிருந்து தன் வேகத்தைப் பன்மடங்கு கூட்டினார்.
மார்கோ யான்சன் வீசிய 5வது ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸரை படோனி விளாசினார். அந்த ஓவரில் 18 ரன்கள் எடுக்கப்பட, ஓமர்சாய் வீசிய 6வது ஓவரில் 24 ரன்கள் வந்தது. அந்த ஓவரில் 2 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடித்தார் படோனி. அதன் காரணமாக, பவர்பிளே முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 66 ரன்கள் எடுத்தது லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ்.

பட மூலாதாரம், ANI
அதிரடியைத் தொடர்ந்த இங்லிஸ்
பவர்பிளேவு முடிந்த அடுத்த ஓவரிலேயே ஆயுஷ் படோனி வெளியேறினார். சஹல் வீசிய பந்தை அவர் அடிக்கத் தவற, பந்தை கீப்பர் பிரப்சிம்ரன் சிங் பிடித்தார். பந்தை விட்டுவிட்டு தன்னை அறியாமல் தன் காலை ஒரு நொடி படோனி தூக்கிவிட, அந்த நொடிப்பொழுதில் ஸ்டம்பிங் செய்தார் பிரப்சிம்ரன் சிங். அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் படோனி.
அடுத்து ஜோடி சேர்ந்த இங்லிஸ் மற்றும் கேப்டன் ரிஷப் பன்ட் தங்களின் அணியின் சிறந்த பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார்கள். இவர்கள் இருவரும் நான்காவது விக்கெட்டுக்கு 43 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தனர். 22 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த பன்ட், சஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பன்ட் அவுட்டான பிறகும் தன் அதிரடியத் தொடர்ந்தார் ஜாஷ் இங்லிஸ். ஒவ்வொரு ஓவரிலும் எப்படியும் பவுண்டரியோ சிக்ஸரோ அடித்துக்கொண்டிருந்த அவர் 44 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து சஷாங்க் சிங் பந்துவீச்சில் வெளியேறினார். இந்த சீசனில் 5 போட்டிகள் மட்டுமே விளையாடிய இங்லிஸ், மூன்று போட்டிகளில் அரைசதம் அடித்தார்.
இங்லிஸ் அவுட்டான பிறகு லக்னௌ அணியின் ரன்ரேட் குறையத் தொடங்கியது. 18வது மற்றும் 19வது ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை. அர்ஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரில் அப்துல் சமத் சற்று அதிரடி காட்டி 1 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசினார். அதனால், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுதத்து லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ். சமத் ஆட்டமிழக்காமல் 37 ரன்கள் எடுத்தார்.
வென்று கொடுத்த கேப்டன் ஷ்ரேயாஸ்
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி கொடுத்தார் மொஹம்மது ஷமி. அவர் வீசிய ஷார்ட் பாலில் கேட்சாகி வெளியேறினார் பிரியான்ஷ் ஆர்யா. அடுத்து களமிறங்கிய கூப்பர் கானலியையும் 18 ரன்களில் வெளியேற்றினார் ஷமி.
22/2 என்ற நிலையில் ஜோடி சேர்ந்த பிரப்சிம்ரன் சிங் - ஷ்ரேயாஸ் ஐயர் கூட்டணி தங்கள் அணியை சரிவிலிருந்து மீட்டது. இந்தக் கூட்டணி ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாகவே விளையாடியது. ஷமி, மோசின் கான், திக்வேஷ், பிரின்ஸ் யாதவ் என பவர்பிளேவில் தாங்கள் சந்தித்த அத்தனை பௌலர்களின் பந்துவீச்சிலும் அவர்கள் பவுண்டரிகள் அடித்தார்கள். அதனால், பவர்பிளேவை 65/2 என சிறப்பாக முடித்தது பஞ்சாப் கிங்ஸ்.
பவர்பிளேவுக்குப் பிறகும் இந்தக் கூட்டணியின் அதிரடி தொடர்ந்தது. அனைத்து வகையான பந்துவீச்சுக்கு எதிராகவும் அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். ஷார்ட் பால்கள் வீசினாலும், நன்கு நகர்ந்து சிறப்பாக ஃபைன் லெக் திசையில் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் விளாசினார்கள்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பிரப்சிம்ரன் சிங் 28 பந்துகளில் அரைசதம் கடந்தார். இந்த சீசனில் அவர் அடிக்கும் 6வது அரைசதம் இது. அவரைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயரும் 33 பந்துகளில் அரைசதம் கடந்தார். இது அவருக்கும் ஆறாவது 50+ ஸ்கோராக அமைந்தது.
தொடர்ந்து அதிரடி காட்டிக்கொண்டிருந்த இந்தக் கூட்டணியை 15வது ஓவரில் பிரித்தார் அர்ஜுன் டெண்டுல்கர். 39 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து வெளியேறினார் பிரம்சிம்ரன் சிங். மூன்றாவது விக்கெட்டுக்கு பிரம்சிம்ரன் - ஷ்ரேயாஸ் கூட்டணி 76 பந்துகளுக்கு 140 ரன்கள் குவித்தது.
இந்தக் கூட்டணியின் சிறப்பான ஆட்டத்தால் கடைசி 30 பந்துகளுக்கு 35 ரன்கள் எடுத்தால் போதும் என்ற நிலைக்கு வந்தது பஞ்சாப் கிங்ஸ். அதனால் எந்தவித நெருக்கடியும் இல்லாமல் 18வது ஓவரின் முடிவிலேயே இலக்கை வெற்றிகரமாக எட்டியது பஞ்சாப். கடைசியாக சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்த ஷ்ரேயாஸ் ஐயர், அதன்மூலம் தன் முதல் ஐபிஎல் சதத்தையும் பதிவு செய்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 51 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார் ஷ்ரேயாஸ்.
இந்த வெற்றியின் மூலம் தங்களின் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து புள்ளிப் பட்டியலிலும் 4வது இடத்துக்கு முன்னேறியது பஞ்சாப் கிங்ஸ்.

பட மூலாதாரம், ANI
பிளேயிங் லெவனில் யார்?
லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ்
இந்தப் போட்டிக்கான எல்எஸ்ஜி அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டன. மிட்செல் மார்ஷ் நாடு திரும்பியதால் அர்ஷின் குல்கர்னி சேர்க்கப்பட்டார். ஆகாஷ் சிங், மயாங்க் யாதவ், ஷபாஸ் அஹமது ஆகியோருக்குப் பதிலாக மொஹம்மது ஷமி, முகுல் சவுத்ரி மற்றும் அர்ஜுன் டெண்டுல்கர் அணியில் இடம்பெற்றனர். லக்னௌ அணிக்காக அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடும் முதல் ஐபிஎல் போட்டி இது. திக்வேஷ் ராதி இம்பேக்ட் வீரராகக் களமிறக்கப்பட்டார்.
பிளேயிங் லெவன்: அர்ஷின் குல்கர்னி, ஜாஷ் இங்லிஸ், நிகோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, ரிஷப் பன்ட் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், முகுல் சவுத்ரி, மொஹம்மது ஷமி, மோசின் கான், பிரின்ஸ் யாதவ், அர்ஜுன் டெண்டுல்கர்.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ஆகாஷ் சிங், எம்.சித்தார்த், ஹிம்மத் சிங், ஷபாஸ் அஹமது, திக்வேஷ் ராதி.
பஞ்சாப் கிங்ஸ்
இந்தப் போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. மார்கோ யான்சன் மற்றும் வைஷாக் விஜயகுமார் ஆகியோர் லாகி ஃபெர்குசன் மற்றும் ஹர்ப்ரீத் பிரார் ஆகியோருக்குப் பதிலாக பிளேயிங் லெவனில் இடம்பெற்றனர். மார்கஸ் ஸ்டாய்னிஸ் இம்பேக்ட் வீரராகப் பயன்படுத்தப்பட்டார்.
பிளேயிங் லெவன்: பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), பிரியான்ஷ் ஆர்யா, கூப்பன் கானலி, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சூர்யான்ஷ் ஷெட்கே, சஷாங்க் சிங், அஸ்மதுல்லா ஓமர்சாய், , அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹல்.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ஜேவியர் பார்ட்லெட், விஷ்ணு வினோத், பிரவின் துபே, மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஹப்ரீத் பிரார்,
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு





























