டெல்லியில் போராட செல்லும் வழியிலேயே ராகுல், பிரியங்கா மீண்டும் தடுப்பு
தேர்தல் ஆணையம் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் போராட்டம், புதன்கிழமையும் தொடர்கிறது.
எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவதற்காக ஜந்தர் மந்தருக்குச் செல்ல முயன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளது. காவல்துறையினர் அவரை தற்காலிகமாகத் தடுத்து வைத்ததாக, சம்பவ இடத்தில் இருந்த பிபிசி செய்தியாளர் தில்நவாஸ் பாஷா தெரிவித்தார்.
முன்னதாக, ராகுல் மற்றும் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி ஆகியோர் சென்றுகொண்டிருந்த போது காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.
செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி நடத்தப்பட்ட பேரணி மற்றும் அதைத் தொடர்ந்து அகில இந்திய வானொலி நிலைய வளாகத்தில் நடத்தப்பட்ட நீண்ட நேர தர்ணாவைத் தொடர்ந்து இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
வாக்காளர் பட்டியலில் உள்ள முறைகேடுகள் காரணமாக "வாக்குகள் திருடப்படுவதாக" ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இந்தக் குற்றச்சாட்டுகளைத் தேர்தல் ஆணையமும் பாஜகவும் மறுத்துள்ளன.
எஸ்ஐஆர் (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்) செயல்முறையில் முறைகேடுகள் நடப்பதாகக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன; ஞானேஷ் குமார் பாஜகவுடன் கைகோர்த்து அக்கட்சிக்குச் சாதகமாகச் செயல்பட முயல்வதாகவும் அக்கட்சிகள் விமர்சிக்கின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



