காணொளி: இரான்-அமெரிக்கா இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை - பாகிஸ்தானில் எப்படி நடக்கிறது?

காணொளிக் குறிப்பு, இரான் போர் விவகாரத்தில் பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை
காணொளி: இரான்-அமெரிக்கா இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை - பாகிஸ்தானில் எப்படி நடக்கிறது?

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இரான் போர் விவகாரத்தில் சனிக்கிழமையான இன்று பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை முத்தரப்பு பேச்சுவார்த்தையாக நடைபெற்று வருவதாக வெள்ளைமாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார். முதலில் இன்று, இரான் மற்றும் அமெரிக்கா இடையே நேரடி பேச்சுவார்த்தை இல்லாமல் பாகிஸ்தான் அதிகாரிகள் மூலம் செய்திகள் பரிமாறப்பட்டு வந்ததாக பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஒரு வட்டாரம் பிபிசி உருதுவிடம் தெரிவித்திருந்தது.

நேர்மறையான முன்னேற்றம் ஏற்பட்டால், பேச்சுவார்த்தைகள் நேரடியாக நடைபெறக்கூடும் என்றும் அவர்கள் கூறி இருந்தனர். இந்த நிலையில், வெள்ளை மாளிகையைச் சேர்ந்த ஓர் அதிகாரி இந்த தகவலை வழங்கி இருக்கிறார்.

இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் பேசி சில ஆரம்பக்கட்ட தகவல்களை பிபிசி உருது சேவை பகிர்ந்துள்ளது. அதன்படி, முதல் சுற்று முத்தரப்பு பேச்சுவார்த்தை இரண்டரை மணி நேரம் நடந்திருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தை நேர்மறையாக நடந்திருக்கிறது.

அதை தொடர்ந்து, இரு தரப்பும் சிறிய இடைவேளை எடுத்தனர். பின்னர், இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை தொடங்கி, நடைபெற்று வருகிறது. எனினும், பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்ட விவரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரானை தாக்கியதைத் தொடர்ந்து போர் மூண்டது. ஹோர்மூஸ் நீரிணையில் கட்டுப்பாடு, மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகள் மீது தாக்குதல் என உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்த இந்த மோதல், தற்போது இரண்டு வார காலத்துக்கு நிறுத்தப்பட்டுள்ளது. அண்மையில் தற்காலிக போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்துவந்த நிலையில், சனிக்கிழமை இஸ்லாமாபாத்தில் மேலதிக பேச்சுவார்த்தை நடந்தது.

பேச்சுவார்த்தை குழுவில் அமெரிக்க தரப்பில் அதன் துணை அதிபர் ஜேடி வான்ஸ், சிறப்பு பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப் மற்றும் டிரம்பின் உறவினரான ஜெராட் குஷ்னர் இருந்தனர்.

இரான் பேச்சுவார்த்தைக் குழுவில் அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் (mohammad bagher ghalibaf), வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இருந்தனர்.

இதற்காக பாகிஸ்தான் வந்த இரு தரப்பினரையுமே பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் மற்றும் அதன் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் வரவேற்றனர்.

அதே போல, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீபை ஜேடி வான்ஸ் நேரில் சந்தித்தார். இந்தப் பேச்சுவார்த்தை பிராந்தியத்தில் நீடித்த அமைதியை நோக்கிய ஒரு படிக்கல்லாக அமையும் என ஷாபாஸ் ஷெரீஃப் ஜேடி வான்ஸிடம் நம்பிக்கை தெரிவித்ததாக பாகிஸ்தான் பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல, இரானிய பிரதிநிதிகளையும் ஷாபாஸ் ஷெரீப் சந்தித்தார்.

இரானிய பிரதிநிதிக் குழுவை வழிநடத்தும் அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்பாகவே முடக்கப்பட்டுள்ள இரானியச் சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையடுத்து, இது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவிட்டதாக இரானிலிருந்து செய்திகள் வரத் தொடங்கின. ஆனால், முடக்கப்பட்டிருந்த இரானிய சொத்துக்கள் எதுவும் விடுவிக்கப்படவில்லை என பின்னர் அமெரிக்க அதிகாரியை மேற்கோள்காட்டி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், மறுபுறம் லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கிறது. லெபனானில் உள்ள ஹெஸ்பொலா இலக்குகளை குறிவைப்பதாக இஸ்ரேல் கூறுகிறது. தற்போதைய போரில் இரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஹெஸ்பொலாகள் தாக்குதல் நடத்திவருகின்றனர்.

சமூக ஊடகங்களில் 10ஆம் தேதி லெபனானின் தெற்கு பகுதியில் நடந்த தாக்குதல் என ஒரு காணொளி வெளியானது. அதில் வெடிப்புச் சத்தம் கேட்பதையும், புகை எழுவதையும் பார்க்க முடிகிறது.

லெபனான் அரசு செய்தி முகமை மற்றும் உள்ளூர் ஊடக செய்திகளின்படி, இந்த வீடியோ ஏப்ரல் 10 அன்று பதிவு செய்யப்பட்டது என்பதை ராய்ட்டர்ஸ் உறுதிப்படுத்தி உள்ளது. தெற்கு லெபனானில் 40 கூடுதல் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

எனினும், இந்த விவகாரத்தில் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே வாஷிங்டனில் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் ஹெஸ்பொலா சேர்க்கப்படாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு