டெல்லி போராட்டக் களத்துக்குச் சென்ற தமிழகத் தலைவர்கள் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் புதன்கிழமை ஜந்தர் மந்தரில் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இன்று காலை மழையிலும் போராட்டக்காரர்கள் தார்பாலின் கூரை அமைத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் எதிரொலியாக பாதுகாப்பு கருதி டெல்லி மெட்ரோ 16 மெட்ரோ ரயில்நிலையங்களை மூடியுள்ளது.
சிஜேபி போராட்டத்திற்கு ஆதரவாகவும் மத்திய, மாநில அரசைக் கண்டித்தும் இன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
தமிழ்நாட்டில் எங்கெல்லாம் போராட்டங்கள் நடைபெற்றன?
டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதையும் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதையும் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் இன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதே போல சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் காக்ரோச் ஜனதா கட்சியினர் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் தடியடி நடத்தியதை கண்டித்து வேலூரில் உள்ள காட்பாடி சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்தில் மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதைக் கண்டித்து காட்பாடி சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்தனர்.
''மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும், தடியடி தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்'' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் காரணமாக கல்லூரி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
வேலூரைப் போலவே திருவாரூர் மாவட்டத்திலும் திருவிக அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வகுப்புகளைப் புறக்கணித்து எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே போல திருப்பூரிலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து பேரணியாக தலைமை தபால் நிலைய அலுவலகம் வரை வந்தனர். தலைமை தபால் நிலைய அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய அமைச்சர் பதவி விலக கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
சென்னையில் போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய தமிழக அரசை கண்டித்தும் தமிழக காவல்துறையை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். பின்னர் காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர்.

தவெக பிரதிநிதிகள் வராதது ஏன்? துரை வைகோ பதில்
இன்று டெல்லி போராட்டக்களத்திற்குச் சென்ற மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களுக்கு ஆதரவைத் தெரிவித்தார்.
நான் இன்று ஒரு இந்தியப் பிரஜையாக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவனாக அங்கு வந்திருப்பதாகவும் பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "உங்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன் என அபிஜித்திடம் கூறினேன். இளைஞர்கள், மாணவர்கள், சாமானியர்களின் குரலாக ஒலிப்பேன் எனக் கூறினேன்." என்றார்.
தவெக பிரதிநிதிகள் போராட்டக் களத்திற்கு என்கிற குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துப் பேசிய அவர், "தவெக இயக்கத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்களே தவிர, நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் கிடையாது.
அவர்களின் பிரதிநிதிகள் இங்கு யாரும் கிடையாது. நாங்கள் முதலமைச்சர் விஜயின் தவெக உடன் கூட்டணியில் தான் இருக்கிறோம். நாங்கள் சொல்கிற கருத்துக்கள் முதலமைச்சர் விஜயின் விருப்பமாகவும் தவெக இயக்கத்தின் விருப்பமாகவும் இருக்கும் என நினைக்கிறேன்." என்றார்.
மு.க.ஸ்டாலின் கூறியது என்ன?

பட மூலாதாரம், X/MK Stalin
டெல்லியில் நடைபெறும் மாணவர்களின் போராட்டம் ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் பெற்றுவிட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "நீட் என்பது பெரிய அளவிலான முறைகேடுகளை ஊக்குவிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை முதலில் எச்சரித்தது நாங்கள் தான். அதனால் ஏற்படும் ஆபத்துக்களைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி ஆரம்பத்தில் இருந்தே திமுக நீட்டை எதிர்த்து வந்துள்ளது." என்றார்.
சமூக நீதியைக் காப்பதில் இந்தியாவை வழிநடத்தி முதலாவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு வித்திட்ட தமிழ்நாட்டிற்கு நீட்டை ஒழிக்க வேண்டும் என்கிற ஒரே கோரிக்கை தான் இருக்கிறது என்றார்.
மேலும் அவர், "வேறு எந்தக் கோரிக்கைகளை விடவும் போராட்டங்களின் மையத்தில் நீட் ஒழிப்பு என்பதே இருக்க வேண்டும். நீட்டை ரத்து செய்வது தான் அனைத்து பிரச்னைகளுக்கும் நீடித்த தீர்வாக இருக்கும்," என்றார்.
ராகுல் காந்தி கூறியது என்ன?

பட மூலாதாரம், Rahul Gandhi
போராட்டக்காரர்கள் மீதான காவல்துறையின் நடவடிக்கையைக் கண்டித்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 10 ஆண்டுகளில் 152 வினாத்தாள் கசிவு ஏற்பட்டு இருப்பதாகவும் அதன்மூலம் 7.5 மாணவர்களும் அவர்களின் குடும்பங்களும் பாதிக்கபப்ட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
மாணவர்களின் கோரிக்கையை காங்கிரஸ் கட்சி முழுவதும் ஆதரிப்பதாக அவர் தெரிவித்தார். போராட்டக்காரர்கள் நியாயமான கல்வி அமைப்பைக் கோருவதாகவும் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
மேலும் அவர், "ஒரு காலத்தில் உலகிலேயே சிறந்ததாக இருந்த நம்முடைய கல்வி அமைப்பு இன்று முறைகேடான அமைப்பாக மாறிவிட்டது. அரசாங்கம் என்ன செய்தது? இதில் யாருமே தண்டிக்கப்படவில்லை என்பதே சிறப்பான விஷயம். நம்முடைய மாணவர்களுக்கு இது ஏன் நடக்கிறது? நம்முடைய மாணவர்கள் என்ன செய்தார்கள்? இந்த நாடு அவர்களுக்கு என கடமைப்பட்டுள்ளதோ அதைக் கேட்கிறார்கள்." என்றார்.
கல்வி அமைப்பு முறைகேடானதாக மட்டுமல்லாமல் மக்களால் செலவு செய்ய முடியாத ஒன்றாக மாறிவிட்டதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
கனிமொழி கூறியது என்ன?

பட மூலாதாரம், ANI
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி போராட்டக்காரர்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.
"பல ஆண்டுகளாக திமுக இதனை எதிர்த்து வருவதால் இன்று திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிப்பதற்காக வந்தோம். நீட் அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்தே திமுக எதிர்த்து வருகிறது. நகரங்களில் இருந்து வரும் மாணவர்கள், வசதி படைந்த மாணவர்கள் மட்டுமே இந்தத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற முடிகிறது.
திமுக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தபோது நீட்டுக்கு எதிராக மசோதா நிறைவேற்றினோம். ஆனால் நிறைவேற்றப்பட்ட மசோத்தக்கள் பாஜக அரசுக்குப் பிடிக்காத மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போக்கு தற்போது குடியரசுத் தலைவர் கையெழுத்திட மறுக்கிறார்," என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக காக்ரோச் ஜனதா கட்சி போராட்டக்காரர்கள் மீது டெல்லி போலீஸார் எடுத்த நடவடிக்கை குறித்த விவகாரத்தை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
செவ்வாய்க்கிழமை மாலையில் சிவசேனா (உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே) தலைவர் உத்தவ் தாக்கரே, திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா ஆகியோரும் ஜந்தர் மந்தர் சென்று போராட்டக்காரர்களைச் சந்தித்தனர்.
இதனிடையே, நீட் தேர்வு என்பது அறவே கூடாது என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு என, தமிழகத்தின் ஆளும் கட்சி அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
டெல்லியில் அடுத்த உத்தரவு வரும் வரை 16 மெட்ரோ நிலையங்கள் மூடல்
டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (DMRC) புதன்கிழமை காலை 16 மெட்ரோ நிலையங்களை மூடுவதாகத் தெரிவித்துள்ளது.
டிஎம்ஆர்சி சமூக ஊடக தளமான எக்ஸில் 16 மெட்ரோ நிலையங்களின் பெயர்களை வெளியிட்டு, "இந்த மெட்ரோ நிலையங்கள் அடுத்த உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும். இருப்பினும், ராஜீவ் சவுக், மண்டி ஹவுஸ் மற்றும் சென்ட்ரல் செக்ரடேரியட் ஆகிய நிலையங்களில் வண்டி மாறும் வசதி தொடர்ந்து கிடைக்கும்" என்று அறிவித்துள்ளது.
டிஎம்ஆர்சி மூடுவதாக அறிவித்துள்ள மெட்ரோ நிலையங்கள்:
லோக் கல்யாண் மார்க், ராஜீவ் சவுக், படேல் சவுக், ராமகிருஷ்ணா ஆசிரம மார்க், பாராகம்பா ரோடு, சுப்ரீம் கோர்ட், சேவா தீர்த், ஜன்பத், மண்டி ஹவுஸ், சென்ட்ரல் செக்ரடேரியட், ஐடிஓ, டெல்லி கேட், இந்திரபிரஸ்தா, கான் மார்க்கெட், ஜோர் பாக் மற்றும் சிவாஜி ஸ்டேடியம்.
போராட்டக்காரர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் அவசர விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

பட மூலாதாரம், Dilnawaz Pasha
காக்ரோச் ஜனதா கட்சி போராட்டக்காரர்கள் மீது டெல்லி போலீஸார் எடுத்த நடவடிக்கை குறித்த விவகாரத்தை எழுப்பிய மனுவை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
வழக்கறிஞர் ஒருவரின் மனு மீது தலைமை நீதிபதி சூர்ய காந்த், "உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள், எங்கள் நேரத்தையும் வீணடிக்காதீர்கள்," என்று கூறினார்.
'பார் அண்ட் பெஞ்ச்' அளித்த தகவலின்படி, தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மால்யா பாக்சி மற்றும் நீதிபதி வி. மோகனா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கை விசாரணைக்காக அடுத்த நாள் பட்டியலிட வேண்டும் என்று கோரினார்.
அந்த வழக்கறிஞர், "போலீஸாரின் கடுமையான நடவடிக்கைகளுக்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளன. ஜந்தர் மந்தரில் மாணவர்களின் போராட்டம் நடந்து வருகிறது. போலீஸார் மிகவும் கடுமையாக நடந்துகொள்கிறார்கள்..." என்றார்.
இருப்பினும், இதற்கு பதிலளித்த சூர்யகாந்த், "தயவுசெய்து எங்களின் நேரத்தை வீணாக்காதீர்கள், உங்களின் நேரத்தையும் வீணாக்காதீர்கள். உங்களின் நேரம் எங்களின் நேரத்தை விட மிகவும் மதிப்புமிக்கது" என்றார்.
நீதிமன்றம் அடுத்த வழக்கின் விசாரணைக்காக அழைத்தபோது, போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு எதிரான போலீஸாரின் நடவடிக்கைக் குறித்த வீடியோ ஆதாரங்களை தன்னால் காட்ட முடியும் என்று வழக்கறிஞர் மீண்டும் கூறினார். இதற்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த், "எங்களுக்கு வீடியோக்களில் ஆர்வம் இல்லை. எங்களிடம் பார்ப்பதற்கு நேரமில்லை" என்றார்.
தர்மேந்திர பிரதான் கூறியது என்ன?
இதனிடையே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடருக்கு முட்டுக்கட்டை போடுவதற்காக மாணவர்களை அரசியல் ரீதியாகப் பயன்படுத்த விரும்புகிறார் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டியுள்ளார்.
ராகுல் காந்தி பிரதமரின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டம் நடத்தியதாகவும், இதனால் சாமானிய மக்கள் அவதிக்குள்ளாகினர் என்றும் தர்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை இரவில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
"மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் காங்கிரஸும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இடையூறு விளைவிப்பதற்காக, தொடர்ந்து மாணவர்களை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தி வருகின்றனர். ராகுல் காந்தியும் காங்கிரஸும் பிரதமரின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதனால் சாமானிய மக்கள் அவதிக்குள்ளாகினர் மற்றும் நடைமுறையில் உள்ள பாதுகாப்பு விதிகளும் புறக்கணிக்கப்பட்டன," என தர்மேந்திர பிரதான் சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"முழுமையான விவாதத்துக்குத் தயாராக இருப்பதை அரசு ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருந்தது. இருந்தபோதிலும், காங்கிரஸ் கட்சி ஜனநாயக ரீதியிலான விவாதத்துக்குப் பதிலாக அரசியல் போராட்டத்தைத் தேர்ந்தெடுத்தது. மாணவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது அவர்களின் நோக்கமல்ல, மாறாக அரசியல் ரீதியாக தலைப்புச் செய்திகளில் இடம்பெறுவதற்காக இடையூறுகளை ஏற்படுத்துவதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது. ராகுல் காந்தியை பொறுத்தவரை இது மாணவர்களைப் பற்றிய விஷயம் அல்ல. விவாதத்துக்கான சரியான வழி திறக்கப்பட்ட பிறகும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மோதலை உருவாக்கும் முயற்சியாகும்."

பட மூலாதாரம், Raj K Raj/Hindustan Times via Getty Images
"எங்கள் அரசு நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு குறித்து விவாதிக்கவும், இளைஞர்களின் ஒவ்வொரு நியாயமான கவலைகளுக்கு தீர்வு காண்பதற்கும் முழுமையாகத் தயாராக உள்ளது. இந்தியாவின் மாணவர்கள் அரசியல் பரப்புரைகளின் ஒரு பகுதியாக மாற்றப்படுவதை விட சிறந்த முறையில் நடத்தப்பட தகுதியானவர்கள். அவர்களுக்கு தேவை குழப்பம் அல்ல, நம்பிக்கை. கோஷங்கள் அல்ல, தீர்வுகள் தேவை. முட்டுக்கட்டைகள் அல்ல, பொறுப்புணர்வு தேவை," என தர்மேந்திர பிரதான் மேலும் கூறினார்.
"நமது மாணவர்களின் கோபத்துக்கு மட்டுமல்லாமல், அவர்களின் கேள்விகளுக்கான பதில்கள், சீர்திருத்தங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கும் நாடாளுமன்றமே பொறுப்பாகும். இந்த விஷயங்களில் பணியாற்றுவதில் எங்கள் அரசு முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளது" எனவும் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோதி மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரின் ராஜினாமாவை வலியுறுத்தி, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பிக்கள் செவ்வாய்க்கிழமை பிரதமர் இல்லமான 7, லோக் கல்யாண் மார்க்குக்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து அவர்கள் காவல்துறையினரால் காவலில் வைக்கப்பட்டனர். இருப்பினும், சில மணி நேரங்களுக்குப் பிறகு, அவரும் காவலில் வைக்கப்பட்டிருந்த மற்ற தலைவர்களும் சத்ரசால் அரங்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
பத்திரிகையாளர் மீது தாக்குதலா? - காக்ரோச் ஜனதா கட்சி பதில்

பட மூலாதாரம், Kabir Jhangiani/NurPhoto via Getty Images
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த சில போராட்டக்காரர்கள், 'டைம்ஸ் நவ்' ஊடகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் தேவ் கோடக் என்பவரைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து காக்ரோச் ஜனதா கட்சி இந்த தாக்குதலுக்கு தன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
காவல்துறை எவ்வளவுதான் தூண்டினாலும், யாரும் இதுபோன்ற வன்முறையில் ஈடுபடக் கூடாது என, சிஜேபியின் முதன்மை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் கூறினார்.
சௌரவ் தாஸ் தனது எக்ஸ் பதிவில், "தேவ் (செய்தியாளர்) மீதான இந்தத் தாக்குதலை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். அவர் ஒரு சிறந்த செய்தியாளர். காவல்துறை எவ்வளவுதான் தூண்டினாலும், யாரும் இதுபோன்ற வன்முறையில் ஈடுபடக் கூடாது. எங்களை மன்னித்துவிடுங்கள் சகோதரர் தேவ். அனைவரும் அமைதியையும் நிதானத்தையும் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சிஜேபி போராட்டக்காரர்கள் தன்னைத் தாக்கியதாகவும், தன்னிடம் இருந்த மொபைல் போன் மற்றும் கடிகாரத்தைப் பறித்துச் சென்றதாகவும் செய்தியாளர் தேவ் கோடக் குற்றம் சாட்டியுள்ளார்.
சிஜேபியின் இந்தப் போராட்டத்தின் போது, போராட்டக்காரர்கள் பலமுறை ஊடகங்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியுள்ளனர், இது தொடர்பான வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தி உள்ளிட்டோர் கைதுக்கு விஜய் கண்டனம்

பட மூலாதாரம், TVK
டெல்லியில் போராட்டம் நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய், "ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது ஜனநாயகத்திற்கு எதிரானது" என தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை என்று தெரிவித்துள்ள விஜய், நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் போராட்டத்துக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் நிலைப்பாடு என கூறியுள்ள விஜய், "நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்" என விஜய் கூறியுள்ளார்.
டெல்லியில் ஜனநாயகம் நசுக்கப்படுகிறது: தவெக
டெல்லியில் நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக காக்ரோச் ஜனதா கட்சியை சேர்ந்தவர்களின் போராட்டம் தொடர்ந்துவரும் நிலையில் தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்டுள்ள பதிவில், "டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லி காவல்துறையால் இழுத்துச் செல்லப்பட்டும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்யப்பட்டது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமானத் தாக்குதலாகும" என தெரிவித்துள்ளது.
மேலும், "நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது முதலே அதன் மீதான நம்பகத் தன்மை குறைவது மட்டுமல்லாமல், மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி தங்களின் எதிர்காலக் கனவு மிகப்பெரிய கேள்விக்குறியாவதும் தொடர்கிறது" என தெரிவித்துள்ளது.
நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பாதிப்புக்குள்ளாவது நின்றபாடில்லை என்றும், எனவே ஒன்றிய அரசு நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதாக தவெக தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளது.
தனது மற்றொரு பதிவில், "நீட் தேர்வுக் குளறுபடிகளை மட்டும் எதிர்க்கவில்லை. நீட் தேர்வு என்பது அறவே கூடாது என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு. ஓட்டுக்காக நீட்டை நாங்களே நீக்குவோம் என்று மக்களை ஏமாற்றும் மோசடி அரசியல் வேலையில் தவெக ஒருபோதும் ஈடுபடாது." என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு


































