'முதல் தேர்தலே தோல்வி' : அதிமுகவில் அதிகார மையமாக எடப்பாடி பழனிசாமி உருவானது எப்படி?

பட மூலாதாரம், Edappadi Palanisamy
(தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் அதிக கவனம் பெறும் தலைவர்களின் வாழ்க்கைப் பயணத்தை ஒரு தொடராக பிபிசி தமிழ் வெளியிடுகிறது. அந்த வரிசையிலான கட்டுரை இது. )
"மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து தேர்தல் நிலவரம் குறித்துப் பேசினேன். நான்கைந்து மாநிலங்களில் தேர்தலை அறிவித்துவிட்டதால் உள்துறை அமைச்சருக்கு நிறைய வேலைகள் உள்ளன. அதனால் நான் வந்து பார்த்துவிட்டுச் செல்கிறேன்"
2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக டெல்லிக்கு வந்து செல்வது குறித்த தி.மு.கவின் விமர்சனத்துக்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த விளக்கம் இது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க ஆட்சியை வழிநடத்தியது முதல் கட்சியின் உச்சகட்ட அதிகாரத்தைக் கைப்பற்றியது வரை பழனிசாமியின் அரசியல் பயணம், பல எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டது.
சேலம் மாவட்டத்தில் கோனேரிப்பட்டி அ.தி.மு.க கிளைச் செயலாளராக அரசியல் வாழ்வைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் அதிகார மையமாக உருவெடுத்தது எப்படி? அவரைப் பற்றிய அரசியல் பயோகிராஃபி இதோ...
சேலம் மாவட்டம், எடப்பாடியில் உள்ள சிலுவம்பாளையம் கிராமத்தில் 1954 ஆம் ஆண்டு கருப்பக் கவுண்டர் - தவசியம்மாளுக்கு மகனாகப் பிறந்த கே.பழனிசாமி, எளிய விவசாயப் பின்னணியைக் கொண்டவர்.
அரசுப் பள்ளியில் மேல்நிலைக் கல்வியை நிறைவு செய்த கே.பழனிசாமி, ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை விலங்கியல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார்.
சொந்தமாக தொழில் தொடங்கி முன்னேறுவதுதான் கே.பழனிசாமியின் தொடக்க கால இலக்காக இருந்தது. அருகில் உள்ள கிராமங்களில் வெல்ல மூட்டைகளை வாங்கி விற்று வந்துள்ளார்.
தோல்வியில் முடிந்த முதல் தேர்தல்
அதே காலகட்டத்தில் தனது ஆஸ்தான நடிகரான எம்.ஜி.ஆர், அ.தி.மு.க என்ற கட்சியைத் தொடங்கியதும் அதில் தன்னை இணைத்துக் கொண்டார். இதே காலகட்டத்தில் கே.ஏ.செங்கோட்டையனுடன் ஏற்பட்ட அறிமுகத்தால் கோனேரிப்பட்டி கிளைச் செயலாளராக பொறுப்பு அவருக்குக் கிடைத்தது.
1986 ஆம் ஆண்டு சிலுவம்பாளையம் ஊராட்சி மன்றத்துக்கு தேர்தல் நடந்தது. அதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.பழனிசாமியால் வெற்றிபெறவில்லை. அவர் எதிர்கொண்ட முதல் தேர்தலே தோல்வியில் முடிந்தது.
1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதியன்று முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் இறந்தார். இதனால், அ.தி.மு.கவின் தலைமைப் பொறுப்பு குறித்து குழப்பம் ஏற்பட்டது. எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகி மற்றும் ஜெ.ஜெயலலிதா ஆகியோர் தனித்தனி அணிகளாக பிரிந்தனர். இதில் ஜெ., அணி பக்கம் கே.பழனிசாமி அங்கம் வகித்தார்.
1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜெ. அணி சார்பாக சேவல் சின்னத்தில் எடப்பாடி தொகுதியில் கே.பழனிசாமி போட்டியிட்டார். தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
தேர்தல் முடிவில் தி.மு.க ஆட்சி அமைத்தது. இந்த ஆட்சி ஓராண்டில் கலைக்கப்பட்டதால் 1991 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடந்தது. அப்போது இரட்டை இலைச் சின்னத்தில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் கே.பழனிசாமி வெற்றி பெற்றார்.
ஓராண்டு மட்டுமே நீடித்த எம்.பி பதவி
1991-96 அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் சேலம் வடக்கு மாவட்ட செயலாளர், சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் தலைவர் உள்பட பல்வேறு பதவிகளுக்குத் தேர்வானார்.
தொடர்ந்து இரண்டு முறை எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்ற கே.பழனிசாமி, 1996 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தோல்வியே கிடைத்தது. ஆனால், 1998 ஆம் ஆண்டு திருச்செங்கோடு தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்தப் பதவி ஓர் ஆண்டுகாலமே நீடித்தது. மத்தியில் ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்படவே மீண்டும் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டார். இந்தமுறை அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. இருப்பினும் தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் தலைவராக 2001 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
2004 மக்களவைத் தேர்தல், 2006 சட்டமன்றத் தேர்தல் எனத் தொடர்ந்து தோல்வியை கே.பழனிசாமி எதிர்கொண்டார். ஆனால், கட்சியில் கொள்கைப் பரப்புச் செயலாளர், அமைப்புச் செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளில் அமர்த்தப்பட்டார்.

பட மூலாதாரம், Edappadi Palanisamy
அமைச்சரவையில் முதல்முறையாக இடம்
எடப்பாடி கே.பழனிசாமியின் அரசியல் வாழ்க்கையில் 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் மிக முக்கியமானதாக அமைந்தது. தேர்தலில் எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்ற அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்தது. நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக அவர் பொறுப்பேற்றார்.
அ.தி.மு.க தலைமை நிலைய செயலாளர், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் எனப் பல்வேறு பொறுப்புகளை அவருக்கு ஜெயலலிதா வழங்கினார். 2016 சட்டமன்றத் தேர்தலில் நான்காவது முறையாக எடப்பாடி தொகுதியில் கே.பழனிசாமி வெற்றி பெற்றார்.
தேர்தலுக்குப் பிறகு பொதுப்பணித்துறை அமைச்சராக கே.பழனிசாமி பொறுப்பேற்றார். பொதுவாக, அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சரவை மாற்றம் என்பது எழுதப்படாத விதியாகவே இருந்தது.
'எப்போது அமைச்சரவை மாற்றம் நடக்கும்?' என்ற அச்சத்துடனேயே அமைச்சர்கள் இருந்தனர். ஆனால், 2011-16 ஆட்சிக்காலத்தில் எடப்பாடி பழனிசாமியின் பதவிக்கு எந்த ஆபத்தும் வரவில்லை.
2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, அதே ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார்.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சுமார் 70 நாட்களுக்கும் மேலாக சிகிச்சையில் இருந்த அவர், 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மரணம் அடைந்தார்.
இதன்பிறகு, ஆட்சியை வழிநடத்தப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது. முன்னதாக, இடைக்கால முதலமைச்சராக பல்வேறு காலகட்டங்களில் ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்ததால், அவரையே முதலமைச்சராக சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்தனர்.
ஆனால், இரண்டு மாதங்கள் கூட இந்தப் பதவியில் பன்னீர்செல்வத்தால் நீடிக்க முடியவில்லை. தனது ராஜினாமா கடிதத்தை அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவுக்கு அனுப்பினார்.
சிறை சென்ற சசிகலா... முதலமைச்சரான எடப்பாடி

அதனை ஆளுநர் ஏற்றுக் கொண்ட நிலையில், அ.தி.மு.க சட்டமன்ற தலைவராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அ,தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராகவும் அவரை நிர்வாகிகள் கூடி தேர்வு செய்தனர்.
பன்னீர்செல்வம் தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் தனி அணியாக செயல்படத் தொடங்கவே, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்ல வேண்டிய நிலைக்கு வி.கே.சசிகலா ஆளானார்.
இந்த சூழலில், அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக முடிவெடுப்பதற்கு செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டனர்.
அங்கு நடந்த விவாதத்தில், அ.தி.மு.க சட்டமன்ற தலைவராகவும் முதலமைச்சராகவும் எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அ.தி.மு.கவில் பல்வேறு மூத்த நிர்வாகிகள் இருந்தபோதும் பழனிசாமியை முதலமைச்சராக வி.கே.சசிகலா முன்னிறுத்தினார்.
7 ஆண்டுகளுக்குப் பிறகு விளக்கம்
அப்போது அவரது காலில் எடப்பாடி பழனிசாமி விழுந்து ஆசிபெற்ற காட்சிகள் ஊடகங்களில் வெளியானது. 'காலில் விழுந்து பதவி பெற்றார் பழனிசாமி' என அடுத்து வந்த தேர்தல்களில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஆகியோர் விமர்சனம் செய்தனர்.
இந்த விமர்சனங்களுக்கு நீண்டகாலம் அவர் பதில் கூறவில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது மதுரையில் வேட்பாளர் சரவணனை ஆதரித்து பரப்புரை செய்தபோது இதுதொடர்பாக விளக்கம் அளித்தார்.
சசிகலா குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டபோது, "பெரியவர்களிடம் ஆசி பெறுவது தவறா... வேறு யாரிடமோ அல்லது மூன்றாவது நபரிடமோ ஆசி வாங்கவில்லையே?' என அவர் விளக்கம் அளித்தார்.
அதேநேரம், "வி.கே.சசிகலாவை மீண்டும் அ.தி.மு.கவில் சேர்ப்பீர்களா?" என செய்தியாளர்கள் கேட்டபோது, " அது முடிந்துபோன கதை. அதைத் திருப்பிப் பேச வேண்டிய அவசியம் இல்லை" எனவும் தெரிவித்தார்.
வி.கே.சசிகலா ஆதரவில் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றாலும் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்வதற்குள் பல்வேறு சவால்களை அவர் எதிர்கொண்டார்.

பட மூலாதாரம், Edappadi Palanisamy
பலத்தை நிரூபித்த பழனிசாமி
தனது அரசு மீது 2017 ஆம் ஆண்டு நம்பிக்கை கோரும் தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். அப்போது, அதிருப்தியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜன், செம்மலை உள்பட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
ஆனால், பெரும்பான்மை உறுப்பினர்கள் பலம் காரணமாக எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி பெற்றது. இதன்பிறகு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை இணைத்து வைக்கும் முயற்சியில் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு முயற்சியில் ஈடுபடுவதாக பேச்சு எழுந்தது.
2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதியன்று இருவரும் அப்போது பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் முன்னிலையில் இணைந்தனர். அ.தி.மு.க அரசில் துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்.
இருவரும் இணைந்த பிறகு 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை வானகரத்தில் அ.தி.மு.க பொதுக்குழு நடைபெற்றது. பொதுக்குழுவில் அ.தி.மு.கவில் பொதுச்செயலாளர் பதவி ரத்து செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கட்சியின் பொதுச்செயலாளராக மறைந்த ஜெயலலிதாவின் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது என கருதி அந்தப் பதவியை ரத்து செய்ய முடிவெடுத்ததாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
சசிகலா, தினகரன் நீக்கம்
கூடவே, கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக பதவியேற்ற வி.கே.சசிகலாவின் நியமனம் ரத்து செய்யப்பட்டது. கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக பதவி வகித்த டி.டி.வி. தினகரனை பதவியில் இருந்து நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்படுவதாக பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது. கட்சியின் அடிப்படை விதிகளிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டது.
இதே செப்டம்பர் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி, தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்பட 19 எம்.எல்.ஏக்கள் புகார் மனு அளித்தனர்.
இவர்களை தகுதிநீக்கம் செய்யுமாறு சபாநாயகர் தனபாலுக்கு அரசு கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்தார். இதில் ஜக்கையன் தவிர மற்றவர்களைத் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
அடுத்து வந்த நாட்களில், "அ.தி.மு.கவில் ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாகவும் அவர்கள் தேவைப்படும் நேரத்தில் வெளியில் வருவார்கள்" எனவும் செய்தியாளர்களிடம் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சி முடியும் வரையில் அரசுக்கு எதிராக அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் கூட செயல்படவில்லை. இதன்மூலம் டி.டி.வி.தினகரனின் "ஸ்லீப்பர் செல்" வாதம் எடுபடாமல் போனது.

பட மூலாதாரம், Edappadi Palanisamy
ஆட்சியைத் தக்கவைத்த இடைத்தேர்தல்
எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கத்தின் மூலம் சட்டப்பேரவையில் அ.தி.மு.கவுக்கு 113 உறுப்பினர்கள் (சபாநாயகர் தவிர்த்து) மட்டுமே இருந்தனர். பேரவையில் 22 தொகுதிகள் காலியாக இருந்தன. பெரும்பான்மைக்கு 117 உறுப்பினர்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, 2019 மக்களவைத் தேர்தலுடன் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. மற்ற மூன்று தொகுதிகளான அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் முறைகேடு நடந்ததாகக் கூறி வழக்கு தொடரப்பட்டதால் இடைத்தேர்தல் நடக்கவில்லை.
இவற்றில் ஒன்பது தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெற்றதன் மூலம் சட்டப்பேரவையில் அக்கட்சியின் பலம் 122 ஆக உயர்ந்தது. தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் உத்தி அறிந்தவராக எடப்பாடி பழனிசாமி பார்க்கப்பட்டார்.
முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும் தொடர்ந்தனர். ஆனால், அரசின் கூட்டங்களில் ஒருவர் பங்கேற்பதும் மற்றொருவர் புறக்கணித்ததும் தொடர்ந்தது.
தொடர்ச்சியாக இது விமர்சனமாக முன்வைக்கப்படவே, "இருவருக்கும் இடையே எதுவும் இல்லை. இரட்டைக் குழல் துப்பாக்கி போல அ.தி.மு.கவை சிறப்பாக வழிநடத்தி வருகின்றனர்" என அமைச்சராக இருந்த செல்லூர் ராஜு தெரிவித்தார்.
சாதனைகளும் விமர்சனங்களும்
தனது ஆட்சிக்காலத்தில் குறிப்பிடத்தக்க சில விஷயங்களை எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தினார். அவற்றில்...
* அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகித இடஒதுக்கீடு
* அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றம்
* ரூ.12,110 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி
* பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட டெல்டா பகுதிகள்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகித ஒதுக்கீடு வழங்கப்பட்டதன் மூலம் அதிகளவில் மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்ததை தனது சாதனையாக அவர் முன்வைத்தார்.

பட மூலாதாரம், Edappadi Palanisamy
ஆட்சி மீதான விமர்சனம் என்ன?
அதேநேரம், பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்புக்கு வந்த ஆண்டில் தான் தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது.
'ஜெயலலிதா இருந்தவரையில் தமிழ்நாட்டுக்குள் நீட் தேர்வு வரவில்லை' என, தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி மேடைகளில் பேசி வந்தார். முத்தலாக் தடைச் சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் வாக்களித்ததாக 2019 இடைத்தேர்தல் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
ஆனால், முத்தலாக் தடைச் சட்டத்தை மக்களவையில் அ.தி.மு.க உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் ஆதரித்தார். மாநிலங்களவையில் அ.தி.மு.க எதிர்த்தாலும் வாக்கெடுப்பின்போது அ.தி.மு.க வெளிநடப்பு செய்தது.
"மசோதா வெற்றி பெறுவதற்கு வசதியாக அ.தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்" என தி.மு.க எம்.பி கனிமொழி குற்றம் சுமத்தினார்.
2020 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை அ.தி.மு.க ஆதரித்தது. 'விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் சட்டங்களாக இவை இருப்பதால் எதிர்க்கவில்லை' என, முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

பட மூலாதாரம், Edappadi Palanisamy
கஜா புயல், கொரோனா பேரிடர்
எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்த மறு ஆண்டு (2018) கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சுமார் நாற்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான தென்னை மரங்கள் அழிந்தன.
மீட்புப் பணி மற்றும் நிவாரணங்களுக்காக மாநில அரசு 15 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் கோரியது. ஆனால், 1146 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்தது.
கஜா புயலால் ஏற்பட்ட பேரிடருக்குப் பிறகு 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கினர். கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின்போது அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. போதிய அளவு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்தன.
2021 சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் அதிகப்படியான கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 75 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க உடன் கூட்டணி வைத்த பா.ஜ.க நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது.
வன்னியர் 10.5 சதவிகித இடஒதுக்கீடு காரணமாக வடமாவட்டங்களில் அ.தி.மு.க பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது.

பட மூலாதாரம், Edappadi Palanisamy
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
தூத்துக்குடியில் 2018ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில் பொதுமக்களில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டதாக, அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. அதில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன், உளவுத்துறை ஐ.ஜி சத்தியமூர்த்தி மூர்த்தி ஆகியோர் நிமிடத்துக்கு நிமிடம் முதலமைச்சருக்கு தகவல் கூறியதற்கான ஆதாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்மூலம் "எடப்பாடி பழனிசாமி கூறியது பொய்" என ஆணையம் தெரிவித்தது.
அதேபோல், 2020 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தையும் மகனும் (ஜெயராஜ் - பென்னிக்ஸ்) காவல்துறையால் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் மீது விமர்சனத்தை முன்வைத்தது.
கூட்டணியை சீண்டிய அண்ணாமலை
சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றார். அ.தி.மு.க-பா.ஜ.க உறவில் விரிசல் ஏற்படுவதற்கும் அண்ணாமலை காரணமாக இருந்தார்.
'ஊழல் வழக்கில் சிறை சென்றவர் ஜெயலலிதா' என அவர் முன்வைத்த விமர்சனத்தால் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் கொந்தளிப்பை வெளிப்படுத்தினர்.
இதுதொடர்பாக, அ.தி.மு.க தரப்பில் அதிருப்தியை வெளிப்படுத்தியும் அண்ணாமலை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் விளைவாக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க வெளியேறியது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தனி அணியாகப் போட்டியிட்டது.
சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அ.தி.மு.கவில் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களில் ஒன்றாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் நீக்கம் அமைந்தது.
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை வானகரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுவில் அ.தி.மு.க அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.
கூட்டத்தில் அ.தி.மு.கவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதன்பிறகு அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்பு அணி என்ற பெயரில் தனி அணியாக பன்னீர்செல்வம் ஈடுபட்டு வந்தார்.
தனது ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு வந்த தினகரனை 2026 சட்டமன்றத் தேர்தலில் தனது கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி இணைத்துக் கொண்டார். ஆனால், பன்னீர்செல்வத்தைக் கட்சியில் சேர்க்கவில்லை.

முதலமைச்சர் வேட்பாளர் யார்?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள உள்ளார்.
தமிழ்நாட்டில் கூட்டணிக்கு அ.தி.மு.க தலைமை வகித்தாலும், 'தேர்தலுக்குப் பிறகு என்.டி.ஏ தலைமையில் ஆட்சி மலரும்' என மதுராந்தகம் கூட்டத்தில் பிரதமர் பேசியது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
'முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி' என தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் மட்டுமே பேசி வந்த நிலையில், 'தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க வேறு ஏதேனும் திட்டம் வைத்துள்ளதா?' என்ற கேள்வியும் எழுந்தது.
இந்தநிலையில், அண்மையில் தனியார் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "தமிழ்நாட்டில் அ.தி.மு.கவுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். அ.தி.மு.க உடனான கூட்டணியே எங்களுக்கு வலிமை சேர்க்கிறது" எனப் பேசினார்.

இதனை சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் மேற்கோள் காட்டும் எடப்பாடி பழனிசாமி, "தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்ற பிறகு அ.தி.மு.க தான் ஆட்சிமைக்கும்" எனப் பேசி வருகிறார்.
எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக எதிர்த்த டி.டி.வி.தினகரன் தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தனிக்கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். எடப்பாடியை முதலமைச்சராக பதவியில் அமர்த்திய வி.கே.சசிகலாவும் தனிக்கட்சியை நடத்தி வருகிறார்.
இரட்டைக் குழல் துப்பாக்கியில் ஒரு குழல் எனப் பேசப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், தி.மு.கவில் ஐக்கியமாகிவிட்டார். தனது காய் நகர்த்தல்கள் மூலம் ஐந்தாண்டுகளில் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராகவும் கூட்டணியின் தலைவராகவும் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.
"சாதாரண தொண்டன் கூட அ.தி.மு.கவில் உயர்ந்த நிலைக்கு வரலாம் என்பதற்கு நானே உதாரணம்" என பல மேடைகளில் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். விமர்சனங்களைத் தாண்டி எடப்பாடி பழனிசாமியின் அரசியல் தமிழ்நாட்டில் தனித்துவமான கவனத்தைப் பெற்றுள்ளது.

பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































