ஐபிஎல்: ஒரே நாளில் களம் இறங்கும் 4 தமிழக வீரர்கள் - சவால்களும் வாய்ப்புகளும் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பாபா அபராஜித்
- பதவி, சிஎஸ்கே முன்னாள் வீரர்
- வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
ஐபிஎல் 2026 தொடரில் ஏப்ரல் 4 அன்று பல தமிழ்நாட்டு வீரர்கள் களம் காண இருக்கிறார்கள்.
மாலை நடக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் போட்டியில் கேபிட்டல்ஸ் அணிக்காக நடராஜன் களமிறங்குகிறார். முந்தைய போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அவர் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இரவு குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. டைட்டன்ஸ் அணியில் 4 தமிழ்நாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுள் சாய் சுதர்ஷன், வாஷிங்டன் சுந்தர், ஷாரூக் கான் என மூன்று பேர் முந்தைய போட்டியில் விளையாடினார்கள்.
இந்த 3 டைட்டன்ஸ் வீரர்கள் மற்றும் நடராஜன் ஆகியோர் இன்றும் களமிறங்கப்போகிறார்கள். அவர்களிடம் என்ன எதிர்பார்க்கலாம்? அவர்கள் இந்தப் போட்டியில் சந்திக்கப்போகும் சவால்கள் என்ன? கடந்த போட்டியில் களமிறக்கப்படாத சாய் கிஷோருக்கு இன்று வாய்ப்பு கிடைக்குமா? என்பது போன்ற விஷயங்களை அலசுவோம்.
நடராஜனின் சிறப்பான கம்பேக்
நடராஜன் ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு விளையாடுகிறார். இது எளிதான விஷயமே இல்லை. ஏனெனில், நடராஜன் கடந்த 2 ஆண்டுகளாகவே தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். அவரால் தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாட முடியவில்லை.
டெல்லி கேபிட்டல்ஸ் அணி அவரை 10 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருந்தது. ஆனால், அவரால் முழு 2025 சீசனும் விளையாட முடியவில்லை. சீசனின் கடைசி கட்டத்தில் தான் விளையாடினார். அப்போதும் கூட அவரது வேகம் வழக்கத்தை விட வெகுவாகக் குறைந்திருந்தது.
நான் அவரிடம் சமீபத்தில்கூடப் பேசியிருந்தேன். டெல்லி கேபிட்டல்ஸ் அணி எப்போதெல்லாம் அவருக்குத் தேவையோ அப்போதெல்லாம் பயிற்சி முகாம் ஏற்படுத்திக் கொடுத்ததாக நடராஜன் என்னிடம் கூறினார். கேபிட்டல்ஸ் நிர்வாகத்தின் அணி ஐஎல்டி20 தொடரில் ஆடியபோது அவர் துபை சென்று அபு தாபி அணியோடு பயிற்சி செய்தார்.

பட மூலாதாரம், Getty Images
நடராஜன் எப்படித் தொடங்கினார், எப்படி ஐபிஎல் தொடருக்குள் வந்தார் என நான் ஆரம்பத்தில் இருந்தே நடராஜனின் பயணத்தை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். இந்த ஐபிஎல் தொடருக்கு முன்பாகவும் அவர் எந்த அளவுக்கான உழைப்பைக் கொடுத்திருக்கிறார் என்பது நன்றாகத் தெரிகிறது. அவர் நன்கு ஃபிட்டாக இருக்கிறார்.
என்ன இருந்தாலும், ஒரு சீசனின் முதல் போட்டியில் அப்படியொரு கம்பேக் கொடுப்பது எளிதான விஷயம் அல்ல. ஆனால், நடராஜன் தனக்கு அனுபவமும் முதிர்ச்சியும் இருக்கிறது என்பதைக் காட்டினார்.
ஏனெனில், இப்படி நீண்ட இடைவெளிக்குப் பிறகு வரும்போது நிச்சயம் பதற்றம் இருக்கும். அப்படி இருந்தாலும் அவர் தன்னுடைய பலத்துக்கு ஏற்ப விளையாடினார். 'எனக்கு என்ன தெரியுமோ அதை நான் செய்வேன்' என்று முடிவெடுத்திருந்தார். நல்ல விஷயம் அவருக்கு அதில் விக்கெட்டுகள் கிடைத்தன. ஒரு பௌலருக்கு அப்படி விக்கெட்டுகள் கிடைக்கும்போது நம்பிக்கை அதிகரிக்கும். இந்தத் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு நடராஜனின் இந்த செயல்பாடு மிகவும் சாதகமான ஒன்று.
அதேசமயம் நடராஜன் இந்த நெருக்கடியை மட்டும் எதிர்கொள்ளவில்லை. அவருக்கு அணிக்குள்ளும் சில சவால்கள் இருந்தன. டெல்லி அணியில் நிறைய வீரர்கள் தங்கள் இடத்துக்காகக் காத்திருக்கிறார்கள். பெரும் தொகைக்கு வாங்கப்பட்ட ஆகிப் நபியும் வெளியே காத்திருக்கிறார். இது நில நேரங்களில் நேர்மறையான விஷயமாகவும் இருக்கும், சில நேரங்களில் நெருக்கடியாகவும் அமையும். இவை அனைத்தையும் நடராஜன் சிறப்பாகக் கையாண்டார்.
இன்னொரு நல்ல விஷயம் நீண்ட காலம் கழித்து அவரால் டெத் ஓவர்களில் நன்றாகப் பந்துவீச முடிந்தது. தன் யார்க்கர்களை சரியாக செயல்முறைப்படுத்த முடிந்தது. இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் அவர் யார்க்கர்களை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு பரிணாமம் மட்டுமே கொண்ட பௌலர் அல்ல. அவரால் ஸ்லோ பவுன்சர்கள், ஆஃப் கட்டர்கள் வீச முடியும். எந்த மாதிரியான வீரர்களுக்கு எந்த மாதிரியான பந்துகள் வீசவேண்டும் என்ற அந்த அனுபவம் அவருக்கு இருக்கிறது.
நடராஜன் சந்திக்கக்கூடிய சவால்கள்

பட மூலாதாரம், Getty Images
கடந்த போட்டியில் விளையாடிய லக்னௌ மைதானம் சற்று பெரியது என்பதால் அதுவும் அவருக்கு சற்று சாதகமாக அமைந்தது. ஆனால், இன்று மும்பை இந்தியன்ஸின் பலமான பேட்டிங் யூனிட்டுக்கு எதிராக அவர்கள் ஆடப்போவது சற்றே சிறிய பவுண்டரிகள் கொண்ட அருண் ஜேட்லி மைதானத்தில். இது நடராஜனுக்கு சற்று சவாலாக இருக்கும்.
அவருடைய ஸ்லோ பால்கள் இந்த மைதானத்தில் நல்ல விளைவைக் கொடுக்குமா என்பது எனக்கு சந்தேகம்தான். இந்த மைதானத்தில் முதல் போட்டியில் விளையாடப்போகிறார்கள். இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமானதாகவும் இருக்கும். ஐபிஎல் தொடரின் தொடக்க காலத்தில் கொஞ்சம் மெதுவாக இருந்த டெல்லி ஆடுகளங்கள் தற்போது பேட்டிங்குக்கு உகந்ததாக இருக்கின்றன.
இப்படியொரு ஆடுகளத்தில் அவர் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராகப் பந்துவீசப்போகிறார். ரோஹித், ரிக்கில்டன் என அந்த அணியின் பேட்டர்கள் தங்கள் ஃபார்மை கடந்த போட்டியில் நன்றாக வெளிப்படுத்தினார்கள். நடராஜன் ஒன்று பவர்பிளேவின் கடைசி கட்டத்தில் பந்துவீசுவார் அல்லது டெத் ஓவர்களில் வீசுவார்.
கடந்த போட்டியில் அவரை பவர்பிளேவுக்குப் பின் கொண்டுவந்தார்கள். அதனால் சற்று நெருக்கடி குறைவாக இருந்தது. ஆனால், போகப்போக அவரை பவர்பிளேவில் பயன்படுத்தத் தொடங்குவார்கள். அது அவருடைய ஸ்பெஷாலிட்டி.
டெத் ஓவர்களில் அவர் ஹர்திக், திலக் வர்மா போன்ற வீரர்களை சந்திக்க நேரிடலாம். ஒரு நல்ல இடது - வலது காம்பினேஷனுமே கூட அவருக்கு சவால் கொடுக்கலாம். அப்படியிருக்கையில் அவர் தன் யார்க்கர்களை மிகவும் துல்லியமாக வீசவேண்டும். ஸ்லோயர் பால்கள் இங்கே பெரிதாக உதவாது எனும்போது யார்க்கர்களையே அதிகம் நம்பியிருக்கவேண்டிய நிலை ஏற்படும்.
சாய் சுதர்ஷன் அவர் பாணியிலேயே ஆடவேண்டும்

பட மூலாதாரம், Getty Images
சமீபமாக ஒவ்வொரு ஓப்பனருமே மிகப் பெரிய ஸ்டிரைக் ரேட்டில் ஆடவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அப்படி நடக்காதபோது அந்த பேட்டர்கள் மீது விமர்சனங்கள் எழுப்பப்படுகிறது. கடந்த போட்டிக்குப்பிறகு சாய் சுதர்ஷன் அந்த விமர்சனத்தை சந்தித்தார். ஆனால், அதற்காக அவருடைய செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பத்தேவையில்லை. கடந்த சீசனில் ஆரஞ்ச் கேப் வென்றவர் அவர்தான். அதுமட்டுமல்லாமல் அணியின் சூழ்நிலையும் அவரின் அணுகுமுறையில் தாக்கம் ஏற்படுத்துகிறது என்பதை மறந்துவிடக்கூடாது.
குஜராத் அணியின் மிடில் ஆர்டர் பலத்தை வைத்துப் பார்க்கும்போது அந்த அணியின் டாப் 3 பேட்டர்கள் மீதுதான் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன், ஜாஸ் பட்லர் மூவருக்குமே தெரியும் அவர்கள் சற்று நேரம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று. அவர்களுள் ஒருவராவது 16வது ஓவர் வரை ஆடியாகவேண்டும். அவர்கள் அனைவருமே 70 - 80 ரன்கள் அடிக்கக்கூடிய வீரர்கள். அவர்கள் களத்தில் செட் ஆனார்கள் என்றால் அவர்களால் பெரிய ஸ்கோர் எடுக்கமுடியும்.
சாய் சுதர்ஷனைப் பொறுத்தவரை அவர் ஆடுவது 'பெர்சென்டேஜ் கிரிக்கெட்'. அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட் போல் அவர் முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டவில்லை என்றாலும் கூட, ஸ்கோர் செய்வதற்கு அவருக்கென்று ஒரு தனி வழி இருக்கிறது. அவருடைய பலம் அதுதான். அவர் அதன்மீது நம்பிக்கை வைத்துத்தான் ஆகவேண்டும். அவரால் ஆஃப் சைட், லெக் சைட் என இருபக்கமும் அடிக்கமுடியும். ஃப்ரன்ட் ஃபூட், பேக்ஃபூட் இரண்டிலுமே திடமாக ஆடமுடியும்.
அவரால் லாவகமாக கியர்களை மாற்றியும் ஆடமுடியும். 15 பந்துகளுக்குப் பிறகு அவரால் அதிரடியைக் கையில் எடுக்கமுடியும். ஆனால், முதல் 15 பந்துகளிலும் கூட சுமார் 200 ஸ்டிரைக் ரேட்டில் ஆடவேண்டும் என்று நினைத்தால் அது பாதகமாகவும் முடியலாம். குஜராத் டைட்டன்ஸின் மிடில் ஆர்டர் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது அவர் தன்னுடைய பாணியில் தான் விளையாடியாகவேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் அதிகம் ஸ்டிரைக் ரேட் பற்றி, முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடுவது பற்றி பெரிதாகப் பேசப்படுகிறது. சன்ரைசர்ஸ் பாணியில் பவர்பிளேவிலேயே 70,80 ரன்கள் எடுக்கப்படுகிறது. அவ்வப்போது 100 ரன்களும் கூட டார்கெட் செய்யப்படுகிறது. அது ஒருபக்கம் இருந்தாலும் குஜராத் டைட்டன்ஸ் தங்களுடைய அணுகுமுறையை, தங்களுடைய பலத்தைக் கைவிடக்கூடாது.
சாய் சுதர்ஷன் vs ஆர்ச்சர் & பர்கர்

பட மூலாதாரம், Getty Images
குஜராத் டைட்டன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸை அஹமதாபாத்தில் எதிர்கொள்கிறது. இங்கு நன்றாக பேட்டிங் செய்யமுடியும். சாய் சுதர்ஷன் இங்கு நல்ல ரெக்கார்ட் வைத்திருக்கிறார். இருந்தாலும் இந்தப் போட்டியில் அவருக்கு சில சவால்கள் இருக்கவே போகின்றன. குறிப்பாக முதல் 4 ஓவர்களில்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முன்பு ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் சந்தீப் ஷர்மா ஆகியோரைக் கொண்டு தங்கள் பந்துவீச்சைத் தொடங்கும். ஆனால், இம்முறை இரு பக்கமும் அதிவேகப்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்துகிறார்கள். ஒருபக்கம் மணிக்கு சுமார் 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசக்கூடிய நாந்த்ரே பர்கர், இன்னொருபக்கம் மணிக்கு சுமார் 145 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய ஆர்ச்சர்.
அதுமட்டுமல்லாமல், ஆர்ச்சர் அந்த வேகத்தில் பந்தை ஸ்விங்கும் செய்வார். இடது கை பேட்டர்களுக்கு எதிராக அவர் எப்போதுமே சிறப்பாக வீசுவார். அதனால் அவர்களுக்கு எதிராக சாய் சுதர்ஷன் என்ன மாதிரியான ஷாட்களை ஆடப்போகிறார் என்பதைப் பார்க்கவேண்டும்.
சாய் சுதர்ஷனுக்கு ஆஃப் சைட் ஸ்கொயர் திசையில் விளையாடுவது மிகவும் பிடிக்கும். தேர்ட் மேன், பாயின்ட், கவர் பாயின்ட் திசையில் அதிகம் அடிப்பார். பந்தின் வேகத்தைப் பயன்படுத்தி நன்கு அந்த ஷாட்களை விளையாடுவார். அதேசமயம் சுமார் 140+ வேகத்தில் போடக்கூடிய பௌலர்களுக்கு எதிராக அது சவாலாகத்தான் இருக்கும். இது மிகச் சிறந்த யுத்தமாக இருக்கும்.
வாஷிங்டன் & ஷாரூக் இருவருக்கும் முக்கியமான சீசன்

பட மூலாதாரம், Getty Images
குஜராத் டைட்டன்ஸ் மிடில் ஆர்டரில் வாஷிங்டன் சுந்தர், ஷாரூக் கான் இருவர் மீதும் நெருக்கடி இருக்கும். அவர்கள் இருவருக்குமே இந்த சீசன் மிகவும் முக்கியமானது. ஏனெனில், குஜராத் டைட்டன்ஸ் மிடில் ஆர்டரில் இவர்களின் பங்களிப்பு பெருமளவு தேவைப்படுகிறது. என்னதான் குஜராத்தின் டாப் ஆர்டர் தான் பெருமளவு ரன் சேர்க்கவேண்டும் என்று கூறினாலும் மிடில் ஆர்டரும் நல்ல பங்களிப்பைக் கொடுப்பது அவசியம். அப்போதுதான் அந்த அணிக்கு நல்ல ஃபினிஷ் கிடைக்கும்.
ஒரு பேட்டராக வாஷிங்டன் சுந்தருக்கு இது ரொம்பவே முக்கியமான சீசன். முன்பெல்லாம் அவரை மேலே, கீழே என்று மாற்றி மாற்றி ஆடவைப்பார்கள். ஆனால், இம்முறை குஜராத் அணி அவருக்கு நம்பர் 5 இடத்தை உறுதியாக்கியிருக்கிறது. அவருடைய ரோல் இதுதான் என்று தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.
குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் நான் விரும்பும் விஷயம் அது. அங்கு நிறைய தமிழ்நாட்டு வீரர்கள் ஆடியிருக்கிறார்கள். அவர்கள் அந்த அணி நிர்வாகத்தைப் பற்றி, ஆஷிஷ் நெஹ்ரா பற்றி நிறைய சொல்லியிருக்கிறார்கள். அங்கு அந்த வீரர்களுக்கு நன்கு உற்சாகமாக கிரிக்கெட் விளையாடக்கூடிய ஒரு வெளி உருவாக்கப்பட்டிருக்கிறது. அங்கு ஒவ்வொரு வீரருக்கும் அவர்களின் ரோல் இதுதான் என்ற தெளிவு ஏற்படுத்தப்படுகிறது. அப்படியொரு சூழலில் வாஷிங்டன் சுந்தர் இம்முறை நல்ல பங்களிப்பைக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். அவரது திறமை மீது எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவர் அதை இந்த அரங்கில் அரங்கேற்றவேண்டும்.
அதேசமயம் ஷாரூக் மீது சற்று கூடுதல் நெருக்கடி இருக்கும். ஏனெனில், அவருக்குப் பிறகு பெரிய பேட்டர்கள் இல்லை. அதனால் அவர்மீது சற்று கூடுதல் பொறுப்பு இருக்கும். ராகுல் தெவேதியாவுடன் சேர்ந்து ஆட்டத்தை முடித்துக் கொடுக்கும் பொறுப்பு அவருக்கு இருக்கிறது.
இந்தப் போட்டி நடக்கும் அஹமதாபாத் மைதானம் அவருக்கு உகந்ததாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். சமீபத்தில் தான் அங்கு ஒரு போட்டியில் விளையாடினோம். நன்கு பேட்டிங்குக்கு ஏற்ற மைதானம். செம்மண் ஆடுகளம். நல்ல பவுன்ஸ் இருக்கும். அதை ஷாரூக் விரும்புவார். அதுமட்டுமல்லாமல் அங்கு பந்து அங்கு நன்கு பயணிக்கும். கொஞ்சம் உயரமாக ஏறினாலும் வெகுதூரம் செல்லும். சிக்ஸர்கள் அடிப்பதற்கு ஏற்ற மைதானம் அது. அதனால், ஷாரூக் ஒரு நல்ல செயல்பாட்டைக் கொடுப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
இன்னொன்று, ஷாரூக் கான் சற்று திட்டமிட்டு தன் இன்னிங்ஸை கட்டமைக்கவேண்டும். ராயல்ஸ் அணி பர்கர் மற்றும் ஆர்ச்சரின் பெரும்பகுதி ஓவர்களை முன்னரே முடிக்கப் பார்க்கிறது. அதனால், சந்தீப் ஷர்மா, பிரிஜேஷ் ஷர்மா ஆகியோர் டெத்தில் அதிகம் பந்துவீசுவார்கள். பிரிஜேஷ் ஐபிஎல் அரங்கில் புதுமுகம் என்பதால், அவரை டார்கெட் செய்து ஷாரூக் ஆடலாம். அவர் பொதுவாகவே நன்கு கணக்கிட்டு ஆடக்கூடியவர். அதை அவர் இந்தப் போட்டியில் செய்வார் என்று எதிர்பார்க்கிறேன்.

பட மூலாதாரம், Getty Images
சாய் கிஷோருக்கு வாய்ப்பு கிடைக்குமா?
குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் கிஷோருக்கு வாய்ப்பு கிடைப்பது என்பது தற்போதைக்கு சற்று கடினம் என்பது போலத்தான் தெரிகிறது. ஏற்கெனவே ரஷீத் கான், வாஷிங்டன் சுந்தர் என 2 ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். வாஷிங்டன் 2 ஓவர்கள் தான் பந்துவீசுவார் என்று கருதினாலும் கூட 6 ஓவர்களுக்கு ஸ்பின் இருக்கிறது. அதனால் மூன்றாவது ஸ்பின்னர்களைப் பயன்படுத்துவது சந்தேகம்தான்.
சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ரபாடா போன்ற முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களோடு அஷோக் ஷர்மாவும் இருக்கிறார். அதனால் அவர்களுக்குப் போதுமான ஓவர்கள் வீசுவதற்கான பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் சாய் கிஷோருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது.
என்னைக் கேட்டால் சாய் கிஷோருக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும். அவர் கடந்த சீசன் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது, கடந்த ஆண்டு பெங்களூருவில் நடந்த போட்டியில் ஜித்தேஷ் ஷர்மாவுக்கு எதிராக ஓவர் தி ஸ்டம்ப் பந்து அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் வெளியே வீசி விக்கெட் எடுப்பார். அப்படி விக்கெட் எடுப்பதையெல்லாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் பாத்திருப்போம். ஆனால், சாய் கிஷோரால் அதை டி20 போட்டிகளிலும் செய்ய முடியும்.

பட மூலாதாரம், Getty Images
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி, ஜடேஜா என நிறைய இடது கை பேட்டர்கள் இருப்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான். ஆனால், சீசன் போகப்போக அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவேண்டும். அந்த அணியின் வெற்றிக்கு அவரால் பங்களிக்க முடியும். ஒரு வேகப்பந்துவீச்சாளரைக் குறைத்துக்கொண்டு அவரை அணியில் சேர்க்கலாம்.
ஆனால், கடந்த போட்டியில் அவர் இம்பேக்ட் சப்ஸ்டிட்யூட் பட்டியலில் கூட சேர்க்கப்படாதது தான் சற்று வருத்தமாக இருக்கிறது. அவருக்கு முன்னதாக மானவ் சூத்தர், ஜெயந்த் யாதவ் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. அதானல், சாய் கிஷோருக்கு போகப்போக வாய்ப்பு கிடைக்குமா என்பதையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
(கட்டுரையாளர் பாபா அபாரஜித் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர். 2012ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். தற்போது கேரளா அணிக்காக விளையாடிவரும் அவர் வர்ணனையாளராகவும் செயல்படுகிறார்)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































