நாக்கு ஓய்வு நிலையில் மேல் அன்னத்தில் ஒட்டாமல் கீழே இருந்தால் என்ன பிரச்னை? 5 முக்கிய விஷயங்கள்

டங் டை அல்லது ஆங்கிலோக்ளோசியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

உங்கள் நாக்கு ஓய்வுநிலையில் இருக்கும் போது மேல் அன்னத்தில் பொருந்தாவிட்டால், அது நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத பிரச்னைகளை ஏற்படுத்தும் என தெரியுமா? உணவை மெல்லுதல், விழுங்குதல், மூச்சு விடுதல் போன்றவற்றில் நீங்கள் சந்திக்கும் ஏதேனும் பிரச்னைகளுக்கு அதுகூட ஒரு காரணமாக இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

ஓய்வுநிலையில் இருக்கும்போது உங்களின் நாக்கு மேல் அன்னத்தில் இருப்பது ஏன் முக்கியம்? அப்படி இல்லாவிட்டால் எத்தகைய பிரச்னைகள் ஏற்படலாம்?

நீங்கள் நன்றாக கவனித்திருந்தால், பேசாமலோ அல்லது மெல்லாமலோ நம் நாக்கு ஓய்வு நிலையில் இருக்கும்போது, அது வாயின் மேல் அன்னத்தில் (hard palate) தான் ஒட்டியிருக்கும்.

அப்படி ஒட்டியிருப்பது உங்களின் பல் வரிசை சீரானதாக இருக்க உதவிபுரியலாம் என்கிறது ஒரு ஆய்வு . ஒருவேளை கீழ் பல் வரிசையின் அடியில் நாக்கு ஒட்டியிருந்தால் என்ன பிரச்னை என தோன்றலாம்? ஒருவேளை அப்படி ஒட்டியிருந்தால், விழுங்கும் போது அல்லது பேசும்போது நாக்கு முன்னோக்கித் தள்ளப்படுவது போன்ற சூழல் ஏற்பட்டால், நாளடைவில் அது பல் வரிசைகளின் ஒழுங்கற்ற அமைவுக்கு வழிவகுக்கலாம் என்கிறது இந்த ஆய்வு.

பல் வரிசை மற்றும் தாடைகளின் வளர்ச்சி மற்றும் அமைவு ஆகியவை, நாக்கு, பற்கள் மற்றும் அதை சுற்றியுள்ள அமைப்புகள் ஒன்றோடொன்று எப்படி தொடர்புகொள்கின்றன என்பதை பொறுத்தே அமைவதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. நாக்கு உறிஞ்சுதல், மெல்லுதல், பேச்சு போன்ற செயல்பாடுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பாக கருதப்படுகிறது.

"வழக்கமாக நாக்கு கடினமான அன்னத்தில் (hard palate) தான் ஓய்வு நேரத்தில் இருக்கும். அப்படியில்லாமல் சிலருக்கு பிறவியிலேயே ஒரு தசைப்பட்டை நாக்கை கீழ்நோக்கி இழுத்துக் கொண்டிருக்கும். இது டங் டை (tongue tie) அல்லது ஆங்கிலோக்ளோசியா (ankyloglossia) என அழைக்கப்படுகிறது." என்கிறார், சென்னையை சேர்ந்த பல் மருத்துவர் தான்யா.

இதனால் இரு பல்வரிசைகளுக்கு இடையே இடைவெளி ஏற்படுவது உள்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படலாம் என்கிறார் தான்யா. அவர் பகிர்ந்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

உணவை மெல்வதில் பிரச்னை

வழக்கமாக உணவை மெல்லும்போது உணவுக்குழாய் மூடிய நிலையில் இருக்க வேண்டும். ஆனால், நாக்கு மேல் அன்னத்தில் இல்லாமல், கீழ்வரிசை பற்களுக்கு பின்னால் இருக்கும்போது, வாய் வழியே மூச்சு விட வேண்டிய நிலை ஏற்படலாம். அதற்கு நீங்களே உங்கள் நாக்கை கீழ்புறத்தில் வைத்து முயற்சித்துப் பார்த்தால் வாய்வழியே மூச்சுவிட வேண்டிய நிலை ஏற்படுவதை கவனிக்கலாம். நாக்கு மேல் அன்னத்தில் இருக்கும்போது மூச்சு விடுவது சரியாக இருக்கும். கீழ்நிலையில் இருக்கும்போது உணவை விழுங்குவது கடினமாக இருக்கும்.

டங் டை அல்லது ஆங்கிலோக்ளோசியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இப்பிரச்னை பரவலாக பிறவியிலேயே ஏற்படுவதாக பல் மருத்துவர் தான்யா கூறுகிறார்.

மூச்சு விடுவதில் சிரமம்

இந்த பிரச்னை இருப்பவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருக்கலாம். இதில், உணவுக்குழலும் சுவாசப்பாதை இரண்டும் திறந்திருக்கும். இதனால், உணவு உள்ளே செல்லும்போது மூச்சு இழுக்கும். இதனால் சுவாசிப்பதில் சிரமங்கள் ஏற்படலாம்.

டங் டை

இதில் பொதுவாக பிறவியிலேயே ஏற்படும் 'டங் டை' (tongue tie) என்பது பொதுவான பிரச்னையாக உள்ளது. எனினும், அடிக்கடி வாய் வழியாக மூச்சு விடுபவர்கள், கட்டை விரல் உறிஞ்சும் பழக்கம் உள்ளவர்களுக்கு வாய் திறந்தே இருக்கும். இந்த பழக்கம் உள்ளவர்களுக்கு நாக்கு கீழே தான் ஓய்வுநிலையில் இருக்கும். அவர்களால் வாயை மூடவே முடியாது. இதனால், பெரியவர்களுக்கும் இத்தகைய பழக்கங்களால் இப்பிரச்னை ஏற்படக் கூடும்.

பற்களின் வரிசையில் மாற்றம்

பெரும்பாலும் மேல் வரிசை பற்கள் (upper arch) 'யு' வடிவத்தில் இருக்கும். ஆனால், நாக்கு அடிப்புறத்தில் ஒட்டியிருப்பவர்களுக்கு 'வி' வடிவத்தில் இருக்கும். இதனால், வாயை மூடுவதில் சிரமமாக இருக்கும்.

பல் வரிசை சரியாக அமைவதற்கும் நாக்கின் அமைவு ஒழுங்காக இருத்தல் வேண்டும். ஏனெனில், நாக்கு மேல் அன்னத்தில் இருக்கும்போது பற்களுக்கு குறிப்பிட்ட அழுத்தத்தை அளித்து, மேல் வரிசை பற்கள் ஒழுங்காக இருக்க பங்களிக்கிறது. இப்பிரச்னை உள்ளவர்களுக்கு கீழ் வரிசையில் இரு பற்களுக்கு இடையே இடைவெளி ஏற்படலாம்.

டங் டை அல்லது ஆங்கிலோக்ளோசியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

பேசுவதில் பிரச்னை வரக்கூடும்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"பேசுவது சிக்கலான மற்றும் பல காரணிகளைக் கொண்டது; இவற்றில் மரபியல் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஒலிகளைத் தவறாக உச்சரிப்பதற்கோ அல்லது பேச்சுக் குறைபாடுகளுக்கோ மரபியல் மிகத் தெளிவாக அறியப்பட்ட ஒரு காரணமாகும். வாய்மொழி மொழித்திறன் வளர்ச்சியானது, நாக்கு, அன்னம், பற்கள், உதடுகள், ஈறு விளிம்பு (alveolus) மற்றும் பிற ஒலிப்புறுப்புகளைக் கட்டுப்படுத்தும் நரம்புப் பாதைகளின் சிக்கலான ஒருங்கிணைப்பை உள்ளடக்கியது." என குறிப்பிடுகிறது ஓர் ஆய்வு .

"காற்றில் பயணித்துச் செவிப்பறையை அதிரச் செய்யக்கூடிய ஒலி அலைகளை உருவாக்கும் உடலின் திறன், பேசும் மொழிக்கு அவசியமானதாகும். நுரையீரல், குரல்வளை மற்றும் தொண்டை, வாய், அன்னம், மூக்கு ஆகியவற்றை உள்ளடக்கிய மேல் சுவாசப் பாதை ஆகியவற்றைக் கொண்ட பேச்சு உறுப்பு மண்டலமானது, காற்றோட்டத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இவ்வொலிகளை மீண்டும் உருவாக்குகிறது." என அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

"நாக்கின் இயல்பான அளவு வயதுக்கு ஏற்ப மாறுபடுகிறது; இது பிறந்த பிறகு முதல் எட்டு ஆண்டுகளில் மிக வேகமாகவும், 18 வயதில் அதன் அதிகபட்ச அளவையும் அடைகிறது." என கூறுகிறது அந்த ஆய்வு.

"நாக்கின் வடிவம் மற்றும் வெளிநீட்டம், பேச்சுக் குறைபாடுகள், விழுங்குவதில் உள்ள சிக்கல்கள் அல்லது சுவாசச் சவால்கள் போன்ற அளவுகோல்களை மதிப்பிடுவதன் மூலம் இந்த நோய் பெரும்பாலும் கண்டறியப்படுகிறது. உதடுகளுக்கு வெளியே நாக்கு வெளிநீட்டுவதே பெருநாக்கின் (மேக்ரோக்ளோசியா) முதன்மை அறிகுறியாகும்." என குறிப்பிடுகிறது அந்த ஆய்வு.

நாளமில்லாச் சுரப்பிக் கோளாறுகள், கட்டிகள் அல்லது தசை மிகை வளர்ச்சி ஆகியவற்றால் ஏற்படும் இப்பிரச்னை மேக்ரோக்ளோசியா என வரையறுக்கப்படுகிறது. நாக்கு ஒழுங்கற்ற அமைவில் இருந்தால் நாக்கின் அளவும் சிறிதாகலாம் என விளக்குகிறார் மருத்துவர் தான்யா.

டங் டை அல்லது ஆங்கிலோக்ளோசியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

பரிசோதனையும் சிகிச்சையும்

"இந்த பிரச்னைகள் இருந்தால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை வாயிலாக அத்தகைய தசைப் பட்டையை நீக்கிவிடுவார்கள். பெரும்பாலும் பிறவியிலேயே ஏற்படும். பெரியவர்களுக்கும் சில பழக்கங்கள் வாயிலாக ஏற்படலாம்." என கூறுகிறார் பல் மருத்துவர் தான்யா.

குழந்தைகளிடத்தில் இதுபோன்ற பிரச்னைக்கு பொதுவாக அறுவை சிகிச்சைக்கு பின் சில பயிற்சிகளும் அளிக்கப்படுவதாக, 2022ஆம் ஆண்டில் பிபிசியில் வெளியான கட்டுரை ஒன்றில், லண்டனைச் சேர்ந்த சுயாதீன மகப்பேறு உதவியாளர் மற்றும் தாய்ப்பால் புகட்டுதல் குறித்த ஆலோசகரான கார்மெல் ஜென்டில் கூறுகிறார்.

"அந்தச் சிறிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு, பல்வேறு பயிற்சிகள் மூலம் தங்கள் நாக்கைப் பயன்படுத்தவும் அதை வலுப்படுத்தவும் குழந்தைக்குப் பெற்றோர் உதவ வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. குழந்தைகள் தங்கள் நாக்கை உரிய முறையில் பயன்படுத்த நாங்கள் உதவுகிறோம்." என்கிறார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு