தென் அமெரிக்காவின் 'பேய்ப் பறவையை' தேடிக் கண்டுபிடித்த பறவை ஆர்வலர்

பட மூலாதாரம், FabioMaffei/Getty Images
- எழுதியவர், மரியானா காஸ்டினெய்ராஸ், நடாலியா குரேரோ
- பதவி, பிபிசி
- எழுதியவர், யோர்கே பெரெஸ் வேலெரி
- பதவி, பிபிசி முண்டோ
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
மௌரிசியோ சில்வெரா பறவைகளைக் கவனிப்பதை மிகவும் விரும்புவதால், ஒரு முக்கியமான கோல் விழுந்த பிறகு கால்பந்து ரசிகர் எப்படி உற்சாகத்துடன் கத்துவாரோ அந்த உணர்வுடன் தனது உணர்வை ஒப்பிடுகிறார்.
அவரைப் பொறுத்தவரை, இதுவொரு தகவல், ஓர் இடம் அல்லது ஒரு புகைப்படம் கிடைப்பதில் தொடங்குகிறது. அதன் பிறகு ஓர் அரிய பறவையைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
அவர் பல விஷயங்களை பற்றிச் சிந்திக்க வேண்டும் மற்றும் வெவ்வேறு சாத்தியக்கூறுகளைக் கணக்கிட வேண்டும். ஏனெனில், அனைத்தும் மாறக்கூடும், மேலும் அவருடைய எல்லா முயற்சிகளும் இறுதியில் பயனற்றதாகிவிடலாம்.
பின்னர் இறுதியில் அவர் அந்தப் பறவையைக் கண்டுபிடித்து, அதன் ஒலியைக் கேட்டு, அதைப் புகைப்படம் எடுத்து, அதை இன்னும் நன்றாகப் புரிந்துகொண்டார்.
"என்ன செய்வதெனத் தெரியாமல், கத்துவதா, புகைப்படம் எடுப்பதா அல்லது யாரிடமாவது சொல்வதா என்று நெஞ்சில் ஒருவித பதற்றம் ஏற்படுகிறது" என்று 24 வயதான உருகுவேவை சேர்ந்த அந்த உயிரியல் மாணவர் பிபிசியிடம் கூறுகிறார்.
பறவைகளைக் கவனிப்பதில் அவர் ஏற்கெனவே மிகவும் திறமையானவராகவும் அனுபவம் வாய்ந்தவராகவும் இருக்கிறார்.
மேலும் அவர், "இது கிட்டத்தட்ட பூகிமேனை தேடுவதைப் போலவும், உங்களால் எத்தனை சிறிய பறவைகளைக் கண்டுபிடிக்க முடியும், நீங்கள் மிகவும் அரிதான ஒன்றைக் கண்டுபிடிக்கிறீர்களா எனப் பார்ப்பது போலவும் இருக்கிறது" என்று கூறுகிறார்.

தற்போது சில்வெரா தனது கேமரா உபகரணங்களுடன் ஒரு சிறப்புப் பணிக்காக வடக்கு உருகுவேக்கு 650கி.மீ பயணம் செய்கிறார். அந்தப் பணி, புகழ்பெற்ற உருடாவ் பறவையைக் கண்டுபிடித்து புகைப்படம் எடுப்பதாகும்.
உருடாவ் என்பது தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவில் காணப்படும் ஓர் இரவாடிப் பறவையாகும். இந்தப் பகுதிகளின் பல கிராமப்புரங்களில், இது பல புராணங்களுக்கும் கட்டுக் கதைகளுக்கும் உத்வேகம் அளித்துள்ளது.
இதற்கு மிகப்பெரிய வாயும், மரப்பட்டை போன்ற பழுப்பு-சாம்பல் நிற இறகுகளும் உள்ளன. இது மர உச்சிகளிலோ அல்லது காய்ந்த கிளைகளிலோ எளிதில் மறைந்துகொள்ள உதவுகிறது.
ஆனால், இதைப் பற்றிய மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம், அதன் மிகப்பெரிய மஞ்சள் நிறக் கண்கள்தான்.
பகல் நேரத்தில், இது அசையாமல் மரங்கள் அல்லது வேலிக் கம்பங்களில் மறைந்து கொள்கிறது. இரவில், இது பூச்சிகளை வேட்டையாட வெளியே வருகிறது.

பட மூலாதாரம், Mauricio Silvera
இதன் அறிவியல் பெயர் நைக்டிபியஸ் கிரிசியஸ் (Nyctibius griseus).
உருகுவேவில் இது உருடாவ் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் பிற நாடுகளில், மக்கள் இதை குச்சிப் பறவை, பேய்ப் பறவை, சூனியக்கார பறவை, போட்டூ மற்றும் பிற பெயர்களில் அழைக்கிறார்கள்.
"இதற்கு ஒரு நம்ப முடியாத வகையிலான குரல் உள்ளது. அது நள்ளிரவில் ஓர் ஓலம் போல் ஒலிக்கும். மேலும் பலருக்கு அது ஒருவர் அழுவது போல் இருக்கும். இரவில் அதைக் கேட்டால், அது மிகவும் திகிலூட்டுவதாக இருக்கும். இது ஓர் அரக்கனைப் போலத் தோற்றமளிப்பதால் மக்கள் இதைப் பற்றி மீம்களை உருவாக்குகிறார்கள்," என்கிறார் சில்வெரா.
காட்டுயிர்களைப் பாதுகாக்கப் பணியாற்றுவோர், அந்தப் பறவை தீங்கற்றது எனக் கூறுகிறார்கள். சில நாட்டுப்புறக் கதைகள் அதற்கு ஓர் எதிர்மறையான பிம்பத்தை ஏற்படுத்தியிருப்பதால், அந்த இனத்தை மதித்துப் பாதுகாக்குமாறு அவர்கள் மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

பட மூலாதாரம், Mauricio Silvera
நேரில் காணக் கிடைத்த வாய்ப்பு
சில்வெரா, 13 வயதில் இருந்தே உருகுவேவில் காணும் பறவைகளைப் பற்றிய தகவல்களை, புகைப்படங்களை மற்றும் ஒலிப்பதிவுகளை நிபுணர்களும் பறவை ஆர்வலர்களும் பகிர்ந்துகொள்ளும் உலகளாவிய தளமான eBird-இல் பகிர்ந்து வருகிறார்.
"உருகுவேவில் சுமார் 520 பதிவு செய்யப்பட்ட பறவை இனங்கள் உள்ளன. ஒரே பயணத்தில், நீங்கள் 120 முதல் 130 பறவை இனங்கள் வரை பார்க்கலாம்," என்று பெல்லா யூனியனுக்கு வெளியே ஒரு புழுதி நிறைந்த பாதையில் நடந்துகொண்டே அவர் கூறுகிறார். அங்கே அவர் உருடாவ் பறவையைக் கண்டுபிடிப்பார் என்று நம்புகிறார்.
பின்னர், நடந்து கொண்டிருக்கும்போதே, சில்வெரா திடீரென தனது வாயை மூடிக்கொண்டார். அவர் பல ஆண்டுகளாகப் பறவைகளை அவதானித்து வருகிறார். ஆனாலும், தான் தேடிக் கொண்டிருந்த ஒரு பறவை இனத்தைக் கண்டதால் ஏற்பட்ட பரவசத்தை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

அவர் புதர்களை நோக்கிச் சுட்டிக்காட்டினார். அங்கே ஒரு நீண்ட, காய்ந்த கிளையின் நுனியில், தனது உருமறைப்பால் மறைந்து, தனது முட்டையைப் பாதுகாத்துக்கொண்டு, அந்த உருடாவ் பறவை இருந்தது.
"அங்கே நீங்கள் பார்க்கும் அந்தச் சிறிய வெள்ளைப் பொருள் ஒரு முட்டை. அவை ஒரேயொரு முட்டையை மட்டுமே இடும். எந்தவிதமான ஆதரவுமின்றி, மரக்கட்டையின் மீது நேரடியாகவே முட்டையிடும்," என்று அவர் கிசுகிசுத்தார்.
அதைப் பார்த்து, பதிவு செய்ததில் மகிழ்ச்சியடைந்த சில்வெரா, வீட்டிற்குத் திரும்பினார். ஆனால், அவர் அந்தக் கூட்டைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார்.
ஒரு மாதம் கழித்து, தான் ஏற்கெனவே ஊகித்ததை உறுதி செய்ய அவர் பெல்லா யூனியனுக்கு திரும்பினார். இப்போது அவருடைய பெரிய பறவை புகைப்படத் தொகுப்பில் சேர்ப்பதற்கு ஒன்று அல்ல, இரண்டு உருடாவ்கள் இருந்தன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































