இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசும் முன் பல நாட்டு பிரதிநிதிகள் வெளிநடப்பு - ஐநாவில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், Ryan Murphy/Getty Images
- எழுதியவர், ஜரோஸ்லாவ் லுகிவ் மற்றும் டாம் பேட்மேன், வெளியுறவு விவகாரங்கள் செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இரான், காஸா மற்றும் மத்திய கிழக்கின் பிற பகுதிகளில் தனது நாட்டின் ராணுவ நடவடிக்கைகளை, ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் வியாழக்கிழமை (செப்டம்பர் 24) ஆற்றிய உரையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தீவிரமாக நியாயப்படுத்தினார்.
அவர் மேடையேறியபோது பிரதிநிதிகள் பலரும் அதற்கு எதிர்ப்பாக வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து, போராட்டத்தைத் தொடருவதாக நெதன்யாகு சூளுரைத்தார்: "நாங்கள் வெற்றி பெறப் போகிறோம். எங்களுக்கு வேறு வழியில்லை."
வெளிநடப்புக்கு பதிலளித்த அவர், "இன்னும் அரங்கில் இருந்து வெளியேறாத ஏதேனும் தார்மீக கோழைகள் இருந்தால், தயவுசெய்து இப்போதே வெளியேறுங்கள்" என்றார்.
காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டுகளையும் நெதன்யாகு நிராகரித்தார்.
இதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, பதிவு செய்யப்பட்ட காணொளி செய்தியில் பாலத்தீன அதிபர் மக்மூத் அப்பாஸ், இஸ்ரேலிய கொள்கைகள், குறிப்பாக ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் யூத குடியிருப்புகளைச் சட்டவிரோதமாக விரிவுபடுத்துவது, "பாலத்தீன மக்களின் தாயகத்தில் அவர்களின் வாழ்வையும் இருப்பையும்" அச்சுறுத்துகிறது என்று ஐ.நா.விடம் தெரிவித்தார்.
மேலும், இது பாலத்தீனர்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அமைதிக்கான சர்வதேச ஆதரவு பெற்ற இரு நாடுகள் தீர்வையும் ஆபத்துக்குள்ளாக்குகிறது என்றார்.
காஸாவில் பாலத்தீனர்கள் இஸ்ரேலிய ராணுவத்தினரால் "கொலை, அழிவு, பட்டினி மற்றும் இடம்பெயரச் செய்யும் முயற்சிகள், அதோடு ஒரு இனப்படுகொலைப் போருக்கும்" உள்ளாக்கப்படுகிறார்கள் என்றும் அப்பாஸ் கூறினார்.
அமெரிக்க நுழைவு விசா மறுக்கப்பட்டதால், பாலத்தீன தலைவர் இந்த ஆண்டு பொதுக்கூட்டத்தில் காணொளி இணைப்பு மூலம் உரையாற்றினார்.

பட மூலாதாரம், EPA/Shutterstock
போர் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைது வாரண்டுக்கு உட்பட்டுள்ள நெதன்யாகு, தன்னை விமர்சித்த நாடுகள் மற்றும் தலைவர்களைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
"சிறிய நாடான இஸ்ரேல் காலனித்துவம் செய்கிறது என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். என்ன காலனித்துவம்? எங்களைக் குற்றம் சாட்டுபவர்களில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். கடவுளே, அந்தச் சொல்லையே உருவாக்கியது அவர்கள்தானே," என்றார்.
நெதன்யாகுவும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் யூதக் குடியேறிகளால் நடத்தப்படும் வன்முறைகள் குறித்து ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிடுவதாகக் குற்றம்சாட்டினார். மேலும், "ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று பேர்" மட்டுமே கொல்லப்படுவதாக அவர் கூறினார்.
ஆனால், ஐ.நா. வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு குடியேற்றவாசிகளின் தாக்குதல்கள் தொடர்பான சம்பவங்களில் 23 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2023ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை 72 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், துருக்கி அதிபர் ரெசெப் தயீப் எர்துவானை "கொடுங்கோலன்" என்று குறிப்பிட்டு, பாலத்தீன ஆயுதக் குழுவான ஹமாஸுக்கு ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டினார்.

பட மூலாதாரம், Getty Images
செவ்வாய்க்கிழமை ஐ.நாவில் உரையாற்றிய எர்துவான், காஸா மற்றும் மேற்குக் கரையில் மக்கள் எதிர்கொள்ளும் அநீதிகள் "மனிதகுலத்தின் மனசாட்சியை ஆழமாகக் காயப்படுத்துகின்றன" என்று கூறியிருந்தார்.
நெதன்யாகுவின் கருத்துகளுக்கு துருக்கி அதிபர் அலுவலகத்தின் தகவல் தொடர்புத் தலைவர் புர்ஹானெத்தின் துரான் கடுமையாகப் பதிலளித்தார்.
துருக்கி மற்றும் எர்துவானுக்கு எதிராக "ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை" முன்வைக்க ஐ.நா. பொதுச்சபை மேடையை நெதன்யாகு பயன்படுத்தியது, ஐ.நாவின் 'அமைதி, சட்டம் மற்றும் உரையாடல்' ஆகிய லட்சியங்களுடன் பொருந்தாதது என்று துரான் கூறியதாக அரசுச் செய்தி நிறுவனம் அனடோலு தெரிவித்தது.
முன்னதாக நெதன்யாகுவை கைது செய்வதாக உறுதியளித்து, பின்னர் அதற்கு தமக்கு அதிகாரம் இல்லை என்று கூறியவரான நியூயார்க் நகரின் இடதுசாரி மேயர் ஜோஹ்ரான் மம்தானியும், இஸ்ரேலிய தலைவரின் விமர்சனத்துக்கு உள்ளானார்.
"நீங்கள் இந்த நகரின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, பல யூதர்கள் நியூயார்க் நகரில் பாதுகாப்பாக உணர்வதில்லை," என்று இஸ்ரேலிய பிரதமர் கூறினார்.
அதற்குப் பதிலளித்த மம்தானியின் அலுவலகம், "பாலத்தீனர்களுக்கு எதிரான தனது இனப்படுகொலையை நியாயப்படுத்துவதற்காக நெதன்யாகு ஆதாரமற்ற பொய்களைத் திரும்பத் திரும்ப கூறினார்" என அறிக்கை வாயிலாக தெரிவித்தது.
பிப்ரவரியில் இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்களைச் சுட்டிக்காட்டி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் "துணிச்சலான தலைமையை" நெதன்யாகு பாராட்டினார்.
"இஸ்ரேலும் அமெரிக்காவும் தங்களைப் பாதுகாப்பதற்காக மட்டுமல்ல, நாகரிகத்தைக் காப்பாற்றவும் ஒன்றாகச் செயல்பட்டன," என்றார்.

பட மூலாதாரம், Getty Images
தேர்தல் பரப்புரை நெருங்குகிறது
அடுத்த மாதம் நாட்டில் நடைபெறவுள்ள முக்கியமான தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், நெதன்யாகுவின் உரையின் பெரும்பகுதி அவர் நம்ப வைக்க வேண்டிய இஸ்ரேலியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் ஆகிய இரு முக்கிய தரப்பினருக்காக அமைந்திருந்தது. வெளிநாடுகளில் இஸ்ரேல் மீதான ஆதரவு குறைந்து பிளவுகள் தோன்றும் சூழல் நிலவுகிறது.
இஸ்ரேலில், "பாதுகாப்பின் முகம்" (Mr Security) என்ற அவரது ஒருகாலத்தில் நிலவிய இணையற்ற புகழ், 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதல்களுக்கு பிறகு நடைபெறும் முதல் தேர்தலை முன்னிட்டு அதிகமாகக் கேள்விக்குள்ளாகியுள்ளது.
ஹமாஸின் சாத்தியமான தாக்குதல் குறித்து எச்சரிக்கைகள் வந்திருந்தும் அவற்றை அவர் புறக்கணித்தார் என்று இஸ்ரேலிய ஊடகங்களில் வெளியான தகவல்களை, நெதன்யாகு உறுதியாக மறுத்திருந்தாலும், சில அரசியல் எதிரிகள் அவர் பதவிக்குத் தகுதியற்றவர் என்று வாதிடுகின்றனர்.
அவரது மதவாத வலதுசாரி கூட்டணி கருத்துக்கணிப்புகளில் பின்தங்கியுள்ள நிலையில், அவருக்கே உரிய சவால் விடுக்கும் பாணியிலான ஐ.நா. மேடை உரை, தேர்தல் பரப்புரையில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்படும்.
"தார்மீகக் கோழைகள்" குறித்து அவர் கூறிய கருத்துகள், பெருமளவிலான வெளிநடப்பை எதிர்கொள்வதை முன்கூட்டியே கருதி எழுதப்பட்டதாகத் தோன்றியது.
இஸ்ரேலின் மீது அதிகரித்து வரும் உலகளாவிய விமர்சனங்களை உண்மையாக எதிர்கொள்ளக்கூடிய ஒரே அரசியல்வாதி தான்தான் என்ற உருவகத்தை மீண்டும் வலுப்படுத்த அவர் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு இந்த நிகழ்வு பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட தாக்குதல்கள் மற்றும் டிரம்பைப் பாராட்டிய அவரது வார்த்தைகள் உள்ளிட்டவை அமெரிக்க மக்களை மனதில் வைத்து பேசிய கருத்துகளாக இருந்தன.

பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேலில் பிறந்திருந்தாலும், தனது இளமைக்கால ஆண்டுகளை பென்சில்வேனியாவில் கழித்த நெதன்யாகு, அமெரிக்காவில் இஸ்ரேலின் நிலைப்பாட்டை எடுத்துரைப்பதில் தமக்கு தனித்துவமான திறன் இருப்பதாக அவர் எப்போதும் தம்மையே முன்னிறுத்தி வந்துள்ளார்.
அமெரிக்காவிலிருந்து ஆயுத விநியோகம் தொடர்ந்து வந்தாலும், அமெரிக்க பொதுமக்களின் சந்தேகப்பார்வையை அவர் அதிகமாக எதிர்கொண்டு வருகிறார்.
கருத்துக்கணிப்புகள், ஜனநாயகக் கட்சியினரிடையே இஸ்ரேலுக்கான ஆதரவு கடுமையாகச் சரிந்திருப்பதையும், குடியரசுக் கட்சியினரிடையே வரலாற்று ரீதியாக நிலவிவந்த அதிகளவிலான ஆதரவில் பிளவு ஏற்பட்டிருப்பதையும், அந்த பிளவு டிரம்பின் 'அமெரிக்காவை மீண்டும் மகத்தான நாடாக மாற்றுவோம்' (MAGA - மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன்) என்ற முழக்கத்தின் ஆதரவாளர்கள் மத்தியிலும் பரவியிருப்பதையும் காட்டுகின்றன.
போராட்டத்தில் ஈடுபட்ட பிரபலங்கள் கைது
நெதன்யாகுவின் வருகைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய பலர் நியூயார்க் நகரில் காவலில் எடுக்கப்பட்டனர்.
அவர்களில் ஆஸ்கர் விருது பெற்ற நடிகை சூசன் சரண்டன் மற்றும் எம்மி விருது பெற்ற ஹேக்ஸ் (Hacks) தொடரின் நடிகை ஹன்னா ஐன்பைண்டர் ஆகியோரும் அடங்குவர்.
மேலும், ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர் டேரியலிசா அவிலா செவாலியர் மற்றும் நியூயார்க் நகர கவுன்சில் உறுப்பினர் சி ஒஸே ஆகியோரும் காவலில் எடுக்கப்பட்டனர்.
"முன்கூட்டியே அறிவிக்கப்படாத ஒரு போராட்டத்தில்" ஈடுபட்ட போராட்டக்காரர்கள் ஒரு சாலை சந்திப்பை மறித்ததாக வந்த தகவலின் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக, நியூயார்க் காவல் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Reuters
2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேலுக்கு எதிராக நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 251 பேர் பிணைக்கைதிகளாகக் கடத்தப்பட்டனர். அதன் பின்னர், இஸ்ரேலிய ராணுவம் காஸா பகுதியில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது.
காஸாவில் நடைபெற்ற இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கை/களில் 73,920 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக, ஹமாஸ் நிர்வகிக்கும் அந்தப் பகுதியின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு, உலகின் முன்னணி இனப்படுகொலை ஆய்வாளர்கள் அமைப்பு, காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருவதாக அறிவித்தது.
சர்வதேச இனப்படுகொலை ஆய்வாளர்கள் சங்கம் (IAGS) நிறைவேற்றிய தீர்மானத்தில், இஸ்ரேலின் நடவடிக்கைகள், ஐ.நா. இனப்படுகொலை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட வரையறைக்கு உட்பட்டவையாக உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
காஸாவில் தனது நடவடிக்கைகள் இனப்படுகொலையாகாது என்று தொடர்ந்து மறுத்து வரும் இஸ்ரேல் அவை தற்காப்பு நடவடிக்கைகள் என்ற முறையில் நியாயமானவை என கூறிவருகிறது.
பிப்ரவரி 28ஆம் தேதி, அணு ஆயுதத்தை ரகசியமாக உருவாக்கி வருவதாக சந்தேகித்து, இஸ்ரேலும் அமெரிக்காவும் இரான் மீது மிகப் பெரிய வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கின. இந்த குற்றச்சாட்டை இரான் மறுத்தது.
அதற்குப் பதிலடியாக, இரான் இஸ்ரேல் மீதும், அமெரிக்க ராணுவத் தளங்களை வைத்துள்ள அண்டை வளைகுடா அரபு நாடுகள் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































