சுதந்திர தினத்தன்று கோட்டையில் கொடி ஏற்றப் போகும் முதலமைச்சர் விஜய் - இந்த உரிமை கிடைத்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
சென்னை ஜார்ஜ் கோட்டையில் நாளை (ஆகஸ்ட் 15) நடைபெறவிருக்கும் இந்தியாவின் 80வது சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றப் போகிறார்.
ஒவ்வோர் ஆண்டும் டெல்லியின் செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் இந்திய பிரதமர் தேசியக் கொடியேற்றுவதும், மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றுவதும் ஒரு வழக்கமான அரசு நிகழ்வாக உள்ளது.
ஆனால், 52 ஆண்டுகளுக்கு முன் மாநிலங்களில் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஆளுநர் ஏற்றுவதே வழக்கமாக இருந்து வந்தது. அந்த மரபை மாற்றுவதற்கான கோரிக்கைகள் தமிழ்நாட்டில் இருந்துதான் எழுப்பப்பட்டன.
'மாநில உரிமைகள்' என்பது தமிழ்நாட்டின் அரசியலில் தொடர்ந்து பல ஆண்டுகளாக கவனம் பெறும் ஒரு கருத்தியல். அதன் ஒரு பகுதியாகவே 1974இல் இந்தியா முழுமைக்குமான ஒரு மாற்றம் தமிழ்நாட்டில் இருந்துதான் தொடங்கியது.
தமிழ்நாட்டில் இருந்து வைக்கப்பட்ட கோரிக்கைகள்
கடந்த 1974ஆம் ஆண்டில், அப்போதைய தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி சுதந்திர தினத்தன்று சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றியபோது, ஆளுநர்கள் கொடியேற்றும் வழக்கம் முதன்முதலாக மாற்றப்பட்டது. பின்னர் அதுவே புதிய மரபாக மாறி, சுதந்திர தினத்தன்று மாநிலங்களில், முதலமைச்சர்களே தேசியக் கொடியை ஏற்றும் நடைமுறை அமலுக்கு வந்தது.
இது குறித்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தான் எழுதிய 'நெஞ்சுக்கு நீதி' நூலின் இரண்டாவது பாகத்தில், 'ஆகஸ்ட் திங்களில்' என்ற அத்தியாயத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
"ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15இல் மாநில தலைநகரங்களின் தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடியை ஆளுநர் ஏற்றுவதே வழக்கமாக இருந்தது. அந்தக் கொடியேற்றும் உரிமை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதலமைச்சர்களுக்கு ஏன் அளிக்கப்படக் கூடாது என்று டெல்லிக்கு தொடர்ந்து கடிதங்களை எழுதினேன்," என்று எழுதியுள்ளார்.
மேலும், "கடிதங்களை எழுதியது மட்டுமின்றி நேரில் சென்றும் வாதாடியதே, இனி ஜனவரி 26 குடியரசு தின விழாவில் மட்டும் கவர்னர் கொடியேற்றலாம், ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவில் முதலமைச்சர்களே கொடி ஏற்ற வேண்டும் எனவும் தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் இந்த உரிமை வழங்கப்பட்டது" என்று மு. கருணாநிதி எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், @mkstalin/X
இது தொடர்பாக 'தி இந்து' ஆங்கில நாளிதழ் 1974 ஜூலை 31 அன்று வெளியிட்ட ஒரு கட்டுரையில், "மாநில தலைநகரங்களில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதலமைச்சர்கள் தேசியக் கொடியை ஏற்ற அனுமதிக்கப்பட வேண்டும் என்ற மு. கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசின் ஆலோசனையை இந்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
"'ஒவ்வோர் ஆண்டும் டெல்லியில் குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவரும், சுதந்திர தினத்தன்று பிரதமரும் தேசியக் கொடியை ஏற்றும் நிலையில், மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு இந்தச் சலுகைகூட இல்லை' என பிப்ரவரி மாதம் மெட்ராஸில் நடைபெற்ற ஒரு விழாவில் மு. கருணாநிதி பேசியிருந்தார். தான் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாகவே இந்திய அரசு இந்தப் புதிய நடைமுறையை ஏற்றுக்கொண்டது' என அவர் (மு. கருணாநிதி) குறிப்பிட்டுள்ளார்" என்றும் அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
"கடந்த 1969 முதல் 1974 என்பது திமுகவின் வரலாற்றில் முக்கியமான காலகட்டம். திராவிட நாடு என்ற கோரிக்கையை கைவிட்டிருந்த திமுக, தனிக்கொடி, தமிழ் தாய் வாழ்த்து ஆகியவற்றுக்கு முக்கியத்துவம், மத்திய - மாநில அரசுகள் இடையிலான அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய நீதிபதி ராஜமன்னார் தலைமையில் ஒரு குழு என 'மாநில சுயாட்சி' கோரிக்கைகளில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த காலகட்டம் அது" எனக் குறிப்பிடுகிறார் எழுத்தாளரும் மூத்த பத்திரிக்கையாளருமான சுகுணா திவாகர்.

பட மூலாதாரம், Nenjuku Neethi
அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு, மு. கருணாநிதி எழுதிய கடிதங்களில், "குடியரசுத் தலைவரைப் போல் ஆளுநர்களும் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள்தான். ஆனால், பிரதமரைப் போலவே முதலமைச்சர்களும் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படுகிறார்கள். எனவே, சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றும் உரிமை அவர்களுக்கே இருக்க வேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தார்" என்று 'கலைஞர் மு.கருணாநிதி வரலாறு' எனும் நூலில் பதிவு செய்துள்ளார் மூத்த பத்திரிக்கையாளர் ஏ.எஸ்.பன்னீர் செல்வம்.
"தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் இந்த மரபு மாற்றப்பட்டதால், அப்போது சில மாநிலங்களின் முதல்வர்கள், கருணாநிதிக்கு பாராட்டு தெரிவித்து கடிதங்கள் எழுதியிருந்தனர்" என்கிறார் திமுக செய்தித் தொடர்பு குழு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன்.
"மாநில உரிமைகள்' என்பது திமுகவின் கொள்கைகளில் ஒன்று, அதன் நீட்சியாக தான் 'முதலமைச்சர்கள் சுதந்திர தினத்தன்று கொடியேற்ற வேண்டுமென்ற மரபு கொண்டுவரப்பட்டது" என்றும் அவர் கூறுகிறார்.
'மாநிலங்களுக்கென தனி கொடி'
சி.என். அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு, மு. கருணாநிதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதன்முதலாக 1969இல் பதவியேற்றுக் கொண்டார்.
"தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகான முதல் சுதந்திர தினத்தன்று, அனைத்து கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றாகக் கலந்துகொள்ளும் வகையில் விழாவை நடத்த முயற்சிகள் எடுத்ததாகவும்" முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி தனது 'நெஞ்சுக்கு நீதி' நூலில் குறிப்பிட்டுள்ளார்.
"என் அழைப்பை ஏற்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருத்திருமன், சிலம்புச் செல்வர் ம.பொ.சி, ஏ.கே. சுப்பையா, ஏ.ஆர். மாரிமுத்து, கே.ஆர். நல்லசிவம், ஏ. பாலசுப்ரமணியம், பி.கே. மூக்கையா தேவர், காரைக்குடி சா. கணேசன், எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியார் ஆகிய பல்வேறு கட்சித் தலைவர்களும் அந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்" என்று மு. கருணாநிதி எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
அந்த சுதந்திர தின விழாவில் மு. கருணாநிதி ஒரு புதுமையான கோரிக்கையை முன்வைத்தார்.
"டெல்லி பட்டணத்தில் பிரதமர் நிகழ்த்துகின்ற விடுதலை நாள் விழா உரையை பத்திரிகைகளில் படிக்கிறோம். விழா நிகழ்ச்சிகளை படங்களில் பார்க்கிறோம். இனி விடுதலை நாள் விழாவின்போது இந்திய பிரதமர் ஆண்டுக்கு ஒரு மாநிலமாக வர வேண்டும். அந்த மாநிலத் தலைநகரங்களில் பிரதமர் கலந்து கொள்கின்ற விடுதலை நாள் விழா நடைபெற வேண்டும்" என்பதே அந்த கோரிக்கை.
அதேபோல, மாநிலங்களுக்கென தனியாகக் கொடி வேண்டுமென ஒருமுறை பேசியிருந்தார் மு. கருணாநிதி. அதில் முடிவெடுக்கப்படாத நிலையில், சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்களுக்கு கொடியேற்றும் அதிகாரம் வேண்டுமென அவர் வலியுறுத்தினார். அதை பிரதமர் இந்திரா காந்தி ஏற்றதாலேயே இப்போது இந்தியா முழுவதும் மாநில முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று கொடியேற்றுகின்றனர்.
தற்போதைய நடைமுறைப்படி, சுதந்திர தினத்தன்று மாநில/யூனியன் பிரதேச தலைநகரங்களில் காலை நடைபெறும் விழாவில், முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றுவார், அதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்படும்.
பின்னர் துணை ராணுவப் படைகள், ஊர்க்காவல் படையினர், உள்ளிட்ட படைகளின் அணிவகுப்பு மரியாதைக்குப் பிறகு, முதலமைச்சர் உரையாற்றுவார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































