காணொளி: ஹோர்மூஸ் நீரிணையை முற்றுகையிட போகும் டிரம்ப் - புது அறிவிப்பால் அதிகரிக்கும் பதற்றம்

காணொளி: ஹோர்மூஸ் நீரிணையை முற்றுகையிட போகும் டிரம்ப் - புது அறிவிப்பால் அதிகரிக்கும் பதற்றம்

இரான் போர் விவகாரத்தில் அமெரிக்கா இரான் இடையே இஸ்லாமாபாத்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், ஹோர்மூஸ் நீரிணையை முற்றுகையிடப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரிக்கும் சூழல் எழுந்துள்ளது. என்ன நடக்கிறது?

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையே பிப்ரவரி 28ஆம் தேதி முதல் போர் நடந்து வந்த நிலையில், இரண்டு வார காலத்துக்கு தற்காலிக போர் நிறுத்தம் அண்மையில் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் மேலதிக பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் இஸ்லாமாபாத்தில் சனிக்கிழமை நடந்தது. சுமார் 20 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை, முடிவு ஏதும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. பேச்சுவார்த்தை தோல்விக்கு இரு தரப்புமே மாறிமாறி பரஸ்பரம் குற்றம் சாட்டின. அடுத்து என்ன நடக்கும், போர் நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்ட காலத்துக்கு நீடிக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது நீண்ட பதிவை தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், கூட்டம் நன்றாக நடந்தது. பெரும்பாலான விஷயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன, ஆனால் உண்மையில் மிக முக்கிய விஷயமான அணு ஆயுதம் தொடர்பானது மட்டும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. உடனடியாக அமலுக்கு வரும் வகையில், ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ முயற்சிக்கும் அனைத்துக் கப்பல்களையும் மறிப்பதற்கான வேலையை அமெரிக்கக் கடற்படை தொடங்கும். ஒரு கட்டத்தில், அனைவரும் உள்ளே, வெளியே செல்ல அனுமதிக்கப்படும் நிலையை எட்டுவோம். ஆனால் இரான், அவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாத கண்ணிவெடி அங்கு எங்காவது இருக்கலாம் என வெறுமனே கூறி அதை நடக்க அனுமதிக்கவில்லை. இது உலகளாவிய மிரட்டல். தலைவர்கள், குறிப்பாக அமெரிக்க தலைவர்கள் ஒருபோதும் மிரட்டலுக்கு பணிய மாட்டார்கள்.

இரானுக்கு சுங்கம் செலுத்திய ஒவ்வொரு கப்பலையும் சர்வதேச கடல் பகுதியில் தேடிப்பிடித்து இடைமறிக்குமாறு கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளேன். சட்டவிரோதமாக சுங்கம் செலுத்தும் எவருக்கும் ஆழ்கடலில் பாதுகாப்பான பயணம் கிடைக்காது. இரானியர்கள் நீரிணையில் பதித்த கண்ணிவெடிகளை நாங்கள் அழிக்கவும் தொடங்குவோம்.

எங்கள் மீதோ அல்லது அமைதியான கப்பல்கள் மீதோ துப்பாக்கிச் சூடு நடத்தும் எந்தவொரு இரானியரும் நரகத்திற்குத் தள்ளப்படுவார்கள். தங்கள் நாட்டை ஏற்கனவே பேரழிவுக்கு உள்ளாக்கியுள்ள இந்தச் சூழலை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது என்பது இரானுக்கு நன்கு தெரியும் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்தப் பதிவில், இந்த முற்றுகை விரைவில் தொடங்கும் என்றும், இதில் மற்ற நாடுகளும் பங்கேற்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். எனினும், அவை எந்த நாடுகள் என்பதை டிரம்ப் குறிப்பிடவில்லை.

அந்தப் பதிவில், அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், உரிய நேரம் வரும் போது இரானில் எஞ்சியவற்றையும் முழுமையாக அழித்து முடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர், மற்றொரு நீண்ட பதிவையும் டிரம்ப் வெளியிட்டார். அதில் பேச்சுவார்த்தை குறித்த தகவல்களை பதிவிட்டிருந்த டிரம்ப், இரானுக்கு ஒரு போதும் அணு ஆயுதம் கிடைக்காது என இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.

சனிக்கிழமை இஸ்லாமாபாத்தில் நடந்த பேச்சுவார்த்தையின் தோல்விக்கு அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு இரான் உடன்படத் தவறிவிட்டதே காரணம் என ஜேடி.வான்ஸ் கூறினார்.

ஆனால், பேச்சுவார்த்தை தோல்விக்கான காரணம் குறித்து கூறும் இரான், அமெரிக்கா அதிகப்படியான மற்றும் சட்டப்பூர்வமற்ற கோரிக்கைகளை தவிர்க்க வேண்டும் எனவும் இரானின் சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் நலன்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறது.

டிரம்பின் இந்த அறிவிப்பு குறித்து கூறும் பிபிசி செய்தியாளர் ஜோ இன்வுட், இரானுக்கு சுங்ககட்டணம் செலுத்தும் கப்பகளுக்கு பாதுகாப்பான பயணம் மறுக்கப்படும் என டிரம்ப் கூறுகிறார். ஆனால், அது எப்படி என்பதை அவர் பதிவு தெளிவுபடுத்தவில்லை. அதே நேரம், கடந்த சில மாதங்களில், வெனிசுவேலாவிற்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் கப்பல்களில் அமெரிக்கா ஏறிச் சோதனையிட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்கிறார்.

டிரம்பின் அச்சுறுத்தல் செயல்படுத்தப்பட்டால், உலகச் சந்தைகளுக்குச் செல்லும் எண்ணெயின் அளவு மேலும் கட்டுப்படுத்தப்பட்டு, பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறுகிறார்.

டிரம்பின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, ஹோர்மூஸின் எதிர்காலம் உடனடி கவலையாக மாறி உள்ளதாக பிபிசி செய்தியாளர் ஆசாதே மோஷிரி கூறுகிறார்.

இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து, நாட்டில் 3,300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக இரான் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்களில் ஏழு பேர் ஒரு வயதுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகள் என்றும் இரான் கூறி உள்ளது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு