ஹாட்ரிக் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து முதல் வெற்றியைப் பதிவு செய்தது சூப்பர் கிங்ஸ்

பட மூலாதாரம், Surjeet Yadav/MB Media/Getty Images
2026 ஐபிஎல் சீசனின் 18வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேபிட்டல்ஸை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கிறது.
இதற்குமுன் விளையாடிய 3 போட்டிகளிலுமே தோற்றிருந்த சிஎஸ்கே இந்தப் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸை வீழ்த்தி இந்த சீசனில் தங்களுடைய முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
மேலும், சேப்பாக்கத்தில் கடைசியாக விளையாடிய 7 போட்டிகளிலுமே சூப்பர் கிங்ஸ் தோற்றிருந்தது. இன்று (ஏப்ரல் 11) அதற்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் கேப்டன் அக்ஷர் பட்டேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது. சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 115 ரன்கள் எடுத்தார். அடுத்து விளையாடிய டெல்லி அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அதரடியாக ஆடி சதமடித்து சூப்பர் கிங்ஸ் வெற்றிக்குக் காரணமாகத் திகழ்ந்த சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
சதமடித்த சாம்சன்

பட மூலாதாரம், ARUN SANKAR/AFP via Getty Images
கடந்த 3 போட்டிகளாகவே சூப்பர் கிங்ஸுக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. ஆனால், இந்தப் போட்டியில் ருதுராஜ் - சாம்சன் ஜோடி நல்ல தொடக்கம் கொடுத்தது. சாம்சன் ஒருபக்கம் அதிரடியாக ஆட, கேப்டன் ருதுராஜ் நிதானமாக ஆடினார். இந்த ஒரு விதமான அணுகுமுறை மூலம் சூப்பர் கிங்ஸ் சீராக ரன் சேர்த்தது.
பவர்பிளேவில் சில பெரிய ஓவர்கள் வர, விக்கெட்டே இழக்காமல் 61 ரன்கள் எடுத்தது சிஎஸ்கே.
ருதுராஜ் நிதானமாக விளையாடினார் என்றாலும், அவர் ஆடிய வேகம் மிகவும் மெதுவாக இருந்தது. அதனால் பவர்பிளே முடிந்தவுடனேயே ஒரு பெரிய ஷாட் அடிக்க நினைத்து அவர் அக்ஷர் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 18 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அடுத்து களமிறங்கிய இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே முதலில் நிதானம் காட்டிவிட்டு அதன்பிறகு வேகத்தைக் கூட்டினார்.
மறுபக்கம் தொடர்ந்து தன் அதிரடியைக் காட்டிக்கொண்டிருந்த சாம்சன் 26 பந்துகளில் அரைசதம் கடந்தார். டெல்லி அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள், ஸ்பின்னர்கள் அனைவரையும் பதம் பார்த்த சாம்சன் 52 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார்.
சாம்சன் - மாத்ரே ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்தது. ஆயுஷ் மாத்ரே 59 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவரை சிஎஸ்கே அணி ரிட்டையர் அவுட் முறையில் பெவிலியனுக்கு அழைத்தது. கடைசி கட்டத்தில் அதிரடி காட்ட ஷிவம் துபே களமிறக்கப்பட்டார்.
20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது. சாம்சன் 115 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 15 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் விளாசினார். ஷிவம் துபே 10 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பட மூலாதாரம், ARUN SANKAR/AFP via Getty Images
சாம்சன் சொன்னது என்ன?
சூப்பர் கிங்ஸ் இன்னிங்ஸ் முடிந்த பிறகு பேசிய சஞ்சு சாம்சன், "உண்மையைச் சொல்லப்போனால், நீங்கள் எந்த ஃபார்மில் இருந்தாலும், நாட்டுக்காக நீங்கள் பல போட்டிகளை வென்று கொடுத்திருந்தாலும், ஒரு சில தோல்விகள் உங்கள் மனதில் சந்தேகங்களை உண்டாக்கும். அடிப்படை ஆட்டமுறையிலேயே நிலைத்திருக்க விரும்பினேன். இன்னும் அதிரடியாக ஆட வேண்டுமா என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நான் எப்போதும் செய்வதையே உறுதியாகச் செய்தேன், நல்லவேளையாக அது கைகொடுத்தது." என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், "ஆடுகளம் ஆரம்பத்தில் பந்து சற்று பிடித்து வந்தது. பவர்பிளேயில் அக்ஷர் பந்துவீசும் போது பந்து நின்று வந்தது. ஆனால் ஆட்டம் செல்லச் செல்ல பேட்டிங் செய்ய இது ஒரு சிறந்த ஆடுகளமாக மாறியது. ஆயுஷுடன் ஒரு சிறந்த பார்ட்னர்ஷிப் அமைந்தது - அவருடன் இணைந்து விளையாடியது அற்புதம். முடிந்தவரை ஒரு பெரிய ஸ்கோரை பதிவு செய்ய விரும்பினோம். எங்களிடம் நீண்ட பேட்டிங் வரிசை இருந்தது, எனவே பந்துவீச்சாளர்களைத் தேர்ந்தெடுத்து ரன்களை சேர்ப்பதே திட்டமாக இருந்தது." என்றும் கூறினார்.
நல்ல தொடக்கத்தைத் தவறவிட்ட டெல்லி
டெல்லி கேபிட்டல்ஸ் ஓப்பனர்கள் கே.எல்.ராகுல், பதும் நிசன்கா இருவரும் நல்லபடியாக இன்னிங்ஸைத் தொடங்கினார்கள். குறிப்பாக பதும் நிசன்கா நன்கு அடித்து ஆடினார். கலீல் அஹமது, அகீல் ஹொசைன் மற்றும் அன்ஷுல் கம்போஜ் ஆகியோரின் பந்துகளை அவர் எளிதாக பவுண்டரிகளாகவும் சிக்சர்களாகவும் அவர் மாற்றிக்கொண்டிருந்தார். அதனால் அந்த பார்ட்னர்ஷிப் 25 பந்துகளிலேயே 50 ரன்களைக் கடந்தது. 4.5 ஓவர்களிலேயே 61 ரன்களை எடுத்தது டெல்லி கேபிட்டல்ஸ். ஆனால், ஐந்தாவது ஓவரின் கடைசிப் பந்தில் ஆட்டம் மாறத் தொடங்கியது.
கலீல் அஹமது வீசிய அந்தப் பந்தின் பவுன்சையும் வேகத்தையும் சரியாகக் கணிக்காமல் ஆட்டமிழந்தார் கே.எல்.ராகுல்.
ஆறாவது ஓவரின் முதல் பந்திலேயே இன்னொரு விக்கெட்டை வீழ்த்துவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அன்ஷுல் கம்போஜ் பந்துவீச்சில் நிசன்கா கொடுத்த வாய்ப்பைத் தவறவிட்டார் கலீல் அஹமது. ஆனால், அடுத்த பந்திலேயே நிசன்கா அவுட் ஆனார். அவர் 41 ரன்கள் எடுத்தார்.
பவர்பிளே முடிவில் 66/2 என்றிருந்த டெல்லி கேபிடல்ஸ், பவர்பிளே முடிந்த அடுத்த பந்திலேயே இன்னொரு விக்கெட்டை இழந்தது. ஐபிஎல் தொடரில் தான் வீசிய முதல் பந்திலேயே அக்ஷர் பட்டேல் விக்கெட்டை வீழ்த்தினார் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் குர்ஜப்னீத் சிங். அக்ஷர் அடித்த பந்தை பேக்வேர்ட் பாயின்ட் திசையில் நின்றிருந்த சரஃபராஸ் கான் அட்டகாசமாக டைவ் அடித்துப் பிடித்தார். 8 பந்துகள் இடைவெளியில் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது டெல்லி கேபிட்டல்ஸ்.
பந்துவீச்சில் மிரட்டிய ஓவர்டன்

பட மூலாதாரம், Surjeet Yadav/MB Media/Getty Images
அந்த விக்கெட் வீழ்ச்சிக்குப் பிறகு டெல்லி கேபிடல்ஸால் ஒரு பெரிய பார்னர்ஷிப்பை உருவாக்க முடியவில்லை. மேலும், தன் வேகம், பவுன்ஸ் மற்றும் லென்த் மூலம் சிறப்பாகப் பந்துவீசி டெல்லி அணியின் விக்கெட்டுகளை தொடர்ச்சியாக வெளியேற்றிக்கொண்டே இருந்தார் சூப்பர் கிங்ஸ் ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டன்.
தன் முதல் ஓவரில் சமீர் ரிஸ்வி விக்கெட்டை வீழ்த்திய அவர், அடுத்த ஓவரில் ஆபத்தான டேவிட் மில்லரின் விக்கெட்டைக் கைப்பற்றினார். மூன்றாவது ஓவரில் ஆகிப் நபியை வெளியேற்றிவர், தன் கடைசி ஓவரில் டெல்லி அணியின் ஒரே நம்பிக்கையாகத் திகழ்ந்த ஸ்டப்ஸ விக்கெட்டையும் தனதாக்கினார்.
தொடர்ந்து சிறப்பாகப் பந்துவீசிய அவர் 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பேட்டிங்குக்கு சாதகமாக இருந்த இந்த ஆடுகளத்தில் பந்துவீசிய 12 பௌலர்களில், எட்டுக்கும் குறைவான எகானமி வைத்திருந்தது இவர் மட்டும்தான்.
ஓவர்டன் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்த்தியதால் டெல்லிக்கு நெருக்கடி அதிகரித்தது. அதனால் ஸ்டப்ஸ் ஒருபக்கம் சிறப்பாக ஆடி 60 ரன்கள் எடுத்தபோதிலும் அவர்களால் வெற்றிக்கு அருகில் செல்ல முடியவில்லை.
இறுதியில் 189 ரன்களுக்கு டெல்லி கேபிட்டல்ஸ் ஆல் அவுட் ஆனது. அதனால் இந்த சீசனில் தங்களின் முதல் வெற்றியை சூப்பர் கிங்ஸ் பதிவு செய்தது.
தன் பந்துவீச்சைப் பற்றிப் பேசிய ஓவர்டன், "மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இறுதியாக எங்களது உள்ளூர் ரசிகர்களுக்கு முன்னால் ஒரு வெற்றியைப் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த சில போட்டிகள் எனக்குச் சாதகமாக அமையவில்லை. டிசம்பர் மாதம் முதல் 'பிக் பேஷ்' தொடரில் இருந்தே நல்ல ஃபார்மில் இருப்பதாக உணர்கிறேன். அதிவேகமாகப் பந்துவீசி வருகிறேன், அதையே தொடர்ந்து செய்ய முயற்சிக்கிறேன்." என்றார்.
இந்தப் போட்டியின் திட்டத்தைப் பற்றிப் பேசிய அவர், "ஸ்டம்புகளின் உச்சிப் பகுதியில் பந்துகளைத் தாக்கவே முயற்சித்தேன். ஆடுகளம் சற்று ஒட்டும் தன்மையுடன் இருந்தது; சில பந்துகள் நழுவிச் சென்றன, சில பந்துகள் எகிறின. எதிரணி பேட்டர்கள் கிராஸ்-பேட் ஷாட்களை ஆடுவதைக் குறைக்க முயன்றேன்." என்று கூறினார்.
டாஸில் நடந்தது என்ன?
டாஸ் வென்ற அக்ஷர் பட்டேல், "இந்த ஆடுகளம் நன்றாகத் தெரிவதால் நாங்கள் முதலில் பந்துவீச விரும்புகிறோம். எதிரணி நிர்ணயிக்கும் எந்த இலக்காக இருந்தாலும், அதைத் துரத்திப் பிடிப்பதையே நாங்கள் விரும்புகிறோம்.
ஆடுகளத்தைப் பொறுத்தவரை, இந்த சீசனில் இது பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையில் ஆடுகளம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இது செம்மண் ஆடுகளம் என்பதால், பந்து நன்றாக எகிறும். எங்களது நோக்கம், அவர்களை எவ்வளவு குறைந்த ஸ்கோரில் சுருட்ட முடியுமோ அவ்வளவு குறைவாகச் சுருட்டி, பின்னர் அதைத் துரத்தி வெற்றி பெறுவதே ஆகும்.
ஐபிஎல் என்பது ஒரு நீண்ட தொடர், எங்களது அணியின் சூழல் மிகவும் நிதானமாக உள்ளது. எங்களால் எதைக் கட்டுப்படுத்த முடியுமோ, அதில் மட்டும் கவனம் செலுத்துவதைப் பற்றியே ஆலோசனைகள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட நிலையை எட்டிய பிறகு, எதையும் அதிகமாக யோசிக்கத் தேவையில்லை. எனவே, நம் கையில் உள்ளதைச் சரியாகக் கையாள்வதே எங்களது மனநிலையாக உள்ளது. அணியின் சூழல் சிறப்பாக இருக்கிறது.
எங்கள் அணியின் சமநிலையைப் பார்த்தால், தேவையான அனைத்து அம்சங்களும் எங்களிடம் உள்ளன. எங்களிடம் இருந்த வாய்ப்புகளை வைத்து, ஒரு சிறந்த காம்பினேஷனைத் தேர்வு செய்துள்ளோம் என்று நினைக்கிறேன். கடந்த ஆண்டை விட, இந்த முறை அணி அதிக சமநிலையுடன் காணப்படுகிறது; இன்றைய போட்டியில் சிறப்பாகச் செயல்படுவோம் என்று நம்புகிறோம்." என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
பிளேயிங் லெவனில் யார்?
சென்னை சூப்பர் கிங்ஸ்
காயத்திலிருந்து குணமடைந்த டெவால் பிரெவிஸ் சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருக்கிறார். தமிழ்நாடு வேகப்பந்துவீச்சாளர் குர்ஜப்னீத் சிங் சூப்பர் கிங்ஸுக்கு அறிமுகம் ஆகிறார்.
பிளேயிங் லெவன்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஆயுஷ் மாத்ரே, டெவால் பிரெவிஸ், சர்ஃபராஸ் கான், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், நூர் அஹமது, அன்ஷுல் கம்போஜ், கலீல் அஹமது, குர்ஜப்னீத் சிங்.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: பிரஷாந்த் வீர், மேட் ஹென்றி, கார்த்திக் ஷர்மா, குர்ஜப்னீத் சிங், மேத்யூ ஷார்ட், அகீல் ஹொசைன்.
டெல்லி கேபிட்டல்ஸ்
டெல்லி அணி இந்தப் போட்டிக்கு 2 மாற்றங்கள் செய்தது. நித்திஷ் ராணா, விப்ராஜ் நிகம் ஆகியோருக்குப் பதிலாக அஷுதோஷ் ஷர்மா மற்றும் ஆகிப் நபி அணியில் இடம்பெற்றனர்.
பிளேயிங் லெவன்: கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), பதும் நிசன்கா, சமீர் ரிஸ்வி, டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்ஷர் பட்டேல், ஆகிப் நபி, குல்தீப் யாதவ், லுங்கி எங்கிடி, டி.நடராஜன், முகேஷ் குமார்.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: கருண் நாயர், அஷுதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், நித்திஷ் ராணா, துஷ்மந்தா சமீரா.
இந்த சீசனில் இதுவரை
இந்த போட்டிக்கு முன்பு இந்த சீசனில் ஆடிய 3 போட்டிகளிலுமே சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளிடம் சிஎஸ்கே தோற்றிருந்தது.
தங்களின் முதலிரு போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிராக டெல்லி கேபிட்டல்ஸ் வெற்றி பெற்றது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான மூன்றாவது போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வியடைந்தது.
'சூப்பர் கிங்ஸில் மாற்றம் தேவை' - இந்திரஜித்
இந்தப் போட்டியில் தங்களின் பந்துவீச்சில் சூப்பர் கிங்ஸ் ஒரு மாற்றம் செய்யவேண்டும் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் வீரரும் தமிழ்நாடு கிரிக்கெட்டருமான பாபா இந்திரஜித் பிபிசி தமிழுக்கு எழுதியிருந்த தன் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
"டெத் பௌலிங்கைப் பொறுத்தவரை சில மாற்றங்கள் தேவை. குர்ஜப்னீத் சிங் சேர்க்கப்படவேண்டும் என்று நான் கருதுகிறேன். அவர் நல்ல உயரமான பௌலர். ஒரு கடினமான கோணத்தைக் கொண்டுவரக்கூடிய இடது கை வேகப்பந்துவீச்சாளர். 'பேக் ஆஃப் தி ஹேண்ட் ஸ்லோயர் பால்கள்' வீசுவதில் தேர்ந்தவர். யார்க்கர்களும் வீசமுடியும். யார்க்கர்கள் அவருடைய பலம் என்று சொல்லமாட்டேன். ஆனால், அவரது பேக் ஆஃப் தி ஹேண்ட் ஸ்லோயர் பால்கள் நிச்சயம் தாக்கம் ஏற்படுத்தக்கூடியவை. அதனால் விக்கெட்டுகள் எடுக்க முடியும். அன்ஷுல் கம்போஜ், மேட் ஹென்றி, கலீல் அஹமது என பவர்பிளே ஸ்பெஷலிஸ்ட்களாக இருக்கும் அந்த பௌலிங் யூனிட்டில் குர்ஜப்னீத் மூலம் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரமுடியும்." என்று அவர் குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































