சிஎஸ்கே வெற்றி கணக்கை தொடங்குமா? மறுபுறம் யார்க்கர்களால் திணறடிக்க தயாராகும் நடராஜன்

CSK vs DC, பிரெவிஸ், சாம்சன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த சீசனில் முதல் வெற்றியை எதிர்நோக்கி களமிறங்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் (கோப்புப் படம்)
    • எழுதியவர், பாபா இந்திரஜித்
    • பதவி, கேகேஆர் முன்னாள் வீரர்
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோற்றுவிட்டு, ஒரு நல்ல இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இன்று (ஏப்ரல் 12) களம் காண்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். ஹாட்ரிக் வெற்றியைக் கடைசிப் பந்தில் தவறவிட்ட டெல்லி கேபிட்டல்ஸ் அணியுடனான இந்தப் போட்டி நிச்சயம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

சூப்பர் கிங்ஸைப் பொறுத்தவரை ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு களமிறங்குவது அவர்களுக்கு நல்ல விஷயம். இதுபோல் அடுத்தடுத்த தோல்விகளுக்குப் பிறகு ஒரு பெரிய இடைவெளி அமைவது எந்த அணிக்குமே ஒரு மாற்றத்தைக் கொடுக்கும். ஒரு புதிய பார்வையை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல், இந்த 3 போட்டிகளின் முடிவுகளுக்குப் பிறகு சூப்பர் கிங்ஸ் மீதான எதிர்பார்ப்புமே குறைந்திருக்கும். அது அவர்கள் மீதான நெருக்கடியையும் குறைக்கும்.

இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸின் அணியில், காம்பினேஷனில், அவர்களின் அணுகுமுறையில் நிச்சயம் சில மாற்றங்களை நம்மால் எதிர்பார்க்க முடியும். அது போட்டியின் முடிவிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்தப் போட்டியில் அவர்களுக்கு இருக்கும் பிரச்னைகள் என்ன, அவர்களுக்கு இருக்கும் சவால்கள் என்ன, என்ன மாதிரியான மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று அலசுவோம்.

சாம்சன் & ருதுராஜ் ஃபார்ம் முக்கியம்

சென்னை சூப்பர் கிங்ஸைப் பொறுத்தவரை கடந்த சில சீசன்களாகவே அவர்களுக்கு சரியாகப் போகவில்லை. அணி ஒரு பெரிய மாற்றம் கண்டிருக்கிறது. கடந்த ஆண்டு அவர்கள் தங்கள் கட்டமைப்பையே மாற்றினார்கள். ஆனால், அந்த அணியில் பல சிக்கல்கள் இருந்தன. ஆனால், இப்போது அதில் நிறைய விஷயங்கள் மாறியிருக்கின்றன.

குறிப்பாக பேட்டிங் யூனிட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆயுஷ் மாத்ரே, டெவால் பிரெவிஸ், சஞ்சு சாம்சன் ஆகியோரின் வருகைக்குப் பிறகு பேட்டிங் பலமடைந்திருக்கிறது. அவர்கள் அனைவரும் ஒரு யூனிட்டாக சிறப்பான செயல்பாட்டைக் கொடுத்தார்களா என்றால் இல்லை. ஆனால், நம்பிக்கை கொடுக்கக் கூடிய பேட்டிங் யூனிட் இது. அவர்களுக்கு சற்று அவகாசம் கொடுத்தாக வேண்டும். இங்கு இருப்பது ஃபார்ம் பிரச்னை தானே தவிர, முன்பைப் போன்ற 'பழைய வகையிலான கிரிக்கெட்' விளையாடுகிறார்கள் என்ற பிரச்னை இப்போது இல்லை. வீரர்கள் ஃபார்முக்கு வந்துவிட்டால் பேட்டிங் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

CSK vs DC, பிரெவிஸ், சாம்சன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த சீசனின் 3 போட்டிகளிலும் சேர்த்து 41 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார் ருதுராஜ் கெய்க்வாட் (கோப்புப் படம்)

ஃபார்ம் என்று பேசும்போது ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் ஆகியோரின் ஃபார்ம் நிச்சயம் சூப்பர் கிங்ஸுக்கு கவலையளிப்பதாகவே இருக்கிறது. எந்தவொரு அணிக்குமே அவர்களின் ஓப்பனர்கள் ஒரு தொடரில் 400 - 500 ரன்கள் அடிக்கும்போதுதான் அந்த அணியால் தொடரில் வெகுதூரம் செல்ல முடியும். இங்கு அந்த நல்ல செயல்பாடு இன்னும் தொடங்கவில்லை.

பொதுவாகவே உங்கள் அணியின் செயல்பாடு, உங்கள் பேட்டிங்கில் பிரதிபலிக்கும். உங்கள் பேட்டிங் செயல்பாடு கேப்டன்சியில் பிரதிபலிக்கும். ஆனால், ருதுராஜ் கெய்க்வாடுக்கு இது இரண்டுமே அவர் எதிர்பார்த்த வகையில் செல்லவில்லை.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அதேபோல், சாம்சனும் தற்போது கூடுதல் நெருக்கடியை உணர்கிறார். அவர் டிரேட் செய்யப்பட்டிருக்கிறார், உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வாங்கிவிட்டு வந்திருக்கிறார் எனும்போது அது எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகப்படுத்தும். அதுமட்டுமல்லாமல் அணியின் ஃபார்மும், உங்களின் ஃபார்மும் நன்றாக இல்லாதபோது அது உங்கள் மீதான பாரத்தை மேலும் அதிகரிக்கும்.

இவர்கள் இருவருமே தரமான வீரர்கள். சீக்கிரம் ஃபார்முக்குத் திரும்பிவிடுவார்கள். ஆனால், அப்படி அவர்கள் ஃபார்முக்குத் திரும்பும்வரை அது சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பிரச்னையாகவே இருக்கும். அணியின் பந்துவீச்சு செயல்பாட்டைப் பார்க்கும்போது, அவர்கள் தங்களின் பேட்டிங்கை வைத்துத்தான் வெற்றிபெற வேண்டியிருக்கிறது. அப்படியிருக்கும்போது அதற்கு இவர்கள் இருவரின் செயல்பாடும் மிகவும் முக்கியம்.

டெவால் பிரெவிஸ் காயத்திலிருந்து மீண்டு இந்தப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. அதனால் பேட்டிங் இன்னும் பலமடையவே போகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் யூனிட்டுக்கு இந்தப் போட்டியில் குல்தீப் சவால் கொடுப்பார். சேப்பாக்கம் ஆடுகளத்தில் அவருடைய சுழற்பந்துவீச்சு தாக்கத்தை ஏற்படுத்தலாம். அவர் விக்கெட் எடுப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. பிரெவிஸ் (இந்தப் போட்டியில் ஆடினால்) மற்றும் துபே இருவரும் எப்படி குல்தீப்பை எதிர்கொள்கிறார்கள் என்பது இந்தப் போட்டியில் முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தும்.

CSK vs DC, பிரெவிஸ், சாம்சன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெவால் பிரெவிஸ் காயத்திலிருந்து மீண்டு இந்தப் போட்டியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது (கோப்புப் படம்)

பந்துவீச்சில் ஒரு மாற்றம் தேவை

சூப்பர் கிங்ஸுக்கு இருக்கும் பெரிய பிரச்னை அவர்களின் பந்துவீச்சு தான். ஒரு தொடருக்குள் செல்லும்போது உங்களுக்கு நல்ல தரமான டெத் பௌலர் ஒருவர், முன்னணி ஸ்பின்னர் ஒருவர் கட்டாயம் தேவை. இன்னொரு டெத் பௌலர் இருந்தால் அது கூடுதல் சாதகம். ஆனால், சிஎஸ்கே-வுக்கு இந்த இரண்டு இடத்திலுமே பிரச்னை இருக்கிறது.

நூர் அஹமது நல்ல ஸ்பின்னர் தான் என்றாலும், அவரோடு சேர்ந்து கூட்டணியாக செயல்படுவதற்கான ஒரு ஸ்பின்னர் இல்லாதது ஒட்டுமொத்தமாக சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்த வேலையை பல ஆண்டுகளாக ரவீந்திர ஜடேஜா செய்துவந்தார். அவர் தற்போது இல்லையெனும் போது அது ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலுமே அது வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது.

ஜடேஜாவின் இடத்தில் விளையாட பெரும் தொகை கொடுத்து பிரஷாந்த் வீர் வாங்கப்பட்டிருக்கிறார். ஆனால், அவர் உடனடியாக ஜடேஜாவின் இடத்தை நிரப்பிவிடுவார் என்று எதிர்பார்க்க முடியாது. அவருக்கான அவகாசம் தரப்படவேண்டும். கடந்த போட்டியில் ஓரளவு நன்றாக பேட்டிங் செய்து அவர் தன் திறமையை நிரூபித்தார்.

டெத் பௌலிங்கைப் பொறுத்தவரை சில மாற்றங்கள் தேவை. முதலில் அவர்களின் யோசனையில் மாற்றம் தேவை. முதலில் பந்துவீசுகையில் அந்த கடைசி சில ஓவர்களில் எப்படி 10 ரன்களைக் குறைக்கலாம் என்று யோசிக்கவேண்டும். 220 ரன்கள் போகும் இடத்தில் அதை எப்படி 210 ரன்னாகக் கட்டுப்படுத்தலாம் என்று பார்க்கவேண்டும். அன்ஷுல் கம்போஜ் ஓரளவு யார்க்கர்கள் வீசுகிறார்கள். ஆனால், அது போதாது. எல்லிஸ், பதிரானா போன்ற பௌலர்கள் இருந்திருந்தால் அவர்கள் அங்கே 2-3 ஓவர்கள் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கலாம். ஆனால், இந்த பௌலிங் யூனிட்டில் ஒவ்வொருவருமே பங்களிக்கவேண்டிய அவசியம் இருக்கிறது.

இந்த இடத்தில் தான் குர்ஜப்னீத் சிங் சேர்க்கப்படவேண்டும் என்று நான் கருதுகிறேன். அவர் நல்ல உயரமான பௌலர். ஒரு கடினமான கோணத்தைக் கொண்டுவரக்கூடிய இடது கை வேகப்பந்துவீச்சாளர். 'பேக் ஆஃப் தி ஹேண்ட் ஸ்லோயர் பால்கள்' வீசுவதில் தேர்ந்தவர். யார்க்கர்களும் வீசமுடியும். யார்க்கர்கள் அவருடைய பலம் என்று சொல்லமாட்டேன். ஆனால், அவரது பேக் ஆஃப் தி ஹேண்ட் ஸ்லோயர் பால்கள் நிச்சயம் தாக்கம் ஏற்படுத்தக்கூடியவை. அதனால் விக்கெட்டுகள் எடுக்க முடியும். அன்ஷுல் கம்போஜ், மேட் ஹென்றி, கலீல் அஹமது என பவர்பிளே ஸ்பெஷலிஸ்ட்களாக இருக்கும் அந்த பௌலிங் யூனிட்டில் குர்ஜப்னீத் மூலம் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரமுடியும்.

CSK vs DC, பிரெவிஸ், சாம்சன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குர்ஜன்ப்ரீன் சிங் சூப்பர் கிங்ஸின் டெத் பௌலிங்கை பலப்படுத்துவார் என்கிறார் பாபா இந்திரஜித் (கோப்புப் படம்)

முந்தைய போட்டியை டெல்லி மறக்க வேண்டும்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடு, அவர்களின் அணி காம்பினேஷன் அனைத்திலும் சிக்கல் என்றால், மறுபக்கம் அனைத்து ஏரியாவிலும் திடமாக இருக்கிறது டெல்லி கேபிட்டல்ஸ்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது டெல்லி கேபிட்டல்ஸ் பலமான அணியாக இருக்கிறார்கள். அவர்களின் காம்பினேஷன் சரியாக இருக்கிறது. ஒவ்வொரு இடத்துக்கும் சரியான வீரர்கள் இருக்கிறார்கள். நன்கு பயிற்சி எடுத்திருக்கிறார்கள். இந்த ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பு நடராஜனுக்கு துபையில் அவர்களின் ஐஎல்டி20 அணியோடு பயிற்சி முகாம் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். இப்படி எல்லாமே அவர்களுக்குச் சரியாக சென்று கொண்டிருக்கிறது. இந்த அணியை ஹேமங் பதானியும் சிறப்பாக பயிற்சி கொடுத்து வழிநடத்திக்கொண்டிருக்கிறார். அவர்கள் நிச்சயம் டாப் 4 இடங்களுக்குள் முடிப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

அதேசமயம் அவர்கள் கடந்த போட்டியை எவ்வளவு சீக்கிரம் மறந்துவிட்டு வருகிறார்கள் என்பது முக்கியம். நன்றாக விளையாடாதபோது முடிவுகள் உங்களுக்குச் சாதகமாக வராதது ஒரு விஷயம். ஆனால், நன்றாக விளையாடியபோதும் அவர்களுக்கு கடந்த போட்டியில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை. கையில் இருந்த வெற்றியை அவர்கள் தவறவிட்டிருக்கிறார்கள். அது ஏற்படுத்திய மனநிலை, அவர்களை கீழே இழுத்துச் சென்றுவிடக்கூடாது. அவர்கள் அந்த குஜராத் டைட்டன்ஸ் ஆட்டத்தை மறந்துவிட்டு, அவர்கள் செய்ய நல்ல விஷயங்களைத் தொடரவேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்கள் சேப்பாக்கத்தில் களமிறங்கவேண்டும்.

டெல்லி கேபிட்டல்ஸ் இந்தப் போட்டியில் ஒரு மாற்றத்தை செய்யலாம் என்று நான் கருதுகின்றேன். நித்திஷ் ராணா இந்த சீசனில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவில்லை. அந்த அணியில் கருண் நாயர், அசுதோஷ் ஷர்மா என பல தரமான பேக் அப் வீரர்கள் இருக்கிறார்கள். கருண் நாயர் தொடர்ச்சியாக டொமஸ்டிக் போட்டிகளில் சிறப்பாக ஆடியிருக்கிறார். அதேசமயம் நித்திஷ் ராணா சமீபமாக அதிகமாக டொமஸ்டிக் போட்டிகளில் ஆடவில்லை. அதனால் நம்பர் 3 இடத்தில் கருண் நாயரை முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

தமிழ்நாடு பயிற்சியாளர் & வேகப்பந்துவீச்சாளர்

CSK vs DC, பிரெவிஸ், சாம்சன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹேமங் பதானி (கோப்புப் படம்)

இன்று (ஏப்ரல் 12) டெல்லி அணி சேப்பாக்கத்தில் களமிறங்கும் இந்தப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் அவர்களின் முக்கிய அங்கமாக இருக்கப்போகிறார்கள். ஒன்று அவர்களின் தலைமைப் பயிற்சியாளர் ஹேமங் பதானி. மற்றொன்று வேகப்பந்துவீச்சாளர் நடராஜன்.

ஹேமங் பதானியின் அணி கடந்த சீசனே சேப்பாக்கத்தில் ஒரு பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. முன்னாள் தமிழக வீரரான பதானி 'நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்' என்று சொல்லி அதைச் செய்துகாட்டினார். இம்முறையும் அதைச் செய்வதற்கான நல்ல அணி அவர்களிடம் இருக்கிறது. அந்த அணியை பதானி சிறப்பாகவும் வழிநடத்துகிறார். அவருடைய தாக்கத்தை இந்த அணியில் பார்க்க முடிகிறது.

அவர் உலக அளவில் அவர் பல லீக்குகளில் பயிற்சியாளராக செயல்படுகிறார். கேபிட்டல்ஸ் நிர்வாகத்தின் அணிகளில் பணியாற்றுகிறார். நிறைய கோப்பைகள் வென்றிருக்கிறார். அவரால் இந்திய வீரர்களிடம், குறிப்பாக உள்நாட்டு இந்திய வீரர்களிடம் அவரால் நல்லதொரு உறவைக் கட்டமைக்க முடிகிறது. இந்த சீசனில் அவருடைய அணுகுமுறை சிறப்பாக இருந்திருக்கிறது.

இந்த சீசனின் முதல் போட்டியில் சமீர் ரிஸ்வியை அவர் களமிறக்கிய தருணம் அதிமுக்கியமானது. வேறொரு வீரர் களமிறங்கவேண்டிய சூழ்நிலையில், அதை நிறுத்தி பதானி இப்படியொரு முடிவை எடுத்தார். அதற்கு பெரும் தைரியம் தேவை. அவர் ரிஸ்வியின் ஆட்டத்தை பயிற்சியில் நன்கு பார்த்திருக்க வேண்டும், டொமஸ்டிக் போட்டிகளில் ரிஸ்வியின் ஆட்டத்தைப் பார்த்திருக்க வேண்டும். அவர் கடந்த இரு ஆண்டுகளாக டொமஸ்டிக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். அண்டர் 23 அணிக்கும், தன் மாநில அணிக்கும் மாறி மாறி விளையாடிக்கொண்டிருந்தார். அவரது அத செயல்பாட்டைப் பார்த்து சீசன் தொடக்கத்திலேயே அவரைக் களமிறக்குகிறார் என்பது பதானி அவர்மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. அப்படியொரு முடிவை எடுத்ததற்கு நிச்சயம் அவரைப் பாராட்டியாகவேண்டும்.

இந்தப் போட்டியில் சென்னை ஆடுகளம் பற்றிய புரிதல், சென்னையின் தட்பவெட்பநிலை பற்றிய பதானியின் புரிதலும் நிச்சயம் டெல்லிக்கு கூடுதல் சாதகம்.

CSK vs DC, பிரெவிஸ், சாம்சன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த சீசனில் விளையாடியுள்ள 3 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் நடராஜன் (கோப்புப் படம்)

இன்னொருபக்கம் நடராஜன் இந்த சீசன் சிறப்பான செயல்பாட்டைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த சீசனுக்கு முன்பாக அவர் அவ்வளவு தீவிரமாக பயிற்சி செய்தார். அதை நான் நேரிலும், வீடியோக்களிலும் கூடப் பார்த்தேன். ஒரு இடது கை வேகப்பந்துவீச்சாளரைப் பயிற்சியாளராக நியமித்து அவர் பயிற்சி செய்தார். துபையில், சென்னையில், சேலத்தில்... தொடர்ந்து தீவிரமாக பயிற்சியெடுத்தார். அவரிடம் ஒரு வேட்கையைப் பார்க்க முடிந்தது.

கடந்த சீசனில் காயம் காரணமாக அவரால் கேப்பிடல்ஸுக்கு பெரிய பங்களிப்பைக் கொடுக்க முடியவில்லை. இந்த சீசனுக்கு முன்பாகவும் அவர் காயம் காரணமாக சில டொமஸ்டிக் போட்டிகளில் விளையாடவில்லை. இருந்தாலும் அவர்மீது நம்பிக்கை வைத்து ஒரு பெரிய தொகைக்கு கேபிட்டல்ஸ் நிர்வாகம் அவரை தக்கவைத்தது. அவர்களின் நம்பிக்கைக்கு தன் செயல்பாட்டின் மூலம் நியாயம் சேர்த்திருக்கிறார் நடராஜன்.

இதுவரை நடந்த போட்டிகளில் அவர் யார்க்கர்களை சிறப்பாக வீசியிருக்கிறார். ஆனால், எனக்குப் பிடித்த விஷயம் என்னவெனில், அவர் தன் ஸ்லோயர் பால்களை சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார். எந்த வீரருக்கு எதிராக அதைப் பயன்படுத்த வேண்டும், எந்த சூழ்நிலையில் பயன்படுத்த வேண்டும் என்று சரியாக யோசித்து அதை செயல்படுத்துகிறார். தன் அனுபவத்தை அவர் நன்கு காட்டியிருக்கிறார். நிச்சயம் சேப்பாக்கத்திலும் அவர் அந்த அனுபவத்தைக் காட்டி சூப்பர் கிங்ஸுக்கு சவால் கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

(கட்டுரையாளர் பாபா இந்திரஜித், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் வீரர். இந்தியா ஏ அணிக்காக அவர் விளையாடியிருக்கிறார். தற்போது தமிழ்நாடு அணிக்காக விளையாடிவரும் அவர் வர்ணனையாளராகவும் செயல்படுகிறார்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு