பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு - இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது குஜராத் டைட்டன்ஸ்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கெதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ். முதலிரு போட்டிகளையும் தோற்று சீசனைத் தொடங்கியிருந்த அந்த அணி, இப்போது அடுத்தடுத்து 2 வெற்றிகளைப் பெற்றிருக்கிறது.

டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஷுப்மன் கில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைத்த ஏகானா மைதான ஆடுகளத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். லக்னௌ அணி இழந்த 8 விக்கெட்டுகளையுமே டைட்டன்ஸ் வேகப்பந்துவீச்சாளர்கள் தான் கைப்பற்றினார்கள். அவர்கள் சீராக விக்கெட்டுகள் வீழ்த்தியதால் சூப்பர் ஜெயின்ட்ஸால் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க முடியவில்லை.

ஓப்பனர் மார்க்ரம் மட்டுமே லக்னௌ சார்பில் இந்தப் போட்டியில் 20 ரன்களுக்கு மேல் எடுத்தார். அவர் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வேறு எந்த எல்எஸ்ஜி பேட்டருமே 20 ரன்களைக் கூடத் தொடவில்லை. பந்த் 18, பூரன் 19, சமத் 18, முகுல் சௌத்ரி 18, ஜார்ஜ் லிண்டா 16, மொஹம்மது ஷமி 12, மிட்செல் மார்ஷ் 11, படோனி 9 என அனைவரும் விரைவிலேயே வெளியேறினார்கள்.

குஜராத் பந்துவீச்சாளர்களில் பிரசித் கிருஷ்ணா மிகச் சிறப்பாகப் பந்துவீசி 28 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அஷோக் ஷர்மா 2 விக்கெட்டுகளும், ரபாடா மற்றும் சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 20 ஓவர்கள் முடிவில் லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி சாய் சுதர்ஷன் விக்கெட்டை விரைவில் இழந்தது. அவர் 15 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். ஆனால், இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த் ஷுப்மன் கில், ஜாஸ் பட்லர் இருவரும் நல்லதொரு பார்ட்னர்ஷிப்பைக் கட்டமைத்தனர். மிகவும் அதிரடி காட்டாமல் தங்கள் வழக்கமான பாணியில் நிதானமாகவும் நல்ல வேகத்திலும் ரன் சேர்த்தனர். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 84 ரன்கள் எடுத்தது. 56 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் கில் பிரின்ஸ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 60 ரன்கள் எடுத்திருந்த பட்லரை ஷமி வெளியேற்றினார்.

டைட்டன்ஸ் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும், நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், ராகுல் திவேதியா ஜோடி 30 ரன்கள் சேர்த்து வெற்றியை உறுதிப்படுத்தியது. 8 பந்துகள் மீதம் வைத்து இலக்கை எட்டியது அந்த அணி. வாஷிங்டன் 21 ரன்களுடனும், திவேதியா 10 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

19 போட்டிகளின் முடிவில் தலா 2 வெற்றிகள் பெற்றிருக்கும் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் புள்ளிப் பட்டியலில் முறையே ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் இருக்கின்றனர்.

4 விக்கெட்டுகள் வீழ்த்திய பிரசித் கிருஷ்ணா ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்தப் போட்டிக்குப் பிறகு பேசிய அவர், "எங்களுக்கு இந்த வெற்றி மிக முக்கியமான விஷயம் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் மிகவும் கடுமையாக உழைத்தோம், பல விஷயங்களைச் சரியாகச் செய்தோம். எப்போதும் ஒரு தரமான கிரிக்கெட்டை விளையாடவே நாங்கள் விரும்புகிறோம். மற்ற பந்துவீச்சாளர்கள் உருவாக்கிய அழுத்தத்தினால் கிடைத்த விக்கெட்டுகளை நான் இங்கே அறுவடை செய்கிறேன் என்றுதான் நினைக்கிறேன்." என்று கூறினார்.

போட்டிக்கு தயாராவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், "இது எல்லாவற்றின் கலவை என்றுதான் சொல்வேன். களத்தில் ஏதேனும் நடக்கும்போது அதற்கு எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள நாங்கள் நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளோம். அதுமட்டுமில்லாமல், பயிற்சியின் போது ஒரு அணியாக ஒன்றாக அமர்ந்து ஆலோசிப்போம். எங்கள் ஓய்வறையில் அதிக அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர், எனவே ஒவ்வொருவரின் யோசனைகளையும் உள்வாங்கி அதை மைதானத்தில் சரியாகப் பயன்படுத்துவதை உறுதி செய்கிறோம்." என்றார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு