தமிழ்நாட்டில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க புதிய கட்டுப்பாடு என்ன?

விநாயகர் சதுர்த்தி, சிலைகள் கரைப்பு
படக்குறிப்பு, கோப்புப் படம்
    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்கு முன்பாக தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் அனுமதி பெறுவது கட்டாயம் என சென்னையில் அமைந்துள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை நடப்பாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்றும் பசுமைத் தீர்ப்பாயம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுகளையும் மாநில மற்றும் தேசிய அளவிலான வழிகாட்டுதல்களையும் பின்பற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என நகராட்சி நிர்வாகத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இது குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் என்று தெரிவிக்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.

விநாயகர் சதுர்த்தி, சிலைகள் கரைப்பு
படக்குறிப்பு, கோப்புப் படம்

வழக்கின் பின்னணி என்ன?

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் கடந்த 2023-ஆம் ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கில் 2024-ஆம் ஆண்டு தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பாணையில் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

1. 2020-ஆம் ஆண்டு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்ற வேண்டும்.

2. முறையான கலந்தாலோசனை மற்றும் விழிப்புணர்வு மூலம் செயற்கைக் குளங்களை உருவாக்குவது, நீர்நிலைகள் குறித்த அறிவிப்புகளை முன்கூட்டியே வெளியிடுவது, பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (POP) கொண்டு சிலைகள் தயாரிக்கப்படுவதைத் தடுப்பது போன்றவற்றை மேற்கொள்வதற்காக தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட குழு விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு முன்பு கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும்.

3. விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு முன்பாக நிர்ணயிக்கப்பட்ட நீர் நிலைகளில் சிலைகளைக் கரைக்க அனுமதி பெறுபவர்கள் முன்கூட்டியே செலுத்த வேண்டிய கட்டணங்களை இந்தக் குழு நிர்ணயிக்கும்.

4. சிலை கரைப்பு நிகழ்வுக்கான கட்டணத்தை, கரைக்கப்படவுள்ள சிலையின் அளவு போன்றவற்றின் அடிப்படையில் குழு தீர்மானிக்க வேண்டும்.

5. அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கான அபராத விவரங்கள் குறித்தும், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பே பரவலாக விளம்பரம் செய்யப்படலாம்.

6. விநாயகர் சதுர்த்தி விழாவின்போது வழிபடப்பட்ட சிலைகளைப் பொறுப்புணர்வுடன் கரைப்பதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வுப் பிரசாரத்தை மாவட்ட அளவிலான அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

7. சிலைகளை நீரில் கரைப்பதற்காக வசூலிக்கப்படும் தொகையை, இதற்கென ஒதுக்கப்பட்ட நீர்நிலைகளைப் பராமரிக்கும் பணிகளுக்குப் பயனுள்ள வகையில் செலவிடலாம்.

சென்னை மாநகராட்சி தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்தது என்ன?

விநாயகர் சதுர்த்தி, சிலைகள் கரைப்பு

இந்த வழக்கில் சென்னை மாநகராட்சி தாக்கல் செய்த அறிக்கையில், பட்டினப்பாக்கம், திருவொற்றியூர், காசிமேடு, பாலவாக்கம், எண்ணூர் ஆகிய பகுதிகளில் மொத்தம் 6 இடங்கள் சிலைகளைக் கரைப்பதற்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.

இவற்றில் பட்டினப்பாக்கத்தில் மட்டும் 100 மெட்ரிக் டன் கழிவுகள் சேரலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சிலைகளின் உயரம், அடிப்பகுதியிலிருந்து அதிகபட்சம் 10 அடி வரை மட்டுமே இருக்குமாறும் வரையறுக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாநகராட்சி தேர்வு செய்துள்ள இடங்களில் இரண்டு இடங்கள் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் கீழ் வருவதாகத் தெரிவித்திருந்தார்.

மாற்று இடங்களைப் பரிசீலிக்கச் சொன்ன தீர்ப்பாயம்

இதனைப் பதிவு செய்து கொண்ட தீர்ப்பாயம் பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரை ஆகிய பகுதிகளில் சிலைகளைக் கரைக்காமல் மற்ற இடங்களில் கரைப்பதற்கு பரிசீலிக்க வேண்டும் என செப்டம்பர் 11-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இதற்குப் பின்னர் செப்டம்பர் 15-ஆம் தேதி சென்னை மாநகராட்சி மேலும் ஓர் அறிக்கையை தாக்கல் செய்திருந்தது.

அதில், காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் சுற்றுச்சூழல் அம்சங்கள் மட்டுமல்லாது சிலை கரைப்புக்கு தேர்வு செய்யப்பட்ட இடங்களின் புவியியல் ரீதியான பொருத்தம், வாகன நடமாட்டம், ஊர்வலப் பாதைகள், போக்குவரத்து ஒழுங்குமுறை, காவலர் பணி அமர்த்தல், பொதுப் பாதுகாப்பு மற்றும் அவசரகால அணுகல் ஆகியவையும் கருத்தில் கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விநாயகர் சதுர்த்தி, சிலைகள் கரைப்பு

பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரையில் சிலைகளைக் கரைப்பதைத் தவிர்க்கும் பட்சத்தில் நடைமுறைச் சிக்கல்கள் எழும் என்பதால், நடப்பாண்டில் மட்டும் அங்கு அனுமதி அளிக்குமாறு மாநகராட்சி கோரியிருந்தது.

அடுத்த ஆண்டு முதல் இவ்விரு இடங்களையும் சில கரைப்புப் பட்டியலிலிருந்து நீக்குவது தொடர்பாக மாநில அரசு பரிசீலிக்கும் என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

தீர்ப்பாயத்தின் புதிய உத்தரவு என்ன?

இந்த நிலையில் செப்டம்பர் 17-ஆம் தேதி தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடமிருந்து கடலோர ஒழுங்குமுறை மண்டல - சி.ஆர்.இசட் (CRZ) அனுமதியைப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

இந்த அனுமதியைப் பெறுவது கட்டாயம் என்று உத்தரவிட்டுள்ள தீர்ப்பாயம் இந்த ஆண்டிலேயே உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் செப்டம்பர் 17-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், "சிலைகளை நிறுவுதல் மற்றும் கரைத்தல் தொடர்பான விஷயங்களில், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும். அத்துடன், 24/01/2024 தேதியிட்ட உத்தரவின் வாயிலாக இந்த மாண்புமிகு தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள அறிவுறுத்தல்களையும் அரசு கடைப்பிடிக்கும்." என்று தெரிவித்திருந்தது.

'உத்தரவுகளை அமல்படுத்துவதில் சுணக்கம்'

விநாயகர் சதுர்த்தி, சிலைகள் கரைப்பு
படக்குறிப்பு, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஏற்கெனவே பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவுகளை அரசாங்கம் முழுமையாக அமல்படுத்தவில்லை. இது ஒரு சிறு முன்னேற்றம் மட்டுமே. இந்த உத்தரவுகளை அமல்படுத்துவதில் தான் சுணக்கம் இருக்கின்றது." என்றார்.

இந்த உத்தரவு அனைத்து கடற்கரைப் பகுதிகளுக்கும் பொருந்தும் என்று கூறும் அவர் அதனை மேலும் விவரித்தார்.

"அரசாங்கம் ஒவ்வொரு இடத்திற்கும் தனியாக தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும். சிலைகளைக் கரைப்பவர்கள் இதனைப் பெற வேண்டியதில்லை. அரசாங்கம் இந்த ஆண்டிலே இதனை அமல்படுத்த வேண்டும். ஆனால் அதற்குள் எவ்வாறு செய்வார்கள் என்பது தெரியவில்லை."

"உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என்றால் பசுமைத் தீர்ப்பாயத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர முடியாது. அத்தகைய சூழல்களில் தீர்ப்பாயத்தால் அபராதம் மட்டுமே விதிக்க முடியும். ஏற்கெனவே சட்ட உத்தரவுகள் மற்றும் விதிகள் வலுவாக இருந்தாலும் அவற்றை அமல்படுத்துவது பலவீனமாக உள்ளது. இந்த புதிய உத்தரவு விதிமுறைகளை நடைமுறைப்படுத்த உதவலாம்." என்றார்.

'அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளோம்' - சென்னை மாநகராட்சி ஆணையர்

விநாயகர் சதுர்த்தி, சிலைகள் கரைப்பு
படக்குறிப்பு, சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன்

இந்தச் சூழலில் தீர்ப்பாயத்தின் உத்தரவைத் தொடர்ந்து தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் சிலைகளைக் கரைப்பதற்கான அனுமதி பெற விண்ணப்பித்திருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "வழக்கமாக கட்டடங்களுக்கு அனுமதி வழங்குவது தான் தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் பணியாக இருக்கும். முதல்முறையாக இந்த மாதிரியான உத்தரவு கிடைத்துள்ளது. ஆணையத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளோம். காவல்துறை அறிக்கை உள்பட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளோம். விரைவில் அனுமதி கிடைத்துவிடும் என எதிர்பார்க்கிறோம்."

"சூழலியல் பாதிப்புகள் இல்லாதவாறு தீர்ப்பாயத்தின் உத்தரவை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம். சிலைகள் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்ட பொருட்களை ஆய்வு செய்வது தொடங்கி கழிவுகளைக் கையாள்வது வரை அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. எனவே இந்த ஆண்டு எந்தச் சிக்கலும் இருக்காது. அடுத்த ஆண்டு முதல் விரிவான, புதிய வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டு பின்பற்றப்படும்." என்று தெரிவித்தார்.

தமிழக அரசு கூறுவது என்ன?

விநாயகர் சதுர்த்தி, சிலைகள் கரைப்பு
படக்குறிப்பு, நகராட்சி நிர்வாகத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி

தீர்ப்பாயத்தின் உத்தரவுகளைச் செயல்படுத்த அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என நகராட்சி நிர்வாகத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"இது தொடர்பாக தீர்ப்பாயம் மற்றும் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்துள்ள உத்தரவுகள் மற்றும் மாநில மற்றும் தேசிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த உத்தரவு தொடர்பாக அரசு வழக்கறிஞர் மூலம் உரிய தகவல்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்." என்றும் அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு