தோல்வி காணாத அணியாக தொடரும் பஞ்சாப் கிங்ஸ் - லக்னோவை வீழ்த்தி 5வது வெற்றி

லக்னோ பந்துவீச்சை சிதறடித்த பஞ்சாப். 254 ரன்கள் குவித்தது

பட மூலாதாரம், ANI

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 தொடரின் 29வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை வீழ்த்தியது.

6 போட்டிகளில் விளையாடியிருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. அந்த அணி இன்னும் ஒரு போட்டியில் கூடத் தோற்கவில்லை.

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் இதுவரை விளையாடியிருக்கும் 6 போட்டிகளில் 2 வெற்றியும், 4 தோல்விகளும் சந்தித்திருக்கிறது.

டாஸ் வென்ற லக்னோ கேப்டன் ரிஷப் பன்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 254/7 என்று தங்கள் இன்னிங்ஸை முடித்தது. அந்த அணிக்காக கானலி 87 ரன்களும், பிரியான்ஷ் ஆர்யா 93 ரன்களும் விளாசினர்.

அடுத்து விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்தது.

அதிரடி காட்டிய பிரியான்ஷ் - கானலி

93 ரன்கள் 4 பவுண்டரிகளும், 9 சிக்ஸர்களும் விளாசினார்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, 93 ரன்கள் 4 பவுண்டரிகளும், 9 சிக்ஸர்களும் விளாசினார்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. ஆட்டத்தின் மூன்றாவது பந்திலேயே பிரப்சிம்ரன் சிங் அவுட்டானார். மொஹம்மது ஷமி வீசிய பந்தில் டக் அவுட் ஆகி அவர் வெளியேறினார். ஆனால், அதன்பிறகு களமிறங்கிய கூப்பர் கானலி, பிரியான்ஷ் ஆர்யாவுடன் இணைந்து ஒரு சிறப்பான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார்.

ஆரம்பத்தில் கானலி நிதானமாக ஆட, பிரியான்ஷ் ஆர்யா வழக்கமான அதிரடியை வெளிப்படுத்தினார். மோசின் கான் வீசிய ஆட்டத்தின் ஆறாவது ஓவரில் தன் வேகத்தை இன்னும் பன்மடங்கு அதிகப்படுத்தினார் பிரியான்ஷ். அந்த ஓவரில் 20 ரன்கள் எடுக்கப்பட, பவர்பிளே முடிவில் 1 விக்கெட்டை இழந்து 63 ரன்கள் எடுத்தது கிங்ஸ்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அதன்பிறகு கானலியும் அதிரடியில் இணைந்தார். அவர்கள் இருவரையும் லக்னோ பௌலர்களால் அவுட்டாக்கவும் முடியவில்லை. அவர்களின் வேகத்தையும் கட்டுப்படுத்தவும் முடியவில்லை.

பிரியான்ஷ் ஆர்யா 19 பந்துகளில் அரைசதம் அடிக்க, கானலி 35 பந்துகளில் அரைசதம் கடந்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 13.2 ஓவர்களில் 182 ரன்கள் சேர்த்தது. 46 பந்துகளில் 87 ரன்கள் எடுத்த கானலி, பிரின்ஸ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே பிரியான்ஷ் ஆர்யா விக்கெட்டைக் கைப்பற்றினார் எம்.சித்தார்த். 37 பந்துகளை சந்தித்த பிரியான்ஷ் 93 ரன்கள் விளாசினார்.

அதன்பிறகு வந்த வீரர்கள் அதிரடி காட்டினாலும் சீக்கிரம் வெளியேறினார்கள். ஸ்டாய்னிஸ் மட்டும் சில நேரம் நிலைத்து நின்று விளையாடி 29 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் குவித்தது பஞ்சாப் கிங்ஸ்.

லக்னோ அணி தரப்பில் பிரின்ஸ் யாதவ் மற்றும் தமிழ்நாடு ஸ்பின்னர் எம்.சித்தார்த் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பஞ்சாப் இன்னிங்ஸ் முடிந்த பிறகு பேசிய கூப்பர் கானலி, "தொடக்கத்தில் பந்தின் தன்மைக்கேற்ப நிதானமாக விளையாடினேன், 22 பந்துகளில் 19 ரன்கள் என்பது சற்று நெருக்கடியான சூழல்தான், ஆனால் இறுதியில் சிக்ஸர்கள் அடிக்க எனக்கு நானே வாய்ப்பளித்துக் கொண்டேன். சில பந்துகள் பேட்டின் நடுப்பகுதியில் பட்டு தெறிக்க ஆரம்பித்தவுடன், அந்த வேகம் தானாக வந்துவிடும். பிரியான்ஷ் என்னிடம் அதிகம் பேச மாட்டார், ஆனால் பந்தை வெகுதூரம் அடிக்கக்கூடிய ஒரு உலகத்தரம் வாய்ந்த பேட்டர்." என்று கூறினார்.

பஞ்சாப் ஐந்தாவது வெற்றி

ஐந்தாவது வெற்றியை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ். லக்னோவுக்கு எதிராக 55 ரன்களில் வெற்றி

பட மூலாதாரம், ANI

மிகப் பெரிய இலக்கை சேஸ் செய்யவேண்டிய நெருக்கடி ஆரம்பத்தில் இருந்தே எல்எஸ்ஜி அணிக்கு இருந்தது. ஓவருக்கு சராசரியாக 13 ரன்கள் தேவைப்பட்டிருந்த நிலையில் ஆரம்ப கட்டத்தில் எப்படியும் 10 ரன்ரேட்டுக்கு குறையாமல் இன்னிங்ஸை எடுத்துச் சென்றார்கள் அந்த அணியின் ஓப்பனர்களாகக் களமிறங்கிய மிட்செல் மார்ஷ், ஆயுஷ் படோனி இருவரும்.

பவர்பிளேவின் கடைசி பந்தில் படோனி அவுட் ஆக, 6 ஓவர்கள் முடிவில் 61/1 என்ற ஸ்கோரில் இருந்தது லக்னோ. இது பஞ்சாப் அணியின் பவர்பிளே ஸ்கோரை விட 2 ரன்கள் தான் குறைவு.

ஆனால், மிடில் ஓவர்களில் பஞ்சாப் போல் லக்னோவால் வேகமாக ஆட முடியவில்லை. 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த மிட்செல் மார்ஷ், யுஸ்வேந்திர சஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த சில பந்துகளில் கேப்டன் ரிஷப் பன்ட் விக்கெட்டைக் கைப்பற்றினார் அர்ஷ்தீப் சிங். அவர் 23 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். அடுத்த வந்த பூரன் இந்தப் போட்டியிலும் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியாமல் 9 ரன்களில் வெளியேறினார்.

தொடர்ந்து தேவைப்படும் ரன்ரேட் அதிகரித்துக்கொண்டே போக, லக்னோ வீரர்கள் ரன்ரேட்டைப் பாதுகாத்துக்கொள்வதில் கவனம் செலுத்தினார்கள். 22 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் எய்டன் மார்க்ரம். இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்தது. அதனால் 54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றது.

பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தபோது அவர்களுக்கு நிறைய பெரிய ஓவர்கள் அமைந்தன. அவர்கள் இன்னிங்ஸில் 7 ஓவர்களில் 15 அல்லது அதற்கு அதிகமான ரன்கள் எடுக்கப்பட்டன. அதில் 2 ஓவர்களில் 20 ரன்களும், 1 ஓவரில் 32 ரன்களும் வந்தன.

லக்னோ பேட்டிங் செய்தபோது இப்படிப் பெரிய ஓவர்கள் அதிகமாகக் கிடைக்கவில்லை. அவர்களால் 4 ஓவர்களில் மட்டுமே 15 அல்லது அதற்கு மேலான ரன்கள் எடுக்க முடிந்தது. அதில் 1 ஓவர் மட்டுமே மிடில் ஓவரில் (ஓவர்கள் 7-15) வந்தது. இது லக்னோவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்த சீசனில் ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்திருக்கும் பஞ்சாப் கிங்ஸ், 11 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

பன்ட் சொன்னது என்ன?

போட்டி முடிந்ததும் இந்தத் தோல்விக்கான காரணம் குறித்து பேசிய எல்எஸ்ஜி கேப்டன் ரிஷப் பன்ட், "குறிப்பிட்ட ஒரு பகுதியை மட்டும் சுட்டிக்காட்டுவது கடினம், பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். கவலைப்பட வேண்டிய சில விஷயங்கள் இருந்தாலும், பேட்டிங்கில் சில சாதகமான அம்சங்கள் இருந்தன." என்று கூறினார்.

ஆயுஷ் படோனி தொடக்க வீரராக இறங்கியது பற்றிப் பேசிய அவர், "இது இன்று எடுக்கப்பட்ட முடிவு அல்ல, ஏற்கனவே திட்டமிடப்பட்டது தான். முன்வரிசை வீரர்களின் அழுத்தத்தைக் குறைக்கவே இந்த முயற்சியை மேற்கொண்டோம். எங்கள் அணியின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது, ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணி மிகச் சிறப்பாகவும், உறுதியாகவும் விளையாடியதை பாராட்டியே ஆக வேண்டும்." என்றார்.

போட்டிக்குப் பிறகு பேசிய பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்துவீச்சாளர் வைஷாக் விஜயகுமார், "பயிற்சியாளர்கள் மற்றும் வீடியோ ஆய்வாளர்களிடம் நிறைய திட்டமிடல்கள் உள்ளன. அவர்களின் ஆதரவு இல்லாமல் இது கடினமாக இருந்திருக்கும். கடந்த இரண்டு போட்டிகள் எனக்கு சரியாக அமையவில்லை. பிரின்ஸ் இந்தப் போட்டியில் நன்றாக பந்துவீசினார், அவரிடமிருந்து சில நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். யார்க்கர் மற்றும் ஸ்லோயர் பந்துகளை நம்பி வீசினேன்.

எங்கள் பேட்டர்கள் விளையாடிய விதம் பார்ப்பதற்கே ஆச்சரியமாக இருந்தது. ஒவ்வொரு பந்தும் சிக்ஸருக்குச் செல்லும் என்பது போலவே இருந்தது. லென்த் பந்துகள் இங்கு எடுபடாது என்று வீடியோ ஆய்வாளர்கள் சொன்னார்கள், அதனால் ஷார்ட் பந்துகளாக வீசினேன். சூழ்நிலை எதுவாக இருந்தாலும், நான் எத்தனை ஓவர்கள் வீசினாலும், சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதே எனது அணுகுமுறை." என்று கூறினார். இவர் இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.

டாஸில் என்ன நடந்தது?

டாஸ் வென்ற ரிஷப் பன்ட், "நாங்கள் முதலில் பந்துவீசப் போகிறோம். அவர்கள் ஒரு இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அவர்கள் இந்தத் தொடரில் சிறந்த அணிகளில் ஒன்றாக இருந்துள்ளனர், அதே சமயம் அது நாங்கள் சுதந்திரமாக விளையாடுவதற்கும் வழிவகை செய்கிறது. 200 ரன்களை விட 220 ரன்களை நோக்கி விளையாடுவது சிறந்தது. ராத்தி அணியில் இல்லை, அவருக்குப் பதிலாக சித்தார்த் உள்ளே வருகிறார்." என்று கூறினார்.

பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ், "நாங்கள் டாஸ் தோற்றதைப் பற்றி கவலைப்படவில்லை. இது எங்களுக்கு ஒரு சிறந்த சவால். முதல் இன்னிங்ஸில் எப்படி விளையாட வேண்டும் என்பதைப் பற்றி இது எங்களுக்கு ஒரு யோசனையைத் தரும். அவ்வப்போது உங்களை நீங்களே மெருகேற்றிக் கொள்ள வேண்டும்; இது நமக்கும் நமக்குமான போட்டி, எதிரணியைப் பற்றியது அல்ல. நாம் நிகழ்காலத்தில் கவனம் செலுத்தினால் நிச்சயம் வெற்றி பெறுவோம். நாம் பல போட்டிகளில் விளையாடி இருக்கிறோம், ஆனால் இன்னும் நாம் அடையாத ஒரு தருணம் உள்ளது. ஒரு முழுமையான வெற்றியைப் பெறும் போட்டியாக இது அமையும் என்று நம்புகிறேன்." என்று கூறினார்.

டாஸ் வென்ற ரிஷப் பன்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்

பட மூலாதாரம், Surjeet Yadav/MB Media/Getty Images

படக்குறிப்பு, டாஸ் வென்ற ரிஷப் பன்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார் (கோப்புப் படம்)

பிளேயிங் லெவனில் யார்?

பஞ்சாப் கிங்ஸ்

இந்தப் போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.

பிளேயிங் லெவன்: பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), பிரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கானலி, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், நேஹல் வதேரா, சஷாங்க் சிங், மார்கோ யான்சன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹல், ஜேவியர் பார்ட்லட்.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: வைஷாக் விஜயகுமார், ஹர்ப்ரீத் பிரார், சுயான்ஷ் ஷெட்கே, விஷ்ணு வினோத், யஷ் தாக்கூர்

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்

இந்தப் போட்டிக்கான லக்னோ அணியில் திக்வேஷ் ராத்திக்கு பதிலாக தமிழ்நாடு ஸ்பின்னர் மணிமாறன் சித்தார்த் சேர்க்கப்பட்டார்.

பிளேயிங் லெவன்: மிட்செல் மார்ஷ், எய்டன் மார்க்ரம், ரிஷப் பன்ட் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), நிகோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, முகுல் சவுத்ரி, மொஹம்மது ஷமி, பிரின்ஸ் யாதவ், எம்.சித்தார்த், மோசின் கான், ஆவேஷ் கான்.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: அப்துல் சமத், ஹிம்மத் சிங், மேத்யூ பிரிட்ஸ்கி, மயாங்க் யாதவ், திக்வேஷ் ராத்தி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு