ரத்தக்கண்ணீர் உள்பட எம்.ஆர். ராதா முத்திரை பதித்த 8 படங்கள் - ராதாரவி பேட்டி

எம். ஆர் ராதா
    • எழுதியவர், மீனாட்சி சுந்தரம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற நடிகர் என்று கொண்டாடப்படும் எம்.ஆர்.ராதாவின் பிறந்த நாள் இன்று.

எம்.ஆர்.ராதா நடிப்பு ஆசையில் நாடகக் கம்பெனியில் சேர்ந்தார். பல்வேறு நாடகக் குழுக்களில் நடித்து தனது நடிப்பு திறமையை, தனி பாணியை வளர்ந்து கொண்டார்.

ஒரு கால கட்டத்தில் சொந்தமாக நாடக கம்பெனி தொடங்கி "ரத்தக்கண்ணீர்", "தூக்கு மேடை", "லட்சுமிகாந்தன்", "பம்பாய் மெயில்", "விமலா", "விதவையின் கண்ணீர்", "நியூஸ் பேப்பர்", "தசாவதாரம்", "போர் வாள்" போன்ற நாடகங்களை நடத்தினார்.

இதில் மிகவும் புகழ் பெற்றது ரத்தக் கண்ணீர் நாடகம். அது 3,500 முறை மேடை ஏறி சாதனை படைத்தது.

பின்னர் இந்த நாடகம் சினிமாவாகவும் மாறி கொடிகட்டி பறந்தது. நாடகத்தில் நடித்து வந்தவர் பின்னர் சினிமாவிலும் தடம் பதித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...
எம். ஆர் ராதா

எம்.ஆர்.ராதா பிறந்தநாளையொட்டி அவர் மகனும், நடிகருமான ராதா ரவியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

''அந்த காலத்தில் ராதா இல்லாத படம் சாதா என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு தான் நடித்த படங்களில் நடிப்பால், கெட்அப்பால், குரலால் ரசிகர்களை சுண்டி இழுத்தார். அவருடன் சினிமாவில் இணைந்து நடிக்கிற பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை. நாடகங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன்'' என்றவர் எம்.ஆர்.ராதாவின் 8 பிரபல படங்கள் பற்றி பேச ஆரம்பித்தார்.

ரத்தக்கண்ணீர் படத்தில் எம் ஆர் ராதா
படக்குறிப்பு, ரத்தக்கண்ணீர் படத்தில் எம் ஆர் ராதா

ரத்தக்கண்ணீர்

''என் தந்தையின் நாடகம், சினிமா என்று சொன்னாலே பலரின் நினைவுக்கு வருவது ரத்தக்கண்ணீர்தான். அதெல்லாம் அவரால் மட்டுமே செய்யமுடியும். அந்த மாதிரி படங்கள் ஒருமுறை மட்டுமே வரும். அந்த படத்துக்கு, அவர் நடிப்புக்கு மாற்று கிடையாது. ரத்தக்கண்ணீர் படத்தில் அவர் நடிப்பை பாராட்டாதவர்கள் இருக்க முடியுமா?''

''அந்த படத்தில் அவர் அம்மாவை திட்டுவார் அப்போதும் ரசிகர்கள் கை தட்டுவார்கள். உலகை திட்டுகிறார், கைதட்டுவார்கள். கிளைமாக்சில் கடுமையான வார்த்தைகளை பேசுவார் அப்போதும் கைதட்டுவார்கள். அந்த நாடகம் பல சமூக கருத்துகளை, குறிப்பாக, தனி மனித ஒழுக்கத்தை சொன்னது.'' என்கிறார் ராதா ரவி

பாவமன்னிப்பு படத்தில் எம் ஆர் ராதா
படக்குறிப்பு, பாவமன்னிப்பு படத்தில் எம் ஆர் ராதா

பாவமன்னிப்பு

''நிஜத்தில் அவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். ஆனால், இந்த படத்தில் பக்திமானாக நடித்தார். அதேசமயம் கடவுளை விமர்சனம் செய்வார். இப்படி நடிப்பது கஷ்டம். அதை அழகாக செய்து காண்பித்து இருப்பார். அந்த படத்தின் சிவாஜி ஹீரோ என்றாலும், அப்பா தனித்தன்மை நடிப்பில் மிரட்டியிருப்பார். நாடகம் அனுபவம் இருப்பதால் தனது கெட்அப்பில், விக்கில் கூட வித்தியாசம் காண்பித்து இருப்பார்.'' என்கிறார் ராதா ரவி

பாகப்பிரிவினை படத்தில் எம் ஆர் ராதா
படக்குறிப்பு, பாகப்பிரிவினை படத்தில் எம் ஆர் ராதா நடித்த காட்சி

பாகப்பிரிவினை

''சிங்கப்பூர் சிங்காரமாக மிரட்டியிருப்பார். அவ்வளவு ஸ்டைலாக வருவார், அவர் பேச்சில் அனைத்து உணர்ச்சிகளும் வந்துபோகும், பாகப்பிரிவினை படத்தை இந்தியில், தெலுங்கில் எடுத்தபோது எம்.ஆர்.ராதா கேரக்டருக்கு யாரை ஒப்பந்தம் செய்வது? அவர் மாதிரி யாரும் நடிக்க முடியாதே என்று விவாதம் வந்ததாம். அந்தளவுக்கு பணத்தாசை பிடித்தவரா? கெட்டவராக, ஊழல்வாதியாக கலக்கி இருப்பார். பாவமன்னிப்பு வேறு ரகம், பாகப்பிரிவினை இன்னொரு ரகம்'' என கூறுகிறார் ராதா ரவி

பாலும் பழமும்
படக்குறிப்பு, பாலும் பழமும்

பாலும் பழமும்

''படத்தில் நாட்டு வைத்தியராக வருவார். 'ஏன்டா குரங்குக்கு லேகியம் கொடுத்தீயா, அது மாறியிருக்குதானு கேட்பார்'. எதிராளி 'மாறவில்லை' என்பார். 'அப்ப, குரங்கு மாதிரி குணம் இருக்கிற மனிதனுக்கு கொடு' என்பார். தியேட்டரில் கை தட்டல் பறக்கும்.

அவர் கெட்அப்பே அவ்வளவு அமர்களமாக இருக்கும். தேவாங்கு ராக்கெட் லேகியத்தை அவர் சிவாஜியிடம் மன்றாடும் காட்சி அருமையாக இருக்கும்.'' என்கிறார் ராதா ரவி.

பச்சை விளக்கு

''பீம்சிங் இயக்கிய இந்த படத்தில் சிவாஜி ஹீரோ. இதில் வில்லத்தனம் இல்லாமல் நகைச்சுவை கலந்த கேரக்டரில் வருவார் எம்.ஆர்.ராதா. அந்த கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிக்கும். இப்படி மாறுபட்ட நடிப்பில் அவரை பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும்.'' என்கிறார் ராதா ரவி.

தாழம்பூ திரைபடத்தில் எம் ஆர் ராதா

தாழம்பூ

''எம்ஜிஆரின் இந்த படத்தில் எஸ்.பி.ராஜரத்னமாக வருவார். எம்ஜிஆருடன் அவருக்கான காட்சிகள் கொஞ்சம் குறைவு என்றாலும், அவர் கேரக்டர் மனதில் நிற்கும்.''

இருவர் உள்ளம்

''பல படங்களில் வில்லனாக வந்தவர், இந்த படத்தில் ஞானசிகாமணி என்ற குணசித்திர கேரக்டரில் வருவார்.

படத்தை இயக்கியவர் எல்.வி.பிரசாத். கதை, வசனம் கலைஞர் கருணாநிதி. இதில் இடம் பெற்ற புத்திசிகாமணி பாடலில் அப்பாவின் நடிப்பு அழகாக இருக்கும்.

தனது 6வது குழந்தையை துாங்க வைக்க 'ஆராரோ அட அசட்டு பயபுள்ள ஆரோரோ' என பாடுவார். அந்த பாடல் அவ்வளவு பிரபலம். அந்த பாடல் அவ்வளவு இனிமையாக இருக்கும்'' என்கிறார் ராதா ரவி

பலே பாண்டியாவில் எம் ஆர் ராதா
படக்குறிப்பு, பலே பாண்டியாவில் எம் ஆர் ராதா

பலே பாண்டியா

''இதில் நகைச்சுவை வேடம், இன்சூரன்ஸ் பணத்தை பெற துடிக்கும் வில்லன் வேடம் என இரண்டு வேடத்தில் அப்பா நடித்தார். அந்த படப்பிடிப்பு சமயத்தில் சிவாஜிக்கு அமெரிக்கா நாட்டுக்கு வர அழைப்பு வந்தது. அதனால், அந்த படத்தை விரைவில் முடிக்க வேண்டிய கட்டாயம். நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள். அந்த இரட்டை வேட கேரக்டரை 14நாட்களில் நடித்து முடித்தார்'' என்கிறார் ராதாரவி

எம் ஆர் ராதா பற்றி ராதிகா சொன்னது என்ன?

எம்.ஆர்.ராதா மகளும் நடிகையுமான ராதிகா பிபிசி தமிழிடம், ''அவரின் சினிமா பயணம் போலவே, நாடக பயணமும் முக்கியமானது. அதிலும் நிறைய சமூக கருத்துகளை துணிச்சலாக பேசியிருக்கிறார். கலைஞர் கருணாநிதியால் எழுதப்பட்ட துாக்குமேடை நாடகத்திலும் அவர் பணி சிறப்பாக இருக்கும். அதேபோல் லட்சுமிகாந்தன் என்ற நாடகமும் அப்பா வாழ்க்கையில் முக்கியமானது. அவர் நடித்த படங்களில் ரத்தக்கண்ணீர், பலேபாண்டியா, சித்தி, படிக்காத மேதை, பாவ மன்னிப்பு நான் மிகவும் ரசித்தவை'' என்கிறார்.

பிரச்னைகளை பேசுவோம்
படக்குறிப்பு, உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு