உலகின் நம்பர்-2 டி20 பவுலரான வருண் சக்ரவர்த்தி சமீபத்தில் தடுமாற காரணம் என்ன?

நம்பிக்கை இழந்துவிட்டாரா வருண் சக்ரவர்த்தி? சமீபத்திய தடுமாற்றத்தின் காரணம் என்ன?

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR/AFP via Getty Images

படக்குறிப்பு, இந்த ஐபிஎல் தொடரில் வீசிய 6 ஓவர்களில் வருண் 1 விக்கெட் கூட எடுக்கவில்லை (கோப்புப் படம்)
    • எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழ்
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 2) நடந்த சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கு எதிரான போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோல்வியைத் தழுவியது.

முதலில் பந்துவீசிய கேகேஆர், 20 ஓவர்களில் 226 ரன்களை விட்டுக்கொடுத்தது.

இந்தப் போட்டியில் பந்துவீசிய இந்திய அணியின் முன்னணி ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்தி 2 ஓவர்களில் 31 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இந்தப் போட்டியில் அவர் வீசிய முதல் ஓவரில் 25 ரன்கள் எடுக்கப்பட்டன.

இந்தப் போட்டியில் மட்டுமல்ல, கடந்த சில வாரங்களாகவே வருண் சக்ரவர்த்தி தன் பந்துவீச்சால் தாக்கம் ஏற்படுதத் முடியாமல் தடுமாறுகிறார். ஒவ்வொரு போட்டியிலும் பேட்டர்கள் அவருக்கு எதிராக அதிரடியை வெளிப்படுத்தி ரன்களைக் குவிக்கின்றனர்.

டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்று தொடங்கிய பிறகான 7 போட்டிகளில் வருண் சக்ரவர்த்தியின் எகானமி 12.16. இந்த 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே அவர் பத்துக்கும் குறைவான ரன்ரேட்டில் பந்துவீசியிருக்கிறார்.

உலகக் கோப்பையின் இரண்டாம் பாதியில் தொடங்கிய அவரது தடுமாற்றம் ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்துவருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் 6 ஓவர்கள் பந்துவீசி 79 ரன்கள் விட்டுக்கொடுத்த அவரால் 1 விக்கெட் கூட எடுக்க முடியவில்லை.

உலகின் நம்பர் 2 டி20ஐ பௌலராக விளங்கும் வருண் சக்கர்வர்த்தி சமீபமாகத் தடுமாறுவதன் காரணம் என்ன என்று அலசுவோம்.

நம்பிக்கை இழந்துவிட்டாரா வருண் சக்ரவர்த்தி? சமீபத்திய தடுமாற்றத்தின் காரணம் என்ன?

பட மூலாதாரம், INDRANIL MUKHERJEE/AFP via Getty Images

படக்குறிப்பு, மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முந்தைய போட்டியில் 4 ஓவர்கள் வீசி 48 ரன்கள் கொடுத்தார் வருண் (கோப்புப் படம்)

முதல் ஓவர் பிரச்னைகள்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிராக ஐந்தாவது ஓவரில் பந்துவீச வந்தார் வருண் சக்கர்வர்த்தி. அவர் வீசிய முதல் பந்தையே சிக்ஸருக்கு அனுப்பினார் அபிஷேக் ஷர்மா. அந்த ஓவரில் மேலும் ஒரு சிக்ஸர் அடித்த அபிஷேக், மூன்று பவுண்டரிகளையும் அடித்தார்.

வருண் சக்கர்வர்த்தியை இப்படி முதல் ஓவரிலேயே டார்கெட் செய்தது அபிஷேக் மட்டுமேயல்ல. சமீபத்தில் இது தொடர்ச்சியாக செய்யப்பட்டிருக்கிறது.

ஓம்கர் வாலுஞ்ச் என்ற கிரிக்கெட் செயல்திறன் ஆய்வாளர் கடந்த மாதம் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு செய்திருந்தார். அதில் 2024 முதலான டி20 போட்டிகளில் வருண் சக்கர்வர்த்தியின் தரவுகளை ஆய்வு செய்த அவர், வருண் சக்கர்வர்த்தி தான் வீசும் முதல் ஓவரில் பத்துக்கும் மேற்பட்ட ரன்கள் கொடுத்துவிட்டால் அந்தப் போட்டிகளில் அதன்பிறகு அவரால் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடிவதில்லை என்று பதிவிட்டிருந்தார்.

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முந்தைய போட்டியில் வருண் சக்ரவர்த்தி வீசிய முதலிரு பந்துகளில் முறையே ஒரு பவுண்டரியும், ஒரு சிக்ஸரும் அடித்தார் ரோஹித் ஷர்மா. அந்த ஓவரில் 15 ரன்கள் எடுக்கப்பட்டது.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் வருண் வீசிய முதல் ஓவரில் 18 ரன்கள் எடுக்கப்பட்டது. டிம் செய்ஃபர்ட் அந்த ஓவரில் 2 சிக்ஸர்கள் விளாசினார்.

அதே தொடரின் அரையிறுதியில் வருண் சக்கர்வர்த்தி வீசிய முதல் 3 பந்துகளிலுமே சிக்ஸர்களாக விளாசினார் ஜேக்கப் பெதெல். இறுதியாக அந்தப் போட்டியில் 64 ரன்கள் கொடுத்திருந்தார் வருண். 499 ரன்கள் அடிக்கப்பட்டிருந்த அந்தப் போட்டியில் ஒரு ஓவருக்கு மேல் பந்துவீசிய பௌலர்களில் அதிக எகானமி வைத்திருந்தவர் அவர்தான்.

சொல்லப்போனால் அந்த உலகக் கோப்பையின் முதல் சூப்பர் 8 போட்டியில் டேவிட் மில்லர் இந்த பாணியைக் கடைபிடித்திருந்தார். வருண் வீசியிருந்த முதல் ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்தார் மில்லர். அந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் இன்னிங்ஸே அங்குதான் வேகமெடுத்தது.

இப்படி முதல் ஓவரில் ரன் கொடுத்த பெரும்பாலான போட்டிகளில் வருண் பெரிய தாக்கம் ஏற்படுத்தவில்லை. அதேசமயம் தற்போது அது தொடர்ந்து நடந்துகொண்டிருப்பதால் அது அவருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது.

நம்பிக்கை இழந்துவிட்டாரா வருண் சக்ரவர்த்தி? சமீபத்திய தடுமாற்றத்தின் காரணம் என்ன?

பட மூலாதாரம், Indranil MUKHERJEE / AFP via Getty Images

படக்குறிப்பு, டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்று முதலே வருணின் தடுமாற்றம் தொடங்கிவிட்டது (கோப்புப் படம்)

உளவியல் ரீதியான நெருக்கடி

வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் அபிஷேக் ஷர்மா அதிரடியாக ஆடிக்கொண்டிருந்தபோது வர்ணனை செய்த நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைமன் டூல், "அபிஷேக் ஷர்மா மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுகிறார். கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பேட்டர்களால் பதம் பார்க்கப்படும் ஒரு பௌலரைக் குறிவைத்து அவரைத் தாக்குகிறார். அவருக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்துகிறார்" என்று கூறினார்.

சொல்லப்போனால் இதுதான் சமீபத்திய போட்டிகளில் பெரும்பாலான எதிரணி பேட்டர்களின் திட்டமாக இருக்கிறது. ஆரம்பத்திலேயே வருண் சக்கர்வர்த்திக்கு எதிராக அதிரடியைக் காட்டி அவருக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.

அந்தப் போட்டியின் வர்ணனையின்போது, "அவருடைய உடல்மொழியைப் பார்த்தாலே அவர் மனநிலை தெரிகிறது. ஒரு பேட்டராக நீங்கள் எதிர்பார்ப்பது அதைத்தான்" என்று கூறியிருந்தார் முரளி கார்த்திக்.

சமீபத்திய போட்டிகளில் வருண் சக்கர்வர்த்தியின் உடல் மொழியில் பெரிய வித்தியாசம் தெரிகிறது. முன்பைப் போல் அவர் உறுதியாகக் காணப்படவில்லை.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியின்போது முன்னாள் ஐபிஎல் வீரர் ஶ்ரீவத்ஸ் கோஸ்வாமி வருண் பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், "முதல் இரண்டு பந்துகளிலேயே வருண் சக்ரவர்த்தி 'ரவுண்ட் தி விக்கெட்' சென்றது ஆச்சரியமாக இருக்கிறது. அவருடைய பந்துவீச்சு முறையிலோ அல்லது வேகத்திலோ எந்தப் பிரச்சனையும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை, இது அவருடைய மனநிலை சம்பந்தப்பட்ட விஷயமாகவே கருதுகிறேன். அவர் மனரீதியாக தற்காப்பு ஆட்டத்தை ஆடுவது போலவும், சோர்வாகவும் தெரிகிறார் (நான் தவறாகவும் இருக்கலாம்), ஆனால் நாம் வழக்கமாகப் பார்க்கும் அந்தத் தன்னம்பிக்கை மிகுந்த வருணாக அவர் தெரியவில்லை." என்று கூறியிருந்தார்.

அந்தப் போட்டியில் வருண் வீசிய முதலிரு பந்துகளில் ரோஹித் 10 ரன்கள் அடித்துவிட, 'ஓவர் தி ஸ்டம்ப்' வீசிக்கொண்டிருந்த வருண் அதன்பிறகு 'ரவுண்ட் தி ஸ்டம்ப்' சென்று பந்துவீசினார். அதன்பிறகும் ரோஹித் அந்த ஓவரில் பவுண்டரி அடித்தார்.

அதேபோல், சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியிலும் அபிஷேக் முதல் பந்தில் சிக்ஸர் அடித்ததும் ரவுண்ட் தி ஸ்டம்ப் சென்றார் வருண். அபிஷேக்குக்கு தொடர்ச்சியாக ஆஃப் சைட் 'வைட் லைன்' அருகிலேயே அவர் பந்துவீசினார். லென்த்தை மாற்றினாலும் அதே லைனில் பந்துவீசினார். ஆனால், அதிலும் கூட அபிஷேக் அந்த ஓவரிலேயே 3 பவுண்டரிகள் விளாசினார்.

வருணின் நம்பிக்கை குறைவாக இருப்பது பற்றியும், அதை எதிரணி பேட்டர்கள் குறிவைப்பது பற்றியும் ஒருசில வல்லுநர்களும் தரவுகளும் கூறும் அதேவேளையில், டெக்னிக்கலாகவும் அவரது பந்துவீச்சில் சில வித்தியாசங்களைக் காண முடிகிறது.

நம்பிக்கை இழந்துவிட்டாரா வருண் சக்ரவர்த்தி? சமீபத்திய தடுமாற்றத்தின் காரணம் என்ன?

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR/AFP via Getty Images

படக்குறிப்பு, இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுகள்படி, 2026ம் ஆண்டு இடது கை பேட்டர்களுக்கு எதிராக வருணின் எகானமி 12.2 (கோப்புப் படம்)

பிரச்னை ஏற்படுத்தும் வேகம்

சமீபத்திய காலகட்டத்தில் வருண் சக்கர்வர்த்தி தொடர்ந்து அதீத வேகத்தில் பந்துவீசுவதைக் காண முடிகிறது பேட்டர்கள் இதை எதிர்பார்த்துக் காத்திருப்பதால், அவர் பந்துவீச்சை எதிர்கொள்வது முன்பை விட தற்போது எளிமையாகியிருக்கிறது.

இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுகளின்படி டிசம்பர் 2025 முதல் டி20 உலகக் கோப்பையின் குரூப் சுற்று முடிவு வரையிலான காலகட்டத்தில் தன்னுடைய 61% பந்துகளை மணிக்கு 90 - 95 கிலோமீட்டர் வேகத்தில் வீசியிருக்கிறார் வருண். அந்தப் பந்துகளில் அவருடைய எகானமி 6.7 ஆக இருந்தது. அதே வேகத்தில் அவர் வீசும் பந்துகளின் சதவிகிதம் சூப்பர் 8 சுற்று முதல் 29% ஆகக் குறைந்துவிட்டது. அதேசமயம் அந்த ரன்ரேட்டோ 14.2 ஆக உயர்ந்துவிட்டது.

சமீபத்தில் அவர் பெரும்பாலான பந்துகளை அந்த 90-95 kmph வேகத்தை விட அதிகமாக வீசுகிறார். அதை அவர் சீராகச் செய்துவருவதால் பேட்டர்கள் கணிப்பதற்கு எளிதாக இருக்கிறது. அதனால் முன்பைப் போல் வருண் பந்துவீச்சில் யோசித்து நிதானம் காட்டாமல் அதிரடியைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.

சன்ரைசர்ஸ் vs நைட் ரைடர்ஸ் போட்டியில் வர்ணனை செய்துகொண்டிருந்த இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, "சமீபமாக வருண் ஒற்றைப் பரிணாம வீரராக மாறிவிட்டார். அவர் தொடர்ந்து வேகமாகவே பந்துவீசுகிறார். அதனால் அவரால் பௌலர்களை ஏமாற்ற முடிவதில்லை. அது மிகவும் முக்கியம்." என்று பேசினார்.

அதை வழிமொழிந்த இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முரளி கார்த்திக், "வருணின் வேகமும் தொடர்ச்சியாக கூடிக்கொண்டே இருக்கிறது. இது அவருக்கு எந்த வகையிலும் உதவவில்லை" என்று கூறினார்.

இதுபற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வர்ணனையாளர் ஜதின் சப்ரு, "உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் தொடங்கிய பின்னடைவு, வருண் சக்ரவர்த்திக்கு இன்னும் தொடர்வதாகவே தோன்றுகிறது. வல்லுநர்களுக்கு இது பற்றி நன்றாகத் தெரிந்திருக்கலாம், ஆனால் அவர் பந்தை ரிலீஸ் செய்யும்போது, பேட்டர்கள் ஏதோ ஒரு 'அடையாளத்தை' கண்டுபிடித்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது? அவர்கள் மிக எளிதாக அவரது பௌலிங் ஆக்‌ஷனைக் கணிப்பது போலத் தெரிகிறது - இதனால் அவர் வேகத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார், இது அவரிடம் இருக்கும் அந்த ஏமாற்றும் தன்மையை (deception) இன்னும் குறைத்துவிடுகிறது." என்று கூறியிருந்தார்.

நம்பிக்கை இழந்துவிட்டாரா வருண் சக்ரவர்த்தி? சமீபத்திய தடுமாற்றத்தின் காரணம் என்ன?

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR/AFP via Getty Images

படக்குறிப்பு, நரைன் போல் வருணும் வேகத்தில் வேறுபாடு காட்டவேண்டும் என்கிறார் ரவி சாஸ்திரி (கோப்புப் படம்)

லைன், லென்த், ஃபாலோ த்ரூ பிரச்னைகள்

வருண் சக்கர்வர்த்தியின் பிரச்னை வேகத்தோடு மட்டும் முடிந்துவிடவில்லை. அவருடைய லைன், லென்த் மற்றும் ஃபாலோ த்ரூ என பெரும்பாலான விஷயங்கள் முன்பைப் போல் இல்லை என்கிறார்கள் வல்லுநர்கள்.

இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இர்ஃபான் பதான் வருணின் வழக்கமான 'லென்த்'-ஐ விட தற்போது 'ஷார்ட்' ஆக வீசுவதாகத் தெரிவித்தார். "சென்னையில் நடந்த உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக வருண் பயிற்சி செய்வதைப் பார்த்தேன். அப்போது அவருடைய 'லென்த்' சற்று 'ஷார்ட்' ஆக இருந்தது திரையில் பார்க்கும்போதே தெரிந்தது. அது, அவர் வழக்கமாக ஸ்டம்ப்பைக் குறிவைக்கும் லென்த் அல்ல. அவர் ஷார்ட்டாகப் பந்துவீசவேண்டும் என்று யாரேனும் சொன்னார்களா தெரியவில்லை" என்று கூறினார்.

லென்த்தில் வருண் செய்திருக்கும் மாற்றம் அவருடைய லைனையும் மாற்றியிருக்கிறது என்பது இர்ஃபான் பதானின் வாதம். 2025 செப்டம்பர் முதல் சமீபத்திய டி20 உலகக் கோப்பையின் குரூப் சுற்று வரையில் தான் வீசிய 32% பந்துகளை ஸ்டம்ப் லைனில் வீசியிருந்தார் வருண். ஆனால், சூப்பர் 8 சுற்றிலிருந்து அது 20% ஆகக் குறைந்துவிட்டது.

பொதுவாகவே ஸ்டம்ப் லைனில் பந்துவீசுவதுதான் வருணின் மிகப் பெரிய பலமாக இருந்தது. அவர் தொடர்ச்சியாக ஸ்டம்பைக் குறிவைக்கும்போது பேட்டர்கள் நிறையத் தடுமாறினார்கள். அவரது கூக்ளிக்களை கணிக்காதபோது போல்ட் அல்லது எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார்கள். வருணை 'அட்டாக்' செய்வது அவர்களுக்குக் குதிரைக்கொம்பாக இருந்தது. ஆனால், தற்போது இதில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

முன்பு குறிப்பிட்டிருந்ததைப் போல், அபிஷேக் ஷர்மா சிக்ஸர் அடித்ததும் ரவுண்ட் தி ஸ்டம்ப் வந்த வருண், அதன்பின் வைட் லைனுக்கு அருகிலேயே பந்துவீசினார். அதை ஒரே மாதிரி நகர்ந்து வந்து ஆஃப் சைடில் 3 பவுண்டரிகள் விளாசினார் அபிஷேக். எந்த நெருக்கடியும் இல்லாமல் ஷாட்களை அவரால் தேர்வு செய்ய முடிந்தது.

அதே இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ நிகழ்ச்சியில் பேசிய இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், அவருடைய 'ஃபாலோ த்ரூ'வில் பிரச்னை இருக்கிறது என்றார். இங்கே, ஃபாலோ த்ரூ என்பது பௌலர்கள் பந்தை வீசியபிறகு மேற்கொள்ளும் நகர்வு.

"யாரோ அவருடைய ஃபாலோ த்ரூவை மாற்ற சொல்லியிருக்கிறார்கள். ரன் அப் என்பது எதிர்வினையல்ல. உங்களுடைய பந்துவீச்சு சரியாக இருந்தால், ஃபாலோ த்ரூ சரியாக அமையும்" என்று கூறினார்.

நம்பிக்கை இழந்துவிட்டாரா வருண் சக்ரவர்த்தி? சமீபத்திய தடுமாற்றத்தின் காரணம் என்ன?

பட மூலாதாரம், R. SATISH BABU/AFP via Getty Images

படக்குறிப்பு, வருண் தன் நம்பிக்கையை மீட்க ரஹானே உதவவேண்டும் என்கிறார் இர்ஃபான் பதான் (கோப்புப் படம்)

இதிலிருந்து மீள வருண் என்ன செய்யவேண்டும்?

வருண் வீசும் வேகம் பற்றி கவலை தெரிவித்திருந்த ரவி சாஸ்திரி, வருண் எப்படி வேகத்தை மாற்றி மாற்றி வீசுவது என்ற சுனில் நரைனிடம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறினார்.

சஞ்சய் பங்கர், "வருண் தன் அடிப்படைக்கு சென்று சில விஷயங்களை கவனிக்கவேண்டும். ரன் அப் தூரம் அப்படியே இருக்கிறதா, அவர் ரன் அப்பை அணுகும் வேகம் அப்படியே இருக்கிறதா என்பதைப் பார்க்கவேண்டும். பெரும்பாலான தொழில்முறை பௌலர்கள் ரன் அப் சரியாக இருந்தாலே, அவர்கள் எதிர்பார்த்த இடத்தில் பந்தை சரியாக வீசுவார்கள்" என்று கூறினார்.

இர்ஃபான் பதான் வருண் தன் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கு அஜிங்க்யா ரஹானேவும் உதவவேண்டும் என்று கூறினார். "அவர்கள் விக்கெட் எடுக்காத பட்சத்தில் பவர்பிளேவில் வருணைப் பயன்படுத்துவதை கேப்டன் தவிர்க்கவேண்டும். ஒருவேளை அவர்கள் விக்கெட் எடுத்து நல்ல நிலையில் இருந்தால் அவருக்கு பவர்பிளேவில் கொடுக்கட்டும். இல்லையெனில் 7வது ஓவருக்குப் பிறகு கொடுக்கலாம். அது அவருடைய நம்பிக்கையைத் திரும்பப் பெறுவதற்கு உதவும். அவர் அதைப் பெற்றுவிட்டால் அதன்பிறகு எப்போதுவேண்டுமானாலும் பயன்படுத்தட்டும்" என்று இர்ஃபான் பதான் தெரிவித்தார்.

கடந்த 2 போட்டிகளிலுமே வருணை பவர்பிளேவிலேயே பயன்படுத்தினார் ரஹானே. இந்த ஐபிஎல் தொடரின் பவர்பிளேவில் அவர் வீசிய 2 ஓவர்களில் 40 ரன்கள் கொடுத்திருக்கிறார் வருண். பல முன்னணி பௌலர்கள் இல்லாத நிலையில், எதிரணிகள் தொடக்கத்திலேயே வேகமாக ரன் சேர்ப்பதால் வேறு வழியில்லாமல் வருண் கையில் பந்தைக் கொடுக்கிறார் ரஹானே. அது அணிக்கும் சரி வருணுக்கும் சரி மேலும் பின்னடைவைத் தான் ஏற்படுத்தியிருக்கிறது. இர்ஃபான் பதான் அதைத்தான் தற்போதைக்குத் தவிர்க்கவேண்டும் என்கிறார்.

வருண் சக்கர்வர்த்தி மீண்டும் சிறப்பாகப் பந்துவீச என்ன செய்யவேண்டும் என்பதற்குப் பெரும்பாலானவர்கள் சொல்லும் பதில் அவர் தன் நம்பிக்கையை மீட்கவேண்டும் என்பதுதான். அது எப்போது நடக்கும் என்பதுதான் இப்போது அவர் முன் இருக்கும் மிகப் பெரிய கேள்வி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு