காணொளி: "மான் வேட்டைக்கு போகல"- குடும்பத்தினர் சொல்வது என்ன?

காணொளிக் குறிப்பு, காணொளி: "மான் வேட்டைக்கு போகல"- குடும்பத்தினர் சொல்வது என்ன?
காணொளி: "மான் வேட்டைக்கு போகல"- குடும்பத்தினர் சொல்வது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

கர்நாடகாவில் மான் வேட்டையில் ஈடுபட்டதாகக் கூறி வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 தமிழர்கள் உயிரிழந்த சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹானூரில் உள்ள மரிமங்கலத்தில் நேற்று (ஆகஸ்ட் 15) வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் ஜெபஸ்டின் டேவிட் குமார் ஆகிய மூவர் உயிரிழந்தனர். மரிய மகிமை தாஸ் என்பவர் காயமடைந்தார்.

ஒருபுறம் இந்த சம்பவத்திற்கு தமிழ்நாட்டில் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், மறுபுறம் உயிரிழந்தவர்கள் வேட்டைக்கு செல்லவில்லை என்றும், காணாமல் போன மாடுகளைத் தேடியே அவர்கள் காட்டுக்குள் சென்றதாகவும் உயிரிழந்த ஜெபஸ்டின் டேவிட் குமாரின் மனைவி டோமினோ லியோ மேரி தெரிவிக்கிறார்.

இதுபற்றி பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்த தகவலின்படி, "இரவில் மாடுகள் காட்டில் இருக்கும்போது, புலி, சிறுத்தை பிடித்துக் கொன்றுவிடும் என்பதால் மாடுகளைத் தேடி சென்றுள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் மாடுகளைக் கண்டுபிடிக்க முடியாததால் அங்கேயே ஓர் இடத்தில் படுத்து உறங்கியுள்ளனர். அப்போது அங்கு சென்ற வனத்துறையினர் 7 பேர், இவர்களை சுட்டுக் கொன்றுள்ளனர்.

தொடர்ந்து பேசிய டோமினோ லியோ மேரி, "காட்டிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் ஊருக்கு வந்து தகவல் தெரிவிக்காமலேயே மூன்று பேரின் உடல்களையும் எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில் ஹானூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் தமிழ் பேசும் மக்கள் 2வது நாளாக வனத்துறை அலுவலகம் முன்பு திரண்டு போராடி வருகின்றனர்.

கள்ளித்தொட்டி, தோமையார் பாளையாம், சாக்கியம், கவுதள்ளி போன்ற ஊர்களில் உள்ள வனத்துறை அலுவலகங்களை போராட்டக்காரர்கள் அடித்து, உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு