நெருங்கும் டிரம்பின் ஹோர்மூஸ் கெடு – இந்தியா போன்ற நாடுகள் முன்பே இரானுடன் உடன்பாட்டுக்கு வந்தது எப்படி?

    • எழுதியவர், ஆஸ்மண்ட் சியா
    • பதவி, வணிகச் செய்தியாளர்
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்திற்கு வாஷிங்டன் டிசி நேரப்படி செவ்வாய் இரவு 20:00 மணிக்குள் (புதன்கிழமை 00:00 GMT) இரான் ஒப்புக்கொள்ளத் தவறினால், அந்த நாடு "ஒரே இரவில்" அழிக்கப்படும் என திங்கட்கிழமை அன்று மிரட்டல் விடுத்தார்.

ஆனால் அவரது இந்த சமீபத்திய மிரட்டலுக்கு முன்பே, சில நாடுகள் இரானுடன் ஒப்பந்தம் செய்து தங்களின் கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணை வழியாக பாதுகாப்பாக செல்ல ஏற்பாடு செய்துவிட்டன.

ஆசிய நாடுகள் இந்த ஒப்பந்தங்களை எட்டுவதில் குறிப்பாக ஆர்வமாக உள்ளன. ஏனெனில் அவற்றின் பொருளாதாரங்கள் பாரசீக வளைகுடாவிலிருந்து வரும் எரிசக்தியைப் பெரிதும் நம்பியுள்ளன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஹோர்மூஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களைத் தாக்குவோம் என்று இரான் அச்சுறுத்தியதை அடுத்து, இந்த முக்கியப் போக்குவரத்துப் பாதை உலகளாவிய பதற்றப் புள்ளியாக மாறியுள்ளது.

உலகின் ஐந்தில் ஒரு பங்கு எரிசக்திப் போக்குவரத்து நடைபெறும் அந்த குறுகிய நீர் வழித்தடத்தில், கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்ட இடையூறால் கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

கடந்த வாரம், அமெரிக்காவிற்கு வளைகுடா நாடுகளின் எண்ணெய் தேவையில்லை என்று டிரம்ப் கூறினார்.

மேலும், அந்தப் பிராந்தியத்தின் எரிசக்தியை நம்பியிருக்கும் நாடுகள், ஹோர்மூஸ் நீரிணைக்கு தங்களது போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்றும், கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்குவதை உறுதி செய்ய முன்னின்று செயல்பட வேண்டும் என்றும் அவர் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய வாரங்களில் பாகிஸ்தான், இந்தியா மற்றும் பிலிப்பின்ஸ் உள்ளிட்ட பல ஆசிய நாடுகள், சில கப்பல்கள் பாதுகாப்பாக நீரிணையைக் கடந்து செல்ல அனுமதிக்க இரானுடன் உடன்பாடுகளை செய்துள்ளன.

தங்களது கப்பல்களும் அந்தப் பாதையைப் பயன்படுத்தியதை சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளது.

இருப்பினும், இந்த உத்தரவாதங்களின் வரம்பு மற்றும் இரானுடனான இந்த ஒப்பந்தங்கள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்த கேள்விகள் இன்னும் நீடிக்கின்றன.

"இந்த உத்தரவாதங்கள் ஒரு குறிப்பிட்ட நாட்டின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்துக் கப்பல்களுக்கும் பொருந்துமா அல்லது சில குறிப்பிட்ட கப்பல்களுக்கு மட்டும்தானா என்பது இன்னும் எங்களுக்குத் தெரியவில்லை," என்று 'மாரிஸ்க்' கப்பல் ஆலோசனை நிறுவனத்தைச் சேர்ந்த டிமிட்ரிஸ் மானியாடிஸ் கூறியுள்ளார்.

இருப்பினும், "வளைகுடா நாடுகளின் எரிசக்தி தேவைப்படும் நாடுகள், கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டுமானால் இரானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை இப்போது உணர்ந்து வருகின்றன," என்று சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராக்ஷி தெரிவித்துள்ளார்.

பயன் தரும் ராஜ்ஜீய உத்தி

இரானுடன் ஒப்பந்தம் செய்துள்ள சமீபத்திய நாடு பிலிப்பின்ஸ் ஆகும்.

பிலிப்பின்ஸ் நாட்டின் கொடியுடன் செல்லும் கப்பல்கள், அந்த நீர் வழித்தடத்தின் வழியாக "பாதுகாப்பான, தடையற்ற மற்றும் விரைவான பயணத்தை" மேற்கொள்ளலாம் என்று இரான் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளதாக, பிலிப்பின்ஸின் வெளியுறவுத் துறைச் செயலாளர் தெரசா லாசரோ தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை இரானுடன் மேற்கொள்ளப்பட்ட "மிகவும் ஆக்கபூர்வமான தொலைபேசி உரையாடலுக்கு" பிறகு எட்டப்பட்ட இந்த ஒப்பந்தம், எரிசக்தி மற்றும் உர விநியோகத்தை உறுதி செய்வதில் "மிகவும் முக்கியமானது" என்று அவர் கூறினார்.

பிலிப்பின்ஸ் தனது கச்சா எண்ணெய் தேவையில் 98% சதவீதத்தை மத்திய கிழக்கிலிருந்து இறக்குமதி செய்கிறது. இரான் போர் தொடங்கிய பிறகு, அந்நாட்டில் பெட்ரோல் விலை இரண்டு மடங்குக்கும் மேல் உயர்ந்ததை அடுத்து, தேசிய எரிசக்தி அவசரநிலையை அறிவித்த முதல் நாடு பிலிப்பின்ஸ் ஆகும்.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் இந்த நீர் வழித்தடம் திறந்தே இருப்பதாக இரான் கூறுவதில் இன்னும் நிச்சயமற்ற தன்மை நீடிக்கிறது என்று சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் எரிசக்தி ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த ரோஜர் ஃபோக்வெட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நட்பு நாடாகக் கருதப்படும் பிலிப்பைன்ஸ் இந்த ஒப்பந்தத்தைச் செய்திருப்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்றும் இது இரான் "விஷயங்களை வகைப்படுத்திப் பார்க்க" விரும்புவதைக் காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.

"ஒரு நாட்டின் கூட்டணி உறவுக்கும், அந்த நாடு இந்த மோதலில் நேரடியாக பங்கேற்பதற்கும் இடையே இரான் வேறுபாடு காண்பதாகத் தெரிகிறது."

மற்ற நாடுகளும் இரானுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. பாகிஸ்தானின் 20 கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்து செல்ல இரான் ஒப்புக்கொண்டுள்ளதாக மார்ச் 28 அன்று பாகிஸ்தான் அறிவித்தது.

"இது இரானின் வரவேற்கத்தக்க மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கை, இது பாராட்டப்பட வேண்டியது," என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் கூறினார்.

இந்தியக் கொடியுடன் வரும் கப்பல்கள் நீரிணையை கடப்பதை இரான் அனுமதித்துள்ளது.

"எங்கள் இந்திய நண்பர்கள் பாதுகாப்பான கரங்களில் உள்ளனர், கவலை வேண்டாம்," என்று இந்தியாவில் உள்ள இரான் தூதரகம் கடந்த வாரம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.

தென்னாப்பிரிக்காவில் உள்ள இரான் தூதரக அலுவலகம், "இரானும் ஓமனும் மட்டுமே" ஹோர்மூஸ் நீரிணையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்று பதிவிட்டிருந்த பதிவிற்குப் பதிலளிக்கும் விதமாக இப்படி கூறப்பட்டது.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த மார்ச் மாதம் 'பைனான்சியல் டைம்ஸ்' இதழுக்கு அளித்த பேட்டியில், இந்திய எண்ணெய் கப்பல்கள் அந்தப் பாதையைக் கடந்து செல்வது ராஜ்ஜீய பேச்சுவார்த்தைக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார்.

இரான் எண்ணெயை அதிக அளவில் வாங்கும் நாடான சீனா, தனது சில கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்ததை கடந்த வாரம் உறுதிப்படுத்தியது.

இருப்பினும், அது இரானைப் பற்றியோ அல்லது கப்பல்கள் குறித்த கூடுதல் விவரங்களையோ குறிப்பிடவில்லை.

"சம்பந்தப்பட்ட தரப்பினருடனான ஒருங்கிணைப்பைத் தொடர்ந்து, மூன்று சீனக் கப்பல்கள் சமீபத்தில் ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்தன. வழங்கப்பட்ட உதவிக்காகச் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறினார்.

கப்பல்களைக் கண்காணிக்கும் தரவுகள், போர் நடந்த போதிலும் அமெரிக்காவின் தடைகளை மீறி இரானிடமிருந்து மில்லியன் கணக்கான பேரல் எண்ணெய் சமீபத்திய வாரங்களில் சீனாவிற்கு விநியோகிக்கப்பட்டுள்ளதைக் காட்டுகின்றன.

மேலும், அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே போர் நிறுத்தத்தைக் கொண்டுவர பாகிஸ்தானுடன் இணைந்து சீனா முயற்சி செய்து வருகிறது.

இன்னும் தெரியாத விஷயங்கள்

சில கப்பல்கள் எந்த அடிப்படையில் பாதுகாப்பான பயணத்திற்காகப் பேச்சுவார்த்தை நடத்தின என்பதும், நீரிணையை கடக்க அவை ஏதேனும் கட்டணம் செலுத்தினவா என்பதும் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

கடந்த வார இறுதியில், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை ஏற்றிச் சென்ற ஜப்பானியக் கப்பல் ஒன்று ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்ததாக 'மிட்சுயி ஓஎஸ்கே லைன்ஸ்' கப்பல் நிறுவனம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

"கப்பல் மற்றும் அனைத்து ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது," என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

ஆனால், ஏதேனும் சுங்கக் கட்டணம் செலுத்தப்பட்டதா அல்லது ஊழியர்கள் எவ்வாறு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்தனர் என்பது குறித்து அந்நிறுவனம் கருத்து தெரிவிக்கவில்லை.

மார்ச் மாதத்தில், மலேசியாவின் சில எண்ணெய் கப்பல்கள் நீரிணையைக் கடக்க இரான் அனுமதி அளித்துள்ளதாக மலேசியா தெரிவித்தது.

இதற்காக மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம், தனது நாட்டு கப்பல்களின் பயணத்தை எளிதாக்கியதற்காக இரான் அதிபருக்கு நன்றி தெரிவித்தார்.

"இரான் அரசாங்கத்துடனான நல்ல ராஜ்ஜீய உறவே இதற்குக் காரணம்" என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மற்ற மலேசியக் கொடி ஏந்திய கப்பல்களுக்கும் இதே போன்ற உறுதிமொழிகள் வழங்கப்படுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

மலேசியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு வளைகுடா நாடுகளிலிருந்து வருகிறது.

இந்த ஒப்பந்தங்கள் மற்ற நாடுகளுக்கு ஏற்படுத்தும் தாக்கங்கள் இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளன.

உதாரணமாக, மற்ற நாடுகள் தங்கள் கப்பல்களின் கொடிகளைக் கடந்து செல்ல அனுமதிக்கப்படும் நாடுகளின் கொடிகளாக மாற்றிக்கொள்ளுமா என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.

தற்போது பல எண்ணெய் கப்பல்கள் பனாமா மற்றும் மார்ஷல் தீவுகள் போன்றவற்றின் கொடிகளை ஏந்திச் செல்கின்றன. ஆனால் அந்த நாடுகளுக்குப் பாதுகாப்பான பயணத்திற்கான உறுதிமொழிகள் இன்னும் கிடைக்கவில்லை என்று மானியாடிஸ் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த ஒப்பந்தங்கள் ஒரு "ராஜ்ஜீய முன்னேற்றம்" என்றாலும், இது ஒட்டுமொத்தப் பிரச்னைக்கும் ஒரு தீர்வு அல்ல என்று எரிசக்தி பொருளாதார நிபுணர் ராக் ஷி குறிப்பிட்டுள்ளார்.

இந்த உறுதிமொழிகள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதும், அந்தப் பிராந்தியத்தில் நடைபெறும் ராணுவ நடவடிக்கைகள் இவற்றை எவ்வாறு பாதிக்கும் என்பதும் இன்னும் தெரியவில்லை என்று அவர் கூறினார்.

Get in touch

பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு