ஒற்றைப் பூட்டு அலுவலர், மசால்ஜி, லஸ்கர்: வித்தியாசமான பெயர் கொண்ட 5 அரசுப் பணிகள்

அணையில் நீரை திறந்துவிடும் வேலையை செய்பவர்கள் லஸ்கர் என்ற பதவிப் பெயரில் பணியமர்த்தப்படுகிறார்கள் (சித்தரிப்பு படம்)

பட மூலாதாரம், SAM PANTHAKY/AFP/GettyImages

படக்குறிப்பு, அணையில் நீரை திறந்துவிடும் வேலையை செய்பவர்கள் லஸ்கர் என்ற பதவிப்பெயரில் பணியமர்த்தப்படுகிறார்கள் (சித்தரிப்பு படம்)
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

லஸ்கர், மசால்ஜி, காவடி, ஒற்றைப்பூட்டு அலுவலர் ஆகிய பெயர்களைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் காலம்காலமாக உள்ள சில பணியிடங்களின் பெயர்கள் தான் இவை.

இவர்களின் அன்றாட பணி என்ன? இவர்களுக்கு அரசு வழங்கும் ஊதியம் என்ன? பார்க்கலாம்.

மசால்ஜி (mashaalji):

மஷ்அல் என்ற உருது சொல்லுக்கு தீப்பந்தம் அல்லது விளக்கு எனப் பொருள்படுகிறது.

அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்களில் மாலை நேரங்களில் விளக்குகளைத் துடைத்து ஒளி ஏற்றி வைப்பவர்களை 'மசால்ஜி' எனக் குறிப்பிட்டுள்ளனர். அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு நிகரான இந்தப் பதவி தமிழ்நாட்டில் வருவாய்த்துறை, நீதிமன்றங்களில் இடம்பெற்றுள்ளது.

சமையல் உதவி செய்வது, அரசுக் கோப்புகளை அடுக்கி வைத்தல் உள்பட பல்வேறு பணிகளை மசால்ஜி பணியாளர்கள் செய்து வருகின்றனர். நீதிமன்றங்களில் வாட்ச்மேன் பணியிடம், தூய்மைப் பணியாளர் போன்ற பணிகளை மசால்ஜி கவனித்து வருகிறார்.

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்தப் பணியிடம் வழங்கப்படுகிறது. பெண்கள், கணவரை இழந்த ஆதரவற்ற பெண்கள், பிற்படுத்தப்பட்ட பிரிவினர், சீர்மரபினர் ஆகியோருக்கு இந்தப் பணியிடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இவர்களுக்கு ரூ.15,700 - 58,100 என்ற விகிதத்தில் சம்பளம் வழங்கப்படுகிறது.

லஸ்கர் (Lascar):

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அணைகளில் நீரைத் திறந்துவிட வேண்டும் என்றால், 'லஸ்கரை கூப்பிடுங்கள்' என அதிகாரிகள் அழைப்பது வழக்கம். அரசின் நீர்ப்பாசனத் துறை மற்றும் பொதுப்பணித்துறைகளில் 'லஸ்கர்' பணியிடம் உள்ளது.

நீர்த்தேக்கங்களின் அன்றாட பராமரிப்பு, கண்காணிப்புப் பணிகளை லஸ்கர் மேற்கொள்கிறார். மதகுகளை இயக்குவது, ஷட்டர்களை திறந்து பாசனத்துக்கு தண்ணீர் விடுவது, நீரின் அளவுகளைக் கண்காணிப்பது, உயர் அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்புவது போன்றவை இவரின் பணியாக உள்ளது.

நீர்பிடிப்புப் பகுதிகளில் விரிசல், நீர்க்கசிவு போன்றவற்றைத் தொடர்ந்து கண்காணிப்பது, கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காலங்களில் அணைப் பகுதியில் தங்கி அவசரப் பணிகளை இவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

இப்பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு அடிப்படைக் கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அடிப்படை சம்பளமாக 15,700 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லஸ்கர் என்ற உருது சொல்லுக்கு ராணுவம் அல்லது முகாம் எனப் பொருள்படுகிறது. தளபதி அல்லது மேற்பார்வையாளர் எனவும் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

'லஸ்கர்' என்ற சொல்லின் பயன்பாடு 1500 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் போர்ச்சுக்கீசிய மொழியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆசிய மாலுமிகளை இவ்வாறு அழைத்துள்ளனர்.

17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய கப்பல்களில் பணிபுரிய 'லஸ்கர்கள்' எனப்பட்ட ஆசிய மாலுமிகளை ஆங்கிலேயர்கள் பணியமர்த்தியுள்ளனர்.

ஒற்றைப் பூட்டு அலுவலர் - இரட்டைப் பூட்டு அலுவலர்:

தமிழ்நாடு வனத்துறை, கருவூலத் துறை உள்பட சில துறைகளில் ஒற்றைப்பூட்டு மற்றும் இரட்டைப் பூட்டு அலுவலர் பணியிடங்கள் உள்ளன.

தமிழ்நாடு வனத்துறையில் சத்தியமங்கலம், சேலம் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் அரசு சந்தன மரக் கிடங்குகள் உள்ளன. இவை மதிப்புமிகுந்த மரக்கட்டைகளாக இருப்பதால் திருட்டு, கடத்தல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் மாநில வனத்துறை பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது .

அதன்படி, ஒற்றைப் பூட்டு அலுவலர் மற்றும் இரட்டைப்பூட்டு அலுவலர் (Dual Control Custody System) என இரு வேறுபட்ட அதிகாரிகள் மூலம் இவை பராமரிக்கப்படுகின்றன.

இந்தப் பணியிடங்களில் 'ஒற்றைப் பூட்டு அலுவலர்' என்பது வனச் சரகரைக் குறிக்கிறது. உதவி வனப் பாதுகாவலர் (ACF) அல்லது மாவட்ட வன அலுவலர் 'இரட்டைப் பூட்டு அலுவலர்' என அழைக்கப்படுகிறார்.

மரக்கிடங்கை ஒற்றை நபராக மட்டும் திறப்பதற்கு வாய்ப்பில்லை. ஒற்றைப் பூட்டு அலுவலர் மற்றும் இரட்டைப்பூட்டு அலுவலர் ஆகியோர் தங்கள் சாவிகளுடன் நேரில் வந்தால் மட்டுமே திறக்க முடியும்.

மரங்களின் இருப்பை சரிபார்க்கும்போதும் பொது ஏலங்களின்போதும் மட்டுமே இவை திறக்கப்படும்.

தமிழ்நாடு அரசின் கருவூலத் துறையில் இதே முறை பின்பற்றப்படுகிறது. சார்-கருவூலங்களில் முத்திரைத்தாள்கள் வைக்கப்பட்டிருக்கும். இவை மதிப்புமிக்கதாகப் பார்க்கப்படுகிறது. இவை வைக்கப்பட்டுள்ள இடம் ஸ்ட்ராங் ரூம் (Strong Room) எனப்படுகிறது.

"இதற்கு இரண்டு சாவிகள் இருக்கும். ஒரு சாவி அலுவலக தலைமை பொறுப்பாளரிடம் இருக்கும். இன்னொரு சாவி அதற்கு அடுத்த நிலையில் உள்ளவரிடம் இருக்கும். இரண்டு அலுவலர்கள் இருந்தால் தான் கதவைத் திறக்க முடியும்" என்கிறார், கருவூலத்துறையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அவை நாயகன்.

"சாவியை வைத்திருக்கும் ஓர் அதிகாரி விடுப்பில் சென்றுவிட்டால் அடுத்தநிலையில் உள்ள சீனியர் அதிகாரியிடம் சாவி ஒப்படைக்கப்படுகிறது. இந்தப் பதவி இரட்டைப்பூட்டு அலுவலர் (Double Lock Officer) எனக் கூறப்பட்டது" என அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"தற்போது 'டபுள் லாக் ஆபரேஷன்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. கருவூலத்தில் உள்ள தலைமை கணக்காளரே இந்தப் பதவியை வகித்து வருகிறார்" என்கிறார் அவை நாயகன்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதாராக இருந்த பி.எஸ். மாதவி

பட மூலாதாரம், PriyarajanDMK/IG

படக்குறிப்பு, பெருநகர சென்னை மாநகராட்சியின் தபேதாராக இருந்த பி.எஸ். மாதவி (இடது) கோப்புப்படம்

தபேதார் (Dafadar):

நீங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்கோ, நீதிமன்றத்துக்கோ, மாநகராட்சி மேயரை சந்திக்க சென்றாலோ வெள்ளை நிற உடையில் தலைப்பாகையும் சிவப்பு நிறத்தில் குறுக்குப் பட்டையும் அணிந்துள்ள ஒருவரைப் பார்த்திருப்பீர்கள். அவர் தான் தபேதார் என்கிற டவாலி.

தபேதார் என்ற சொல் உருது மற்றும் பாரசீக மொழியில் இருந்து உருவானது. குழு அல்லது படைப்பிரிவு ஆகியவற்றைக் குறிப்பதற்கு இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

தலைமை அலுவலக உதவியாளர்களாக இவர்கள் பார்க்கப்படுகின்றனர். ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்து இந்தப் பணியிடம் நடைமுறையில் உள்ளது.

அதிகாரிகளை சந்திக்க வரும் பார்வையாளர்களை ஒழுங்குபடுத்துவது இவர்களின் பிரதான பணியாக உள்ளது. இப்பணியிடத்துக்கு எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு, மாவட்ட நீதிமன்றங்களில் நேரடி நியமனம் ஆகியவற்றின் மூலமாக இவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களின் சம்பள விகிதம் என்பது ரூபாய் 15,700 – 50,000 என்ற அளவில் வழங்கப்படுகிறது.

யானைப் பாகனுக்கு உதவியாக 'காவடி' என்பவர் நியமிக்கப்படுகிறார்
படக்குறிப்பு, யானைப் பாகனுக்கு உதவியாக 'காவடி' எனும் பெயரில் பணியாளர் நியமிக்கப்படுகிறார்

காவடி (kavadi):

தமிழ்நாடு வனத்துறையின்கீழ் முதுமலை தெப்பக்காடு மற்றும் ஆனைமலை கோழிகமுத்தி ஆகிய இடங்களில் யானை முகாம்கள் செயல்படுகின்றன. இந்த முகாம்களில் யானையைப் பராமரிக்கும் பணியில் மாவுத் (mahout) எனப்படும் யானைப் பாகன் ஈடுபடுவார்.

இவர்களுக்கு உதவியாக காவடி (kavadi) என்பவர் நியமிக்கப்படுகிறார். "இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது காவடி பணியிடம் உருவாக்கப்பட்டது. பாகனை வார்டன் எனவும் அவரின் உதவியாளரை கோ-வார்டன் எனவும் அழைத்தனர்" என்கிறார், ஊட்டி அரசு கலைக்கல்லூரியின் வனஉயிரியல் துறையின் தலைவர் ராமகிருஷ்ணன்.

உலகளாவிய இயற்கை மையத்தின் ஆசிய யானைகள் நிபுணர் குழுவின் உறுப்பினராகவும் இவர் பொறுப்பு வகிக்கிறார். "கோ-வார்டன் என்ற பெயர் காலப்போக்கில் கோ-வார்டி என அழைக்கப்பட்டு பிறகு காவடி என மருவியது" என அவர் குறிப்பிட்டார்.

ஊட்டி அரசு கலைக்கல்லூரியின் வனஉயிரியல் துறையின் தலைவர் ராமகிருஷ்ணன்
படக்குறிப்பு, ஊட்டி அரசு கலைக்கல்லூரியின் வனஉயிரியல் துறையின் தலைவர் ராமகிருஷ்ணன்

"யானை எப்போதும் ஒருவரை நம்பி இருக்க முடியாது. சில நேரங்களில் மாவுத் விடுப்பு எடுக்கும்போது அதனை காவடி பராமரிப்பார்" எனக் கூறும் ராமகிருஷ்ணன், "யானை அனைவரையும் அருகில் சேர்ப்பதில்லை. உதவியாக இன்னொரு நபரை பழக்கி வைக்க வேண்டும். அந்தவகையில் காவடி நியமிக்கப்படுகிறார்" என்கிறார்.

"வனத்துறையின் யானை முகாம்களில் ஒவ்வொரு யானைக்கும் ஒரு மாவுத்தும் ஒரு காவடியும் நியமிக்கப்பட்டுள்ளனர்" என அவர் குறிப்பிட்டார்.

"ஆண் யானைக்கு மதம் பிடிக்கும்போது சில நேரங்களில் யானைப் பாகனால் கூட அதனை அமைதிப்படுத்த முடியாமல் போன சம்பவங்கள் உள்ளன. அந்தநேரங்களில் யானையை தனது கட்டுப்பாட்டில் காவடி கொண்டு வந்த சம்பவங்களும் நடந்துள்ளன" என்கிறார், ராமகிருஷ்ணன்.

"யானை தண்ணீரில் குளிக்கும்போது மாவுத் உடன் அதன் நெருக்கம் அதிகரிக்கும். உடல் முழுவதும் தேய்த்துக் குளிப்பாட்டும்போது அவரின் அக்கறையை யானை உணர்ந்து கொள்ளும். இது காவடிக்கும் பொருந்தும்" என அவர் தெரிவித்தார்.

காவடி தேர்வு செய்யப்படும் முறை குறித்து கேட்டபோது, "தனக்குத் தேவையான காவடி யார் என்பதை மாவுத் முடிவு செய்வார். 'யானை குறிப்பிட்ட காவடியை சேர்த்துக் கொண்டது' என்றால் மட்டுமே அரசுப் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்" என்கிறார் அவர்.

'காவடி பணியிடத்துக்கு தமிழ் பேசத் தெரிந்தால் போதுமானது. யானை பராமரிப்பு குறித்த பாரம்பரிய அறிவு மற்றும் அனுபவங்களைப் பெற்றிருக்க வேண்டும். யானை முகாமில் குறைந்தபட்சம் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்' என, கடந்த ஆண்டு வனத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இவர்களின் சம்பளம் தொடர்பான விவரங்கள் எதுவும் வனத்துறையின் அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு