லேசர் சிகிச்சை மூலம் கண்ணாடிக்கு 'குட்பை' சொல்ல நினைக்கிறீர்களா? 8 முக்கிய விஷயங்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஓம்கார் கரம்பேல்கர்
- பதவி, பிபிசி மராத்தி
- வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
கண்ணாடிகள் அல்லது கான்டாக்ட் லென்ஸ் அணிவது பலருக்கும் பெரும் சிரமமாக இருக்கலாம். அன்றாடப் பயணங்கள், அலுவலகப் பணிகள், விளையாட்டுப் போட்டிகள், நீச்சல் அல்லது எளிய சமூக நிகழ்வுகளின்போதுகூட இவை சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். எனவே, கடந்த சில ஆண்டுகளில் லேசிக் அறுவை சிகிச்சை மீதான மக்களின் ஆர்வம் வெகுவாக அதிகரித்துள்ளது.
ஆனால், இந்த கண் அறுவை சிகிச்சை உண்மையில் அனைவருக்கும் பாதுகாப்பான, பொருத்தமான தீர்வுதானா?
லேசிக் தொடர்பான விளம்பரங்களுக்கு அப்பால் உள்ள மருத்துவ யதார்த்தம் குறித்து கண் மருத்துவர்கள் கூறுவது என்ன? லேசிக் அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் முடிவை எடுப்பதற்கு முன்பு, ஒருவர் முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் யாவை?
லேசிக் ஒரு அதிநவீன மற்றும் பயனுள்ள அறுவை சிகிச்சையாக இருந்தாலும், அது அனைவருக்கும் பொருத்தமானதாக இருக்கும் என்றில்லை.
தவறான நேரத்தில், போதுமான பரிசோதனைகள் இன்றி, அல்லது நோயாளியின் கண் அமைப்பை முறையாகக் கருத்தில் கொள்ளாமல் செய்யப்படும் லேசிக் அறுவை சிகிச்சையானது, எதிர்காலத்தில் தீவிரமான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.
இதனால்தான், யார் லேசிக் சிகிச்சை செய்துகொள்ளலாம், யார் அதைத் தவிர்க்க வேண்டும் என்பன குறித்து உலகெங்கிலும் உள்ள கண் மருத்துவர்கள் ஓர் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.
லேசிக் என்றால் என்ன?
லேசிக் (LASIK) என்பது பார்வைக் குறைபாடுகளைச் சரிசெய்ய லேசரை பயன்படுத்தும் ஒரு வகை கண் அறுவை சிகிச்சையாகும்.
இந்த அறுவை சிகிச்சையில், மருத்துவர்கள் உங்கள் கண்ணின் தெளிவான முன்பகுதியான கார்னியாவை கவனமாக மறுவடிவமைப்பு செய்கிறார்கள். இது, ஒளி உங்கள் கண்ணுக்குள் சரியாக நுழைந்து விழித்திரையில் துல்லியமாகக் குவிய உதவுகிறது. அதனால் உங்களால் தெளிவாகப் பார்க்க முடிகிறது.
இந்த அறுவை சிகிச்சை கிட்டப்பார்வை (மயோபியா), தூரப்பார்வை (ஹைபரோபியா), சீரற்ற கண் வடிவத்தால் ஏற்படும் மங்கலான பார்வை (அஸ்டிக்மாடிசம்) ஆகியவற்றைச் சரிசெய்யப் பயன்படுகிறது.
இன்று, இந்த அறுவை சிகிச்சையில், ஃபெம்டோசெகண்ட் லேசர்கள், டோபோகிராஃபி-வழிகாட்டப்பட்ட முறைகள், SMILE மற்றும் SILK போன்ற ஃபிளாப் இல்லாத அறுவை சிகிச்சைகள் என மேம்பட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால், லேசிக் சிகிச்சை அனைவருக்குமே ஏற்றதல்ல. நோயாளியை விரிவான கண் பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகு முறையாகச் சரிபார்த்து தேர்வு செய்த பிறகே இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
அதனால்தான், லேசிக் பொருத்தமானதா என்பதைத் தீர்மானிப்பதற்கு முன்பு மருத்துவர்கள் முதலில் நோயாளியை கவனமாகப் பரிசோதிக்கிறார்கள்.
இந்த அறுவை சிகிச்சை குறித்து மக்கள் நன்கு புரிந்துகொள்ள உதவும் வகையில், நிபுணர்கள் தற்போது அதுதொடர்பான 8 முக்கியக் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
1. லேசிக் சிகிச்சை செய்துகொள்ளத் தகுதியானவர்கள் யார்?
ஒருவர் லேசிக் சிகிச்சைக்கு ஏற்றவரா என்பதைத் தீர்மானிக்க மருத்துவர்கள் கண்ணாடியின் பவர் போன்ற ஒரேயொரு காரணியை மட்டுமே பார்ப்பதில்லை.
நபரின் வயது, அவர்களின் கண் பவர் குறைந்தது ஓராண்டுக்கு மாறாமல் நிலையாக உள்ளதா, கார்னியாவின் தடிமன் மற்றும் வலிமை, கார்னியாவின் வடிவத்தில் ஏதேனும் ஆரம்பக்கட்ட குறைபாடுகள் அல்லது பிரச்னைகளுக்கான அறிகுறிகள் உள்ளனவா எனப் பல அம்சங்களைப் பரிசோதிக்கிறார்கள்.
இது மிகவும் முக்கியமானது. ஏனெனில், லேசிக் என்பது வெறுமனே ஓர் எளிய மருத்துவ நடைமுறையல்ல. இது கண்களின் நீண்டகால ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. எனவே, இந்த அறுவை சிகிச்சைக்கு குறிப்பிட்ட நபர் தகுதியானவர்தானா என்பதை முடிவு செய்வது முக்கியமான முதல் படி.
ஒருவரின் வயது, கண் பவர் ஆகியவை சரியாக இருப்பதாகத் தோன்றினாலும், கார்னியா பாதுகாப்பான நிலையில் இல்லையெனில் மருத்துவர்கள் லேசிக் சிகிச்சையை மேற்கொள்வதில்லை.

"ஒரு நபர் லேசிக் சிகிச்சை செய்துகொள்ளத் தகுதியானவர்தானா என்பது ஒரு விஷயத்தைச் சார்ந்த முடிவல்ல. மாறாக, இது பல மருத்துவக் காரணிகளின் ஒருங்கிணைந்த முடிவாகும். இதில் வயது முக்கியம்தான் என்றாலும், அதைவிட கண்களின் உயிரியல் ரீதியான நிலைத்தன்மை மிகவும் முக்கியமானது.
நோயாளியின் கண் பவர் குறைந்தபட்சம் ஓராண்டுக்காவது நிலையாக இருக்கிறதா என்பதை முதலில் பரிசோதிப்போம். அதன் பிறகு, கார்னியாவின் தடிமன், அதன் வளைவுத்தன்மை மற்றும் கார்னியாவின் வடிவ வரைபடத்தில் 'கெரட்டோகோனஸ்' எனப்படும் குறைபாட்டிற்கான மிகச்சிறிய அறிகுறிகள்கூட இல்லை என்பதை உறுதி செய்வது எனப் பலவற்றை ஆராய்கிறோம்," என்று கூறுகிறார், புனேவின் சிவாஜிநகரில் அமைந்துள்ள ஏ.எஸ்.ஜி. கண் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரான ஹேமந்த் காம்ப்ளே.
மேலும் அவர், "பல நேரங்களில் நோயாளியிடம் எந்தப் புகாரும் இருக்காது. அவர்களின் பார்வைத் திறனும் நன்றாகவே இருப்பதாகத் தோன்றும். ஆனால் மருத்துவப் பரிசோதனையின்போது கண்டறியப்படும் மிக நுட்பமான மாற்றங்கள், எதிர்காலத்தில் ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறக்கூடும். லேசிக் என்பது உடனடி நிவாரணம் தரும் சிகிச்சை மட்டுமல்ல, அது கண்களின் நீண்டகால ஆரோக்கியம் சார்ந்த ஒரு முக்கிய முடிவும்கூட. எனவே, இதை மிகவும் தீவிரமாகவும் பொறுப்புடனும் அணுக வேண்டும்," என்று அவர் கூறினார்.
"கண்ணாடி அணியும் நபரின் பவர் சரியாக இருக்கிறது என்பதாலேயே, அவர் லேசிக் சிகிச்சைக்கு ஏற்றவர் என்று அர்த்தமாகாது. மாறாக, கண்களின் அமைப்பு, விரிவான கண் பரிசோதனையின் முடிவுகள் ஆகியவை லேசிக் சிகிச்சைப் பாதுகாப்பானவை என்பதி உறுதி செய்தால் மட்டுமே இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படும்" என்று பிம்ப்ரி சின்ச்வாடில் உள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையைச் சேர்ந்த மற்றொரு நிபுணரான மருத்துவர் சோனல் எரோல் விளக்கினார்.

பட மூலாதாரம், Getty Images
2. லேசிக் சிகிச்சை யாரெல்லாம் செய்ய முடியாது?
சில மருத்துவ காரணங்கள் லேசிக் சிகிச்சையை ஆபத்தானதாக்கலாம். மெல்லிய கருவிழி, கெரட்டோகோனஸ், கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோய், தன்னுடல் தாக்கநோய்கள், கடுமையான கண் வறட்சி அல்லது தீவிர கண் தொற்றுகள் இருக்கும் சந்தர்ப்பங்களில் லேசிக் தவிர்க்கப்படுகிறது.
ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக, கர்ப்பம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் காலங்களிலும் லேசிக் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
தானேவில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் கண் மருத்துவ ஆலோசகரான மருத்துவர் ரஷ்மி பார்வே இதுகுறித்துப் பேசியபோது, "லேசிக் சிகிச்சைக்கு முந்தைய பரிசோதனைகள், நோயாளிக்குத் தெரியாத ஆபத்துகளைப் பெரும்பாலும் வெளிப்படுத்துகின்றன. மெல்லிய கருவிழி அல்லது உள்ளார்ந்த நோய்கள் லேசிக் சிகிச்சைக்குப் பிறகு தீவிரமடையலாம். எனவே, சில நேரங்களில் இந்த சிகிச்சையைச் செய்யாமல் இருப்பதே மிகவும் பாதுகாப்பான, மருத்துவ ரீதியாகப் பொருத்தமான முடிவாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
3. அறுவை சிகிச்சைக்கு வயது, பார்வையின் நிலைத்தன்மை ஏன் முக்கியம்?
லேசிக் அறுவை சிகிச்சையானது, கண்ணில் ஏற்கெனவே உள்ள பார்வைக் குறைபாட்டின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, கண்ணாடியின் தற்போதைய பவர் அளவுக்கேற்ப, லேசர் கதிர்கள் கருவிழிப் படலத்தின் வடிவத்தை மாற்றியமைக்கின்றன.
ஒரு நோயாளியின் கண்ணாடியின் பவர் அளவு தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்தால், லேசிக் அறுவை சிகிச்சைக்குப் பின்னரும்கூட பார்வைக் குறைபாடு மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால்தான் பெரும்பாலான கண் மருத்துவர்கள், அறுவை சிகிச்சைக்கு முன்பு குறைந்தது ஓராண்டு காலத்திற்கேனும் பவர் அளவு நிலையாக இருக்க வேண்டும் என்பதை அவசியமாகக் கருதுகின்றனர்.
நாற்பது வயதுக்குப் பிறகு ஏற்படும், அருகிலுள்ள பொருட்களைப் பார்ப்பதில் ஏற்படும் இயற்கையான பார்வைக் குறைபாடான 'பிரஸ்பியோபியா'வை லேசிக் சிகிச்சையால் சரிசெய்ய இயலாது. எனவே, சில நோயாளிகளுக்கு லேசிக் சிகிச்சைக்குப் பின்னரும்கூட, படிப்பதற்காக கண்ணாடி தேவைப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாகப் பேசிய மருத்துவர் சோனல் எரோல், "லேசிக் சிகிச்சைக்கு முன்பு பார்வை நிலையாக இருப்பது மிகவும் முக்கியம். ஏனெனில், லேசர் கருவியானது கண்ணாடியின் தற்போதைய பவர் அளவின் அடிப்படையிலேயே செயல்படுகிறது. அந்த பவர் அளவு மாறிக்கொண்டே இருந்தால், லேசிக் சிகிச்சைப் பின்னரும் பவர் அதிகரிக்கக்கூடும். இதனால் நோயாளிக்கு எந்தப் பலனும் இல்லை.
அதேபோன்று, நாற்பது வயதுக்குப் பிறகு அருகிலுள்ள பொருட்களைப் பார்ப்பதில் ஏற்படும் குறைபாடு என்பது ஓர் இயற்கையான செயல்முறையாகும். லேசிக் சிகிச்சையை மேற்கொள்ளும்போது, இத்தகைய மாற்றங்கள் குறித்து நோயாளிக்குத் தெளிவான புரிதல் வழங்கப்பட்டால், அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் எதார்த்தத்திற்கும் இடையே எந்த முரண்பாடும் ஏற்படாது. சரியான வயதிலும், சரியான நேரத்திலும் மேற்கொள்ளப்படும் லேசிக் சிகிச்சை, நீண்ட காலத்திற்குத் திருப்தியை அளிக்கக்கூடியதாக அமையும்," என்று விளக்கினார்.

பட மூலாதாரம், Getty Images
4. லேசிக் குறித்து மக்கள் மத்தியில் நிலவும் தவறான புரிதல்கள் யாவை?
இன்றளவும் லேசிக் பற்றிய பல தவறான புரிதல்கள் நிலவுகின்றன. லேசிக் என்றால் '20/20 பார்வைக்கு உத்தரவாதம்', 'ஒருமுறை லேசிக் செய்துகொண்டால், வாழ்நாள் முழுவதும் கண்ணாடி அணியத் தேவையில்லை', அல்லது 'ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு லேசிக் செய்துகொள்ள முடியாது' என்பன போன்ற நம்பிக்கைகளின் காரணமாக, பல நோயாளிகள் தவறான எதிர்பார்ப்புகளுடன் மருத்துவர்களிடம் வருகிறார்கள்.
இந்த மாயையானது சமூக ஊடகங்கள், விளம்பரங்கள், வதந்திகளால் அதிகரிக்கிறது. உண்மையில், லேசிக் என்பது ஒரு தனிநபரின் கண் பரிசோதனையை அடிப்படையாகக் கொண்ட ஒரு மருத்துவ செயல்முறையாகும். மேலும் அதன் வரம்புகளை நோயாளி தொடக்கத்தில் இருந்தே புரிந்துகொள்ள வேண்டும்.
"லேசிக் பற்றிய மிகப்பெரிய தவறான கருத்து, இந்த அறுவை சிகிச்சை 'சரியான பார்வைக்கு உத்தரவாதம் தரும்' என்பதாகும். உண்மையில், லேசிக் என்பது ஏற்கெனவே உள்ள பார்வைக் குறைபாட்டைச் சரிசெய்யும் ஒரு செயல்முறையே. அது வயது தொடர்பான இயற்கையான மாற்றங்களைத் தடுப்பதில்லை. உதாரணமாக, நாற்பது வயதுக்குப் பிறகு படிப்பதற்கு கண்ணாடி அணிய வேண்டிய நிலை ஏற்படுவதை லேசிக் சிகிச்சையால் தடுக்க முடியாது," என்று மருத்துவர் ஹேமந்த் காம்ப்ளே கூறுகிறார்.
அதோடு, "ஏஸ்டிக்மாடிசம் அல்லது அதிக கண் பவர் கொண்ட நோயாளிகள் லேசிக் சிகிச்சைக்குத் தகுதியற்றவர்கள் என்ற தவறான கருத்து நிலவுகிறது. இருப்பினும், நவீன தொழில்நுட்பத்தால் இந்தக் குறைபாடுகளைப் பெரும்பாலும் சரிசெய்ய முடியும். ஆனால் அவையனைத்தும் பரிசோதனையைப் பொறுத்தது. மேலும், சில நோயாளிகள் கர்ப்ப காலத்தில் 'ஓய்வு நேரம்' இருப்பதால் லேசிக் செய்துகொள்ள நினைக்கிறார்கள்.
ஆனால் ஹார்மோன் மாற்றங்களால் அந்தக் காலகட்டத்தில் கருவிழியின் வடிவம் மாறக்கூடும். எனவே, லேசிக் செய்துகொள்வதற்கான முடிவு விளம்பரங்களை அடிப்படையாகக் கொண்டிருக்காமல், மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும்," என்றும் அவர் விளக்கினார்.

பட மூலாதாரம், Getty Images
5. லேசிக் சிகிச்சைக்கு முன் என்னென்ன சோதனைகள் செய்யப்படும்? அவை ஏன் அவசியம்?
லேசிக் சிகிச்சைக்கு முந்தைய பரிசோதனை, முழு செயல்முறையிலும் மிகவும் முக்கியமான பகுதியாகக் கருதப்படுகிறது.
இதில், கார்னியல் டோபோகிராஃபி மூலம் கருவிழியின் வடிவம் மற்றும் வலிமையைச் சரிபார்த்தல், அதன் தடிமனை அளவிடுதல், கண் வறட்சி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைச் சோதித்தல், விரிவான பார்வை விலகல் மூலம் துல்லியமான பவரை தீர்மானித்தல் ஆகியவை அடங்கும்.
கூடுதலாக, விழித்திரையில் ஏதேனும் பலவீனமான பகுதிகள் உள்ளனவா என்பதைக் கண்டறிய முழுமையான பரிசோதனை செய்யப்படுகிறது. கிட்டப்பார்வை உள்ள நோயாளிகளுக்கு இந்தப் பரிசோதனை மிகவும் முக்கியமானது.
இதுகுறித்து விரிவாக விளக்கிய மருத்துவர் ஹேமந்த் காம்ப்ளே, "லேசிக் சிகிச்சைக்கு முந்தைய பரிசோதனைகள் நோயாளியின் தகுதியைத் தீர்மானிப்பது மட்டுமின்றி, எதிர்கால அபாயங்களைக் கண்டறிந்து தடுப்பதே அவற்றின் முக்கிய நோக்கம். கார்னியல் டோபோகிராஃபி மூலம் கருவிழியின் துல்லியமான வடிவம், வளைவு, உயிரியல் வலிமையைப் புரிந்துகொள்கிறோம். பல நேரங்களில், கெரடோகோனஸின் ஆரம்பக்கட்ட அறிகுறிகள் இந்தப் பரிசோதனைகள் மூலமாக மட்டுமே காணப்படுகின்றன," என்று தெரிவித்தார்.
"நோயாளிகள் பெரும்பாலும் இந்தப் பரிசோதனைகளை அதிக நேரம் எடுக்கும் விஷயமாக கருதுகின்றனர். ஆனால் உண்மையில், இந்தப் பரிசோதனைகள் ஏற்படக்கூடிய சிக்கல்களை முன்கூட்டியே கண்டறிய உதவுகின்றன. எதிர்கால பார்வைக் குறைபாடுகளைத் தடுக்க இவை மிகவும் அவசியம்," என்கிறார் மருத்துவர் ராஷ்மி பார்வே.

பட மூலாதாரம், Getty Images
6. லேசிக் சிகிச்சைக்குத் தகுதியற்ற ஒருவருக்கு மாற்று வழி என்ன?
ஒருவர் லேசிக் சிகிச்சைக்குத் தகுதி பெறவில்லை என்பதற்காக, அவருக்கு பார்வையைத் திருத்திக் கொள்வதற்கான அனைத்து வழிகளும் மூடப்பட்டுவிட்டதாக அர்த்தமல்ல. சில நோயாளிகளுக்கு பி.ஆர்.கே அல்லது சர்ஃபேஸ் அப்லேஷன் ஒரு பாதுகாப்பான தேர்வாக இருக்கலாம்.
பார்வைக் குறைபாட்டின் அளவு மிக அதிகமாக இருந்தால், ஃபேகிக் இன்ட்ராஆகுலர் லென்ஸ்கள் ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். சில நேரங்களில், ஒளிவிலகல் லென்ஸ் பரிமாற்றம் ஒரு நீண்டகால தீர்வாக அமைகிறது.
"லேசிக் சிகிச்சை நிராகரிக்கப்பட்டாலும் நோயாளிகள் மனம் தளரக்கூடாது. இன்று கிடைக்கக்கூடிய மாற்று சிகிச்சைகள் பாதுகாப்பானவை மற்றும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டவை. நோயாளியின் தேவைகளின் அடிப்படையில்தான் இந்த முடிவு எடுக்கப்பட வேண்டும்," என்று மருத்துவர் சோனல் எரோல் கூறுகிறார்.
சில நோயாளிகளுக்கு, வயது, எதிர்காலத் தேவைகள், பவர் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஒளிவிலகல் லென்ஸ் மாற்று அறுவை சிகிச்சை ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. இதில் இயற்கையான லென்ஸை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக ஒரு செயற்கை லென்ஸ் பொருத்தப்படுகிறது. இது எதிர்காலத்தில் கண்புரை ஏற்படுவதையும் தடுக்கக்கூடும்.

பட மூலாதாரம், Getty Images
7. லேசிக் சிகிச்சையின் அபாயங்களும் சாத்தியமான சிக்கல்களும் எவை?
லேசிக் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான அறுவை சிகிச்சையாக இருந்தாலும், அதில் அபாயங்களும் உண்டு. லேசிக் சிகிச்சைக்குப் பிறகு, உங்களுக்கு கண் வறட்சி, கண்களைச் சுற்றி ஒளிவட்டம், அல்லது சிறிது காலத்திற்கு ஒளிக்கு அதிக உணர்திறன் போன்றவை ஏற்படலாம்.
அரிதாக, ஃப்ளாப் தொடர்பான பிரச்னைகள் மீண்டும் தோன்றுவதற்கான அபாயம் உள்ளது. முறையான பரிசோதனை மற்றும் கவனிப்பின் மூலம் பெரும்பாலான அபாயங்களைத் தவிர்க்கலாம்.
"நோயாளி தனது அனைத்து மருத்துவப் பிரச்னைகளையும் மருத்துவரிடம் தெளிவாக விளக்கினால், ஏற்படக்கூடிய அபாயங்களைப் பெருமளவில் தவிர்க்க முடியும்," என்று கூறுகிறார் மருத்துவர் ரஷ்மி பார்வே.
"இன்று லேசிக் தொழில்நுட்பம் மேம்பட்டிருந்தாலும், இது இன்னும் ஓர் அறுவை சிகிச்சைதான் என்பதை நோயாளிகள் புரிந்துகொள்ள வேண்டும். கண் வறட்சி என்பது மிகவும் பொதுவான பிரச்னையாகும். ஆனால் அது பெரும்பாலும் தற்காலிகமானது. ஃப்ளாப் தொடர்பான சிக்கல்கள் அல்லது பின்னடைவு ஏற்படுவது மிகவும் அரிது," என்று கூறுகிறார் மருத்துவர் ஹேமந்த் காம்ப்ளே.
"நோயாளி இந்த சிகிச்சைக்குத் தகுதியானவர் தானா என்பதை உறுதி செய்வதே மிகவும் முக்கியமான விஷயம். தவறான நோயாளிக்கு சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினாலும்கூட, அது அபாயத்தை அதிகரிக்கிறது. துல்லியமான பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றுவது சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும்," என்றும் அவர் விளக்கினார்.

8. லேசிக் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் என்ன?
கடந்த பத்தாண்டுகளில் லேசிக் தொழில்நுட்பம் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. ஃபெம்டோசெகண்ட் லேசர்கள், ஃப்ளாப்களை மிகவும் துல்லியமாக்கியுள்ளன. டோபோகிராஃபி-கைடட் லேசிக், கார்னியாவின் நுண்ணிய வடிவத்திற்கு ஏற்ப சிகிச்சையைத் தனிப்பயனாக்க அனுமதிக்கிறது. SMILE மற்றும் SILK போன்ற ஃப்ளாப் இல்லாத செயல்முறைகள் கார்னியாவின் வலிமையைப் பாதுகாத்து, கண் வறட்சி ஏற்படும் வாய்ப்புகளைக் குறைத்துள்ளன.
"நவீன லேசிக் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம் அதன் துல்லியம்தான். ஃபெம்டோ லேசிக், ஃப்ளாப்களில் ஏற்படும் மனிதப் பிழைகளைக் கிட்டத்தட்ட முற்றிலுமாக நீக்கிவிட்டது. டோபோகிராஃபி வழிகாட்டுதல் அமைப்பு ஒவ்வொருவரின் கண்ணுக்கும் உரிய வகையில் தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சையை மேற்கொள்வதற்கு அனுமதிக்கிறது. SMILE போன்ற ஃப்ளாப் இல்லாத நுட்பங்கள் கார்னியா நரம்புகளைக் குறைவாகவே வெளிப்படுத்துவதால், கண் வறட்சி குறைந்து, விரைவாக குணமடைய முடிகிறது," என்று கூறுகிறார் மருத்துவர் ஹேமந்த் காம்ப்ளே.
"கூடுதலாக, கண்-கண்காணிப்பு அமைப்புகள், நுட்பமான கண் அசைவுகளுக்கு ஏற்ப லேசரை சரிசெய்ய அனுமதிக்கின்றன. எனவே இன்று லேசிக் என்பது ஒரு விரைவான அறுவை சிகிச்சையாக மட்டுமின்றி, மிகவும் துல்லியமான மருத்துவ செயல்முறையாகவும் உள்ளது."
அதேவேளையில், "தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், லேசிக் அறுவை சிகிச்சை செய்துகொள்வது தொடர்பான முடிவு, பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனையின் அடிப்படையிலேயே எடுக்கப்பட வேண்டும்," என்று கூறுகிறார் மருத்துவர் ரஷ்மி பார்வே.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































