"முன்களத்தில் 12 அணு ஆயுதங்கள்" - இந்தியா பற்றிய சிப்ரி அறிக்கை கூறுவது என்ன?

அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவது குறித்து பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை (சித்தரிப்புப் படம்)

பட மூலாதாரம், RAVEENDRAN/AFP via Getty Images

படக்குறிப்பு, அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவது குறித்து பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை (சித்தரிப்புப் படம்)
    • எழுதியவர், சிவாங்கி ஜெய்ஸ்வால்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஸ்வீடனின் சர்வதேச சுதந்திர சிந்தனைக் குழுவான 'சிப்ரி' (SIPRI) அதாவது ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியா முதன்முறையாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் 12 அணு ஆயுதங்களை முன்களத்தில் நிலைநிறுத்தியுள்ளது.

இருப்பினும், 12 அணு ஆயுதங்களை நிலைநிறுத்தியது குறித்து பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

ஜூன் 8 அன்று வெளியிடப்பட்ட சிப்ரியின் அறிக்கையின்படி, இந்தியாவில் 178 அணு ஆயுதங்கள் சேமிப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன, அவை தேவைப்படும்போது பயன்படுத்தப்படலாம். அதே நேரத்தில், 12 அணு ஆயுதங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அதாவது இந்தியாவிடம் மொத்தம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 180 ஆக இருந்தது மற்றும் அனைத்தும் சேமிப்பகத்தில் இருந்தன.

பத்திரிகையாளரும் பாதுகாப்பு ஆய்வாளருமான ராகுல் பேடி, அமைதிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த நிலைநிறுத்தலை ஆச்சரியமளிப்பதாகக் கருதுகிறார்.

அவர், "இந்த அணு ஆயுதங்கள் முழுத் தயாரிப்புடன் ரோந்து செல்லும் இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன" என்று மதிப்பிடுகிறார்.

கடந்த ஆண்டு மே மாதத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ராணுவ மோதல் காணப்பட்டது.

அறிக்கையில், 2025 மற்றும் 2026 ஆகிய இரண்டு ஆண்டுகளிலுமே பாகிஸ்தான் எந்த அணு ஆயுதத்தையும் நிலைநிறுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தற்போது தனது அணு ஆயுதங்களை அதிகரிக்கவில்லை, அதனிடம் இப்போது 170 அணு ஆயுதங்கள் உள்ளன.

போர் மண்டலங்களுக்கு வெளியேயும் கூட நாடுகள் இப்போது, எதிர்கால மோதல்களுக்குத் தயாராவதற்கு நவீன சைபர் உளவு முறைகளைப் பயன்படுத்துகின்றன என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. அதாவது அமைதிக்காலத்தில் எதிர்கால மோதலுக்கான தயாரிப்பு தீவிரமடைந்துள்ளது.

ஆயுதங்களை (Warheads) நிலைநிறுத்தி இந்தியா உத்தியை மாற்றியுள்ளதா?

பாதுகாப்பு ஆய்வாளர் ராகுல் பேடியின் கூற்றுப்படி, அணு ஆயுதங்களை நிலைநிறுத்தியதன் மூலம் இந்தியா தனது ரோந்து முறையை மாற்றியுள்ளது

பட மூலாதாரம், John Keeble/Getty Images)

படக்குறிப்பு, பாதுகாப்பு ஆய்வாளர் ராகுல் பேடியின் கூற்றுப்படி, அணு ஆயுதங்களை நிலைநிறுத்தியதன் மூலம் இந்தியா தனது ரோந்து முறையை மாற்றியுள்ளது (சித்தரிப்புப் படம்)
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்த விஷயத்தில் பாதுகாப்பு விவகாரங்கள் நிபுணர் ராகுல் பேடி கூறுகையில், இந்தியா முதலில் தாக்காது என்ற கொள்கையின்படி செயல்படுகிறது.

அவர் இந்த கொள்கையின் அர்த்தத்தை விளக்கி கூறுகையில், "இதன் பொருள் என்னவென்றால், வார்ஹெட் (அணு ஆயுதம்) மற்றும் ஏவுகணை (அணு ஆயுதத்தை இயக்கும் பகுதி) ஆகிய இரண்டும் தனித்தனியாக வைக்கப்படுகின்றன."

"அவற்றின் இருப்பிடமும் வெவ்வேறாக இருக்கும். பின்னர் ஏதேனும் அவசரநிலை ஏற்படும் போது இவை ஒன்றாக இணைக்கப்படுகின்றன. அதனால்தான் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவது மிகவும் தீவிரமான விஷயம்."

பத்திரிகையாளரும் பாதுகாப்பு ஆய்வாளருமான பேடி, "இந்தியா தனது இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களில் இந்த 12 வார்ஹெட்களை (அணு ஆயுதங்களை) நிலைநிறுத்தியுள்ளது என்று நான் மதிப்பிடுகிறேன். இவை பல மாதங்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றன மற்றும் நீண்ட காலத்திற்கு ரோந்து செல்லும் திறன் கொண்டவை" என்று கூறுகிறார்.

இருப்பினும், அவரது இந்த கூற்றை பிபிசி உறுதிப்படுத்தவில்லை.

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் என்பது நீருக்கு அடியில் இயங்கும் ஒரு அதிநவீன போர்க்கப்பல் ஆகும், மேலும் இதற்கு ஆற்றல் வழங்க ஒரு சிறிய அணு உலை பயன்படுத்தப்படுகிறது.

சாதாரண நீர்மூழ்கிக் கப்பல்களைப் போல எரிபொருள் நிரப்பவோ அல்லது ஆக்ஸிஜனுக்காகவோ இது அடிக்கடி மேற்பரப்புக்கு வர வேண்டிய அவசியமில்லை.

இந்தியாவின் நியூக்ளியர் டிட்டரன்ஸை (அணுசக்தி தடுப்பு) புரிந்து கொள்வதன் மூலம் மட்டுமே இந்தியாவின் இந்த நடவடிக்கையின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள முடியும் என்று ராகுல் பேடி கூறுகிறார்.

தன் மீது நடத்தப்படும் சாத்தியமான அணு ஆயுதத் தாக்குதல்களை சமாளிக்க இந்தியா மூன்று முறைகளைப் பயன்படுத்துகிறது என்று அவர் விளக்குகிறார்.

"முதலாவது- வான்வழி (Air Delivery), இரண்டாவது- நிலம் சார்ந்தவை (Land Based) மற்றும் மூன்றாவது நீர்மூழ்கிக் கப்பல் சார்ந்தவை (Submarine Based)."

இந்த மூன்றாவது முறை மிகவும் பாதுகாப்பானது ஆனால் கடுமையான அணு ஆயுத தடுப்பு ஆகும், ஏனெனில் கடலில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிவது மிகவும் கடினம் என்று அவர் கூறுகிறார்.

ராகுல் பேடி கூறுகையில், "அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற பெரிய அணுசக்தி நாடுகளும் இதேபோல் நீர்மூழ்கிக் கப்பல்களில் தங்கள் வார்ஹெட்களை நிலைநிறுத்தி ரோந்து பணியில் ஈடுபடுகின்றன. இதே முறையைத்தான் இப்போது இந்தியாவும் பின்பற்றியுள்ளது. இது ஒரு பெரிய மாற்றம்."

பி5 (P5) என்று அழைக்கப்படும் இந்த நாடுகளில், நீர்மூழ்கிக் கப்பல் முழுமையாக ஆயுதங்கள் நிரப்பப்பட்டு ரோந்து செல்கிறது, அவை வெறுங்கையுடன் ரோந்து செல்வதில்லை என்று அவர் கூறுகிறார். இந்தியாவும் அவர்களைப் போலவே இந்த ரோந்து முறையை ஏற்றுக்கொள்வது போல் தெரிகிறது.

இது நிலையான நடைமுறை என்று அவர் கூறுகிறார், "இந்த நீர்மூழ்கிக் கப்பல்களில் ஆயுதங்கள் நிரப்பப்பட்டிருக்கும், எனவே இந்தியா நிலைநிறுத்தியுள்ள 12 வார்ஹெட்களும் முழுமையாக நிரப்பப்பட்டிருக்கும் என்று மதிப்பிடலாம்."

அமைதிக்காலத்தில் இந்தியா இந்த நிலைநிறுத்தலைச் செய்துள்ளது, ஆனால் 'ஆபரேஷன் சிந்துர்' தொடர்கிறது என்று இந்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது, எனவே இந்தியாவின் உத்தியை இதனுடன் தொடர்புபடுத்திப் பார்க்க முடியுமா என்று அவரிடம் கேட்கப்பட்டது.

இதற்கு அவர், "இதெல்லாம் ஆபரேஷன் சிந்துரின் ஒரு பகுதியா அல்லது ஆபரேஷன் சிந்துர்- 2.0 இன் பகுதியா என்று சொல்வது கடினம், ஆனால் இப்போது இந்தியா பெரிய அணுசக்தி சக்திகளைப் போலவே கடல்வழி ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகிறது" என்று கூறுகிறார்.

இந்தியாவும் இஸ்ரேலும் ஒரே பாதையில்

சிப்ரியின் அறிக்கையின்படி, இந்தியா தனது அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை வேகமாக அதிகரித்துள்ளது. மேலும், இந்தியா தனது அணு ஆயுதங்களுக்கான எரிபொருளை (Fissile Material) வேகமாக தயாரித்து வருகிறது.

முக்கியமான விஷயம் என்னவென்றால், இதனைத் தயாரிப்பதற்கு இந்தியா, யுரேனியம் செறிவூட்டலுக்குப் பதிலாக புளூட்டோனியத்தை அதிகமாகப் பயன்படுத்துகிறது.

அந்த அறிக்கையின்படி, இஸ்ரேலும் இதையே செய்து வருகிறது. அதே நேரத்தில் பாகிஸ்தான், ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தங்களது அணு ஆயுதங்களுக்காக இருவகை வெடிமருந்து எரிபொருட்களையும் பயன்படுத்தியுள்ளன.

புளூட்டோனியத்தில் இருந்து அணு ஆயுதங்களுக்கான எரிபொருளைத் தயாரிப்பது ஒரு பாரம்பரியமற்ற முறையாகும் என்று ராகுல் பேடி கூறுகிறார்.

இதன் பயன்பாடு மூலப்பொருட்களின் இருப்பு போன்றவற்றை பொறுத்தது. அவரது தகவலின்படி, இந்தியாவிடம் யுரேனியம் செறிவூட்டல் மற்றும் புளூட்டோனியம் ஆகிய இரண்டிலிருந்தும் எரிபொருள் தயாரிக்கும் திறன் உள்ளது.

"இஸ்ரேலும் ஓர் அணு ஆயுதத் திறன் கொண்ட நாடு என்று நம்பப்படுகிறது, ஆனால் அது பகிரங்கமாக இதை அறிவிக்கவில்லை." என்று அவர் இஸ்ரேல் குறித்து கூறினார்.

சீனா வரை சென்றடையக்கூடிய ஆயுதங்கள்

2021 முதல் 2025 வரையிலான காலத்தில், இந்தியா உலகின் 8.2 சதவீத பாதுகாப்பு ஆயுதங்களை வாங்கியுள்ளது

பட மூலாதாரம், Prakash Singh/Bloomberg via Getty Images

படக்குறிப்பு, 2021 முதல் 2025 வரையிலான காலத்தில், இந்தியா உலகின் 8.2 சதவீத பாதுகாப்பு ஆயுதங்களை வாங்கியுள்ளது. (சித்தரிப்புப் படம்)

இந்தியாவின் ஆயுத நவீனமயமாக்கல் திட்டம் இப்போது சீனாவின் ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் உள்ள இலக்குகளை சென்றடையும் திறன் கொண்ட நீண்ட தூர ஆயுதங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது என்று அறிக்கை கூறுகிறது.

இது இந்தியாவின் நீண்டகால திட்டத்தின் ஒரு பகுதி என்று நிபுணர் ராகுல் பேடி கூறுகிறார். இரு நாடுகளுக்கும் இடையே இதற்கு முன்பு ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, இந்தியா இதில் கவனம் செலுத்தத் தொடங்கியது.

சிப்ரியின் அறிக்கையின்படி, இந்தியா தனது ஆயுத விநியோக முறையை (Delivery System) வேகமாக மேம்படுத்தி வருகிறது. உலகம் ஒரு புதிய அணு ஆயுதப் போட்டியின் காலகட்டத்தை எட்டி வருகிறது.

மறுபுறம் சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிலும் ஆயுதங்களை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

இதே அறிக்கையில், கடந்த ஆண்டு இந்தியா ராணுவத்திற்காக 92.1 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது, இதன் மூலம் அதிக பாதுகாப்புச் செலவு செய்யும் நாடுகளின் பட்டியலில் அது ஐந்தாவது நாடாக மாறியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2024 ஆம் ஆண்டைக் காட்டிலும் 8.9 சதவீதம் அதிகமாகும்.

மேலும், இந்தியா பெரிய அளவில் பாதுகாப்பு ஆயுதங்களை வாங்கியுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2021 முதல் 2025 வரையிலான காலத்தில் உலகின் 8.2 சதவீத பாதுகாப்பு ஆயுதங்களை இந்தியா வாங்கியுள்ளது. இதனுடன், இது உலகின் இரண்டாவது மிகப்பெரிய பாதுகாப்பு இறக்குமதியாளராக மாறியுள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தானும் ஆயுதக் கொள்முதலை அதிகரித்துள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

யுக்ரேனைத் தவிர, செளதி அரேபியா மற்றும் கத்தாரும் ஏராளமான ஆயுதங்களை வாங்கியுள்ளன. இந்த நாடுகள் அனைத்தும் கூட்டாக உலகின் 35% பாதுகாப்பு கொள்முதலைச் செய்துள்ளன.

இந்தியாவின் பாதுகாப்பு இறக்குமதி குறித்து ராகுல் பேடி கவலை தெரிவிக்கிறார், வெளியிலிருந்து பாதுகாப்பு ஆயுதங்களை வாங்குவதற்குப் பதிலாக உள்நாட்டிலேயே அதிக உற்பத்தியை மேற்கொள்வது குறித்து சிந்திக்க வேண்டும் என்கிறார்.

மேலும், சமீபத்தில் இந்தியா இத்திசையில் சில படிகளை எடுத்து வைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

தயார் நிலையில் 4,000 அணுஆயுதங்கள்

2026 இன் தொடக்கத்தில் இந்தியா உட்பட ஒன்பது நாடுகளிடம் கூட்டாக சுமார் 12,187 அணு ஆயுதங்கள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (சித்தரிப்புப் படம்)

பட மூலாதாரம், Debarchan Chatterjee/NurPhoto via Getty Images)

படக்குறிப்பு, 2026 இன் தொடக்கத்தில் இந்தியா உட்பட ஒன்பது நாடுகளிடம் கூட்டாக சுமார் 12,187 அணு ஆயுதங்கள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (சித்தரிப்புப் படம்)

இந்தியா மட்டுமின்றி, அணு ஆயுதத் திறன் கொண்ட உலகின் மேலும் சில நாடுகளும் தங்களது அணு ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளன என்று அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த ஆண்டின் (2026) தொடக்கத்தில் இந்தியா உட்பட ஒன்பது நாடுகளிடம் கூட்டாக சுமார் 12,187 அணு ஆயுதங்கள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா மற்றும் இஸ்ரேல் ஆகியவை அடங்கும்.

இத்தகைய 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களில், சுமார் 4,012 அணு ஆயுதங்கள் ராணுவப் படைகளுடன் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

ராணுவப் படைகளுடன் நிலைநிறுத்தப்பட்டுள்ள வார்ஹெட்களில் பாதியளவுக்கும் மேல், அதாவது சுமார் 2,100 முதல் 2,200 வார்ஹெட்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகளில் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் 9,745 ஆயுதங்கள் ராணுவக் கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளன. தேவைப்படும்போது இவை பயன்படுத்தப்படலாம்.

முன்பை விட அணு ஆயுதங்கள் குறைந்துள்ளன

அறிக்கையின்படி, உலகில் உள்ள மொத்த அணு ஆயுதங்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருவதாகத் தெரிகிறது. ஆனால் அமெரிக்காவும் ரஷ்யாவும் பழைய ஆயுதங்களை அழித்து வருவதால் மட்டுமே இது நடக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் அழிக்கப்படும் ஆயுதங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது கவலைக்குரிய விஷயமாகும். விரைவில் புதிய ஆயுதங்கள் தயாரிக்கப்படும் வேகம், பழைய ஆயுதங்கள் அழிக்கப்படும் வேகத்தை விட முந்திவிடும் என்று சிப்ரி கணித்துள்ளது.

வெளிப்படைத்தன்மை இல்லாததால், எந்த நாட்டிடம் எவ்வளவு ஆயுதங்கள் உள்ளன என்பதை அறிவது கடினமாகி வருகிறது என்று சிப்ரி கூறுகிறது.

கடந்த சில ஆண்டுகளில், நாடுகள் தங்களது அணு ஆயுதங்கள் குறித்து மேலும் ரகசியத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளன.

ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்கள் பலவீனமடைந்தது இதற்கு ஒரு காரணமாகும், இதில் இந்த ஆயுத ஒப்பந்தங்கள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் விதி சேர்க்கப்பட்டுள்ளது. வியூக ஆயுதங்களை வரம்பிற்குள் வைப்பதை நோக்கமாகக் கொண்ட இத்தகைய ஒப்பந்தம் ஒன்று 2010 ஆம் ஆண்டில் கையெழுத்தானது.

அமெரிக்கா-ரஷ்யா தான் மிகப்பெரிய அணுசக்தி சக்திகள்

அமெரிக்கா-ரஷ்யாவிடம் கூட்டாக உலகின் 86 சதவீத அணு ஆயுதங்கள் உள்ளன.

சீனாவிடம் 600 அணு ஆயுதங்கள் இருந்தன, அவை தற்போது 620 ஆக அதிகரித்துள்ளன.

பாதுகாப்பு கொள்முதலில் இந்தியா இரண்டாவது இடத்திலும், பாதுகாப்பு பட்ஜெட்டில் 5வது இடத்திலும் உள்ளது.

ஆதாரம் - சிப்ரி, இயர்புக் 2026 (SIPRI, Yearbook 2026)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு