சூர்யவன்ஷி 15 வயதிலேயே அதிரடியில் மிரட்டுவது பற்றி பாகிஸ்தானில் என்ன பேசப்படுகிறது?

பட மூலாதாரம், Getty Images
2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் பேட்ஸ்மேனான வைபவ் சூர்யவன்ஷி தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளார்.
15 வயதே ஆன இந்த இடது கை பேட்ஸ்மேனின் அதிரடியான பேட்டிங் மற்றும் ஆக்ரோஷமான பாணி ஆகியவை உலகம் முழுவதிலும் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்களால் பெரிதும் பாராட்டப்படுகின்றன. வைபவ் உலகளாவிய ஊடகங்களில் விவாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், அண்டை நாடான பாகிஸ்தானிலும் பலர் அவரைப் புகழ்ந்து வருகின்றனர்.
சச்சின் டெண்டுல்கர் முதல் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் வரை அனைவரும் வைபவின் திறமையைப் பாராட்டியுள்ளனர். மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரத்திடம் இருந்தும் அவருக்குப் பாராட்டுகள் கிடைத்துள்ளன. இந்தப் பாராட்டு அலை இப்போது எல்லைகளைக் கடந்து சென்றுள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர பேட்ஸ்மேனுமான முகமது யூசுப், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான வைபவைப் பாராட்டியுள்ளார்.
வைபவ் ஒரு அச்சமற்ற, அதிரடியான மற்றும் ஆற்றல் மிக்க பேட்ஸ்மேன் என்று வர்ணித்த யூசுப், அவரைப் பாகிஸ்தானின் முன்னாள் நட்சத்திர வீரரான ஷாஹித் அப்ரிடியுடனும் ஒப்பிட்டுப் பேசினார். ஷாஹித் அப்ரிடி தனது ஆக்ரோஷமான மற்றும் அச்சமற்ற பேட்டிங்கிற்காகப் பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யூசுப் தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் "15 வயதான வைபவ் சூர்யவன்ஷி எனக்கு இளம் வயது ஷாஹித் அப்ரிடியை நினைவூட்டுகிறார். அச்சமற்றவர், அதிரடியானவர் மற்றும் முழு ஆற்றல் கொண்டவர். வைபவிற்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது." என்று பதிவிட்டுள்ளார்:
யூசுப்பின் கருத்துகள் நேர்மறையாக அமைந்திருந்தாலும், வைபவை ஷாஹித் அப்ரிடியுடன் ஒப்பிட்டது சில இந்திய ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை.

பட மூலாதாரம், ANI
முகமது யூசுப் பாராட்டு குறித்த கருத்து வேறுபாடுகள்
சமூக ஊடகங்களில் பலர், இந்த ஒப்பீட்டிற்காக முகமது யூசுப்பை விமர்சித்தும் கருத்து பதிவிட்டனர்.
முகமது யூசுப்பின் கருத்திற்குப் பதிலளிக்கும் விதமாக, 'எக்ஸ்' தள பயனர் ஒருவரான அபினவ் ராஜ்புத் "முதலில் பாபர் அசாமுடன் ஒப்பிட்டு விராட் கோலி அவமதிக்கப்பட்டார். இப்போது, வைபவ் சூர்யவன்ஷியை ஷாஹித் அப்ரிடியுடன் ஒப்பிடுகிறார்கள். எனக்கு நினைவிருக்கும் வரை, அப்ரிடி முதன்மையாக ஒரு பந்துவீச்சாளர்; அவர் நிச்சயமாக ஓரிரு அதிரடியான இன்னிங்ஸ்களை விளையாடியிருக்கலாம். ஆனால் வைபவின் பேட்டிங் நுட்பம், நிலைத்தன்மை மற்றும் ஆட்டத்தின் மீதான கட்டுப்பாடு ஆகியவை முற்றிலும் மாறுபட்ட ஒரு உயரத்தில் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது." என்று பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் மூத்த விளையாட்டுப் பத்திரிகையாளர் அப்துல் கஃபார் தனது எக்ஸ் பக்கத்தில்"வைபவ் வெறும் 15 வயது சிறுவன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. உள்ளூர் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் செய்வது நிச்சயமாகப் பாராட்டத்தக்கது, ஆனால் உண்மையான சோதனை சர்வதேச கிரிக்கெட்டில்தான் இருக்கும். முதல் தர கிரிக்கெட்டில் அவரது சராசரி தற்போது வெறும் 17 தான். திறமை வெளிப்படையாகத் தெரிகிறது, ஆனால் நுட்பம், நிலைத்தன்மை மற்றும் அழுத்தத்தைக் கையாளும் திறன் ஆகியவற்றின் நீண்டகாலச் சோதனையைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். உண்மையான சோதனை இன்னும் வரவில்லை." என்று குறிப்பிட்டுள்ளார்.
பாசித் அலி தனது யூடியூப் சேனலில், "அவர் ஒரு சிறுவன்தான், ஆனால் ஏற்கெனவே மிஸ்டர் யுனிவர்ஸ் ஆகிவிட்டார். நீங்கள் அவரை சூர்யவன்ஷி என்று அழைத்தாலும், நான் பாசமாக பப்லு என்றுதான் அழைக்கிறேன். என்னவொரு பேட்டிங் செயல்பாடு. 16 பந்துகளில் 54 ரன்கள். அவர் ஆட்டமிழந்த பந்து தேர்ட் மேன் திசையில் ஒரு சிக்ஸராக இருந்திருந்தால், கெய்லின் சாதனை முறியடிக்கப்பட்டிருக்கும். இந்தச் சிறுவன் கெய்லின் சாதனையை முறியடிப்பார் என்று நான் நினைக்கிறேன்." என்று கூறினார்.
பாசித் அலி மேலும் கூறுகையில் "நான் ராகுல் டிராவிட்டைப் பாராட்டுகிறேன். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சூர்யவன்ஷியை வாங்கியவர் அவர்தான். ராகுல் உலகிற்கு ஒரு பரிசை வழங்கியுள்ளார். வைபவால் எந்த பந்துவீச்சாளரையும் வீழ்த்த முடியும். இந்த இளைஞன் சர்வதேச கிரிக்கெட் விளையாடும் போது, அவன் உலக அளவில் ஒரு பரபரப்பை ஏற்படுத்துவான்." என்று தெரிவித்துள்ளார்.
"நான் அவனை பப்லு என்று அழைக்கிறேன். பப்லு, ஏனென்றால் அவன் பாப்லு. அவனது சேட்டைகளைப் பார்த்தால், அவை பாப்லுவைப் போலவே இருக்கும். தொடர்ந்து விளையாடு, பப்லு மியான். உலகெங்கிலும் உள்ள பந்துவீச்சாளர்கள் உனக்கு அஞ்சுவார்கள். கிழக்காக இருந்தாலும் சரி, மேற்காக இருந்தாலும் சரி, சூர்யவன்ஷிதான் சிறந்தவர். அவர் அனைவரையும் அதிர வைத்தார். உண்மையில், அது ஒரு சிக்ஸராக இருந்திருக்க வேண்டும். அவர் ஒரு சதம் அடித்திருக்க வேண்டும். அவன் 100 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரு இன்னிங்ஸை விளையாடினார். ஆனால் அவர் ஒரு சதம் அடித்திருந்தால், கெய்லின் சாதனை இன்றே முறியடிக்கப்பட்டிருக்கும். வரும் நாட்களில் இந்த இளைஞன் உலகை ஆள்வான்." என்கிறார் அவர்.
முன்னதாக, பாகிஸ்தானின் முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல், வைபவ் சூர்யவன்ஷி இப்போது சர்வதேச கிரிக்கெட்டுக்குத் தயாராகிவிட்டார் என்றும், நடப்பு ஐபிஎல் சீசன் முடிந்த பிறகு இந்திய அணியிலிருந்து அவருக்கு அழைப்பு வரக்கூடும் என்றும் கூறியிருந்தார்.

பட மூலாதாரம், ANI
பாகிஸ்தானாக இருந்திருந்தால்...
இந்த ஐபிஎல் தொடரில், வைபவ் வெறும் 35 பந்துகளில் சதம் அடித்து, இத்தொடரின் அதிவேக சதத்தைப் பதிவு செய்துள்ளார்; அதே வேளையில், அதிவேக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தையும் அவர் பிடித்துள்ளார். தனது அறிமுகப் போட்டியிலேயே, அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஒரு சிக்ஸர் விளாசினார்.
தனது 'கேம் பிளான்' (Gameplan) எனும் யூடியூப் நிகழ்ச்சியில் பேசிய கம்ரான் அக்மல், "வைபவ் தொடர்ந்து சாதனை மேல் சாதனைகளைப் படைத்து வருகிறார். அவர் ஏற்கனவே தனது பெயரில் ஒரு சதத்தைப் பதிவு செய்துள்ளார். ஐபிஎல் தொடருக்குப் பிறகு நடைபெறவுள்ள இந்தியாவின் சர்வதேசப் போட்டிகளில் அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் கருதுகிறேன். இந்திய டி20 அணியில் ஒரு இளம் வீரராக அவர் நிச்சயம் இடம்பிடிப்பார். அவர் விளையாடிய அனைத்து இடங்களிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார். அவர் இதேபோன்று தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வந்தால், அவருக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும்," என்று கூறினார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான பாசித் அலி கடந்த மாதம் வைபவ் சூர்யவன்ஷியைப் பாராட்டிப் பேசுகையில், "இத்தகைய திறமை வாய்ந்த ஒரு வீரர் பாகிஸ்தானில் இருந்திருந்தால், அவரை அணியிலிருந்து நீக்குவது குறித்து மக்கள் இப்போதே பேசத் தொடங்கியிருப்பார்கள்," என்று குறிப்பிட்டிருந்தார். தனது யூடியூப் சேனலில் பேசிய பாசித் அலி, "14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி... அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த விதம் மிகவும் பாராட்டுக்குரிய ஒரு விஷயமாகும்," என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "ஒருவேளை அவர் முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்க முயன்று ஆட்டமிழந்திருந்தால், மக்கள் என்ன பேசியிருப்பார்கள் என்று சற்று கற்பனை செய்து பாருங்கள்? பாகிஸ்தானில் என்றால், 'அவரை அணியிலிருந்து வெளியேற்றுங்கள்' என்று மக்கள் நிச்சயம் கூச்சலிட்டிருப்பார்கள்," என்றார்.
இந்திய கிரிக்கெட் கட்டமைப்பைப் பாராட்டிப் பேசிய பாசித் அலி, "இந்தியாவில் இளம் வீரர்களுக்கு இத்தகைய முறையில் நம்பிக்கையூட்டப்படுகிறது; அதன் பலன்கள் பிற்காலத்தில் தெளிவாகத் தென்படுகின்றன," என்று குறிப்பிட்டார். "இது வீரர்களுக்கு அளிக்கப்படும் தன்னம்பிக்கை, இது பிற்காலத்தில் கை கொடுக்கும்" என்று அவர் கூறியிருந்தார்.
ஐபிஎல் 2026 ஒரு வீரரின் எழுச்சிக்காக நினைவுகூரப்படும் என்றால், அது வைபவ் சூர்யவன்ஷியாகத்தான் இருக்கும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இந்த இளம் பேட்ஸ்மேன், இந்த சீசனில் எண்ணற்ற சாதனைகளை முறியடித்து, 680 ரன்களுடன் அதிக ரன் குவித்த வீரர்களுக்கான ஆரஞ்சு கேப் பந்தயத்தில் முன்னணியில் உள்ளார்.

பட மூலாதாரம், ANI
'வைபவிடம் அழுத்தத்தின் தாக்கமில்லை'
வைபவ் சூர்யவன்ஷியின் சாதனையில் மிகவும் ஆச்சரியமான அம்சம் என்னவென்றால், அவர் இந்தச் சாதனையை எந்தவொரு தெருவோர அல்லது ஜூனியர் நிலை கிரிக்கெட்டிலும் நிகழ்த்தவில்லை என்பதுதான்.
இந்தியாவின் மிகவும் பிரபலமான விளையாட்டு நிகழ்வாகக் கருதப்படும் இந்தியன் பிரீமியர் லீக்கின் பகட்டு மற்றும் பெரும் அழுத்தத்திற்கு மத்தியில் அவர் இவை அனைத்தையும் செய்தார்.
ஐபிஎல் தொடரில், அதிக முதலீடு செய்த அணிகள், விளையாட்டின் மிகக் குறுகிய வடிவமான டி20 கிரிக்கெட்டில் மோதுகின்றன. ஐபிஎல் போட்டிகள் இரைச்சல், உற்சாகம் மற்றும் ஒரு பெரிய தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு மத்தியில் நடைபெறுகின்றன. ஒரு போட்டி பொதுவாக ஒரு பேஸ்பால் போட்டியின் அதே நேரத்தில் முடிவடைகிறது.
எனவே, ஐபிஎல் சூப்பர் ஸ்டார்கள் பொதுவாக ஆக்ரோஷமாக விளையாடும் பேட்ஸ்மேன்களாக இருக்கிறார்கள்; அவர்கள் பந்துவீச்சாளர்களைத் தாக்கி, முடிந்தவரை விரைவாக ரன்களைக் குவிக்கிறார்கள். வைபவ் சூர்யவன்ஷி நேரத்தை வீணடிக்க விரும்புவதில்லை என்பதைப் பல வழிகளில் நிரூபித்துள்ளார்.
பிரபல கிரிக்கெட் ஆண்டு இதழான விஸ்டன் அல்மானக்கின் ஆசிரியர் லாரன்ஸ் பூத், அமெரிக்க செய்தித்தாளான வால் ஸ்ட்ரீட் ஜர்னலிடம், "அவரது ஷாட் அடிக்கும் திறன் தனித்துவமானது. ஒரு முதிர்ந்த வீரரைப் போல பேட்டிங் செய்வது அசாதாரணமானது. ஆனால், ஐபிஎல் போன்ற ஒன்றின் அழுத்தத்தை அலட்சியப்படுத்துவது என்பது வேறு விஷயம்," என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே வைபவின் புகழ் திடீரென வரவில்லை. நவம்பர் 2025-ல், வெறும் 13 வயதில், ஐபிஎல் ஒப்பந்தம் பெற்ற இளைய வீரர் என்ற செய்தியில் அவர் இடம்பிடித்தார். அவரது திறமை ஐபிஎல் ஏலத்தில் ஒரு பெரும் போட்டிக்கு வித்திட்டது.
வைபவ் 38 பந்துகளில் 101 ரன்கள் எடுத்த ஆட்டத்திற்குப் பிறகு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், "அவரால் என்ன செய்ய முடியும், எந்த மாதிரியான ஷாட்களை ஆட முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், இவ்வளவு பெரிய கூட்டத்தின் முன்னிலையில், இதுபோன்ற சூழ்நிலைகளில், இவ்வளவு வலுவான பந்துவீச்சுத் தாக்குதலுக்கு எதிராக அதைச் செய்தது உண்மையிலேயே சிறப்பானது" என்று கூறியிருந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































