பஞ்சாப் கிங்ஸ் தொடர்ந்து 5-வது தோல்வி: ஷ்ரேயாஸ் அணியின் சரிவுக்கான 5 காரணங்கள்

PBKS vs MI, ஷ்ரேயாஸ் ஐயர், பஞ்சாப் கிங்ஸ் தொடர்ந்து 5-வது தோல்வி

பட மூலாதாரம், ANI

    • எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஏப்ரல் 25, 2026 - ஐபிஎல் வரலாற்றின் மிகப் பெரிய சேஸை வெற்றிகரமாக அரங்கேற்றியது பஞ்சாப் கிங்ஸ். 265 என்ற மிகப் பெரிய இலக்கை 7 பந்துகள் மீதம் வைத்து கம்பீரமாக வெற்றி பெற்றது அந்த அணி. அந்த வெற்றி இந்த சீசனில் அவர்களுடைய 6வது வெற்றியாக அமைந்தது. அப்போதுவரை 7 போட்டிகளில் விளையாடியிருந்த பஞ்சாப் கிங்ஸ் ஒன்றில் கூடத் தோற்காமல், 13 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது.

மே 14, 2026 - 19 நாள்கள் மற்றும் 5 போட்டிகள் கழித்து... இன்னும் அதே 13 புள்ளிகளுடன் தான் இருக்கிறது பஞ்சாப் கிங்ஸ். விளையாடிய அந்த 5 போட்டிகளிலுமே தோற்றிருக்கிறது அந்த அணி.

நேற்று (மே 14) மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஆடிய போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற அந்த அணி இன்னும் வெற்றிப் பாதைக்குத் திரும்ப முடியாமல் போராடிக்கொண்டிருக்கிறது.

'இந்த அணியைத் தோற்கடிக்கவே முடியாதா' என்று கேள்விகள் எழுந்துகொண்டிருந்த நிலையில், தற்போது தோல்வியை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கிறது ஷ்ரேயாஸ் ஐயரின் அணி. அது அவர்களின் பிளே ஆஃப் வாய்ப்பையும் வெகுவாகப் பாதித்திருக்கிறது. இன்று (மே 15) சென்னை சூப்பர் கிங்ஸ் லக்னௌவுக்கு எதிராக வெற்றி பெற்றால், பஞ்சாப் கிங்ஸ் ஐந்தாவது இடத்துக்கும் தள்ளப்படும்.

இப்படி கடினமான சூழ்நிலைக்கு பஞ்சாப் கிங்ஸ் வந்தது ஏன்? அவர்களின் சரிவுக்குக் காரணமான 5 காரணங்களை அலசுவோம்.

தொடர்ந்து தடுமாறிய பந்துவீச்சு

தொடர்ச்சியாக 5வது தோல்வி - பஞ்சாப் கிங்ஸ் சரிவுக்கான 5 காரணங்கள் என்ன?

பட மூலாதாரம், ANI

பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சு சீசன் ஆரம்பம் முதலே தடுமாறிக்கொண்டுதான் இருந்தது. அவர்களின் பந்துவீச்சாளர்களால் அதிக அளவிலான விக்கெட்டுகள் எடுக்க முடியவில்லை. அதேசமயம் சிக்கனமாகவும் பந்துவீச முடியவில்லை. அவர்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுக் கொண்டிருந்ததால் பந்துவீச்சில் இருந்த பிரச்னை பெரிதாக வெளியே தெரியவில்லை.

பௌலிங் யூனிட் பலமாக இருந்தால் மட்டுமே ஒரு அணியால் தொடரை வெல்ல முடியும். பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சு அப்படி இருக்கவில்லை. இதுவரை அவர்கள் முழுமையாக பந்துவீசியிருக்கும் 11 போட்டிகளில், 8 முறை எதிரணிகள் 200 ரன்களைக் கடந்திருக்கின்றன. இன்னொரு போட்டியிலும் கூட எதிரணி 195 ரன்கள் எடுத்தது. இப்படி போட்டிக்குப் போட்டி ஓவருக்கு 10 ரன்களுக்கும் குறையாமல் தான் அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் ரன்கள் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அர்ஷ்தீப் சிங் மட்டுமே அந்த அணிக்காக பத்துக்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். அவரும் கூட இதுவரை 13 விக்கெட்டுகள் தான் எடுத்திருக்கிறார். ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பௌலர்களில் ஒருவரான சஹல் கூட இந்த சீசன் இதுவரை 9 விக்கெட்டுகள் தான் வீழ்த்தியிருக்கிறார். 2015 முதல் 2025 வரை, ஒரேயொரு சீசனில் (2018) மட்டும்தான் போட்டிக்கு சராசரியாக 1 விக்கெட்டுக்கும் குறைவாக எடுத்திருக்கிறார் சஹல். அது இந்த சீசனிலும் நடக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு மத்தியில் அந்த அணியின் வெளிநாட்டுப் பந்துவீச்சாளர்களாலும் கூட தாக்கம் ஏற்படுத்தக் கூடிய பங்களிப்பைக் கொடுக்க முடியவில்லை. சீசன் தொடக்கத்தில் அவர்களின் பேட்டிங் அதீத துடிப்போடு செயல்பட்டுக் கொண்டிருந்ததால், பௌலிங் பிரச்னை அதற்குப் பின்னால் மறைந்திருந்தது. தற்போது பேட்டிங்கின் வீரியம் சற்றுக் குறைய, பந்துவீச்சிலிருக்கும் பிரச்னை மிகவும் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியிருக்கிறது.

வெளிநாட்டு பேஸர்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம்

தொடர்ச்சியாக 5வது தோல்வி - பஞ்சாப் கிங்ஸ் சரிவுக்கான 5 காரணங்கள் என்ன?

பட மூலாதாரம், ANI

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்த சீசனில் 4 வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்களை (ஆல்ரவுண்டர்கள் தவிர்த்து) இதுவரை பயன்படுத்தியிருக்கிறது பஞ்சாப் கிங்ஸ். அவர்களுள் மார்கோ யான்சன் அனைத்து போட்டிகளிலுமே விளையாடியிருக்கிறார். மற்ற போட்டிகளில் ஜேவியர் பார்ட்லட், லாகி ஃபெர்குசன் மற்றும் பென் துவார்ஷுய்ஸ் ஆகியோரில் ஒருவரை அந்த அணி ஒவ்வொரு போட்டியிலும் களமிறக்கியிருக்கிறது.

இவர்களுள் யாருமே இதுவரை தாக்கம் ஏற்படுத்தக்கூடிய பங்களிப்பை பஞ்சாப் கிங்ஸ் அணிக்குக் கொடுக்கவில்லை. இந்த சீசன் அந்த நால்வரின் செயல்பாடு:

  • மார்கோ யான்சன்: 12 போட்டிகளில் 7 விக்கெட்டுகள் - எகானமி 10.38
  • லாகி ஃபெர்குசன்: 2 போட்டிகளில் 1 விக்கெட் - எகானமி 12.25
  • ஜேவியர் பார்ட்லட்: 9 போட்டிகளில் 5 விக்கெட்டுகள் - எகானமி 11.58
  • பென் துவார்ஷுய்ஸ்: 1 போட்டியில் 1 விக்கெட் - எகானமி 12.75

இப்படியான செயல்பாடுகளுக்குப் பிறகும் அவர்களில் குறைந்தபட்சம் இருவரையாவது அந்த அணி தொடர்ச்சியாக களமிறக்கிக் கொண்டிருக்கிறது.

யான்சன், பார்ட்லட் இருவருமே புதிய பந்தில் சிறப்பாகப் பந்துவீசுபவர்கள். ஏற்கெனவே புதிய பந்தில் பந்துவீச அர்ஷ்தீப் சிங்கும் இருக்கிறார். இப்படி புதிய பந்தைப் பயன்படுத்தக் கூடிய 3 பௌலர்கள் இருக்கும்போது, அதில் ஒருவரை சரியாகப் பயன்படுத்த முடியாது. அப்படி பெரும்பாலான போட்டிகளில் பாதிக்கப்பட்டவர் யான்சன் தான். அவர் பெரும்பாலான போட்டிகளில் புதிய பந்தில் பந்துவீசவே இல்லை.

இப்படி வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும் பஞ்சாப் கிங்ஸின் முடிவு, கடந்த சில போட்டிகளாக வைஷாக் விஜயகுமார் போன்ற பந்துவீச்சாளரை வெளியே அமரவைத்திருக்கிறது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடிய அவர் 9 விக்கெட் வீழ்த்தியிருக்கிறார். அவரது எகானமி 10.85.

மாறிக்கொண்டே இருக்கும் அந்த 3 வெளிநாட்டு வேகப் பந்துவீச்சாளர்களை விட சிறந்த எகானமி வைத்திருக்கிறார். ஆனால், கடந்த சில போட்டிகளாக அவருக்கே அணியில் வாய்ப்பு இல்லை.

இந்த வேகப்பந்துவீச்சாளர்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்று கூடுதலாக அஸ்மத்துல்லா ஓமர்சாய் வேறு நேற்றைய போட்டியில் சேர்க்கப்பட்டார். அவரோடு சேர்ந்து புதிய பந்தில் பந்துவீசக்கூடிய பௌலர்களின் எண்ணிக்கை 4 ஆனது!

போதாக்குறைக்கு, ஓமர்சாயை பிளேயிங் லெவனில் சேர்க்க, ஓரளவு நன்றாக பேட்டிங் செய்துகொண்டிருந்த ஸ்டாய்னிஸை அணியிலிருந்து நீக்கிவிட்டார்கள்.

சுழலை பயன்படுத்துவதில் தயக்கம்

தொடர்ச்சியாக 5வது தோல்வி - பஞ்சாப் கிங்ஸ் சரிவுக்கான 5 காரணங்கள் என்ன?

பட மூலாதாரம், ANI

பஞ்சாப் கிங்ஸ் அணி வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்களை மட்டும் விரும்புவதில்லை. அவர்கள் ஒட்டுமொத்தமாகவே வேகப்பந்துவீச்சை மட்டுமே விரும்புகிறார்கள். சுழற்பந்துவீச்சை அதிகம் பயன்படுத்துவதில்லை. அதன்மீது அதிகம் நம்பிக்கை கொள்வதில்லை. சிறப்பாக செயல்படக்கூடிய ஹர்ப்ரீத் பிரார் இதுவரை ஒரேயொரு போட்டியில் மட்டுமே இந்த சீசன் களமிறக்கப்பட்டிருக்கிறார்.

ஐபிஎல் வரலாற்றின் டாப் விக்கெட் டேக்கரான சஹலைக் கூட அவர்கள் முழுமையாக பயன்படுத்துவதில்லை. இதுவரை 12 போட்டிகளில் அவர் 34 ஓவர்கள் வீசியிருக்கிறார். 9 போட்டிகளில் ஆடியிருக்கும் பார்ட்லட் கூட 33.3 ஓவர்கள் பந்துவீசியிருக்கிறார். டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கெதிராக மே 11 நடந்த போட்டியில் சஹலுக்கு 1 ஓவர் கூட பந்துவீச வாய்ப்பளிக்கப்படவில்லை.

இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ நிகழ்ச்சியில் பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் அபினவ் முகுந்த், "பஞ்சாப் கிங்ஸ் எப்போதுமே வேகப்பந்துவீச்சைப் பிரதானப்படுத்தும் அணியாகவே இருந்திருக்கிறது. கடந்த சீசனில் இருந்தே அவர்கள் அப்படித்தான் செயல்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சுழலை நம்புவதில்லை." என்று குறிப்பிட்டிருந்தார்.

நேற்றைய போட்டியில் கூட திலக் வர்மா, ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட் என 2 இடது கை பேட்டர்கள் வந்ததும் சஹலுக்கு ஓவர் கொடுப்பதை நிறுத்தினார் ஷ்ரேயாஸ். முதல் மூன்று ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தியிருந்தார் சஹல். சஹலின் 4வது ஓவரை அப்போதே முடிக்காமல், தாமதப்படுத்திக் கொண்டே இருந்தார். அந்த இடது கை பேட்டர்கள் செட்டில் ஆன பிறகு 16வது ஓவரில் சஹலைப் பயன்படுத்த, அந்த ஓவரில் 20 ரன்கள் எடுக்கப்பட்டது.

18 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய ஒரு பௌலரை, இந்தத் தொடரின் மிகச் சிறந்த பௌலர்களில் ஒருவரைப் பயன்படுத்துவதில் தயக்கம் காட்டுகிறது அந்த அணி. ஆனால், பெரிதும் நிரூபிக்கப்படாத, தொடர்ச்சியாக ரன்களைக் கொடுக்கும் வேகப்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்துவதில் அவர்களுக்குத் தயக்கம் இருப்பதில்லை. இது, களத்தில் பல தவறான முடிவுகள் எடுக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்துகொண்டே இருக்கிறது.

ஃபீல்டிங் குறைபாடு

தொடர்ச்சியாக 5வது தோல்வி - பஞ்சாப் கிங்ஸ் சரிவுக்கான 5 காரணங்கள் என்ன?

பட மூலாதாரம், ANI

பஞ்சாப் கிங்ஸின் பந்துவீச்சு ஒருபக்கம் தடுமாறிக் கொண்டிருக்க, அவர்களின் ஃபீல்டிங் எந்த வகையிலும் பௌலர்களுக்கு ஒத்துழைப்புத் தரவில்லை. இந்தத் தொடரில் இதுவரை 21 கேட்ச்களைத் தவறவிட்டிருக்கிறது பஞ்சாப் கிங்ஸ். சஷாங்க் சிங் மட்டுமே இதுவரை 6 கேட்ச்களை விட்டிருக்கிறார்.

மோசமான ஃபீல்டிங் பௌலர்களை மேலும் விரக்தியடைய வைக்கிறது. அது மேலும் தவறுகள் செய்ய வைக்கிறது. இந்த கேட்ச் வாய்ப்புகள் மட்டுமல்லாமல், 'மிஸ்ஃபீல்ட்கள்' நிறைய ஏற்படுகின்றன. பல போட்டிகளில் கீப்பர் பிரப்சிம்ரன் சிங் பந்துகளை சரியாகப் பிடிக்காமல் 'பை' மூலம் நிறைய ரன்கள் விட்டுக்கொடுத்தார். இது, முக்கியமான தருணங்களில் அந்த அணியின் வசமிருந்து போட்டியை எடுத்துச் சென்றுவிடுகிறது.

மும்பைக்கு எதிராக திலக் வர்மா 29 ரன்கள் எடுத்திருந்தபோது வந்த கேட்ச் வாய்ப்பை யான்சன் தவறவிட்டார். பின்னர் அரைசதம் அடித்து அணியை வெற்றி பெறவைத்தார் திலக். அதற்கு முந்தைய போட்டியில் அக்‌ஷர் கேட்சைத் தவறவிட்டார்கள். அவர் அரைசதம் அடித்து தன் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். இப்படிப் பல முக்கியமான தருணங்களை தங்கள் ஃபீல்டிங்கால் தவறவிட்டிருக்கிறது பஞ்சாப் கிங்ஸ்.

பேட்டிங்கில் குறையும் வேட்கை

தொடர்ச்சியாக 5வது தோல்வி - பஞ்சாப் கிங்ஸ் சரிவுக்கான 5 காரணங்கள் என்ன?

பட மூலாதாரம், ANI

முன்பே சொன்னதுபோல், இந்த பௌலிங் மற்றும் ஃபீல்டிங் பிரச்னைகள் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு முன்னரே இருந்தது. அவர்களின் அசாத்திய அதிரடி பேட்டிங் தான் அதை மறைத்துக் கொண்டிருந்தது. தற்போது பேட்டிங்கும் சற்று சோடை போனதுதான் அவர்களுக்குப் பெரிய பிரச்னையாக விளங்கிக்கொண்டிருக்கிறது.

முந்தைய போட்டிகளைப் போல் பஞ்சாப் கிங்ஸ் பேட்டர்களால் அதே அளவிலான அதிரடியை வெளிப்படுத்த முடியவில்லை. கடந்த சில போட்டிகளாகவே பிரப்சிம்ரன் சிங், கூப்பர் கானலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் ஸ்டிரைக் ரேட் வெகுவாகக் குறைந்திருக்கிறது.

ஏப்ரல் 25 அன்று 192.62 ஆக இருந்த பிரப்சிம்ரன் சிங்கின் ஸ்டிரைக் ரேட் தற்போது 170.15 ஆகக் குறைந்திருக்கிறது. அதேபோல் ஷ்ரேயாஸ் ஐயர் ஸ்டிரைக் ரேட் 186ல் இருந்து 164.31 ஆகக் குறைந்திருக்கிறது.

அந்த டெல்லி போட்டியில் வரலாற்று சேஸை அரங்கேற்றியதற்குப் பிறகான அடுத்த 4 போட்டிகளில் பிரப்சிம்ரனின் ஸ்டிரைக் ரேட்: 134.09, 107.14, 75, 120.

இதே போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயரின் ஸ்டிரைக் ரேட்: 111.11, 90.48, 100, 163.89.

இவர்களோடு கூப்பர் கானலியுமே தனது வேகத்தை குறைத்துவிட்டார். இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ நிகழ்ச்சியில் பேசிய அபினவ் முகுந்த் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார். " ஒரு போட்டியில் முதலில் சந்திக்கும் 10 பந்துகளில் கானலியின் ஸ்டிரைக் ரேட் 117 தான். அந்த முதல் 10 பந்துகளில் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர் பவுண்டரி அடிப்பதே இல்லை. அவர் பஞ்சாப் அணியின் வேகத்தைக் குறைத்துவிடுகிறார்" என்றார் அவர்.

இந்த வீரர்களின் பேட்டிங்கில் ரன் வேகம் குறைந்தது தான் பஞ்சாப் கிங்ஸ் அணி மாபெரும் ஸ்கோர்களைப் பதிவு செய்வதற்கு வேகத்தடையாக அமைந்திருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், இந்தப் போட்டிகளில் அந்த அணி முதலில் பேட்டிங் செய்துகொண்டிருப்பதும் அவர்களுக்குப் பிரச்னையாக மாறியிருப்பதாக அபினவ் முகுந்த் கூறினார். பஞ்சாப் பெற்ற 6 வெற்றிகளில், ஐந்து சேஸிங்கின் போது வந்தவை. அவர்கள் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துகொண்டிருந்த போது எளிதாக வென்றுகொண்டிருந்தார்கள்.

தற்போது அவர்களின் 5 தோல்விகளில் நான்கு முதலில் பேட்டிங் செய்தபோது வந்தவை. முதலில் பேட்டிங் செய்யும்போது, அவர்களின் முக்கிய வீரர்களின் வேகம் குறைவதால் அந்த அணியால் போதுமான ஸ்கோர் எடுக்க முடிவதில்லை. அதுவும் அவர்களின் தோல்விக்கு முக்கியக் காரணமாக உருவெடுத்திருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு