நேரலை, இந்தோனீசியாவில் 7.4 அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

முக்கிய சாராம்சம்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. தமிழ்நாட்டின் டிஜிபியாக சந்தீப் ராய் ராத்தோர் நியமனம்

    தமிழ்நாட்டின் டிஜிபியாக சந்தீப் ராய் ராத்தோர் நியமனம்
  2. ஹோர்மூஸ் நீரிணை வழியாக எந்தெந்த கப்பல்கள் செல்ல அனுமதி?

    இஸ்மாயில் பாகேய்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, இரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய்

    இரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய், ‘தாக்குதல் நடத்தும் தரப்புடன் தொடர்பில்லாத’ கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணை வழியாக செல்ல அனுமதிக்கப்படுவதாகக் கூறினார்.

    ‘நியூஸ்ரூம் ஆப்பிரிக்கா’ தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘எங்கள் அதிகாரிகளுடனான முறையான ஒருங்கிணைப்புக்குப் பிறகே’ கப்பல்கள் நீரிணை வழியாக செல்ல அனுமதிக்கப்படும் என்று பாகேய் கூறினார்.

    மோதலைக் குறிப்பிட்ட அவர், ‘போர், பேச்சுவார்த்தைகள் மற்றும் போர்நிறுத்தம் என இந்த தீய சுழற்சியை’ இரான் பொறுத்துக்கொள்ளாது என்று கூறினார்.

    "அவர்கள் (அமெரிக்கா) நிறுத்தலாம் எனச் சொன்னார்கள், அதனால் நாங்கள் நிறுத்தினோம், பின்னர் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் தொடங்கினார்கள்," என்று பாகேய் கூறினார்.

    கடந்த ஜூன் மாதம் இரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்த 12 நாள் மோதலின் போது, ​​அமெரிக்கா இரானின் பல அணுசக்தி மற்றும் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    பின்னர், பிப்ரவரி 28 அன்று, இஸ்ரேலும் அமெரிக்காவும் இரான் மீது தாக்குதல் நடத்தின. தற்போதைய மோதல் இப்போது ஒரு மாதமாக நீடித்து வருகிறது.

  3. ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கு - தண்டனை விவரங்கள் மீண்டும் ஒத்திவைப்பு

    ஜெயராஜ், பென்னிக்ஸ்
    படக்குறிப்பு, ஜெயராஜ், பென்னிக்ஸ்

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் காவல்துறையால் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில், வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 06) தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இதனால், இந்த வழக்கில் இருமுறை தண்டனை விவரங்கள் அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக மார்ச் 30 அன்றும் இன்றும் (ஏப்ரல் 2) ஒத்திவைக்கப்பட்டது.

    முன்னதாக, இன்று மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முத்துக்குமரன் முன்பாக ஜெயராஜின் மனைவி செல்வராணி, மகள் பெர்சி ஆகியோர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி தங்களது தரப்பு வாதங்களை நீதிபதியிடம் கூறினர்.

    கண்ணீர் மல்க நீதிபதியிடம் அன்று நடந்தவற்றை கூறினர். எந்த தவறும் செய்யாத அவரை கொன்றுவிட்டனர் என நீதிபதியிடம் கண்ணீர் மல்க ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    உடலில் உள்ள அனைத்து பாகங்களும் தாக்கப்பட்டு உயிரிழந்தார் என, ஜெயராஜின் மகள் பெர்சி தெரிவித்தார்.

    தீர்ப்பில் கூறப்பட்டது என்ன?

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டில் தந்தையும் மகனும் காவல்துறையால் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில், இந்த சம்பவம் "கொலை" என தீர்மானிக்கப்படுவதாக மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் மார்ச் 23 அன்று தீர்ப்பளித்தது.

    நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பை வாசிக்கும் போது, தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் கொலை என தீர்மானிக்கப்படுவதாகக் கூறினார்.

    உயிரிழந்த தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவர் மீதும் போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று கூறிய நீதிபதி, வழக்கினுடைய அனைத்து தரப்பு விசாரணைகளின் அடிப்படையில், "குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள்" எனத் தீர்ப்பளிப்பதாகக் கூறினார்.

    "குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமாக உள்ளது" என்று நீதிபதி கூறினார்.

  4. அமெரிக்க மக்களுக்கு இரான் அதிபர் கடிதம் - போர் நிறுத்தம் குறித்து குறிப்பிடவில்லை

    இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன்

    பட மூலாதாரம், WANA/Reuters

    படக்குறிப்பு, இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன்

    இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், "அமெரிக்க மக்களுக்காக” ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்; இந்தக் கடிதத்தை அவர் புதன்கிழமையன்று சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டார்.

    இரான் "ஒருபோதும் போரைத் தொடங்கியதில்லை" என்று அந்தக் கடிதத்தில் இரான் அதிபர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது நாடு நீண்ட காலமாக "ஆக்கிரமிப்பு மற்றும் ஆக்ரோஷமான தாக்குதல்களால்" பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

    "இரானின் புதிய ஆட்சியின் அதிபர்" அமெரிக்காவிடம் போர்நிறுத்தத்தைக் கோரியதாக அதிபர் டிரம்ப் கூறிய சில மணிநேரங்களிலேயே இந்தக் கடிதம் வெளியாகியுள்ளது. எனினும், தாம் யாரைக் குறிப்பிடுகிறார் என்பதை டிரம்ப் தெளிவுபடுத்தவில்லை.

    ஒரு சமூக ஊடகப் பதிவில், "ஹோர்மூஸ் நீரிணை திறந்த நிலையிலும், தடையற்றதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும்போது மட்டுமே" அமெரிக்கா போர்நிறுத்தத்தைக் கருத்தில் கொள்ளும் என்று டிரம்ப் கூறியிருந்தார். "அதற்குள், நாங்கள் இரானை முழுமையாக அழித்திருப்போம்; அல்லது அவர்கள் சொல்வது போல, அதை 'கற்காலத்திற்கே' திருப்பி அனுப்பியிருப்போம்!!!" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    ஆனால், பெசெஷ்கியன் தனது கடிதத்தில் போர்நிறுத்தம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    அமெரிக்கா, ஐரோப்பா அல்லது அண்டை நாடுகளைச் சேர்ந்த மக்கள் மீது இரானிய மக்கள் எவ்விதத் தீய எண்ணத்தையும் கொண்டிருக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். "மோதலா அல்லது பேச்சுவார்த்தையா" என்பதில் எடுக்கப்படும் முடிவே வருங்காலத் தலைமுறையினரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்று கூறி அவர் தனது கடிதத்தை நிறைவு செய்துள்ளார்.

  5. 'ஹோர்மூஸ் நீரிணையிலிருந்து இந்தியக் கப்பல்களை கடற்படை பாதுகாப்பாக வெளியேற்றி வருகிறது" - ராஜ்நாத் சிங்

    ராஜ்நாத் சிங்

    பட மூலாதாரம், ANI

    ஹோர்மூஸ் நீரிணையிலிருந்து இந்தியக் கப்பல்களை இந்தியக் கடற்படை பாதுகாப்பாக வெளியேற்றி வருவதாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை தெரிவித்தார்.

    கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற "சைனிக் சம்மான் சம்மேளன்" நிகழ்ச்சியில் உரையாற்றியபோது ராஜ்நாத் சிங் இதனை தெரிவித்தார். மேலும், "நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர்களுக்கு எந்தப் பற்றாக்குறையும் இல்லை" என்றும் அவர் கூறினார்.

    "மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் காரணமாக, சிலர் பல்வேறு பொய்களைப் பரப்பி பீதியை ஏற்படுத்த விரும்புகிறார்கள். நாட்டில் பெட்ரோல்-டீசலுக்கு எந்தப் பற்றாக்குறையும் இல்லை, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கும் எந்தப் பற்றாக்குறையும் இல்லை. எந்தவொரு எரிசக்தி நெருக்கடியையும் சமாளிக்க இந்தியா முழுமையாகத் தயாராக உள்ளது," என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

    "ஹோர்மூஸ் நீரிணையிலிருந்து இந்திய எண்ணெய் கப்பல்களை கடற்படை பாதுகாப்பாக வெளியேற்றி வருகிறது. பிரதமர் மோதி தனது ராஜதந்திரத் திறன்களைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் இந்தியர்களின் நலன்களைப் பாதுகாத்து வருகிறார்," என்றும் அவர் கூறினார்.

  6. " இந்தியர்கள் பாதுகாப்பான கைகளில் உள்ளனர்" - இரானிய தூதரகம் கூறியது என்ன? -

    அப்பாஸ் அராக்சி

    பட மூலாதாரம், Foad Ashtari/SOPA Images/LightRocket via Getty

    படக்குறிப்பு, அப்பாஸ் அராக்சி

    "ஹோர்மூஸ் நீரிணையின் எதிர்காலத்தை இரானும் ஓமனும் மட்டுமே தீர்மானிக்கும்," என்று இரான் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி புதன்கிழமையன்று தெரிவித்தார்.

    அவரது இந்தக் கூற்று, உலகின் பல்வேறு நாடுகளில் அமைந்துள்ள இரான் தூதரகங்களின் சமூக ஊடகப் பக்கங்களில் பகிரப்பட்டுள்ளது.

    இந்தியாவில் உள்ள இரான் தூதரகமும் இச்செய்தியைப் பகிர்ந்ததோடு, மற்றொரு பதிவில், "எங்கள் இந்திய நண்பர்கள் பாதுகாப்பான கைகளில் உள்ளனர்; கவலைப்பட ஏதுமில்லை," என்றும் குறிப்பிட்டுள்ளது.

    ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் இரானும் அமெரிக்காவும் முரண்பட்ட நிலையில் உள்ளன. போர் தொடங்கியதிலிருந்து, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளின் கப்பல்களை மட்டுமே இந்த நீரிணை வழியாகச் செல்ல இரான் அனுமதித்து வருகிறது.

    உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தில் 20 சதவிகிதம் இந்த நீரிணை வழியாகவே நடைபெறுவதால், இந்த குறுகிய கடல் வழி மூடப்பட்டிருப்பது உலகளவில் எண்ணெய் விலைகள் கடுமையாக உயரக் காரணமாக அமைந்துள்ளது.

  7. இந்தோனீசியாவில் 7.4 அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம்

    நிலநடுக்கத்தின் மையப்பகுதி, டெர்னேட்டிலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, நிலநடுக்கத்தின் மையப்பகுதி, டெர்னேட்டிலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.

    இந்தோனீசியாவில் வியாழக்கிழமை காலையில் 7.4 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது; இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், இந்தோனீசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியாவின் கடலோரப் பகுதிகளில் அலைகள் ஏற்படக்கூடும் என்று முன்னதாகத் தெரிவித்திருந்த அதிகாரிகள், தற்போது சுனாமி எச்சரிக்கைகளை விலக்கிக்கொண்டுள்ளனர்.

    அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்படி, இந்த நிலநடுக்கம், உள்ளூர் நேரப்படி காலை 6:48 மணிக்கு மொலுக்கா கடற்பகுதியில் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி, டெர்னேட் (Ternate) நகரத்திலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது. டெர்னேட் என்பது சிறியதாக இருந்தாலும், 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட, மக்கள் நெருக்கம் மிகுந்த ஒரு தீவாகும்.

    நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 1,000 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் அமைந்துள்ள இந்தோனீசியா, பிலிப்பின்ஸ் மற்றும் மலேசியாவின் கடலோரப் பகுதிகளைச் சுனாமி அலைகள் வந்தடைய வாய்ப்புள்ளதாக, ஹவாயைத் தளமாகக் கொண்ட சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்திருந்தது.

  8. வணக்கம் நேயர்களே!

    இன்று (02-04-2026) மதியம் வரையிலும் நேரலை பக்கத்தில் சமீபத்திய நிகழ்வுகள் குறித்த விவரங்களை சுருக்கமாக தொகுத்து அளிப்பது நந்தினி வெள்ளைச்சாமி.

  9. இரான் உடனான 'போர்நிறுத்தம்' பற்றி டிரம்ப் கூறும் புதிய தகவல் என்ன?

    டிரம்ப், இரான்

    பட மூலாதாரம், Getty Images

    இரானின் 'புதிய ஆட்சியின் அதிபர்' போர்நிறுத்தம் கோரியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அவர் தனது ட்ரூத் சோசியல் பதிவில் தெரிவித்துள்ளார்.

    "இரானின் புதிய தலைவர் முந்தைய தலைவரைவிட தீவிரம் குறைந்தவராகவும் விவேகமானவராகவும் இருக்கிறார். இந்தப் போரை முடிக்க வேண்டும் என அவர் அமெரிக்காவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்," என அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அவர், "ஹோர்மூஸ் நீரிணை திறக்கப்பட்டு மிகவும் சுதந்திரமாகவும் பாதுகாப்பானதாகவும் இருந்தால் மட்டுமே நாங்கள் பரிசீலிப்போம். அது நடக்கின்றவரை நாங்கள் இரானை முழுமையாக அழித்து அவர்களை 'கற்காலத்திற்கே' அனுப்பிவிடுவோம்," எனத் தெரிவித்தார்.

    புதிய இரான் தலைவர் என டிரம்ப் கூறியுள்ள நிலையில் அவர் யாரை குறிப்பிடுகிறார் என்பதில் தெளிவில்லை.

    போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக வரும் தகவல்களை இரான் தொடர்ந்து மறுத்துவருகிறது. மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்காவிடம் சில தகவல்கள் மட்டுமே பரிமாற்றப்பட்டதாகவும் இரான் தெரிவித்துள்ளது.

  10. அமெரிக்கா உடனான உறவு பற்றி பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டாமர் கூறியது என்ன?

    பிரிட்டன்

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டாமர்

    இரான் உடனான போரில் இணையாததற்காக நேட்டோவை தொடர்ந்து விமர்சித்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்த அமைப்பில் இருந்து வெளியேற பரிசீலிப்பதாக தெரிவித்திருந்தார்.

    அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டாமரிடம் ஐரோப்பா உடனான உறவுகளை வலுப்படுத்துவது பற்றி கேட்கப்பட்டது.

    அதற்குப் பதிலளித்த ஸ்டாமர் தான் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா இடையே தேர்வு செய்யவில்லை எனத் தெரிவித்தார்.

    மேலும் அவர், "அமெரிக்கா மற்றும் ஐரோப்பா என இரண்டு தரப்புடனும் வலுவான உறவுகள் கொண்டிருப்பது நமது நலனுக்கானது. ஆனால் பாதுகாப்பு, பொருளாதாரம் போன்ற விவகாரங்களில் ஐரோப்பா உடன் வலுவான உறவுகள் தேவை என்றும் நான் நம்புகிறேன்." என்றும் கூறினார்.

    ஐரோப்பா உடனான சிறந்த ஒத்துழைப்பு அமெரிக்கா உடனான உறவுகளையும் வலுப்படுத்தும் என்றும் ஸ்டாமர் தெரிவித்தார்.

  11. "ஹோர்மூஸ் நீரிணை திறக்கும், ஆனால் டிரம்புக்கு அல்ல" - இரான் எம்பி பேசியது என்ன?

    இரான்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, இரான் நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் அஸிஸி (கோப்புப் படம்)

    ஹோர்மூஸ் நீரிணையை திறப்பது பற்றி இரான் நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் அஸிஸி பேசியுள்ளார். "ஹோர்மூஸ் நீரிணை திறக்கும், ஆனால் அவருக்கு (டிரம்ப்) அல்ல." என்றார்.

    இரானிய நாடாளுமன்ற தேசிய பாதுகாப்பு குழுவின் தலைவரான இப்ராஹிம் அஸிஸி, "இரானின் புதிய சட்டங்களைப் பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே ஹோர்மூஸ் நீரிணை திறக்கும்." எனத் தெரிவித்தார்.

    "47 ஆண்டுகால விருந்தோம்பல் நிரந்தரமாக முடிந்துவிட்டது," என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    1979-இல் இரானிய புரட்சி நிகழ்ந்ததில் இருந்து தற்போது வரையிலான காலக்கோட்டை குறித்து இதை அவர் தெரிவித்தார்.

    டிரம்ப் தனது 'ஆட்சி மாற்றம்' என்கிற கனவை அடைந்துவிட்டதாகக் குறிப்பிடும் அவர், "ஆனால் அந்த மாற்றம் இந்தப் பிராந்தியத்தின் கடல்சார் விதிகளிலே நிகழ்ந்துள்ளது." என்றார்.

    ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்து செல்லும் கப்பல்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டத்திற்கு இரானின் தேசிய பாதுகாப்பு குழு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளது.

  12. நேட்டோவில் இருந்து விலகுவது பற்றி டிரம்ப் பரிசீலனை - டெலகிராப் செய்தி

    டிரம்ப், நேட்டோ, அமெரிக்கா

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கோப்புப் படம்

    நேட்டோவில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றுவதை வலுவாக பரிசீலித்து வருவதாக டெலகிராப் இதழுக்கு அளித்த பேட்டியில் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    நோட்டோ கூட்டணியை "காகிதப் புலி" என அழைத்த டிரம்ப், பிரிட்டனுக்கு கடற்படையே இல்லை என்றும் தெரிவித்தார்.

    மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் மோதலுக்குப் பிறகு நேட்டோ கூட்டணியில் அமெரிக்காவின் சேர்க்கையை மறுபரிசீலனை செய்வீர்களா என்கிற கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், "ஆமாம், அது மறுபரிசீலனையையும் கடந்துவிட்டது என்று கூறுவேன். நான் எப்போதுமே நேட்டோவால் ஈர்க்கப்படவில்லை. அவர்கள் ஒரு காகிதப் புலி என்பது எனக்கு எப்போதும் தெரியும். அது புதினுக்கும் தெரியும்." என்றார்.

    பிரிட்டன் போர்க்கப்பல்களின் நிலையைக் குறிப்பிட்டு பேசிய டிரம்ப், "உங்களிடம் கடற்படையே இல்லை. நீங்கள் மிகவும் பழமையாகிவிட்டீர்கள் மற்றும் வேலை செய்யாத விமானங்களை வைத்துள்ளீர்கள்." என்று தெரிவித்தார்.

  13. "பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை" - இந்திய அரசு

    "பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை" - பெட்ரரோலிய துறை அமைச்சகம்

    பட மூலாதாரம், Getty Images

    பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக, இந்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அந்த அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் போக்குவரத்துத் தேவைகளுக்குப் பெரிதும் பயன்படும் வழக்கமான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது; அதாவது, டெல்லியில் அவற்றின் விலைகள் முறையே லிட்டருக்கு ரூ. 94.77 மற்றும் ரூ. 87.67 என்ற அளவிலேயே நீடிக்கின்றன. கடந்த ஒரு மாத காலத்தில் உலகளாவிய பெட்ரோலிய விலைகள் 100% வரை உயர்ந்துள்ள நிலையில், 01.04.2026 நிலவரப்படி, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் (PSU OMCs) சில்லறை விற்பனை விலையில் (RSP) பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ. 24.40-ம், டீசலுக்கு லிட்டருக்கு ரூ. 104.99-ம் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் விண்ணை முட்டும் விலையேற்றத்திலிருந்து இந்தியக் குடிமக்களைப் பாதுகாப்பதற்கான பிரதமர் நரேந்திர மோதியின் உறுதிப்பாட்டுக்கு இணங்கவே இம்முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

    சமீபத்தில் லிட்டருக்கு ரூ. 2 என்ற அளவில் செய்யப்பட்ட விலை மாற்றம், 'XP95', 'Power95' மற்றும் 'Speed' போன்ற 'பிரீமியம்' வகை பெட்ரோலுக்கு மட்டுமே பொருந்தும். இவை உயர்-ஆக்டேன் திறன் கொண்ட எரிபொருட்களாகும்; இவற்றின் விலை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படுகின்றன. மொத்த எரிபொருள் விற்பனை அளவில், இவ்வகைப் பெட்ரோல்களின் விற்பனைப் பங்கு முறையே 2% மற்றும் 5% மட்டுமே ஆகும். வாகன ஓட்டிகள் தாங்களாகவே விரும்பித் தேர்ந்தெடுத்து, கூடுதல் விலை கொடுத்து இவ்வகைப் பெட்ரோல்களை வாங்குகின்றனர்.

    உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் எரிபொருள் விலைகள் 30% முதல் 50% வரை உயர்ந்துள்ள போதிலும், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு எரிபொருள் நிலையமும் வழக்கமான பெட்ரோல் மற்றும் டீசலை எவ்வித விலை மாற்றமுமின்றி தொடர்ந்து வழங்கி வருகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  14. 170 முஸ்லிம்களை புலிகள் கொன்று புதைத்தனரா? இலங்கையில் அகழாய்வு

    இலங்கை, 3-வது நாளாக அகழாய்வு

    இலங்கையில் காத்தான்குடி - குருக்கள்மடம் பகுதியில் யுத்தக் காலத்தில் படுகொலை செய்து புதைக்கப்பட்டதாக கூறப்படும் 170 பேரின் உடல்களை தோண்டும் நடவடிக்கைகள் மூன்றாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படுகின்றது.

    கடந்த இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளில் எந்த ஒரு மனித உடல்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. மூன்றாம் நாளில் அகழ்வு பணிகள் தொடர்கின்றன.

    குருக்கள்மடத்தில் 170 முஸ்லிம்களை விடுதலை புலிகள் படுகொலை செய்து, புதைத்ததாகக் கூறப்படும் இடமே இவ்வாறு தோண்டப்படுகின்றது. நீதிமன்ற உத்தவின் பேரில் - நேற்று முன்தினம் (30) ஆரம்பித்த இந்த அகழ்வு நடவடிக்கை தொடர்ந்து நடைபெறுகிறது.

    1990ஆம் ஆண்டு ஹஜ் கடமையை முடித்து விட்டு, காத்தான்குடி திரும்பியவர்கள் உள்ளிட்ட 170 பேரை குருக்கள்மடத்தில் வழிமறித்த விடுதலை புலிகள், கொலை செய்து புதைத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

  15. "போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது" - மார்கோ ரூபியோ

    மார்கோ ரூபியோ

    பட மூலாதாரம், BRENDAN SMIALOWSKI/POOL/AFP via Getty Images

    படக்குறிப்பு, மார்கோ ரூபியோ

    அமெரிக்கா இரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

    "பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. எந்த நேரத்திலும் ஒரு நேரடி சந்திப்பு நடக்கலாம். அதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருப்போம்," என்று அவர் ஃபாக்ஸ் நியூஸில் கூறினார்.

    மேலும் மார்கோ ரூபியோ, "போலி அல்லது போலியான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு இரான் தொடர்ந்து காலதாமதம் செய்வதை அதிபர் டிரம்ப் விரும்பமாட்டார்," என்றும் கூறினார்.

    "நான் ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்க விரும்பவில்லை, ஆனால் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த இறுதி இலக்கு கண்ணுக்கு எட்டிய தூரத்தில் உள்ளது," என்று ரூபியோ கூறினார்.

    "சில காலமாக இந்த நாட்டுக்குப் பயனுள்ளதாக இருந்து வரும் கூட்டணி இன்னும் செயல்படுகிறதா என்பதை அமெரிக்கா பார்க்க வேண்டியிருக்கும்," என்று கூறி, நேட்டோவை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் விமர்சித்தார்.

    முன்னதாக, 'இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள்' இரானிலிருந்து அமெரிக்கா வெளியேறும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

  16. 'அமெரிக்கா இதை நினைவில் கொள்ளும்' - டிரம்ப் கூறியது என்ன?

    அமெரிக்கா, டிரம்ப்

    பட மூலாதாரம், Getty Images

    அமெரிக்கா இனி உங்களின் உதவிக்கு வராது என அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    "ஹோர்மூஸ் நீரிணையைச் சுற்றியுள்ள கட்டுப்பாடுகளால் தங்களின் விமானங்களுக்கு எரிபொருள் பெற முடியாத பிரிட்டன் போன்ற நாடுகள், தைரியத்தை வரவழைத்து ஹோர்மூஸ் நீரிணைக்குச் சென்று அதனை கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும்," என டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

    மேலும் அந்தப் பதிவில், "நாடுகள் தங்களைத் தாங்களே பாதுகாக்க கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் எங்களின் உதவிக்கு வராததைப் போல அமெரிக்கா இனி உங்களின் உதவிக்கு வராது." எனத் தெரிவித்துள்ளார்.

    இரானுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் இருந்து பின்வாங்கிய நாடுகளைப் பற்றி டிரம்ப் பேசியிருந்தார்.

    "இரான் அடிப்படையில் அழிக்கப்பட்டுவிட்டது. கடினமான கட்டம் முடிந்துவிட்டது," எனத் தெரிவித்தார்.

    மற்றுமொரு பதிவில் பிரான்ஸ் பற்றி குறிப்பிட்ட டிரம்ப், "இஸ்ரேலுக்கு ராணுவப் பொருட்களை ஏற்றிச் சென்ற விமானங்களை தங்களின் வான்பரப்பு வழியே செல்ல பிரான்ஸ் அனுமதிக்கவில்லை. இரான் விவகாரத்தில் பிரான்ஸ் உதவவே இல்லை. அது தற்போது வெற்றிகரமாக தீர்க்கப்பட்டுவிட்டது." என்றார்.

    அந்தப் பதிவின் முடிவில், "அமெரிக்கா இதை நினைவில் கொள்ளும்" என்றும் தெரிவித்துள்ளார்.

  17. வணக்கம் நேயர்களே!

    இன்று (01-04-2026) மதியம் வரையிலும் நேரலை பக்கத்தில் சமீபத்திய நிகழ்வுகள் குறித்த விவரங்களை சுருக்கமாக தொகுத்து அளிப்பது நந்தினி வெள்ளைச்சாமி.

  18. பாலத்தீனர்களுக்கு மரண தண்டனை - இஸ்ரேல் சட்டத்துக்கு இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு கண்டனம்

    இஸ்ரேல், பாலத்தீனர்கள்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கோப்புப்

    பாலத்தீனர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை அனுமதிக்கும் இஸ்ரேலின் புதிய சட்டத்திற்கு இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு (ஓஐசி) கண்டனம் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெசஸ்ட் நிறைவேற்றியுள்ள புதிய சட்டத்தின்படி, ''தீவிரவாத தாக்குதல்களில் தண்டிக்கப்படும் பாலத்தீனர்களுக்கு 90 நாட்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படும்.''

    இஸ்லாமிய நாடுகளின் அமைப்பான ஓஐசி எக்ஸ் தளப் பதிவில் இந்தச் சட்டத்தைக் விமர்சித்துள்ளது.

    "இந்தச் சட்டத்துக்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியதை ஓஐசி அமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. ஓஐசி இதனை ஆபத்தான மற்றும் எதிர்பார்த்திராத நகர்வாக கருதுகிறது. இது பாலத்தீன சிறைவாசிகள் கொல்லப்படுவதையும் அரசியல் மரண தண்டனையையும் சட்டப்பூர்வமாக்குவதற்கு நிகரானது." என ஓஐசி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  19. இரான் போர் தொடக்கத்தில் இருந்து பலி எண்ணிக்கை எவ்வளவு?

    இரான், மத்திய கிழக்கு

    பட மூலாதாரம், Getty Images

    இரான் உடான இஸ்ரேல்-அமெரிக்காவின் போர் தொடங்கியதில் இருந்து பிராந்தியம் முழுவதும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.

    தற்போது வரை கிட்டத்தட்ட 4,500-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், இரானில் தான் அதிக அளவில் பலி எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

    எந்த நாடுகளில் பலி எண்ணிக்கை எவ்வளவு?

    இரான்: அமெரிக்காவைச் சேர்ந்த 'இரானில் உள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்' அமைப்பின்படி தற்போது 1,574 பொதுமக்கள் மற்றும் 236 குழந்தைகள் உட்பட 3,492 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இஸ்ரேல்: இஸ்ரேலிய ஆம்புலன்ஸ் சேவையான மேகன் டேவிட் ஆடோமின்படி, ஏவுகணைத் தாக்குதல்களில் 19 பேர் கொல்லப்பட்டனர். மேலும் இஸ்ரேலிய ராணுவத்தின்படி, லெபனானில் 9 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    லெபனான்: லெபனான் சுகாதார அமைச்சகத்தின்படி, 124 குழந்தைகள் உட்பட 1,247 பேர் உயிரிழந்துள்ளனர்.

    வளைகுடா பிராந்தியம்: வளைகுடா நாடுகளில் தற்போது வரை 24 பேர் உயிரிழந்தனர், இவர்களில் பெரும்பாலானவர்கள் பாதுகாப்பு படை வீரர்களும் வெளிநாடுகளைச் சேர்ந்த பணியாளர்களும் ஆவர். இதில் 11 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் 7 பேர் குவைத்திலும் உயிரிழந்தனர். அதோடு ஓமன், சௌதி அரேபியா மற்றும் பஹ்ரைனில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

  20. சீனாவை நோக்கிச் சென்ற குவைத் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

    குவைத், சௌதி அரேபியா,

    பட மூலாதாரம், Reuters

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அருகே குவைத் கொடி ஏந்திய கப்பல் ஒன்று "அடையாளம் தெரியாத ஏவுகணையால்" தாக்கப்பட்டுள்ளது. அல்-சால்மி என்கிற கப்பல் துபை அருகே கடலில் தாக்குதலுக்கு உள்ளானதாக கடற்சார் உளவு நிறுவனமான வான்கார்ட் தெரிவிக்கிறது.

    கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பதாக இருப்பதாகவும் எந்த சுற்றுச்சூழல் தாக்கமும் காணப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

    இந்த தகவல்களை துபை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர், ஆனால் கப்பலின் பெயரை அவர்கள் குறிப்பிடவில்லை.

    2011-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அல்-சால்மி கப்பல் குவைத் அரசு எண்ணெய் கப்பல் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.

    மற்றுமொரு கடற்சார் உளவு நிறுவனமான டாங்கர்ட்ராக்கர்ஸ் தரவுகளின்படி, அந்த கப்பல் 1.2 மில்லியன் பேரல் சௌதி கச்சா எண்ணெயும் 8 லட்சம் பேரல் குவைத் கச்சா எண்ணெயையும் சுமந்து சென்றது. இந்தக் கப்பல் சீனாவில் உள்ள கிங்டாவோவை நோக்கிச் சென்றதாக மரைன்டிராஃபிக் என்கிற தளத்தில் உள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.