You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

நேரலை, "கழுத்து நெரிக்கப்பட்டது" - மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை சுட்டிக்காட்டி பிரதமர் மோதி உரை

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

முக்கிய சாராம்சம்

  • இரான் மற்றும் அமெரிக்கா இடையே சில பிரச்னைகளில் மட்டுமே உடன்பாடு எட்டப்பட வேண்டியுள்ளது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் தெரிவித்துள்ளார்.
  • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் சமீபத்தில் மிகச் சிறந்த ஒரு செய்தியைப் பெற்றதாகத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் இரானுடனான சூழல் மேம்பட்டு வருவதாகத் தெரிவதாக அவர் கூறினார்.
  • இரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்கா தனது பொறுப்பில் எடுக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இதற்கு இரான் தற்போது பதிலளித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. "கழுத்து நெரிக்கப்பட்டது" - மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை சுட்டிக்காட்டி பிரதமர் மோதி உரை

    பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கான முன்மொழியப்பட்ட சட்டத்திருத்தம் நிறைவேறாதது குறித்து பிரதமர் நரேந்திர மோதி சனிக்கிழமையன்று வருத்தம் தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான ஒரு வாய்ப்பு நழுவிவிட்டதாக அவர் இதனை விவரித்தார்.

    நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், இந்தியாவின் "தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களிடம்" நேரடியாகப் பேசுவதற்காகவே தான் முன்வந்திருப்பதாக பிரதமர் கூறினார். அவர்களின் எதிர்பார்ப்புகளையும், இந்தத் பின்னடைவால் ஏற்பட்ட ஏமாற்றத்தையும் அவர் ஒப்புக்கொண்டார்.

    "எங்கள் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், எங்களால் வெற்றிபெற முடியவில்லை," என்று கூறிய அவர், நாட்டின் பெண்களுக்குத் தனது "மனமார்ந்த வருத்தத்தைத்" தெரிவித்தார். முன்மொழியப்பட்ட "நாரி சக்தி வந்தன் சட்டத்திருத்தம்" (பெண்கள் சக்தி வணக்கத் திருத்தம்), மக்கள் பிரதிநிதித்துவ அமைப்புகளில் பெண்களுக்குப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதன் மூலம், நிர்வாகத்தில் பெண்களின் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது என்று மோதி வலியுறுத்தினார்.

    அவரைப் பொறுத்தவரை, இந்தச் சட்டத்திருத்தம் 2029 மக்களவைத் தேர்தல்களில் தொடங்கி, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு வலுவான குரலை வழங்குவதன் மூலம், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ள ஒரு கோரிக்கையை நிறைவேற்றுவதை இலக்காகக் கொண்டிருந்தது.

    எனினும், இந்தச் சட்டத்திருத்தத்தைத் தடுத்த எதிர்க்கட்சிகளை மோதி கடுமையாக விமர்சித்தார்; அவர்கள் தேசிய நலனை விட அரசியல் நலன்களுக்கே முன்னுரிமை அளித்ததாக அவர் குற்றம் சாட்டினார். இந்திய தேசிய காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் , அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி போன்ற கட்சிகளை குறிப்பிட்ட அவர், அவர்களின் எதிர்ப்பு இறுதியில் பெண்களின் நலன்களையே பாதித்ததாகக் குற்றம் சாட்டினார்.

    "நாட்டின் நலனை விடக் கட்சி நலன்களே முதன்மையானதாக மாறும்போது, ​​பாதிக்கப்படுவது நாடே ஆகும்—குறிப்பாக, பெண்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்," என்று அவர் கூறினார். “இந்த நேர்மையான முயற்சிக்குக் காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து, ஒட்டுமொத்த தேசத்தின் கண் முன்னாலேயே, அது வடிவம் பெறுவதற்கு முன்பாகவே அதனைச் செயலளவில் கழுத்தை நெரித்துவிட்டன,” என்று பிரதமர் குற்றம் சாட்டினார்.

    இந்த பின்னடைவு ஏற்பட்டபோதிலும், பெண்களின் அதிகாரமளித்தலே இந்தியாவின் முன்னேற்றத்திற்கான ஒரு முக்கியத் தூண் என்று வர்ணித்த பிரதமர், அத்துறையில் தனது அரசாங்கத்திற்குள்ள உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

    முடிவெடுக்கும் செயல்முறைகளில் பெண்களுக்கு உரிய இடம் கிடைப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

  2. ‘தமிழகத்திற்கு அநீதி இழைத்துவிட்டீர்கள்’- திமுக மீது நிர்மலா சீதாராமன் விமர்சனம்

    பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான 131-ஆவது அரசியலமைப்பு திருத்த மசோதா வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) மக்களவையில் தோல்வியடைந்தது.

    முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இந்த மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.

    இந்நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட எக்ஸ் தள பதிவை மேற்கோள்காட்டி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    “ராகுல் காந்தி மற்றும் ஸ்டாலின் தலைமையிலான வெறுப்பு நிறைந்த எதிர்க்கட்சிகளால், நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கான பிரதிநிதித்துவ வாய்ப்பைத் தமிழகம் இழந்துள்ளது என்பதை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ‘கண்மூடித்தனமான வெறுப்பு, மாநிலத்திற்குக் கிடைக்கவேண்டிய நியாயமான தொகுதிப்பங்கீட்டையும் பெண்களுக்குக் கிடைக்கவேண்டிய இட ஒதுக்கீட்டையும் பாதித்துள்ளது’ என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

    “தமிழகம் ஆதாயமடைவதற்குப் பதிலாக இழப்புகளைச் சந்திக்க உள்ளது. பிரதமர் மோதி உறுதியளித்த இருதரப்புக்கும் பலனளிக்கும் திட்டத்தில் நீங்கள் பங்கெடுக்க மறுத்து, தமிழகத்திற்கு அநீதி இழைத்துவிட்டீர்கள்” என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

  3. ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக அறிவித்த இரான்

    ‘ஹோர்மூஸ் நீரிணை மீண்டும் இரானின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது’ என அந்நாட்டு ராணுவம் கூறியதாக, இரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    இரானின் பல ஊடகங்கள் இஸ்லாமியப் புரட்சிகர காவல் படையின் (ஐஆர்ஜிசி) அறிக்கையை மேற்கோள் காட்டி, ஹோர்மூஸ் நீரிணை அதன் முந்தைய நிலைக்கு திரும்பும் என்றும், ஆயுதப்படைகள் அந்தப் பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளன.

    இந்தச் செய்தியை ஐஆர்ஜிசி-யுடன் தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி முகமை, இரானிய மாணவர்கள் செய்தி முகமை மற்றும் அரசு ஒளிபரப்பான ஐஆர்ஐபி (IRIB) ஆகியவை வெளியிட்டன.

    "இந்த நீர்வழிப் பாதை வழியாக சில கப்பல்கள் செல்வதை நாங்கள் இதற்கு முன்பு கவனித்தோம், ஆனால் இந்த முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதை வழியாக எத்தனை கப்பல்கள் கடந்து சென்றுள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை" என்று அவை தெரிவித்தன.

    ஐஆர்ஜிசி-யின் அந்த அறிக்கை, “அமெரிக்கா கடற் கொள்ளையில் ஈடுபட்டதாக” குற்றம் சாட்டியதுடன், “அமெரிக்காவின் முற்றுகை என்று சொல்லப்படுவது கடற் கொள்ளைக்குச் சமமானது” என்றும் கூறியது.

    அமெரிக்கா தனது துறைமுகங்களுக்கு விதித்துள்ள முற்றுகையைத் தொடர்ந்தால், ஹோர்மூஸ் நீரிணையை மூடிவிடுவோம் என்று இரான் முன்னதாகத் தெரிவித்திருந்தது.

    வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) அன்று, இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்‌சி தனது எக்ஸ் தள பதிவில், எஞ்சிய போர்நிறுத்தக் காலத்திற்கு அனைத்து வணிகக் கப்பல்களுக்கும் ஹோர்மூஸ் நீரிணை முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

    இதற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்ரூத் சோஷியல் தளத்தில், ஹோர்மூஸ் நீரிணையைத் திறந்ததற்காக இரானுக்கு நன்றி தெரிவித்தார்.

    “இரான் நீரிணை முழுமையாகத் திறக்கப்பட்டு போக்குவரத்துக்குத் தயாராக இருப்பதாக இரான் இப்போதுதான் அறிவித்துள்ளது. நன்றி!" என்று டிரம்ப் தெரிவித்தார்.

    இருப்பினும், சில நிமிடங்களுக்குப் பிறகு அவர் மற்றொரு பதிவை வெளியிட்டார், அதில் ஹோர்மூஸ் நீரிணையில் 'அமெரிக்க முற்றுகை' தொடரும் என்று கூறினார்.

  4. ”தமிழ்நாட்டை டெல்லியில் ஆள விரும்புகிறார் மோதி” - ராகுல்

    நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் முயற்சி முறியடிக்கப்பட்டதாக, ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார்.

    அப்போது பேசிய ராகுல் காந்தி, “நான் தமிழ்நாட்டில் பிறக்காவிட்டாலும் என் குடும்பம் தமிழ்நாட்டிலிருந்து வராவிட்டாலும் என் உணர்வு தமிழ் மண்ணுடன் ஒன்றியிருக்கிறது. தொகுதி மறுவரையறை மசோதா மூலமாக தமிழ்நாட்டில் நாடாளுமன்றத்தின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் எண்ணமாக இருந்தது. ஆனால், அதை நாம் நேற்று தோற்கடித்துவிட்டோம். இந்தியா மாநிலங்களின் ஒன்றியமாகும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் குரலை பதிவு செய்வதற்கான உரிமை இருக்கிறது. பாஜக - ஆர்எஸ்ஸ் என்ன செய்ய முயற்சிக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள். கடந்த காலங்களில் ராணுவம் மூலம் போர் புரிந்தனர். ஆனால், பாஜக ராணுவம் இல்லாமல் போர் நடத்துகிறது. தமிழ் மொழி, கலாசாரம், வரலாறு ஆகியவற்றை அழிக்க நினைக்கின்றனர். அவர்களால் ஒருபோதும் அதை செய்ய முடியாது.” என்றார்.

    மேலும், ஆர்எஸ்எஸ் - பாஜக மக்களை புறக்கணிப்பதாகவும் தமிழக மக்கள் யார் என்று அவர்களுக்கு தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

    “தமிழ்நாட்டை டெல்லியிலிருந்து ஆள்வதற்கு மோதி - அமித் ஷாவுக்கு ஒரு கூட்டாளி வேண்டும். டெல்லியிலிருந்து அமித் ஷாவிடமிருந்து உத்தரவுகளை பெற வேண்டிய முதலமைச்சர் வேண்டும். தமிழ் மொழி, தமிழ் மக்களை ஒருபோதும் தொட முடியாது என்ற உத்தரவாதத்தை அளிக்கிறோம்.” என்றார்.

    மேலும், தகுதிவாய்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய், வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2,000, தகுதி வாய்ந்த உயர்கல்வி மாணவிகளுக்கு ரூ. 2,000 வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை ராகுல் காந்தி தன் பேச்சில் சுட்டிக்காட்டினார்.

    மேலும், முதன்முறை சொத்துகளை பதிவு செய்யும் பெண்களுக்கு இலவசமாக பதிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.]

    “தமிழ் மொழியை தொடுவதற்கு ஆற்றல் படைத்த சக்தி இங்கு இல்லை. டெல்லியிலிருந்து தமிழகத்தை ஆள மோதி விரும்புகிறார். அதிமுகவை பாஜக அழித்துவிட்டது. மோதியால் அதிமுக விழுங்கப்பட்டுவிட்டது. ஆர்.எஸ்.எஸ்-பாஜகவால் நடத்தப்படும் தாக்குதலை தடுத்து நிறுத்துங்கள்” என ராகுல் பேசினார்.

  5. செறிவூட்டப்பட்ட யுரேனியம் குறித்து இரான் கூறியது என்ன?

    இரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்கா தனது பொறுப்பில் எடுக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இதற்கு இரான் தற்போது பதிலளித்துள்ளது.

    இரானியத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், இரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எங்கும் அனுப்பப்படாது என்று இரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் தெரிவித்தார்.

    பிபிசி பாரசீக சேவையின் தகவலின்படி, "இரானின் செறிவூட்டப்பட்ட உலோகத்தை அமெரிக்காவுக்கு அனுப்புவது என்பது ஒருபோதும் பரிசீலிக்கப்பட்ட ஒரு வாய்ப்பாக இருந்ததில்லை," என்று பாகாய் திட்டவட்டமாகக் கூறினார்.

    இஸ்மாயில் பாகாய் மேலும் கூறுகையில், "ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை, இரான் மீதான கடற்படை முற்றுகை தொடரும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இந்த முற்றுகை தொடருமானால், அது போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மீறலாகக் கருதப்படக்கூடும். ஹோர்மூஸ் நீரிணை தொடர்பாக இரான் நிச்சயமாகத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்," என்றார்.

    ஹோர்மூஸ் நீரிணையில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள முற்றுகை தொடரும் என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். அமெரிக்காவின் இந்த முற்றுகை நடவடிக்கையானது இரானுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    அவர் கூறுகையில், "இரானுடனான நமது ஒப்பந்தம் 100 சதவிகிதம் முழுமையடையும் வரை, இந்த நடவடிக்கை இரானுக்கு மட்டுமே பொருந்தும்," என்றார்.

  6. ’நல்ல செய்தி கிடைத்துள்ளது’ - இரான் குறித்து டிரம்ப் கருத்து

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் சமீபத்தில் மிகச் சிறந்த ஒரு செய்தியைப் பெற்றதாகத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் இரானுடனான சூழல் மேம்பட்டு வருவதாகத் தெரிவதாக அவர் கூறினார்.

    அந்தச் சிறந்த செய்தி என்னவென்று செய்தியாளர்கள் டொனால்ட் டிரம்பிடம் கேட்டபோது, ​​"அது குறித்து நீங்கள் விரைவில் அறிந்துகொள்வீர்கள். நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்; அனைத்தும் நல்லபடியாக அமையும் என்று நம்புகிறேன். இவற்றில் பல விஷயங்கள் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு, ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளன," என்று டிரம்ப் பதிலளித்தார்.

    அவர் மேலும் கூறுகையில், "மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கவே கூடாது. இரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது; மற்ற அனைத்தையும் விட இந்த விஷயமே மிகவும் முக்கியமானது," என்றார்.

    போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான ஒப்பந்தம் புதன்கிழமைக்குள் எட்டப்படாவிட்டால், இரானுடனான போர்நிறுத்தத்தை ரத்து செய்துவிடுவோம் என்றும் அதிபர் டிரம்ப் எச்சரித்தார்.

  7. இரான் - அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தையா? பாகிஸ்தான் புதிய தகவல்

    இரான் மற்றும் அமெரிக்கா இடையே சில பிரச்னைகளில் மட்டுமே உடன்பாடு எட்டப்பட வேண்டியுள்ளது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் தெரிவித்துள்ளார்.

    துருக்கியில் நடைபெற்ற அன்டால்யா தூதரக மன்றத்தில் பேசிய இஷாக் தார், "இரு தரப்பினருக்கும் இடையில் சில பிரச்னைகளில் மட்டுமே உடன்பாடு எட்டப்பட வேண்டியுள்ளது. நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை, மேலும் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு கடுமையாக உழைத்து வருகிறோம், ஏனெனில் அது ஒட்டுமொத்த உலகுக்கும் பயனளிக்கும்" என்று கூறினார்.

    பிபிசி உருதுவின்படி, இஷாக் தார், "நிலுவையில் உள்ள பிரச்னைகளில் ஒருமித்த கருத்தை எட்டவும், கருத்து வேறுபாடுகளைக் களையவும் நாங்கள் முயற்சித்து வருகிறோம். லெபனானில் போர் நிறுத்தம் எட்டப்பட்டுள்ளது, இப்போது ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இரான் எந்த நிபந்தனைகளும் இன்றி கப்பல்களுக்காக ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறந்துள்ளது" என்று கூறினார்.

    இஷாக் தார் மேலும் கூறுகையில், "மீதமுள்ள பேச்சுவார்த்தைகளும் நிறைவு செய்யப்படும் என்பதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்றார்.

    இரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றன.

  8. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் இன்றைய (ஏப்ரல் 18) நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம்.

    இன்று பிற்பகல் வரையிலும் அண்மைச் செய்திகளை தொகுத்து அளிப்பவர் நந்தினி வெள்ளைச்சாமி.

  9. மகளிர் இட ஒதுக்கீடு சட்ட திருத்த மசோதா தோல்வி - ஸ்டாலின் கூறியது என்ன?

  10. வால்பாறையில் வேன் கவிழ்ந்து 6 பேர் பலி

    வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் வேன் ஒன்று கவிழ்ந்ததில், குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர். இத்தகவலை கோவை மாவட்ட ஆட்சியர் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினார்.

    கேரளா மாநிலம் மலப்புரம் பகுதி சேர்ந்த 16 பேர் சுற்றுலா வேனில் நேற்று முன்தினம் வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

    வேனில் பயணம் செய்த 16 நபர்களில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் தெரிவித்தார்.

  11. லெபனானில் போர் நிறுத்தம் பற்றி இரான் கூறுவது என்ன?

    லெபனானில் போர் நிறுத்தத்தை இரான் வரவேற்றுள்ளதுடன், இது ஒரு ராஜீய வெற்றி என்றும் ஹெஸ்பொலாவின் "எதிர்ப்பின்" விளைவு என்றும் கூறியுள்ளது.

    பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் அமெரிக்காவுடன் எட்டப்பட்ட ஒரு பரந்த புரிந்துணர்வின் ஒரு பகுதியாகவே இந்த போர் நிறுத்தம் இருப்பதாக இரான் கருதுகிறது என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் தெரிவித்தார்.

    பிராந்தியம் முழுவதும் ஒரு விரிவான போர் நிறுத்தத்திற்கு இரான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

  12. லெபனானில் போர் நிறுத்தத்தை வரவேற்ற மக்ரோங் விடுத்த வேண்டுகோள் என்ன?

    பிரெஞ்சு அதிபர் மக்ரோங் லெபனானில் பத்து நாள் போர் நிறுத்தத்தை ஆதரித்திருந்தாலும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    "ராணுவ நடவடிக்கைகள் தொடர்வது, ஏற்கனவே பலவீனமாக உள்ள இந்த போர் நிறுத்தத்தை மேலும் சீர்குலைத்துவிடும் என்ற எனது கவலையையும் நான் வெளிப்படுத்துகிறேன்," என்று மக்ரோங் கூறினார்.

    ''லெபனான் மற்றும் இஸ்ரேல் எல்லையின் இருபுறமும் வாழும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நான் வேண்டுகோள் விடுக்கிறேன். ஹெஸ்போலா தனது ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும். இஸ்ரேல் லெபனானின் இறையாண்மையை மதித்து, போரை நிறுத்த வேண்டும்.'' எனவும் அவர் கூறினார்.

  13. ”ராகுல் காந்தி பரப்புரையில் ஸ்டாலின் பங்கேற்க மாட்டார்” - ஆர்.எஸ். பாரதி

    தமிழகத்திற்கு நாளை (ஏப்ரல் 18) வருகை தருகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி. அவர் பொன்னேரி, சோளிங்கர் மற்றும் திருச்சி துறையூர் ஆகிய தொகுதிகளில் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    திமுக கூட்டணியில் 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது காங்கிரஸ். ஏப்ரல் 23ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில், பரப்புரை 21ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை தமிழக வரவுள்ளார். ஆனால், அவருடைய பரப்புரையில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் என, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி பரப்புரையில் ஸ்டாலின் கலந்துகொள்வாரா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆர்.எஸ். பாரதி, “முதலமைச்சரின் பரப்புரை ஏற்கெனவே திட்டமிடப்பட்டுவிட்டது. அதை மாற்ற முடியாது. ராகுலின் பரப்புரையில் திமுக சார்பில் கலந்துகொள்வோம். ஆனால், முதலமைச்சர் கலந்துகொள்ள மாட்டார். அவருடைய பரப்புரை திட்டத்தை மாற்றியமைத்தால், 30-40 தொகுதிகளில் பரப்புரை பாதிக்கப்படும்” என்றார்.

    ராகுல் காந்தி தமிழகத்துக்கு பரப்புரைக்காக வரமாட்டார் என, முன்னதாக தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்நிலையில், ராகுலின் வருகையால் “அண்ணாமலை கூறியது பொய்” என நிரூபிக்கப்பட்டுள்ளதாக, ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

  14. லெபனானில் போர்நிறுத்த அறிவிப்புக்கு கத்தார் வரவேற்பு

    லெபனானில் அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தத்தை கத்தார் வரவேற்றுள்ளதுடன், இது பதற்றத்தைக் குறைப்பதற்கான ஒரு படி என்றும் விவரித்துள்ளது.

    கத்தாரின் வெளியுறவு அமைச்சகம் சமூக ஊடகப் பதிவில், "பிராந்தியத்தில் அமைதியைப் பேணுவதற்கும் மேலும் பதற்றம் அதிகரிப்பதைத் தடுப்பதற்கும் இந்த ஒப்பந்தம் முழுமையாகவும் உடனடியாகவும் செயல்படுத்தப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளது.

    மேலும் அது, "இந்த ஒப்பந்தத்தை எட்டுவதற்குப் பங்களித்த நண்பரானஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிகளுக்கு கத்தார் வெளியுறவு அமைச்சகம் தனது பாராட்டுகளைத் தெரிவிக்கிறது" என்றும் கூறியுள்ளது.

    முன்னதாக, லெபனானும் இஸ்ரேலும் 10 நாள் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் ஒரு பதிவின் மூலம் அறிவித்திருந்தார். இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 2:30 மணிக்கு இந்தப் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது.

    தெற்கு லெபனானில் உள்ள இரான் ஆதரவு ஆயுதக் குழுவான ஹெஸ்பொல்லா, இஸ்ரேலுடன் செயல்படுத்தியுள்ள போர்நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  15. ”எண்ணிக்கை பலம் இருக்கிறது என்ற ஆணவத்தில்” - தொகுதி மறுவரையறை குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை

    தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு மொத்தமாகத் திரும்பப் பெற வேண்டும் என, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக, அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டின் அரசியலுக்கு மிக முக்கியமான நாள் இன்று. தொகுதி மறுவரையறைக்கு எதிரான நம் போராட்டங்களின் முடிவினை அறியப் போகும் நாள்.

    நம்முடைய கடும் எதிர்ப்பினையும் போராட்டத்தினையும் தொடர்ந்து, தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் தொகுதி அளவு குறையாது பிரதமரும் உள்துறை அமைச்சரும் நேற்று நாடாளுமன்றத்தில் வாய்மொழி உத்தரவாதம் அளித்துள்ளனர்.

    ஆனால், சொல் ஒன்று – செயல் வேறு என்பதாக, இவர்கள் தாக்கல் செய்துள்ள சட்டமுன்வடிவு முழுக்க முழுக்க ஏமாற்றுத் திட்டமாக இருக்கிறது. இதை நம்பவும் முடியாது, ஏற்றுக்கொள்ளவும் முடியாது எனத் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.

    இந்தச் சட்டமுன்வடிவில் தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மூலம், நினைத்தால் நினைத்த நேரத்தில், நினைத்த முறையில், எப்போது வேண்டுமானாலும் எதிர்காலத்தில், தங்களுக்குச் சாதகமான வகையில், இந்திய மாநிலங்களின் தொகுதியளவை மாற்றியமைத்துக் கொள்வதற்கான வழிவகைகள் இந்தக் ”கருப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன” என்றும் “பெரும் சூழ்ச்சியை உள்ளடக்கியதாக” இந்தச் சட்டமுன்வடிவு இருப்பதாகவும் ஸ்டாலின் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    ”அவசரகதியில் இதனை நிறைவேற்றக் கூடாது. ஒன்றிய அரசு இதனை முழுவதுமாகத் திரும்பப் பெற வேண்டும். எண்ணிக்கை பலம் இருக்கிறது என்ற ஆணவத்தில், எங்களின் எதிர்ப்பை மீறி இதனை நிறைவேற்றினால், அதற்கான விளைவுகளைத் தமிழ்நாட்டில் நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.

    நேரு அவர்கள் இந்தியைத் திணிக்க மாட்டோம் என்றார், இருந்தவரை அந்த உறுதிமொழியைக் காப்பாற்றினார். ஆனால், தற்போதைய ஒன்றிய ஆட்சியாளர்களோ மாநில உரிமைகளைக் காப்பாற்றுவோம் எனச் சொல்லிக்கொண்டே அதனைச் சில்லு சில்லாக நொறுக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர்.

    நாம் கோருவது, முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி அவர்களும், வாஜ்பேயி அவர்களும் அரசியலமைப்புச் சட்டத்திலேயே திருத்தம் செய்து, 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுசீரமைப்பை நிறுத்தி வைத்ததைப் போன்ற சட்டப் பாதுகாப்பு.” என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?

    தொகுதி மறுவரையறை மசோதா, அரசியலமைப்பு 131வது திருத்த மசோதா மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதா ஆகிய 3 மசோதாக்களை மத்திய அரசு நேற்று நாடாளுமன்றத்தில் மக்களவையில் தாக்கல் செய்தது. இவை மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு அமல்படுத்துவது மற்றும் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பானவை.

    தற்போதுள்ள 543 மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவது இந்த மசோதாக்களின் ஒரு நோக்கமாகும்.

    தொகுதி மறுவரையறை மசோதா குறித்து தென் மாநிலங்களில் கடும் ஆட்சேபனை இருந்த நிலையில், இதுகுறித்த விவாதம் மக்களவையில் நடந்தது.

    இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.பி.க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர்.

    மகளிருக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதுடன் மற்ற மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டிருப்பது 'சாண்ட்விச்' போல இருப்பதாக கூறிய திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர் பாலு எதிர்ப்பு தெரிவித்தார்.

    தொகுதி மறுவரையறை மசோதாவால் வட மாநிலங்களுக்கு கூடுதல் ஆதாயம் என்ற தென்மாநிலங்களின் குற்றச்சாட்டை மறுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விகிதாச்சாரங்களின் அடிப்படையிலேயே தொகுதிகள் அதிகரிக்கும் என்று விளக்கமளித்தார்.

    அவற்றின் மீதான விவாதம் இரண்டாவது நாளாக இன்று நடைபெற உள்ளது. மேலும், இம்மசோதாக்கள் மீது வாக்கெடுப்புகளும் நடைபெற உள்ளன.

  16. இரான் போர் "மிக விரைவில் முடிவுக்கு வரும்" - டிரம்ப்

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் நெவாடாவில் நடைபெற்ற வரி நாள் வட்டமேசை மாநாட்டில் இரான் போர் குறித்தும் பேசினார். இரான் போர் "மிக விரைவில் முடிவுக்கு வரும்" என்று அவர் கூறினார்.

    "இரானில் போர் விவகாரம் நன்றாக முன்னேறி வருகிறது என்று நான் கூறுவேன்," என்று கூறிய அவர், அது "மிக விரைவில் முடிவுக்கு வரும்" என்றும் குறிப்பிட்டார்.

    முன்னதாக, இரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "பாகிஸ்தான் மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறது. நான் இஸ்லாமாபாத் செல்ல முடியும். பாகிஸ்தானில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானால், நான் இஸ்லாமாபாத் செல்ல முடியும்," என்று கூறினார்.

    கடந்த வாரம், அமெரிக்க மற்றும் இரான் பிரதிநிதிகள் இஸ்லாமாபாத்தில் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தினர், ஆனால் இந்தப் பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

    இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்த விவாதங்கள் "தொடர்ந்து நடைபெற்று வருகின்றன" என்றும், ஆனால் அதற்கான நேரமோ இடமோ இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

  17. போர் நிறுத்தத்துக்கு மத்தியிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக குற்றம் சாட்டும் லெபனான்

    இஸ்ரேலுடனான போர்நிறுத்த ஒப்பந்தம் பலமுறை மீறப்பட்டதாக லெபனான் ராணுவம் தெரிவித்துள்ளது.

    சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் உள்ள தனது அதிகாரப்பூர்வ கணக்கில் பதிவிட்டுள்ள ஒரு பதிவில், லெபனான் கிராமங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்கள் நடத்தியதாக ராணுவம் கூறியுள்ளது.

    இஸ்ரேல் தரப்பிலிருந்து பலமுறை இடைவிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் லெபனான் ராணுவம் கூறியுள்ளது.

    தெற்கு நகரங்களுக்குத் திரும்பும்போது எச்சரிக்கையாக இருக்குமாறும், அபாயகரமான பகுதிகளிலிருந்து விலகி இருக்குமாறும் இடம்பெயர்ந்த மக்களை ராணுவம் வலியுறுத்தியுள்ளது.

    இஸ்ரேலுடன் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தாக்குதல்களால் லெபனானில் இடம்பெயர்ந்த மக்கள் தற்போது தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.

    இந்தப் போர்நிறுத்தத்துக்குப் பிறகு, லெபனானில் உள்ள பலரும் கொண்டாடினர்.

    லெபனானில் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து, ஐ.நா அகதிகள் தலைவர் சர்வதேச சமூகத்திடம் "அவசர உதவி" கோரியுள்ளார்.

    இந்தச் செய்தி எழுதப்படும் வரை, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இஸ்ரேலிடமிருந்தோ அல்லது அதன் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளிடமிருந்தோ (IDF) எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

    இருப்பினும், லெபனானுடனான ஒப்பந்தத்துக்குப் பிறகு, ஹெஸ்பொலாவின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக மட்டுமே ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று இஸ்ரேல் கூறியிருந்தது.

  18. "இஸ்ரேல்-லெபனான் 10 நாள் போர்நிறுத்தம்" - டிரம்ப் கூறியது என்ன?

    லெபனானும் இஸ்ரேலும் 10 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்ரூத் சோஷியல் சமூக ஊடக தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 2:30 மணிக்கு இந்தப் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

    போர் நிறுத்தத்தை அறிவிக்கும் தனது பதிவில், லெபனான் அதிபர் ஜோசப் அவுன் மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடன் பேசியதாக டொனால்ட் டிரம்ப் கூறினார்.

    இருப்பினும், இஸ்ரேல் தொடர்ந்து போரிட்டு வரும், இரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான ஹெஸ்பொலா பற்றி அவர் தன் பதிவில் எதுவும் குறிப்பிடவில்லை.

    பின்னர், ட்ரூத் சோஷியல் தளத்தில் மற்றொரு பதிவில், டிரம்ப், "இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு மற்றும் லெபனான் அதிபர் ஜோசப் அவுன் ஆகியோரை நான் வெள்ளை மாளிகைக்கு அழைப்பேன். இது 1983-க்குப் பிறகு இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான முதல் அர்த்தமுள்ள உரையாடலாக இருக்கும், இது நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும். இரு தரப்பினரும் அமைதியை விரும்புகிறார்கள், இது விரைவில் சாத்தியமாகும் என்று நான் நம்புகிறேன்." என தெரிவித்துள்ளார்.

    போர் நிறுத்தத்தை வரவேற்ற லெபனான் பிரதமர்

    இஸ்ரேலுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தை லெபனான் பிரதமர் நவாஃப் சலாம் வரவேற்றார். போர் தொடங்கியதிலிருந்தே லெபனான் இந்த ஒப்பந்தத்தைக் கோரி வந்ததாக அவர் கூறினார்.

    "இந்த ஒப்பந்தம், மோதலால் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது," என்றும் அவர் கூறினார்.

    போர் நிறுத்தத்தை எட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சர்வதேச முயற்சிகளையும் பிரதமர் சலாம் பாராட்டினார்.

  19. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் இன்றைய (ஏப்ரல் 17) நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம்.

    இன்று பிற்பகல் வரையிலும் அண்மைச் செய்திகளை தொகுத்து அளிப்பவர் நந்தினி வெள்ளைச்சாமி.

  20. தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது?