சேப்பாக்கத்தில் வெற்றிநடை போடும் சிஎஸ்கே - கொல்கத்தாவை வீழ்த்தியது எப்படி?

சேப்பாக்கத்தில் வெற்றிநடை போடும் சென்னை சூப்பர் கிங்ஸ். கொல்கத்தாவை வீழ்த்தியது

பட மூலாதாரம், ANI

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

2026 ஐபிஎல் சீசனின் 22வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

புள்ளிப் பட்டியலில் கடைசி 2 இடங்களில் இருந்த இந்த அணிகள் மோதிய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து 3 தோல்விகளோடு சீசனைத் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது அடுத்தடுத்து 2 வெற்றிகளைப் பதிவு செய்திருக்கிறது. இந்த 2 வெற்றிகளுமே சேப்பாக்கத்தில் வந்தவை.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இந்த சீசனில் நான்காவது தோல்வியை சந்தித்தது. அந்த அணி இன்னும் தங்களின் முதல் வெற்றியைத் தேடிக்கொண்டிருக்கிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

சூப்பர் கிங்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கேகேஆர் அணிக்காக வருண் சக்கரவர்த்தி மீண்டும் களமிறங்கினார்.

முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் எடுதத்து. அதிகபட்சமாக சாம்சன் 48 ரன்கள் எடுத்தார்.

அடுத்து விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டும் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் பௌலர்களில் அதிகபட்சமாக ஸ்பின்னர் நூர் அஹமது 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

நல்ல தொடக்கம்

கடந்த போட்டியில் சதமடித்த சாம்சன், இந்தப் போட்டியில் 48 ரன்கள் எடுத்தார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த போட்டியில் சதமடித்த சாம்சன், இந்தப் போட்டியில் 48 ரன்கள் எடுத்தார்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்த சீசனில் ஆரம்பம் முதலே பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இந்தப் போட்டியிலும் விரைந்து ஆட்டமிழந்தார்.

மூன்றாவது ஓவரிலேயே ஸ்பின்னர் அனுகூல் ராய் கையில் ரஹானே பந்தைக் கொடுக்க, கெய்க்வாட் விக்கெட்டை வீழ்த்தினார் அனுகூல். 6 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார் கெய்க்வாட்.

அடுத்து களமிறங்கிய மாத்ரே வந்த வேகத்திலேயே அதிரடியைக் கையில் எடுத்தார். கிரீன் வீசிய ஆட்டத்தின் நான்காவது ஓவரில் 2 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் விளாசினார் மாத்ரே. அவர் 17 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மாத்ரே ஒருபக்கம் அதிரடி காட்ட, சாம்சனுமே தன் கடந்த போட்டியின் ஃபார்மை இந்தப் போட்டியிலும் தொடர்ந்தார். அவர் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகள் அடித்துத்தான் இந்த இன்னிங்ஸையே தொடர்ந்தார்.

பவர்பிளேவின் கடைசிப் பந்தில் மாத்ரே அவுட்டாகும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்கோர் 72/2. ரன்ரேட் 12. இந்த சீசனில் இதுதான் சூப்பர் கிங்ஸின் சிறந்த பவர்பிளே ஸ்கோர்.

இப்படி நன்கு அதிரடியாக தொடங்கிய சூப்பர் கிங்ஸின் இன்னிங்ஸை பவர்பிளேவுக்குப் பின் மாறியது.

3 தொடர் தோல்விகளுக்குப் பிறகு டெல்லிக்கு எதிரான முந்தைய போட்டியில் சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, 3 தொடர் தோல்விகளுக்குப் பிறகு டெல்லிக்கு எதிரான முந்தைய போட்டியில் சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது

பவர்பிளேவுக்குப் பின் சிஎஸ்கே பேட்டிங்

பவர்பிளே முடிந்த கையோடு முன்னணி ஸ்பின்னர் சுனில் நரைன் கையில் பந்தைக் கொடுத்தார் அஜிங்க்யா ரஹானே. அப்போதிருந்து சிஎஸ்கே-வின் ரன்ரேட் மெல்ல சரியத் தொடங்கியது. அவரோடு சேர்ந்து வருண் சக்கரவர்த்தியின் சூப்பர் கிங்ஸ் பேட்டர்களுக்கு சவால் கொடுத்தனர்.

ஸ்பின்னர்கள் வீசியபோது பந்து சற்று நின்று பிரெவிஸ், சாம்சன் இருவராலும் எதிர்பார்த்த அளவுக்கு அதிரடியாக் ஆட முடியவில்லை. 7 முதல் 11 வரையிலான 5 ஓவர்களில் சூப்பர் கிங்ஸ் 33 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த ஓவர்கள் எதிலுமே சூப்பர் கிங்ஸால் 10 ரன்களோ அதற்கு மேலோ எடுக்க முடியவில்லை.

ஆறாவது ஓவருக்குப் பிறகு 12வது ஓவரில் தான் முதல் முறையாக 10 ரன்களுக்கு மேல் எடுத்தது சிஎஸ்கே. ஆனால், அந்த ஓவரில் சஞ்சு சாம்சனின் விக்கெட்டை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. 48 ரன்கள் எடுத்திருந்த சாம்சன் கார்த்திக் தியாகி வீசிய பந்தில் போல்ட் ஆனார்.

அதன்பிறகு எந்த வீரராலும் ரன்ரேட்டை பெரிய அளவு அதிகரிக்க முடியவில்லை. பிரெவிஸ், சர்ஃபராஸ் போன்றவர்கள் ஓரளவு நல்ல இன்னிங்ஸ் ஆடியிருந்தாலும் அவர்களால் 150க்கும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் தான் ஆட முடிந்தது. பிரெவிஸ் 41 ரன்களிலும், சர்ஃபராஸ் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். கடைசி 14 ஓவர்களில் அவர்களால் 120 ரன்களே எடுக்க முடிந்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பௌலர்களில் அதிகபட்சமாக கார்த்திக் தியாகி 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

7 ரன்கள் எடுத்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், அனுகூல் ராய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, 7 ரன்கள் எடுத்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், அனுகூல் ராய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்

ஆரம்பம் முதலே சிஎஸ்கே ஆதிக்கம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் வரும்போது ஒரு மாற்றம் செய்திருந்தது. சுனில் நரைன் ஓப்பனராகக் களமிறக்கப்பட்டார். அதற்கு ஈடுகட்டும் விதமாக ஸ்பின்னர் அகீல் ஹொசைனை ஆரம்பத்தில் பயன்படுத்தாமல் வேகப்பந்துவீச்சாளர்கள் கலீல் அஹமது, அன்ஷுல் கம்போஜ் ஆகியோரை மட்டும் பயன்படுத்தினார் ருதுராஜ் கெய்க்வாட். அது சூப்பர் கிங்ஸுக்கு நல்ல பலன் கொடுத்தது.

பவர்பிளேவில் கேகேஆர் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. விக்கெட்டுகளை இழந்ததோடு ரன்ரேட்டும் குறைவாகவே இருந்தது. இரண்டாவது ஓவரிலேயே அதிரடி வீரர் ஃபின் ஆலன் விக்கெட்டைக் கைப்பற்றினார் அன்ஷுல் கம்போஜ். ஐந்தாவது ஓவரில் நரைனை வெளியேற்றினார் கலீல் அஹமது. இப்படி சிஎஸ்கே பௌலர்கள் சிறப்பாகப் பந்துவீச பவர்பிளேவில் 2 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் மட்டுமே எடுத்தது நைட் ரைடர்ஸ்.

பவர்பிளேவுக்குப் பின்பாகவும் கொல்கத்தாவால் நன்கு ரன் சேர்க்க முடியவில்லை. சென்னை ஸ்பின்னர்கள் நன்கு பந்துவீசி அவர்களுக்கு சவால் கொடுத்தார்கள். 27 ரன்கள் எடுத்திருந்த ரகுவன்ஷியை 10வது ஓவரில் அவுட்டாக்கினார் அகீல் ஹொசைன். அடுத்த ஓவர், ரஹானே, கிரீன் என அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் நூர் அஹமது. அதனால் 11 ஓவர்கள் முடிவில் 85/5 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது கேகேஆர்.

அதிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய ரிங்கு சிங் மறுபடியும் தாக்கம் ஏற்படுத்தத் தவறினார். 12 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து நூர் அஹமது பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார்.

கடைசி கட்டத்தில் ராவ்மன் பவெல் 31 ரன்களும் (ஆட்டமிழக்காமல்), ரமன்தீப் சிங் 35 ரன்களும் எடுத்ததால் கேகேஆர் அணி 20 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்தது. அதனால் 32 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.

தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்த சிஎஸ்கே புள்ளிப் பட்டியலில் எட்டாவது இடத்துக்கு முன்னேறியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு