லக்னௌவுடன் இன்று மோதல்: சிஎஸ்கே பேட்டிங்கில் முதல் 4 ஓவர்கள் ஏன் முக்கியம்?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், பாபா அபராஜித்
- பதவி, சிஎஸ்கே முன்னாள் வீரர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இந்த ஐபிஎல் சீசன் முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. பிளே ஆஃப் யுத்தம் சூடுபிடித்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு போட்டியின் முடிவுமே பெரும் தாக்கம் ஏற்படுத்தும். இந்நிலையில், சேப்பாக்கத்தில் இன்று (மே 10) மாலை 3.30 மணிக்குத் தொடங்கும் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு ஒவ்வொரு போட்டியிலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 16 என்ற அந்த மேஜிக் நம்பரை எட்டுவதற்கான நல்ல வாய்ப்பு அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. தொடர்ச்சியான வெற்றிகள் அவர்களை நல்ல நிலையில் வைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்தப் போட்டி சேப்பாக்கத்தில் நடப்பதும் அவர்களுக்கு சாதகமான ஒரு விஷயம்.
நேற்று (மே 9) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றிருப்பதால், இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் சூப்பர் கிங்ஸ் அணியால் ஐந்தாவது இடத்துக்கு முன்னேற முடியும்.
மறுபக்கம் லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் முக்கியமான கட்டத்தில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கிறது. இந்த சீசனின் சிறந்த அணிகளுள் ஒன்றாக விளங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியிருக்கிறார்கள். அவர்களின் பேட்டிங் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறது. இருந்தாலும் சேப்பாக்கத்தில் ஒரு பகல் ஆட்டத்தில் ஆடும்போது அவர்கள் புது விதமான சவால்களை சந்திக்கவேண்டியிருக்கும்.
முதல் 4 ஓவர்கள் தாக்குப்பிடிப்பது முக்கியம்

பட மூலாதாரம், ANI
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிகளில் சஞ்சு சாம்சனின் பங்களிப்பு அசாத்தியமானது. இதுவரை சிஎஸ்கே வெற்றி பெற்றிருக்கும் 5 போட்டிகளில் நான்கில் அவர்தான் அணியின் டாப் ஸ்கோரர். தன் புதிய அணியில் மிகப் பெரிய தாக்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் சாம்சன். இதுவரை இந்த சீசனில் ஆடிய 10 போட்டிகளில் 402 ரன்கள் எடுத்திருக்கிறார். இது மிகவும் நல்ல விஷயம் தான். ஆனால், ஒவ்வொரு போட்டியிலும் சாம்சனால் அடிக்க முடியாது.
இந்த 10 போட்டிகளில் 6 முறை சாம்சன் 11 ரன்களுக்கும் குறைவாகவே எடுத்திருக்கிறார். அந்தப் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே சிஎஸ்கே வெற்றி பெற்றிருக்கிறது. அதனால் மற்ற பேட்டர்களும் எழுச்சி பெறவேண்டும். ருதுராஜ் கெய்க்வாட், டெவால் பிரெவிஸ், ஷிவம் துபே போன்ற வீரர்கள் பெரிய இன்னிங்ஸ் ஆடுவது முக்கியம். அதை இந்தப் போட்டியில் அவர்கள் வெளிப்படுத்தவேண்டும். அது அணிக்கு கடைசி கட்டத்தில் பெரும் நம்பிக்கை கொடுக்கும்.
முன்னணி பேட்டர்கள் இன்னும் சீரான செயல்பாட்டைக் கொடுத்திடாத இந்த நேரத்தில் இளம் கார்த்திக் ஷர்மாவின் பேட்டிங் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது. கடைசி 2 போட்டிகளிலும் சேர்த்து 95 ரன்கள் எடுத்திருக்கும் அவர் அந்த 2 போட்டிகளிலுமே ஆட்டமிழக்கவில்லை. நல்ல முதிர்ச்சியைக் காட்டியிருக்கிறார். சூழ்நிலைக்கு ஏற்ப ஆடியிருக்கிறார். டெல்லிக்கு எதிரான கடந்த போட்டியில் இடையே சற்று மெதுவாக ஆடினார். ஆனால், அது அவர்கள் சேஸ் செய்த இலக்கு, சாம்சனின் அதிரடி ஆட்டம் ஆகியவற்றின் காரணமாக நடந்த ஒன்றுதான். அவர் கணக்கிட்டுத்தான் அப்படி ஆடியிருக்கிறார். சஞ்சுவின் ஃபார்ம் போல் கார்த்திக்கின் ஃபார்ம் கூட அணிக்கு நம்பிக்கை தரக்கூடிய விஷயம்.
சிஎஸ்கே-வின் பேட்டர்களுக்கு லக்னௌ வேகப்பந்துவீச்சாளர்கள் இந்தப் போட்டியில் சவால் கொடுப்பார்கள். இந்த சீசன் முழுவதுமே எல்.எஸ்.ஜி வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பிரின்ஸ் யாதவ் ஒவ்வொரு போட்டியிலும் பெரும் தாக்கம் ஏற்படுத்துகிறார். நன்கு வேகமாகப் பந்துவீசும் அவர், ஸ்விங்கும் செய்கிறார். சீராக விக்கெட்டுகள் எடுத்துக் கொடுக்கிறார். அதேபோல், மொஹம்மது ஷமியும் பவர்பிளேவில் நன்றாக செயல்படுகிறார். மோசின் கான் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். அவர்கள் நிறைய டாட் பால்கள் வீசி நெருக்கடி ஏற்படுத்துகிறார்கள்.

பட மூலாதாரம், ANI
இந்த வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக முதல் 4 ஓவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டர்கள் மிகவும் கவனமாக விளையாடவேண்டும். அந்தக் கட்டத்தில் விக்கெட் இழக்காமல் ஆடினால் அவர்களால் நல்ல ஸ்கோர் எடுக்க முடியும். கடந்த முறை சேப்பாக்கத்தில் நடந்த பகல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சுக்கு எதிராக பவர்பிளேவில் சிஎஸ்கே பேட்டர்கள் தடுமாறினார்கள். மொஹம்மது சிராஜ் மற்றும் ககிஸோ ரபாடா ஆகியோரின் பந்துவீச்சைத் தாக்குபிடிக்க முடியாமல் அவுட் ஆனார்கள். பொதுவாகவே பகல் ஆட்டங்களில் சற்று கூடுதல் பவுன்ஸ் இருக்கும். அதை அன்று அவர்களால் சமாளிக்க முடியவில்லை.
லக்னௌவுக்கு எதிரான இந்தப் போட்டியில் அந்த ஆரம்ப ஓவர்களை அவர் சமாளித்து ஆடினால், அதன்பின் நன்கு ரன் சேர்க்க முடியும். அந்த குஜராத் போட்டியிலுமே பிற்பகுதியில் நன்றாக ரன் சேர்த்து சிஎஸ்கே 150 வரை எடுத்தது. பவர்பிளேவின் முதல் 4 ஓவர்களில் விக்கெட் விழாமல் இருந்தால் நிச்சயம் நல்ல ஸ்கோரை எடுக்க முடியும். குறிப்பாக பிரின்ஸ் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு இடையிலான யுத்தம் இந்தப் போட்டியின் போக்கை தீர்மானிக்கக்கூடும்.
குர்ஜப்னீத் சிங் தாக்கம் ஏற்படுத்தலாம்
மறுபக்கம் லக்னௌ அணியின் பேட்டிங் சமீபமாக முன்னேற்றம் கண்டு வருகிறது. மிட்செல் மார்ஷ் ஆர்சிபி அணிக்கெதிராக சதமடித்து மிரட்டியிருக்கிறார். தொடர்ந்து தடுமாறிக்கொண்டிருந்த நிகோலஸ் பூரன் கடந்த 2 போட்டிகளிலும் மூன்றாவது வீரராக இறங்கி தன்னால் என்ன தாக்கம் ஏற்படுத்த முடியும் என்று காட்டியிருக்கிறார். அதிலும் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 21 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார். ரிஷப் பன்ட் கூட ஆர்சிபி அணிக்கெதிராக டெத் ஓவர்களில் அசத்தலாக விளையாடினார். சீசனின் கடைசி கட்டத்தில் அவர்களின் மூன்று முக்கிய பேட்டர்கள் சிறப்பான செயல்பாட்டைக் கொடுத்திருப்பது அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கலாம்.

பட மூலாதாரம், ANI
அதேசமயம், சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சும் சிறப்பாக இருக்கிறது. ஒவ்வொரு போட்டியிலுமே முன்னேற்றத்தைக் காண முடிகிறது. கடந்த சில போட்டிகளில் எதிரணிகளை நன்கு கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அன்ஷுல் கம்போஜ் டாப் விக்கெட் டேக்கர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். முகேஷ் சவுத்ரி, ஜேமி ஓவர்டன், நூர் அஹமது என அனைவருமே சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். இந்த சீசனின் சிக்கனமான பௌலிங் யூனிட்டில் ஒன்றாக விளங்குகிறது சிஎஸ்கே. அதனால் எல்எஸ்ஜி பேட்டர்களுக்கும் சூப்பர் கிங்ஸ் பௌலர்களுக்கும் இடையே நல்லதொரு போட்டியைக் காணலாம்.
சிஎஸ்கே பௌலர்கள் அனைவருமே சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், இந்தப் போட்டியில் குர்ஜப்னீத் சிங்கின் செயல்பாடு முக்கியத்துவம் பெறும் என்று நான் கருதுகிறேன். அவர் பெரும்பாலும் மிடில் ஓவர்களில் பயன்படுத்தப்படுகிறார். அது, பூரன், பன்ட் போன்றவர்கள் விளையாடும் காலகட்டம். இடது கை பேட்டர்கள் வரும்போது எப்படியும் ஒரு வேகப்பந்துவீச்சாளரை அந்த இடத்தில் ருதுராஜ் பயன்படுத்துவார். ஒரு முணையில் இருந்து நூர் அஹமதும், மற்றொரு முணையிலிருந்து குர்ஜப்னீத், ஓவர்டன் இருவரில் ஒருவரும் பந்துவீசக்கூடும் என்று நான் நினைக்கிறேன்.
குர்ஜப்னீத் அந்தக் கட்டத்தில் பந்துவீசும்போது, அவருடைய 'ஸ்லோயர் பால்கள்' இந்தப் போட்டியில் நல்ல தாக்கம் ஏற்படுத்தலாம். அவர் ஸ்லோயர் பால்களை சிறப்பாக வீசுவார். ஏற்கெனவே இந்த சீசனில் நிகோலஸ் பூரன் ஸ்டம்ப் லைனில் வரும் ஸ்லோயர் பால்களுக்கு தன் விக்கெட்டை இழப்பதைப் பார்த்திருக்கிறோம். அவரது அந்த பிரச்னையை குர்ஜப்னீத் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அது போட்டியிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ரு நான் கருதுகிறேன்.
அகீல் ஹொசைன் களமிறக்க வேண்டும்

பட மூலாதாரம், ANI
சிஎஸ்கே அணியில் ஒவ்வொரு விஷயங்களாக சரியாகிக்கொண்டு வருகின்றன. அவர்கள் தங்களுடைய சரியான காம்பினேஷனைக் கண்டறிந்துவிட்டார்கள். ஆனால், ஒரு இடம் மட்டும் ஒவ்வொரு போட்டியிலும் மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறது - அகீல் ஹொசைனின் இடம்.
அகீல் சிறப்பாகப் பந்துவிசிவருகிறார். ஆனால் அவர் இன்னும் அணியின் நிரந்தர வீரராக இல்லை. ஒருசில போட்டிகளில் பிளேயிங் லெவனில் இருக்கிறார். ஒருசில போட்டிகளில் இருப்பதில்லை. மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக வான்கடேவில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியவருக்கு, அதே அணிக்கெதிராக சேப்பாக்கத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோல் சன்ரைசர்ஸ் போட்டியிலும் அவர் ஆடவில்லை.
எனக்கு என்னவோ இடது கை பேட்டர்கள் டாப் ஆர்டரில் இருக்கும்போது அகீல் ஹொசைனைப் பயன்படுத்துவது பற்றி யோசிக்கிறார்களோ என்று தோன்றுகிறது. லக்னௌ அணியில் வேறு பூரன் மற்றும் பன்ட் ஆகியோர் மூன்றாவது மற்றும் நான்காவது வீரர்களாகக் களமிறங்குகிறார்கள். அது எந்த வகையிலும் அகீல் ஹொசைன் விளையாடுவதைப் பாதிக்கக்கூடாது.
அகீல் இடது கை பேட்டர்களுக்கு எதிராகவும் நன்கு செயல்படமுடியும். இந்த சீசனில் திலக் வர்மா, சாய் சுதர்ஷன் ஆகியோரின் விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியிருக்கிறார். அவரால் நன்கு பந்தை உள்ளே கொண்டுவர முடியும். வேகத்தை மாற்றி பேட்டர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்த முடியும். அதுமட்டுமல்லாமல் சேப்பாக்கத்தில் பவுண்டரி எல்லைகள் பெரிது. மற்ற மைதானங்களை ஒப்பிடும்போது இங்கு மிட்விக்கெட் போன்ற பவுண்டரிகளின் தூரம் அதிகமாக இருக்கும். அதானால், தாராளமாக அகீல் ஹொசைனின் 4 ஓவர்களையுமே பயன்படுத்தலாம்.
(கட்டுரையாளர் பாபா அபராஜித் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர். 2012ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். தற்போது கேரளா அணிக்காக விளையாடிவரும் அவர் வர்ணனையாளராகவும் செயல்படுகிறார்)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு





























