உங்கள் கார் உங்களை உளவு பார்ப்பது தெரியுமா? காப்பீடு கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு

உங்களின் கார் உங்களை உளவு பார்க்குமா?

பட மூலாதாரம், Serenity Strull/ Getty Images

    • எழுதியவர், தாமஸ் ஜெர்மைன்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

உங்கள் எடை மற்றும் முகபாவனைகள் முதல் நீங்கள் செல்ல வேண்டிய இடம் வரை, கார்கள் உங்களைப் பற்றிய திகைப்பூட்டும் அளவிலான தரவுகளைச் சேகரிக்கின்றன. அவற்றில் சில உங்கள் காப்பீட்டுச் செலவுகளைக் கூட அதிகரிக்கக்கூடும். ஆனால், உங்களைப் பற்றி அவை அறிந்துகொள்வதைக் கட்டுப்படுத்த நீங்கள் சில எளிய நடவடிக்கைகளை எடுக்கலாம்.

ஒரு காலத்தில் கார்கள் சுதந்திரத்தின் அடையாளமாக இருந்தன. நான் முதன்முதலில் பழைய குடும்ப வாகனமான டொயோட்டாவின் சாவிகளைப் பெற்றபோது, ​​அது ஒரு சடங்காக இருந்தது; என் பெற்றோரின் கண்காணிக்கும் கண்களிலிருந்து விலகி, நேரமும் முடிவுகளும் எனக்கே சொந்தமான ஒரு உலகத்திற்குள் நுழையும் அளவுக்கு நான் வளர்ந்துவிட்டேன் என்பதற்கான ஓர் அறிகுறியாக இருந்தது. காலம் மாறுகிறது.

நவீன கார்கள் சக்கரங்கள் பொருத்தப்பட்ட கணினிகளாக உள்ளன, மேலும் மாபெரும் நிறுவனங்கள் உங்கள் வாழ்க்கையைப் பற்றிய அந்தரங்க விவரங்களை உறிஞ்சி, அதிகப் பணம் சம்பாதிப்பதற்காக அவற்றைப் பயன்படுத்துகின்றன. இன்றைய காலகட்டத்தில் வாகனம் ஓட்டுவது தனிமைக்கும் சுதந்திரத்திற்கும் ஒரு வாய்ப்பு என்று நீங்கள் நினைத்தால், மீண்டும் ஒருமுறை யோசியுங்கள். நிலைமை இன்னும் மோசமாகப் போகிறது போலத் தெரிகிறது.

கார் நிறுவனங்களின் தனியுரிமைக் கொள்கைகளை நீங்கள் முழுமையாகப் படித்தால், அவர்களே உங்களிடம் சொல்வார்கள். அவர்கள் சேகரிக்கும் தகவல்களில், நீங்கள் செல்லும் எல்லா இடங்களைப் பற்றிய துல்லியமான இருப்பிடத் தரவுகள், உங்களுடன் காரில் யார் இருக்கிறார்கள், ரேடியோவில் என்ன ஒலிக்கிறது, நீங்கள் சீட் பெல்ட் அணிகிறீர்களா, அதிவேகமாக ஓட்டுகிறீர்களா அல்லது கடுமையாக பிரேக் பிடிக்கிறீர்களா என்பன அடங்கும்.

உங்கள் எடை, வயது, இனம் மற்றும் முகபாவனைகள் போன்ற நீங்கள் எதிர்பார்க்காத விவரங்களையும் சிலரால் சேகரிக்க முடியும். நீங்கள் மூக்கைக் குடைவீர்களா? சில கார்களின் உட்புறத்தில், ஓட்டுநர் இருக்கையை நோக்கியவாறு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான கார்களில் இணைய இணைப்புகள் உள்ளன; நீங்கள் எதையும் அறியாமல் வாகனம் ஓட்டும்போது, ​​அந்தத் தரவுகளை அவை அனுப்பிவிடும்.

காப்பீடு பீரீமியத்தில் தாக்கம் ஏற்படலாம்

இது உங்களுக்குப் பண இழப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு தனியுரிமைப் பிரச்னை. கார் தரவுகளின் மிகப்பெரிய வாடிக்கையாளர்களில் காப்பீட்டு நிறுவனங்களும் அடங்கும். அவர்கள் சிலரிடம் அதிக கட்டணம் வசூலிக்க இதைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், உங்கள் தகவல்கள் எங்கு செல்கின்றன என்று சொல்ல முடியாது. சில கார் நிறுவனங்கள் உங்கள் தரவுகளை விற்பதாக ஒப்புக்கொள்கின்றன, ஆனால் அதை யார் வாங்குகிறார்கள் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. இது உங்களுக்குச் சற்று அச்சமூட்டுவதாக இருக்கலாம் என்ற உண்மையைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. பெரும்பாலான நுகர்வோருக்கு, இது நடக்கிறது என்பதே தெரியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

"ஒருவரின் கார் சேகரித்து, உற்பத்தியாளர் அல்லது மூன்றாம் தரப்பு செயலிகளுக்கு அனுப்பும் தரவுகளின் எண்ணிக்கையைக் கண்டு மக்கள் அதிர்ச்சியடைவார்கள்," என்கிறார் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள புரூக்கிங்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்பப் புத்தாக்க மையத்தின் மூத்த ஆய்வாளர் டேரல் வெஸ்ட்.

இன்னும் சங்கடமாக உணர்கிறீர்களா? அமெரிக்காவின் ஒரு ஃபெடரல் சட்டம், உங்கள் கார் உங்களைப் பற்றிச் சேகரிக்கக் கூடிய தரவுகளின் அளவை அதிகரிக்க உள்ளது. நீங்கள் வாகனம் ஓட்ட முடியாத அளவுக்கு அதிகமாகக் குடித்திருக்கிறீர்களா அல்லது சோர்வாக இருக்கிறீர்களா என்பதைக் கண்டறிய, உங்கள் உடல் மொழியை ஸ்கேன் செய்யவும், உங்கள் கண்களை அல்லது உங்கள் நடத்தையின் பிற அம்சங்களைக் கண்காணிக்கவும், அகச்சிவப்பு பயோமெட்ரிக் கேமராக்கள் மற்றும் பிற அமைப்புகளை நிறுவ வேண்டும் என அமெரிக்க கார் நிறுவனங்களை அது விரைவில் கட்டாயப்படுத்தும். ஆனால் அது உங்கள் உடல்நலம் மற்றும் பழக்கவழக்கங்கள் பற்றிய ஒரு புதிய தரவுப் புதையலையும் திறக்கும். அந்தத் தகவல்களைக் கொண்டு கார் நிறுவனங்கள் என்ன செய்யலாம் என்பதற்கு எந்த விதிகளும் இல்லை.

நிச்சயமாக, நன்மைகளும் உள்ளன. இணையத்துடன் இணைக்கப்பட்ட கார்கள் மிகவும் வசதியானதாக இருக்கும். அவற்றில் உள்ள சென்சார்கள், வாகனம் ஓட்டுவதை மிகவும் பாதுகாப்பானதாகவும் வசதியானதாகவும் மாற்றும். நீங்கள் ஒரு சிறந்த ஓட்டுநர் என்பதால், காப்பீட்டு நிறுவனங்கள் உங்களிடம் குறைவாகக் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யலாம்.

ஆனால், வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் தரவு சாம்ராஜ்யங்களை விரிவுபடுத்தத் தயாராகி வருவதால், வாகனத்தின் உள்ளே என்ன நடக்கிறது என்பதையும், அது உங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் புரிந்துகொள்வதற்கு இது ஒரு முக்கியமான தருணமாகும்.

தரவுகளின் அதிவேக நெடுஞ்சாலை

உங்களின் கார் உங்களை உளவு பார்க்குமா?

பட மூலாதாரம், Serenity Strull/ Getty Images

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

உங்கள் கார் ஓரளவு புதிதாக இருந்தால்கூட, அதுவும் இதில் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. மெக்கின்சி என்ற ஆலோசனை நிறுவனம், 2021-ல் சாலையில் ஓடிய 50% கார்களில் இணைய இணைப்புகள் இருந்ததாகக் கண்டறிந்ததுடன், 2030-க்குள் இந்த எண்ணிக்கை 95% ஆக உயரும் என்றும் கணித்துள்ளது. உங்கள் கார் இணையத்துடன் இணைக்கப்பட்டிருந்தால், தனியுரிமை என்பது நீங்கள் நிச்சயமாகக் கவலைப்பட வேண்டிய ஒரு விஷயமாகும்.

நீங்கள் உங்கள் தொலைபேசியை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் இணைக்கும் போதும், அல்லது வாகனம் ஓட்டுவதற்காக உருவாக்கப்பட்ட சில செயலிகளைப் பயன்படுத்தும் போதும் கார் நிறுவனங்கள் உங்களை உளவு பார்க்க முடியும். சில ஓட்டுநர்கள் காப்பீட்டு நிறுவனங்களின் டெலிமெட்ரிக்ஸ் அமைப்பையும் பயன்படுத்துகின்றனர்; இது சாத்தியமான தள்ளுபடிகளுக்கு ஈடாக உங்களைக் கண்காணிக்கிறது.

ஃபயர்பாக்ஸ் என்கிற இணைய உலவியைத் தயாரிக்கும் மொஸில்லா நிறுவனம், 2023-ல் நடத்திய ஒரு ஆய்வில், 25 கார் பிராண்டுகளின் தனியுரிமைக் கொள்கைகளை ஆய்வு செய்தது. பிராண்டுகளை ஒப்பிடுவதற்கு மொஸில்லா பயன்படுத்தும் தனியுரிமை மற்றும் பாதுகாப்புத் தரங்களை அவை ஒவ்வொன்றும் பூர்த்தி செய்யத் தவறின. "தனியுரிமையைப் பொறுத்தவரை நாங்கள் இதுவரை ஆய்வு செய்ததிலேயே கார்கள் மிக மோசமான தயாரிப்பு வகையாகும்" என்று மொஸில்லா கூறியது.

அந்த அறிக்கையின்படி, உங்கள் பெயர், வயது, இனம், எடை, நிதி விவரங்கள், முகபாவனைகள், உளவியல் போக்குகள் மற்றும் பல விவரங்களைச் சேகரிக்கும் உரிமையை கார் நிறுவனங்கள் கொண்டுள்ளன. உதாரணமாக, கியாவின் தனியுரிமைக் கொள்கை, உங்கள் "பாலியல் வாழ்க்கை" மற்றும் பொதுவான உடல்நலம் பற்றிய விவரங்களைக் கூட நிறுவனம் சேகரிக்கக்கூடும் என்று குறிப்பிடுகிறது.

கியாவின் செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் பெல், ஓட்டுநர்களின் பாலியல் வாழ்க்கை அல்லது உடல்நலம் குறித்த தரவுகளை நிறுவனம் ஒருபோதும் சேகரித்ததில்லை என்று கூறுகிறார். கலிபோர்னியாவின் "உணர்திறன் தரவு" என்பதற்கான வரையறையை நிறுவனம் பட்டியலிடுவதால் மட்டுமே இந்த விவரங்கள் கியாவின் தனியுரிமைக் கொள்கையில் இடம்பெறுகின்றன என்று அவர் கூறுகிறார்.

கியாவின் தனியுரிமை நடைமுறைகள் வெளிப்படையானவை என்றும், ஓட்டுநர்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே காப்பீட்டு நிறுவனங்களுடன் நிறுவனம் தரவைப் பகிர்ந்து கொள்கிறது என்றும் பெல் கூறுகிறார். இருப்பினும், அது எந்த வகையான "உணர்திறன் தரவை" சேகரிக்கிறது என்பதை நிறுவனம் விளக்கவில்லை.

அவற்றில் சிலவற்றை கற்பனை செய்து பார்ப்பது கடினமாக இருக்கலாம், ஆனால் கார்கள் சென்சார்களால் நிரம்பியுள்ளன: இருக்கைகள், டாஷ்போர்டு, என்ஜின், ஸ்டீயரிங் வீல் என நீங்கள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். உதாரணமாக, பல கார்களில் உள்ளேயும் வெளியேயும் கேமராக்கள் உள்ளன. நீங்கள் ஒரு நவீன காரில் ஏதேனும் செய்கிறீர்கள் என்றால், அதைப் பற்றி நிறுவனங்கள் தெரிந்துகொள்ள ஒரு வழி இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கார்களின் தரவுகளை வாங்குவது யார்?

19 கார் நிறுவனங்கள் உங்கள் தரவை விற்கக்கூடும் என்று கூறியுள்ளதை மொஸில்லா கண்டறிந்துள்ளது. அதுதான் உண்மையில் நடந்துகொண்டிருக்கிறது. உதாரணமாக, ஜெனரல் மோட்டார்ஸ் (GM) நிறுவனம் தனது அனுமதியின்றி காரின் இருப்பிடத் தரவுகளை விற்றதாகக் கூறி அமெரிக்காவில் உள்ள மாகாண மற்றும் ஃபெடரல் அரசு நிறுவனங்கள் அதன் மீது நடவடிக்கை எடுத்தன. அமெரிக்க செனட்டர்கள் ஹோண்டா மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் மீதும் இதேபோன்ற நடைமுறைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர் – இவையெல்லாம் பொதுமக்களுக்குத் தெரிந்த சில உதாரணங்கள் மட்டுமே.

"அவர்கள் உங்களைப் பற்றி சேகரிக்கும் ஏராளமான தகவல்களை எடுத்து, நீங்கள் யார், நீங்கள் எவ்வளவு புத்திசாலி, உங்கள் உளவியல் சுயவிவரம் என்ன, உங்கள் அரசியல் நம்பிக்கைகள் என்ன என்பனவற்றைப் பற்றி ஊகித்துக்கொள்ள அதைப் பயன்படுத்துகிறார்கள்," என்கிறார் மொஸில்லாவின் கார் ஆராய்ச்சியை வழிநடத்திய தனியுரிமை ஆய்வாளர் ஜென் கால்ட்ரைடர். "இவை மக்கள் அவசியமாக சிந்திக்காத விஷயங்கள்."

இந்தத் தரவை யார் வாங்கலாம் அல்லது அது எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து அடிப்படையில் எந்த விதிகளும் இல்லை என்கிறார் கால்ட்ரைடர். இது உங்களுக்குப் பொருட்களைச் சந்தைப்படுத்தப் பயன்படுத்தப்படலாம். நிறுவனங்கள் ஆள்சேர்ப்பு முடிவுகளில் இதைப் பயன்படுத்தலாம். சட்ட அமலாக்கத் துறையினரால் சோதனை வாரண்ட் பெற முடியாதபோது கார் தரவுகளை வாங்கலாம். அது உங்கள் டாஷ்போர்டை விட்டு வெளியேறியவுடன், அது எங்கு சென்று சேரும் என்பதில் உங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.

நிலைமை இன்னும் மோசமாகலாம்

உங்கள் ஸ்மார்ட் போனை காருடன் இணைக்கும் போது தரவுகள் பகிரப்படலாம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உங்கள் ஸ்மார்ட் போனை காருடன் இணைக்கும் போது தரவுகள் பகிரப்படலாம்

இது நிறுவனங்கள் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை உளவு பார்ப்பதை விடப் பெரிய விஷயம். உதாரணமாக, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், நுகர்வோரைப் பற்றிய விவரங்களை வாங்கி விற்கும் ஒரு தரவுத் தரகரான லெக்சிஸ்நெக்சிஸ் என்ற நிறுவனத்திற்கு ஓட்டுநர் தகவல்களை விற்றது. அந்தத் தரவின் நகலைப் பெற்ற ஓர் ஓட்டுநர், லெக்சிஸ்நெக்சிஸ் நிறுவனத்திடம் ஆறு மாதங்களில் அவரும் அவரது மனைவியும் மேற்கொண்ட ஒவ்வொரு பயணத்தையும் விவரிக்கும் 130 பக்கத் தகவல்கள் இருந்ததைக் கண்டறிந்ததாகக் கூறப்படுகிறது. தனது காப்பீட்டுச் செலவுகள் 21% அதிகரித்த பிறகு, அந்தத் தரவு ஒரு காரணியாக இருந்ததாக ஒரு காப்பீட்டு முகவர் தன்னிடம் கூறியதாக அவர் நியூயார்க் டைம்ஸிடம் தெரிவித்தார். இதற்கு கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு லெக்சிஸ்நெக்சிஸ் பதிலளிக்கவில்லை.

அமெரிக்க ஃபெடரல் டிரேட் கமிஷன் நடவடிக்கை எடுத்தது,. ஜிஎம் நிறுவனம் ஐந்து ஆண்டுகளுக்கு வாகனத் தரவுகளை விற்பனை செய்வதிலிருந்து இப்போது தடை செய்யப்பட்டுள்ளது – ஆனால் ஓட்டுநர்களிடமிருந்து வெளிப்படையான ஒப்புதலைப் பெற்று, பிற நிபந்தனைகளைப் பின்பற்றும் வரை, அதன் பிறகு அந்த நடைமுறையை மீண்டும் தொடர அதற்குச் சுதந்திரம் உள்ளது. இதற்கிடையில், லெக்சிஸ்நெக்சிஸ் மற்றும் பிற நிறுவனங்கள், மற்ற கார் உற்பத்தியாளர்கள் மற்றும் மக்கள் வாகனம் ஓட்டும்போது பயன்படுத்தும் செயலிகளிடமிருந்து பெறும் வாகனத் தரவுகளை இன்னும் விற்பனை செய்து வருகின்றன. கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு ஜிஎம் மற்றும் லெக்சிஸ்நெக்சிஸ் பதிலளிக்கவில்லை.

காப்பீட்டு நிறுவனங்கள், கார் தயாரிப்பாளர்கள் மற்றும் தரவுத் தரகர்களுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் பரவலாக உள்ளன. நீங்கள் ஒப்புக்கொள்ளும் தனியுரிமைக் கொள்கைகளில் இந்த நடைமுறைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் வரை, இவை அனைத்தும் முற்றிலும் சட்டப்பூர்வமானவையே.

"காப்பீட்டு நிறுவனங்கள் பெருமளவிலான நுகர்வோர் தரவுகளை, குறிப்பாக அவர்களின் ஓட்டுநர் தரவுகளைச் சேகரித்து, அதைப் பயன்படுத்தி மக்களிடம் அதிக பிரீமியங்களை வசூலிக்கவும், காப்பீட்டை மறுக்கவும் அல்லது நுகர்வோரைப் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கவும் முயற்சிக்கின்றன," என்கிறார் மைக்கேல் டி லாங். இவர் அமெரிக்காவைச் சேர்ந்த இலாப நோக்கற்ற அமைப்பான 'கன்ஸ்யூமர் ஃபெடரேஷன் ஆஃப் அமெரிக்கா'வுக்காக வாகனக் காப்பீட்டைக் கையாளும் ஒரு ஆராய்ச்சி மற்றும் ஆதரவு வழக்கறிஞர் ஆவார்.

உங்களைக் கண்காணிப்பதற்கு முன்பு உங்கள் அனுமதியைப் பெறுவதாக கார் நிறுவனங்கள் கூறுகின்றன. நடைமுறையில், உங்கள் காரில் இணைக்கப்பட்டுள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் அல்லது செயலிகளை நீங்கள் அமைக்கும்போது, ​​படிவங்கள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகளுக்கு ஒப்புக்கொள்வதுதான் இதன் பொருள். சில வாகனங்களில், நீங்கள் என்ஜினை இயக்கும் ஒவ்வொரு முறையும் அவை திரையில் தோன்றும். நீங்கள் அவற்றைப் படித்தீர்களா? நிச்சயமாக இல்லை.

சட்டத்தின் மூலம் கட்டாயமாக்கப்படுமா?

அமெரிக்காவில், தேசிய அளவில் தனியுரிமைச் சட்டம் எதுவும் இல்லை. தனிப்பட்ட மாகாணங்களில் உள்ள பாதுகாப்புகள் துண்டுதுண்டாக உள்ளன. சில தனியுரிமை நிபுணர்களின் கூற்றுப்படி, அவை போதுமானதாக இல்லை. ஐரோப்பாவில், குறிப்பாக பிரிட்டனில், நிலைமை சற்று மேம்பட்டுள்ளது. அங்கு சில குறிப்பிட்ட வகை முக்கியமான தகவல்களுக்குச் சிறப்புப் பாதுகாப்புகள் உள்ளன. நுகர்வோர் தங்கள் தரவுகளை அணுகவும், அவற்றை நீக்குமாறு நிறுவனங்களிடம் கூறவும் சில உரிமைகளைப் பெற்றுள்ளனர். ஆனால், ஐரோப்பாவிலும் இது ஒரு தீர்க்கப்பட்ட பிரச்னை அல்ல.

"ஐரோப்பியர்கள் இன்னும் தனியுரிமைக் கொள்கைகளுக்குக் கட்டுப்பட்டிருக்கிறார்கள்," என்கிறார் கால்ட்ரைடர். "மேலும், விதிமுறைகள் பின்பற்றப்பட்டு அமல்படுத்தப்படும் என்று நீங்கள் நம்பியிருக்க வேண்டும். ஆனால், குறிப்பாக கார்களைப் பொறுத்தவரை, அது எப்போதும் நடப்பதில்லை." என்பது அவரது கூற்று.

இந்தப் பிரச்சனை புதிதல்ல, ஆனால் இது தீவிரமடைந்து வருவதாகக் கருதுவதற்குக் காரணங்கள் உள்ளன. அமெரிக்கச் சட்டத்தின்படி, அடுத்த சில ஆண்டுகளில் புதிய பயணிகள் வாகனங்களில் "மேம்பட்ட, போதையில் வாகனம் ஓட்டுவதைத் தடுக்கும் தொழில்நுட்பத்தை" கார் உற்பத்தியாளர்கள் நிறுவ வேண்டும். இந்தத் தொழில்நுட்பம், அகச்சிவப்புக் கேமராக்கள் அல்லது பிற அமைப்புகளைப் பயன்படுத்தி, மக்கள் குடித்திருந்தாலோ, சோர்வாக இருந்தாலோ அல்லது வாகனம் ஓட்டத் தகுதியற்றவர்களாக இருந்தாலோ அவர்களை வாகனம் ஓட்டுவதிலிருந்து தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த அமைப்புகள் உருவாக்கும் தரவுகளுக்கு என்ன நடக்கும் என்பது குறித்து சட்டத்தில் எந்தவொரு விதிகளும் இல்லை என்பதே சிக்கல் என்று கால்ட்ரைடர் மற்றும் பிறர் கூறுகின்றனர்.

இந்த விதியை அமல்படுத்தும் பொறுப்புள்ள அமெரிக்க தேசிய நெடுஞ்சாலைப் போக்குவரத்துப் பாதுகாப்பு நிர்வாகத்தின் (NHTSA) செய்தித் தொடர்பாளர், "எங்களிடம் உள்ள ஒவ்வொரு கருவியையும் பயன்படுத்தி, குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் மரணங்களைக் குறைக்க அமெரிக்க தேசிய நெடுஞ்சாலைப் போக்குவரத்துப் பாதுகாப்பு நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது" என்றும், தனியுரிமை குறித்த கவலைகள் போன்ற "முக்கியமான மற்றும் சிக்கலான தலைப்புகளைத் தொடர்ந்து கையாண்டு வருவதாகவும்" கூறுகிறார். தொழில்நுட்பம் இன்னும் தயாராக இல்லாததால், இந்தச் சட்டத்தை அமல்படுத்துவது தாமதமாக வாய்ப்புள்ளது, ஆனால் தனியுரிமை ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உளவு பார்க்கும் கார்கள்

பட மூலாதாரம், Getty Images

"குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை நாம் சாலைகளில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். இந்தத் தரவுகள் வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படாது என்பதற்கு ஒரு உத்தரவாதம் இருந்தால் அது சிறப்பாக இருக்கும், ஆனால் அப்படி நடக்கவில்லை," என்கிறார் கால்ட்ரைடர். "கார்களில் நாம் காணும் பல தரவு சேகரிப்பு முன்னேற்றங்கள், பாதுகாப்பு என்ற போர்வையில் செய்யப்படுகின்றன." இது எந்தவிதப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாத, மருத்துவத் தகவல்களுக்கு நிகரான ஒரு பெரும் புதையலை வாகனத் தொழில்துறைக்கு வழங்கக்கூடும்.

பல தனியுரிமைச் சிக்கல்களைப் போலவே, கார் தரவுச் சிக்கலையும் முழுமையாகத் தீர்க்க முடியாது, ஆனால் நீங்கள் எடுக்கக்கூடிய சில நடவடிக்கைகள் உள்ளன.

முதலாவதாக, "தனியுரிமை குறித்து உங்களுக்கு ஏதேனும் கவலைகள் இருந்தால், காப்பீட்டு டெலிமேட்டிக்ஸ் திட்டத்தில் சேராதீர்கள்" என்கிறார் டீலாங். தனியுரிமை அபாயங்கள் குறிப்பிடத்தக்கவை, கிடைக்கும் பலன் உறுதியானது அல்ல. மேரிலாந்து மாகாணத்தின் ஒரு பகுப்பாய்வில், 31% ஓட்டுநர்களின் காப்பீட்டுக் கட்டணங்கள் குறைந்தன, ஆனால் 24% ஓட்டுநர்களுக்கு கட்டணங்கள் உயர்ந்தன, 45% பேருக்கு எந்த மாற்றமும் இல்லை.

உளவு பார்க்கும் கார்கள்

பட மூலாதாரம், Getty Images

பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சில அமெரிக்க மாகாணங்களில், நிறுவனங்கள் உங்களைப் பற்றி சேகரிக்கும் தரவுகளின் நகலைக் கோரலாம். அந்தத் தரவை விற்பனை செய்வதிலிருந்தோ அல்லது பகிர்வதிலிருந்தோ விலகிக்கொள்ளலாம். நிறுவனங்கள் அதை நீக்க வேண்டும் என்றும் நீங்கள் கோரலாம். பெரிய கார் உற்பத்தியாளர்களின் தனியுரிமைக் கருவிகளுக்கான இணைப்புகளை இங்கே காணலாம்.

சில கார் உற்பத்தியாளர்கள், தரவைப் பகிர்வதையும் சேகரிப்பதையும் கட்டுப்படுத்தக்கூடிய தனியுரிமை அமைப்புகளை வழங்குகிறார்கள். உங்கள் காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் அதனுடன் செயல்படும் செயலியின் அமைப்புகளில் உள்ள ஆப்ஷன்களை தேடுங்கள்.

இதுபோன்ற நடவடிக்கைகள் உதவக்கூடும், ஆனால் நிறுவனங்கள் உங்கள் தனியுரிமையை மீறுவதைத் தடுப்பதற்காகப் பல வேலைகளைச் செய்வது உங்கள் பொறுப்பாக இருக்கக்கூடாது என்கிறார் கால்ட்ரைடர்.

"இந்த முழு அமைப்பும் மாறும் வரை, நமது தரவுகளுக்கு நாமே உரிமையாளராகி, அவற்றைக் கட்டுப்படுத்தும் வரை, மேலும் நிறுவனங்கள் அவற்றைப் பயன்படுத்த நம்மிடம் அனுமதி கேட்கும் நிலை வரும் வரை, இந்தப் பிரச்சினை மேலும் மேலும் மோசமாகிக்கொண்டே போகும் என்று நான் நினைக்கிறேன்." என கால்ட்ரைடர் நிறைவு செய்கிறார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு