ஹோர்மூஸ் நீரிணை 7 நாளில் மீண்டும் திறக்கப்படுமா? இரான் முன்மொழிவு பற்றி அமெரிக்கா கூறியது என்ன?

பட மூலாதாரம், Bloomberg via Getty Images
- எழுதியவர், யாரோஸ்லாவ் லுகிவ் மற்றும் கிறிஸ் கிரஹாம்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
இரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமெரிக்காவுடன் இரான் ஒரு ஒப்பந்தத்தை முன்மொழிந்துள்ளதாகவும், அதன்படி ஒரு வாரத்துக்குள் ஹோர்மூஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அராக்சி, "தேவையான நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால்" இதைச் செய்ய முடியும் என்றும், அந்த நிபந்தனைகள் ஜூன் மாதம் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
"இப்போது முடிவெடுக்கும் பொறுப்பு அமெரிக்காவிடம் உள்ளது" என்று கூறிய அவர், மேலும் இந்தத் திட்டம் கத்தார் வாயிலாக அமெரிக்காவிடம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்கா கூறியது என்ன?
இரானின் இந்த முன்மொழிவு குறித்து கேட்டபோது, அணுசக்தி விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக மத்தியஸ்தர்கள் மூலம் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த வார தொடக்கத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் "இஸ்லாமியக் குடியரசை அழித்தொழிப்போம்" என்று எச்சரித்திருந்தார்.
பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கின.
இதற்குப் பதிலடியாக, இரான் இஸ்ரேல் மீதும், வளைகுடாவில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் அமெரிக்காவின் அரபு வளைகுடா கூட்டாளிகள் மீதும் தாக்குதல் நடத்தியது. அத்துடன், ஹோர்மூஸ் நீரிணையையும் இரான் முடக்கியது.
போருக்கு முன்பு உலகளவில் பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் சுமார் 20% ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் சென்றுகொண்டிருந்தது. ஆனால், நீரிணை மூடப்பட்டதால் எரிசக்தி விலையில் கடுமையான ஏற்ற இறக்கங்களை ஏற்பட்டுள்ளன.
டிரம்ப் மீதான அழுத்தம்

பட மூலாதாரம், Getty Images
மேலும், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழியைக் கண்டறிய டிரம்ப் மீது அழுத்தம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, நவம்பரில் அமெரிக்கா நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில் இந்த அழுத்தம் அதிகரித்துள்ளது.
"தேவையான நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால், நீரிணையை மீண்டும் திறக்க முடியும். ஏழு நாட்களுக்குள் வழக்கமான கடல் போக்குவரத்தையும் மீட்டெடுக்க முடியும்," என்று அராக்சி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அமெரிக்கா என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இரான் விரும்புகிறது என்பதை அவர் குறிப்பிடவில்லை. ஆனால், "அமெரிக்கா எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் புதிதானவை அல்ல. அவை அனைத்தும் ஏற்கெனவே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ளன." என்று தெரிவித்தார்.
"ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பதில் அமெரிக்கத் தரப்பில் தீவிரத்தன்மை இருந்தால், அனைத்தும் தற்போது தயாராக உள்ளன என்பதை நான் உங்களிடம் கூற முடியும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஹோர்மூஸ் நீரிணையின் கட்டுப்பாடு தங்களிடம் இருப்பதால், அமெரிக்கா "மிகவும் வலுவான நிலையில் உள்ளது. எனவே, நாங்கள் அவசரப்படவில்லை" என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
14 அம்ச ஒப்பந்தம்
அமெரிக்கா மற்றும் இரான் இடையே ஜூன் 18-ஆம் தேதி கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU), போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதையும், ஹோர்மூஸ் நீரிணையை குறைந்தபட்சம் ஓரளவாவது மீண்டும் திறப்பதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.
14 அம்சங்களைக் கொண்ட அந்த ஒப்பந்தத்தில், இரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை உருவாக்காது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அமெரிக்கா, இரான் மற்றும் அவற்றின் கூட்டாளிகள் "அனைத்து முனைகளிலும்" ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், அமெரிக்க கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் பொருளாதாரத் தடைகளில் இருந்து நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட அம்சங்களும் அதில் இடம்பெற்றிருந்தன.
மேலும், நீரிணை வழியாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளை "தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு" இரான் செய்யும் என்றும், எதிர்கால கடல் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து ஓமனுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சிறிது காலத்திலேயே இரு தரப்பும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியதால் அந்த ஒப்பந்தம் முறிந்தது.
அனுமதியின்றி ஹோர்மூஸ் நீரிணையைக் கடக்க முயன்றதாகக் கூறப்படும் கப்பல்கள் மீது இரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
நீரிணைப் பகுதியில் உள்ள இரானிய நிலைகளின் மீதும், அந்நாட்டின் கடற்கரைக்கு அப்பால் இருந்த இரானிய எண்ணெய்க் கப்பல்கள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
இரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையையும் அமெரிக்கா தொடர்ந்து வருகிறது. இதனால் இரானிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஹோர்மூஸ் நீரிணை வழியாக எண்ணெயை வெளியே கொண்டு செல்வதில் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளதாக டிரம்ப் பின்னர் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Reuters
ராய்ட்டர்ஸ் செய்தி முகமை மேற்கோள் காட்டியுள்ள கேப்லர் என்ற சரக்கு தரவு மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தின் தகவல்படி, கப்பல் போக்குவரத்து தரவுகள் சமீபத்திய 10 நாட்களில் ஒரு நாளைக்கு சராசரியாக சுமார் 18 கப்பல்கள் நீரிணையை கடந்துள்ளதாகக் காட்டுகின்றன. சில நாட்களில் தினசரி எண்ணிக்கை 9 கப்பல்கள் வரை குறைந்துள்ளது.
இதற்கிடையில், இரானின் கூட்டாளிகளான ஏமன் நாட்டின் ஹூதி கிளர்ச்சியாளர்கள், அரேபிய தீபகற்பத்தின் மறுபுறத்தில் உள்ள செங்கடல் வழியாக சௌதி அரேபியா மேற்கொள்ளும் எண்ணெய் ஏற்றுமதியைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் சமீபத்தில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த மாதம் நடத்தப்பட்ட விரைவான தாக்குதலில், செங்கடல் கடற்கரையின் முக்கியமான, மூலோபாய பகுதிகளை அந்தக் குழு கைப்பற்றியுள்ளது.
இதில், உலகளாவிய கப்பல் போக்குவரத்துக்கான மற்றொரு முக்கியமான இடையூறு முனையான பாப் அல்-மண்டப் நீரிணையை ஒட்டியுள்ள மோக்கா துறைமுகமும் அடங்கும்.
சௌதி எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மீது ஹூதிகள் நடத்திய தாக்குதல்களால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. டிரம்பிடம் ராணுவ ஆதரவை சௌதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கோரியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சனிக்கிழமையன்று, சௌதி தலைமையிலான ஏமன் கூட்டணி, சௌதி அரேபியாவை நோக்கி ஹூதிகள் ஏவிய இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை இடைமறித்ததாகத் தெரிவித்தது.
ஐ.நா.வில் டிரம்ப் பேசியது என்ன?
இந்த வாரம் ஐ.நா. பொதுச் சபையில் ஆற்றிய உரையின் போது, இதுவரை தன்னால் எட்ட முடியாத இரான் ஒப்பந்தம் நவம்பர் மாதத் தேர்தலுக்குப் பிறகு ஏற்படும் என்று தான் நம்புவதாக டிரம்ப் தெரிவித்தார்.
"இரான் மீண்டும் கட்டமைக்கவும், முன்பு இருந்ததை விட மிகப் பெரிய நாடாக உருவாகவும் அனுமதிக்கும் வகையில் ஓர் ஒப்பந்தம் ஏற்படுமா? அல்லது, இஸ்லாமியக் குடியரசை நான் அழித்தொழித்து, அதை விரைவாகச் செய்வதா? மீண்டும் மக்களையும் நாடுகளையும் கொன்று அழிக்கவும், அழிவை ஏற்படுத்தவும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காத வகையில் அவர்களை நரகத்துக்குத் தள்ளுவதா?" என்றும் அவர் கூறினார்.
வெள்ளிக்கிழமை அன்று , இரான் "கட்டாயப்படுத்துதல், அச்சுறுத்தல்கள் அல்லது மிரட்டல்களை" ஏற்றுக்கொள்ளாது என்று அராக்சி தெரிவித்தார். மேலும், "அழித்தொழிப்போம் என்ற அச்சுறுத்தல்கள் மூலம் அமைதியை உருவாக்க முடியாது" என்றும் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































