6 மாத குழந்தையை தாக்கிய நாய்: பிட்புல் நாய் தாக்கினால் தப்புவது ஏன் கடினம்?

இந்தியாவில் அதிகரிக்கும் பிட்புல் தாக்குதல்கள்: சட்டம் மற்றும் உரிமையாளரின் பொறுப்பு என்ன?
    • எழுதியவர், ஷுப் ராணா
    • பதவி, பிபிசி செய்தியாளர், புது டெல்லி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

விலங்குகளில், நாய்கள் பெரும்பாலும் மனிதனின் சிறந்த நண்பன் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் எல்லா நாய்களும் உண்மையில் நட்பானவை அல்ல. சில இனத்தைச் சேர்ந்த நாய்கள் மிகவும் ஆபத்தானவையாகக் கருதப்படுகின்றன.

இந்தியாவிலும், சமீப ஆண்டுகளில் செல்லப்பிராணி நாய்கள் தாக்கிய சம்பவங்கள் ஏராளமாகப் பதிவாகியுள்ளன. இந்தத் தாக்குதல்களால் பலர் கடுமையாகக் காயமடைந்துள்ளனர், சில சந்தர்ப்பங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டம் வெளியிட்ட தரவுகளின்படி, 2024-ஆம் ஆண்டில் இந்தியாவில் நாய்க்கடி சம்பவங்கள் 37 லட்சத்திற்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளன.

கடந்த 2025-ஆம் ஆண்டின் முதல் மாதத்திலேயே 4,29,664 சம்பவங்கள் பதிவாகின. இருப்பினும், இவை அதிகாரபூர்வமாகப் பதிவான வழக்குகள் மட்டுமே என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் இதுபோன்ற பல தாக்குதல் சம்பவங்கள் பதிவாகாமல் போவதாகவும் நம்பப்படுகிறது.

ஆறு மாத குழந்தையை தாக்கிய பிட்புல்

கடந்த 2026 செப்டம்பர் 14-ஆம் தேதி மாலை, டெல்லியை ஒட்டியுள்ள சோனிபத்தின் சிக்கா காலனியில், அண்டை வீட்டாரின் செல்லப்பிராணியான பிட்புல் நாய் ஆறு மாதக் குழந்தை மீது தாக்குதல் நடத்தியது.

குழந்தையின் அத்தை, குழந்தையை மடியில் தூக்கிக்கொண்டு தெருவில் நடந்து சென்றபோது, அந்த நாய் வெளியே வந்து அவர்களைத் தாக்கியது. குழந்தைக்கு உடலின் பல பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. தற்போது அந்த குழந்தைக்கு ரோத்தக்கில் உள்ள பி.ஜி.ஐ.எம்.எஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

குழந்தையைக் காப்பாற்ற முயன்றபோது அவரது அத்தைக்கும் காயம் ஏற்பட்டது. இந்த முழு சம்பவமும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சம்பவம் குறித்து குடும்பத்தினரிடம் தொடர்பு கொள்ளப்பட்டபோதும், அவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்தனர்.

இதுவரை குடும்பத்தினர் காவல்துறையில் எந்தப் புகாரும் அளிக்கவில்லை எனத் தெரிய வந்துள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குறிப்பாக பிட்புல் போன்ற ஆபத்தானதாகக் கருதப்படும் நாய் இனங்கள் தொடர்பாக இந்தியாவில் உள்ள விதிமுறைகள், உரிமையாளர்களின் பொறுப்பு மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு குறித்து சமூக ஊடகங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பழைய சம்பவங்கள்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இதற்கு முன்பும் பிட்புல் நாய்கள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன. 2026 ஆகஸ்டில், பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள குமன் நகரில் பிட்புல் நாய் ஒரு தம்பதியரைத் தாக்கியது. அங்கித் சபர்வால் மற்றும் அவரது மனைவி ஷெஃபாலி இருவரும் வாடகைக்கு வீடு பார்க்கச் சென்றிருந்தனர்.

வீட்டின் கேட் திறக்கப்பட்டவுடன், நாய் வெளியே வந்து அவர்களைத் தாக்கியது. இருவருக்கும் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, நாயின் உரிமையாளருக்கு எதிராக காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

கடந்த 2025 ஆகஸ்டில், சென்னை நகரில் 55 வயதான கருணாகரன் என்பவர் அண்டை வீட்டாரின் பிட்புல் நாய் தாக்கியதில் உயிரிழந்தார். வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது நாய் அவரைக் கடித்தது. இந்தச் சம்பவத்தில் நாயின் உரிமையாளரும் காயமடைந்தார். அவர் மீது அலட்சியமாக நடந்துகொண்டதாகக் கூறி காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

கடந்த 2022-ஆம் ஆண்டு, உத்தர பிரதேசத்தின் தலைநகரான லக்னௌவில் ஒரு பிட்புல் நாய் தனது 82 வயதான உரிமையாளரையே தாக்கிய சம்பவம் பெரும் செய்தியாகப் பேசப்பட்டது. நாயின் தாக்குதலில் அந்தப் பெண் மிகவும் கடுமையாகக் காயமடைந்து உயிரிழந்தார்.

இந்தியாவில் அதிகரிக்கும் பிட்புல் தாக்குதல்கள்: சட்டம் மற்றும் உரிமையாளரின் பொறுப்பு என்ன?

பிட்புல் நாய் எங்கிருந்து வந்தது?

கடந்த 2022-ஆம் ஆண்டு பிபிசி நியூஸ் ஹிந்தி வெளியிட்ட காணொளியின்படி, பிட்புல் இன நாய் 1800களில் இங்கிலாந்தில் தோன்றியது. அந்தக் காலத்தில், இந்த நாய்கள் பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. கூண்டில் கட்டப்பட்டிருந்த காளை அல்லது கரடியுடன் இந்த நாய்களைச் சண்டையிடச் செய்வார்கள்.

இந்த விளையாட்டு 1835-ஆம் ஆண்டில் தடைசெய்யப்பட்டது. பெரும்பாலான நாடுகளில் இதுவும் தடை செய்யப்பட்டு இருந்தாலும், சட்டவிரோதமாக நடைபெறும் சம்பவங்கள் இன்னும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. 1960களில் அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் பிட்புல் நாய்களை வளர்க்கத் தொடங்கினர்.

இந்த நாய்களுக்கு வலிமையான தாடைகள், அதிக வலியைத் தாங்கும் திறன், வேட்டையாடும் உள்ளுணர்வு மற்றும் விடாமுயற்சி போன்ற பண்புகள் உள்ளன. இவை நடுத்தர அளவிலான, நன்கு தசை வளர்ச்சி பெற்ற, அதிக சக்தி கொண்ட நாய்கள்.

பல உரிமையாளர்கள் இந்த நாய்களை விசுவாசமானவை மற்றும் குடும்பத்தினருடன் நட்பாகப் பழகுபவை என்று விவரிக்கின்றனர். ஆனால், சரியான பயிற்சி, சமூக பழக்கப்படுத்தல், கட்டுப்பாடு இல்லையெனில் அவை ஆபத்தானவையாக மாறக்கூடும்.

பிட்புல் நாய் தாக்கினால் தப்புவது ஏன் கடினம்?

'பிட்புல் இன நாய்கள் பொதுவாக ஏன் ஆக்ரோஷமானவை என்று கருதப்படுகின்றன?' என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

இதற்குப் பதிலளித்த பீட்டா இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் சச்சின் எஸ். பங்கேரா, பிபிசி ஹிந்தி சேவைக்கு அளித்த பேட்டியில், "பிட்புல் நாய்கள் வரலாற்று ரீதியாக வலிமை மற்றும் சண்டைக்காகவே இனப்பெருக்கம் செய்யப்பட்டவை. முதலில் காளைகளைக் கட்டுப்படுத்துவதற்காகவும், பின்னர் மற்ற நாய்களுடன் சண்டையிடுவதற்காகவும் தேர்வு செய்யப்பட்ட இனப்பெருக்க முறையின் மூலம் அவை உருவாக்கப்பட்டன. இதன் விளைவாக, இந்த நாய்களுக்கு அசாதாரணமான உடல் வலிமை, மிகவும் உறுதியான பிடிப்பு மற்றும் இரையைத் தாக்கிய பின் அதை விடாமல் பற்றிக் கொள்ளும் இயல்பு உருவாகியுள்ளது" என்று கூறினார்.

ஆனால், ஒரு நாயின் நடத்தை அதன் இனத்தை மட்டும் சார்ந்ததல்ல என்றும் அவர் கூறுகிறார். சமூகப் பழக்க வழக்கங்கள், பயிற்சி, பராமரிப்பு, அது வளர்க்கப்படும் சூழல் ஆகியவையும் அதன் குணாதிசயத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

அதே நேரத்தில், சுயாதீன விலங்கு உரிமை ஆர்வலரான சரஹானா கூறுகையில், "பெரும்பாலானோர் சமூக அந்தஸ்துக்காகவே பிட்புல் போன்ற இன நாய்களை வளர்க்கிறார்கள். அவற்றுக்கு சிறு வயதில் இருந்தே ஆக்ரோஷமான நடத்தைக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. தாய் நாயுடன் போதிய காலம் வளர்க்கப்படாததும் அவற்றின் நடத்தையைப் பாதிக்கிறது" என்று அவர் கூறுகிறார்.

வயதாகி பலவீனமடையும்போது இந்த வகை நாய்களை சில உரிமையாளர்கள் கைவிட்டு விடுவதாகவும், இந்த இன நாய்களை பிற நாய்களுடன் சேர்த்து காப்பகங்களில் பராமரிப்பதில் சிக்கல்கள் இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

இந்தியாவில் அதிகரிக்கும் பிட்புல் தாக்குதல்கள்: சட்டம் மற்றும் உரிமையாளரின் பொறுப்பு என்ன?

பிட்புல் நாய்களின் பிடி ஏன் மிகவும் வலிமையானது?

பீட்டாவின் பங்கேரா கூறுகையில், பிட்புல் போன்ற நாய்கள் மிகவும் வலிமையான, தசை வளர்ச்சி பெற்றவை. அவற்றின் அகன்ற மார்பு, வலுவான தாடை மற்றும் பெரிய கன்னச் சதைப் பகுதிகள் இரையை மிகுந்த சக்தியுடன் பற்றிப் பிடிக்க உதவுகின்றன.

ஒருமுறை தாக்குதல் தொடங்கிவிட்டால், நாயை அதன் இரையில் இருந்து பிரிப்பது மிகவும் கடினமாகிவிடும். அதனால், பிட்புல் தாக்குதல் சம்பவங்கள் நிகழும்போது ஏற்படும் காயங்கள் மிகவும் மோசமானதாகவும், சில நேரங்களில் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கலாம். குறிப்பாக பாதிக்கப்பட்டவர் சிறு குழந்தையாக இருந்தால் ஆபத்து இன்னும் அதிகமாக இருக்கும்.

இந்தியாவில் பிட்புல் நாய்கள் தொடர்பான விதிமுறைகள் என்ன?

கடந்த 2024 மார்ச் மாதத்தில், இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அதில், பிட்புல் டெரியர் (Pitbull Terrier) உள்ளிட்ட சுமார் 23-24 நாய் இனங்கள் "ஆபத்தான இனங்கள்" எனப் பட்டியலிடப்பட்டு இருந்தன.

இந்த இன நாய்களின் இறக்குமதி, இனப்பெருக்கம் மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்க பரிந்துரைக்கப்பட்டது. ஏற்கெனவே பொது மக்களிடம் உள்ள நாய்களுக்கு கருத்தடை செய்யவும் பரிந்துரைக்கப்பட்டது.

அந்தப் பட்டியலில் இடம்பெற்ற சில இனங்கள்:

  • பிட்புல் டெரியர் (Pitbull Terrier)
  • அமெரிக்கன் ஸ்டாஃபோர்ட்ஷையர் டெரியர் (American Staffordshire Terrier)
  • ராட்வெய்லர் (Rottweiler)
  • அமெரிக்கன் புல்டாக் (American Bulldog)
  • டோகோ அர்ஜென்டினோ (Dogo Argentino)
  • ஃபிலா பிரசிலெய்ரோ (Fila Brasileiro)
  • கேன் கோர்சோ (Cane Corso)
  • மாஸ்டிஃப் (Mastiff)
  • வொல்ஃப் டாக் (Wolf Dog)
  • கங்கால் (Kangal)
  • காகேசியன் ஷெப்பர்ட் (Caucasian Shepherd)

இருப்பினும், மத்திய அரசின் இந்த அறிவுறுத்தல் முழுமையான சட்டத் தடையாக இருக்கவில்லை. டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் கர்நாடக உயர்நீதிமன்றம் உள்ளிட்ட சில நீதிமன்றங்கள் இதில் தலையீடு செய்தன. இதையடுத்து, 2024 மே மாதத்தில் மத்திய அரசு அடுத்த உத்தரவு வரும் வரை இந்த வழிகாட்டுதல்களை அமல்படுத்த வேண்டாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது.

இதன் பொருள், நாடு முழுவதும் பிட்புல் நாய்களை வளர்க்கக் கடுமையான சட்டத் தடை தற்போது இல்லை என்பதாகும். ஆனால், அவற்றின் இனப்பெருக்கம், விற்பனை மற்றும் வளர்ப்பு தொடர்பான விதிகள் மாநில மற்றும் உள்ளூர் நிர்வாக அமைப்புகளைப் பொறுத்தே அமைகின்றன.

இந்தியாவில் அதிகரிக்கும் பிட்புல் தாக்குதல்கள்: சட்டம் மற்றும் உரிமையாளரின் பொறுப்பு என்ன?

சில பகுதிகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

உத்தர பிரதேசத்தின் லக்னௌ, காசியாபாத் நகரங்களில், இந்த இன நாய்களுக்கு உரிமம் (லைசன்ஸ்) வழங்கக்கூடாது என்றும், அவற்றுக்குக் கருத்தடை செய்ய வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டது.

கோவா மாநிலம் 2025-ஆம் ஆண்டு ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. அதன்படி, எந்தவொரு விலங்கினத்தையும் அரசு "ஆபத்தான விலங்கு" என அறிவிக்க முடியும். ஓர் இனம் இவ்வாறு அறிவிக்கப்பட்டால், அந்த இன நாய்களை வளர்ப்பது, இனப்பெருக்கம் செய்வது, மாநிலத்திற்குள் கொண்டு வருவது ஆகியவை தடைசெய்யப்படும்.

ஏற்கெனவே வளர்க்கப்பட்டுள்ள நாய்களுக்கு கட்டாயமாகக் கருத்தடை செய்ய வேண்டும். அதைச் செய்யத் தவறினால், 15 நாட்கள் முதல் 3 மாதங்கள் வரை சிறைத் தண்டனையும், ரூ.50,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

பீட்டா அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கான்பூர் மாநகராட்சி பிட்புல் மற்றும் ராட்வீலர் நாய்களை வளர்ப்பதற்குத் தடை விதித்துள்ளது.

காசியாபாத் நகரிலும் பிட்புல், ராட்வீலர், டோகோ அர்ஜென்டினோ போன்ற இனங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சண்டிகரில் ஆபத்தானதாகக் கருதப்படும் ஆறு நாய் இனங்களுக்குத் தடை விதிக்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் அதிகரிக்கும் பிட்புல் தாக்குதல்கள்: சட்டம் மற்றும் உரிமையாளரின் பொறுப்பு என்ன?

பாதிக்கப்பட்டவரின் சட்டரீதியான உரிமைகள் மற்றும் நாய் உரிமையாளரின் பொறுப்பு

ஒரு பிட்புல் நாய் யாரையாவது தாக்கினால், பாதிக்கப்பட்டவர் காவல்துறையில் புகார் அளிக்கலாம். மருத்துவ செலவுகள் உள்ளிட்ட ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு கோரி சிவில் வழக்கின் மூலம் நஷ்டஈடு பெறவும் முடியும்.

பங்கேராவின் கூற்றுப்படி, கடுமையான காயம் அல்லது அலட்சியம் தொடர்பான சம்பவங்களில் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றவியல் பிரிவுகளும் பொருந்தக்கூடும். குறிப்பாக, நாயால் ஏற்படக்கூடிய ஆபத்தை உரிமையாளர் முன்கூட்டியே அறிந்திருந்தும் அதைக் கட்டுப்படுத்தத் தவறியிருந்தால், அவரின் சட்டபூர்வப் பொறுப்பு மேலும் அதிகரிக்கும்.

உரிமையாளர்கள் எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?

பீட்டா அமைப்பின் பரிந்துரைப்படி, பிட்புல் போன்ற இன நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட வேண்டும், தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் மற்றும் அவசியமான இடங்களில் பதிவு செய்யப்பட வேண்டும்.

அவற்றைப் பாதுகாப்பான சூழலில் வளர்க்க வேண்டும். குடும்ப உறுப்பினரைப் போலப் பராமரிக்க வேண்டும். பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது, வலுவான ஹார்னஸ் (harness) மற்றும் கயிறு (leash) பயன்படுத்திக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

நாயை ஒருபோதும் சங்கிலியால் கட்டி வைத்திருக்கக் கூடாது. அதை தாக்கும்படி தூண்டக்கூடாது. சண்டைகளுக்காகவோ அல்லது காவல் நாயாகப் பயன்படுத்துவதற்காகவோ பயிற்சியளிக்கக் கூடாது.

இனப்பெருக்கம் செய்வதற்கென வளர்ப்பவர்கள் (breeders), பிட்புல் நாய்களின் இயல்புகள் மற்றும் அவற்றைப் பராமரிப்பதில் உள்ள சவால்கள் குறித்துப் போதுமான எச்சரிக்கைகளை வழங்காமல் விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு